நண்பர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இதயம் நிறைந்த 60-ம் பிறந்த நாள் வாழ்த்துகள்

குமுதம் கமல் 60 சிறப்பு மலரில் என் கட்டுரை

மூன்று அழைப்புகள்

மொபைல் கூப்பிட்டது. ’பிரைவேட் நம்பர் அழைக்கிறது. நண்பர் கமல் தான். இன்னும் பத்து நிமிடத்தில் கார் சாவியைத் தேட வேண்டும்.. அல்லது கம்ப்யூட்டரைத் திறக்க வேண்டும்.

‘என்ன சார், வரணுமா?’

‘ஆமா’

கார் சாவி..

‘காரில் வர வேணாம், திருவனந்தபுரம் போகறோம்’.

முக்கியமான தமிழ் எழுத்தாளரான நீல.பத்மநாபனைச் சந்திக்க திருவனந்தபுரத்தில் அவர் வீட்டில் நாங்கள் மறுநாள் காலையில் இருந்தோம். எங்களை அன்போடு வரவேற்றார் அந்த மூத்த எழுத்தாளர்.

அடுத்த மூன்று மணி நேரம் பரபரப்பு மிகுந்த அந்தப் பகுதிக்குக் கமல் ஹாசன் வந்திருப்பதையே அறியாமல் நகரம் வேலை நாள் மெத்தனத்தோடு இயங்கிக் கொண்டிருக்க, உள்ளே காமிரா, விளக்கு, சட்டைக் காலரில் மைக் இன்ன பிற அம்சங்களோடு பேச உட்கார்ந்தோம். பேசப் பேச பேச்சு வளர்ந்தது.

அதில் ஒரு துளி –

நான்: உங்க நாவல்கள் எல்லாத்திலேயும் பாத்திரங்கள் நிறைய பழமொழி பயன்படுத்தறாங்க.. அந்தக் கால சமுதாயத்தில் இப்படி இருந்ததா?

நீல.பத்மநாபன்: நான் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வந்தவன். என் பாட்டியோட கதை கேட்கறதிலே நான் ரொம்ப ஈடுபாடு உள்ளவன்.. அவங்க நெறைய பழமொழி சொல்வாங்க…

கமல்: எனக்கென்ன தோணுதுனா பழமொழிங்கறது சிறுகதையின் மூதாதையார்.. இவர் மாதிரி எழுத இவரோட பாட்டி மாதிரியான பெண்மணிகளாலே அந்தக் காலத்திலே முடியாது.. அனுமதியும் இருந்திருக்காது..முழுக்கதையை தலைப்பு போல வேகமாகச் சொல்ல அதை ஒரு பழமொழியாக, அவங்க பதிவு செஞ்சிருக்காங்க..

பகல் ஒரு மணிக்கு பவர் கட். ஆனாலும் என்ன? வீட்டுக்குப் பின்னால் அவுட் ஹவுஸ் ஆக இருந்த பழைய கால பாணி மர வீட்டில் பேச்சை உற்சாகமாகத் தொடர்ந்தோம். அந்த வாசல் படியில் உட்கார்ந்தபடி நான் திகிலோடு சுற்றிலும் பார்த்தேன். ஓங்குதாங்காக எழுந்து நின்ற அடுக்கு மாடிக் கட்டிடங்கள். அங்கே யாராவது ஒருத்தர் பார்த்து அடையாளம் கண்டு கொண்டாலும் போதும். அப்புறம் நாங்கள் பார்க்கப் போனவர்களின் வீட்டுக்கு முன்னால் ஜனசமுத்திரம் திரண்டு அலையடித்து எல்லோரையும் கடல் கொண்டு விடும்.

ஒரு ஜன்னல், ஒரு கதவு கூட அந்த ஒரு மணி நேரத்தில் பக்கத்தில் எங்கேயும் திறக்கப்படவில்லை. நகர வாழ்க்கையின் அமானுஷ்யத் தனிமையிலும் ஏக நன்மை!

வாய்க்கு ருசியான நாஞ்சில் நாட்டு சமையல். திருமதி பத்மநாபனின் அன்பான உபசரிப்பு. விருந்து முடிந்து வாசல் திண்ணையில் சகஜமாக பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மேல் வீட்டு குஜராத்தி குடும்பத்துக் குழந்தைகளோடு அரட்டை. பலிடானா சமணக் கோவில்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவர் ‘வாங்க, போகலாம்’ என்று எழுந்தார். நீல.பத்மநாபனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினோம்.

சென்னை திரும்ப திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உட்கார்ந்திருந்தோம். அவருக்கு மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. படித்துவிட்டு முகம் மலர்ந்தார். என்னிடம் மொபைலை நீட்டினார்.

‘அப்பா, என் முதல் சம்பளம் இன்று வாங்கினேன்’.

நான் புரியாமல் அவரைப் பார்த்தேன்.

’என் மகள். சின்னவ. மும்பாய்லே அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒரு படத்துலே வேலை செய்யறா. அங்கே முதல் மாச சம்பளம்..’

எவ்வளவு சார் இருக்கும்?

’பத்தாயிரம் ரூபாய்’.

பூவாகச் சிரிக்கிறார் அந்த அப்பா.

என் மனதில் தொலைபேசி இன்னுமொரு முறை ஒலிக்கிறது. ‘பிரைவேட் நம்பர்’ அழைப்பு.

‘எழுத்தாளர் ரா.கி.ரஙகராஜனைச் சந்திக்கலாம், வாங்க. ப்ரபசரும் வரார்’

பேராசிரியர் ஞானசம்பந்தன் உடன் வர, சென்னை அண்ணா நகரில் ரா.கி.ரஙகராஜனைச் சந்தித்தோம். அதை நான்கு மணி நேரம் வீடியோ பேட்டி எடுத்தோம். கேமரா தகராறு காரணமாக ஒளி ஒலி சரியாக வரவில்லை.

ஆறு மாதம் கழித்து எனக்குப் போன் செய்தார் ராகி. ‘என்ன ஆச்சு அந்த வீடியோ? நீங்க எல்லாம் வந்துட்டுப் போனதை அண்ணாநகர் டைம்ஸிலே எழுதியிருந்தேனே..’.

நான் சொன்னேன் – ’சார், அதை இன்னும் விரிவா ஒரு பேனல் டிஸ்கஷனா எடுக்க ஐடியா’.

‘எடுங்கோ ஆனா நான் இருக்கணுமே’ என்றார் ரா.கி.

நூறு வருஷம் இருப்பீங்க சார் என்றேன்.மாட்டேன் என்று கிளம்பி விட்டார்.

ரா.கி மறைவைப் பற்றி ஆதூரத்தோடு பேசிக் கொண்டிருந்தார் கமல்.

‘அவர் எழுதின அடிமையின் காதல் அற்புதமான படைபு. அதை கிராபிக் நாவல் ஆகக் கொண்டு வரணும்’ என்றார். ’புதுத் தலைமுறை ஓவியர்களை ஒவ்வொரு பேனலையும் போட வைக்கணும்’.

சமீபத்தில் நண்பர் கமலிடம் இருந்து இன்னொரு தொலைபேசி அழைப்பு

’பி.ஏ.கிருஷ்ணன் எழுதின மேற்கத்திய ஓவியங்கள் புத்தக வெளியீடு இன்னிக்கு இருக்கு. நான் வெளியிடறேன்.’

அவர் அழைக்க, நான் மெல்லச் சொன்னேன் – ‘கிரேசி மோகனும் நானும் நேரே வந்துடறோமே’

’பரவாயில்லே வாங்க, சேர்ந்தே போகலாம்’.

பிரஞ்சு சிற்பக்கலை மேதை ரோடினின் குறுகிய கால சீடன் ருமேனியனான கான்ஸ்டண்டைன் ப்ராங்கூஸி பற்றிப் பேசியபடி காரில் வந்தார் கமல்.

‘பி.ஏ.கிருஷ்ணன் புத்தகம் படிச்சிட்டீங்களா?’ நான் கேட்டேன்.

‘ஓரளவு படிச்சிருக்கேன்.. காப்ளியோட சுறாமீன் ஓவியத்தில் ஆரம்பிச்சு வெர்மீர் வரைஞ்ச படம்.. காதணி….’

‘முத்துக் காதணி அணிந்த பெண்’

’ஆமா, அதுவரைக்கும் போனேன்.. பார்த்து அனுபவிச்ச ஓவியம் எல்லாம்’.

சுருக்கமாக, என்றாலும் ஆழமான கருத்துப் பகிர்வாகக் கூட்டத்தில் பேசினார். திரும்ப வ்ந்து ஆழ்வார்ப்பேட்டை அலுவலக மாடிக்குக் கீழே நின்று மறுமலர்ச்சி கால ஓவியன் கரவாஜியோ வரைந்த ஓவியங்கள், பத்திரிகை ஓவியங்கள் என்று ராத்திரி ஒன்பது மணி வரை நீண்ட பேச்சு அது.

வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தபோது மொபைல் அழைத்தது. பிரைவேட் நம்பர்!

’காரைத் திருப்பிக்கிட்டு வந்துடட்டா?’

‘வேணாம்.. ஹை ப்ரீக்வென்ஸி டிரேடிங் பத்தி கேட்டிருக்கீங்களா?’

‘ஆமா, ஷேர் மார்க்கெட்லே பெரிய அளவிலே வாங்க விற்க (விலை அதிர்வைப் பயன்படுத்தி) செய்யற ஏற்பாடு..அல்காரித்மிக் ட்ரேடிங்னு பரிபாஷையிலே சொல்றது’

‘அதேதான், எனக்கு உடனே ஒரு சிறு குறிப்பு அனுப்ப முடியுமா?’

அறிவுத் தேடலோடு கமல் ஓடிக் கொண்டெ இருக்கிறார். அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும், கூட ஓட வாய்த்ததிலும், அதற்காக தயார் செய்து கொள்வதிலும் எனக்கு நிறைவு.

கார் சாவியைத் தேட வேண்டாம். வீடு போய், கம்ப்யூட்டரைத் திறக்க வேண்டும்

சின்னத் திகைப்பு எனக்கு. இவருக்கு எதுக்கு இது?

திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறாராம்.

.மீதியை வெள்ளித் திரையில் காண்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன