அரவான்

 

1) அவை நிறைவாக நடந்த அரவான் இசை வெளியீட்டு விழாவுக்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே போய் அண்ணா நூலகத்தில் இதையும் அதையும் படித்துக் கோண்டிருந்தேன். கலைஞரின் பெயரைக் காலாகாலத்துக்கும் சொல்ல புது அசெம்பிளி கட்டிடம் வேண்டாம். இந்த நூலகம் போதும்.

2) நாடி வந்து வரவேற்ற வசந்தபாலனின் வரவேற்பு இதம். பத்து வருடம் முன் கதை சொல்ல வீட்டுக்கு வந்த முகம் இன்றும் அதே அடக்கமும், ஆர்வமும் நட்புமாக.

3 ராமகிருஷ்ணனோடும் ஜெயமோகனோடும் பேசிக் கொண்டிருந்தபோது (முக்கியமாக ராமகிருஷ்ணனின் ‘யாவரும்’ சொல்லாட்சி பற்றி) வ.பாலனும் கலந்து கொண்டார். அவர் விருப்பப்படி நால்வரும் புகைப்படத்தில் உறைந்தோம்.

4) பாட்டுக்களையும் முன்னோட்டத்தையும் பார்க்கும் போது பதினெட்டாம் நூற்றாண்டை கிட்டத்தட்ட சரியாக வ.பா படத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

5) தமிழில் முக்கியமான micro-history படம் இதுவாக இருக்கலாம். பாரதிராஜா அழகாக ஆரம்பித்து திசைமாறிப் போன ‘நாடோடித் தென்றல்’ (19ம் நூற்றாண்டு) போலவோ, வரலாற்று அபத்தங்கள் நிறைந்த ‘மதராஸப் பட்டிணம்’ (20-ம் நூற்றாண்டு 1947 வரை) போலவோ வ.பா சறுக்கவில்லை என்பது நிச்சயம்.

6) ஒரு ஆம்னிபஸ் லோடு அளவு நபர்களை மேடையேற்றி ரெண்டே ரெண்டு வார்த்தை பேசச் சொல்வதை விட, படத்தோடு தொடர்புடைய நாலு பேர், வாழ்த்த நாலு பேர் போதுமே.

7) ஏஆர் ரஹ்மான் மொழிநடை மாறியிருக்கிறது. ரெண்டு நிமிஷப் பேச்சில் நிறைய ‘வந்துண்டு இருந்தேன்’ ‘ பார்த்துண்டு இருந்தேன்’..

8) ராமகிருஷ்ணன் கேன்ஸில் சர்வதேச பரிசு இந்தப் படம் பெறும் என்றார். அவர் கேனைச் சொன்னார் என்று நினைக்கிறேன். Cannes என்று எழுதி Kan என்று உச்சரிக்கப்படும் பிரஞ்சு ஊர்ப்பெயர் அது

9) நிகழ்ச்சித் தொகுப்பாளர் வெண்ணிலா இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் என்று தெரிந்தது. சேக்‌ஷ்பியரின் கிளியோபாட்ராவை பாஸ்டஸ் என்ற கவிஞர் பாடலில் வடித்த வரிகளைப் போகிற போக்கில் குறிப்பிட்டார். அவர் கிறிஸ்டஃபர் மார்லோ ‘Helen of Troy’ பற்றி எழுதிய Doctor Faustus கவிதையைக் குறிப்பிட்டிருக்கக் கூடும்.

10) இன்னொரு தொகுப்பாலர் இயக்குனர் மனோபாலா சிறு பொறி தீயாவது போல் ஒரு வார்த்தைச் சிந்தனை இரண்டு மணி நேரப் படமாகிறது என்பதெல்லாம் சரிதான். உதாரணத்துக்கு பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ பிறக்கக் காரணம் ‘அம்பட்டன் மகன் கவிஞன்’ என்ற ஒன்லைனர் என்றபோது நெருடலாக இருந்தது. நாவிதர் என்ற தொழில் கௌரவத்தோடு கூடிய சொல் உண்டே.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன