வாழ்த்துகள் கமல்

 

சென்ற ஆண்டு நண்பர் திரு.கமல் பிறந்தநாளுக்குக்காக அவரை வாழ்த்தியபோது இரண்டு விஷயங்களை வற்புறுத்தினேன் – மய்யம் இணையத் தளம் தொடங்குவது, அவருடைய கவிதைத் தொகுப்பை வெளியிடுவது.

அற்புதமான நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், நல்ல பாடகர், அருமையான இயக்குனர் என்று பிரமிக்கவைக்கும் நிறைய ஆளுமைகள் அவருக்குள் உண்டு. அவற்றில் கமல் என்ற கவிஞர் எனக்கு நெருக்கமானவர்.

பக்கத்தில் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் சேதி சொல்ல ஆரம்பித்து சூழ்நிலையின் தீவிரம் கூடிக் கொண்டே போக உரக்க ஒலித்து கம்பீரமாக எழுந்து பரவும் கவிதைகள், மெல்லிய நகைச்சுவையோடு சென்று தேய்ந்து குறுமுறுவலை வரவழைக்கும் சிநேகிதமான கவிதைகள், வரலாற்றின் வெவ்வேறு நூற்றாண்டுகளை நாலு வார்த்தைகளின் இணைத்து நேர்கோட்டில் நிறுத்தும் நளினமான கவிதைகள் என்று அவருடைய கவிதை நெசவு தனித்துவமானது.

பிரபல இந்திக் கவிஞர் ஹரிவன்ஷ்ராய் பச்சனின் ‘மதுசாலா’ (மதுக்கடை) நீண்ட கவிதையை அவருடைய அன்பு மகன் அமிதாப் பச்சன் அறிமுகப்படுத்த, தேர்ந்த இசைக்கலைஞர் மன்னா டே பாடலாக வடித்த ஒலிப்பேழை பிரபலமானது

இங்கே ஒரு நல்ல கவிஞர் நம்மிடையே இருக்கிறார். அவருடைய கம்பீரமான குரலில், அவர் சொல்லி நடக்க ஒளிக் காட்சியாக, பின்னணியில் இளையராஜாவின் மெல்லிய சிம்பனி ஒலியோடு கமல் கவிதைகளை மிகச் சிறப்பாக வெளியிடலாம். மன்மதன் அம்பு படத்தில் முயன்று, பாராட்டப்பட்டு, இடம் பெற முடியாமல் போனது இது.

ஆனாலும் கமலிடம் நான் வற்புறுத்திய இரண்டாவது டாபிக் – மய்யம் நிலை கொள்ளும் தருணம் நெருங்கி இருக்கிறது. மய்யம் முன்னே வரட்டும். கவிதைத் தொகுப்பு பின்னே வரட்டும்.

வாழ்த்துகள் கமல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன