Muththamma Teacher – novella – completeமுத்தம்மா டீச்சர் – குறுநாவல் – முழுமையானது

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்

என்னளவில் ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்’ ஒரு முக்கியமான படைப்பாகும். சம்பிரதாயமான கதையாடலில் இருந்து விலகி மாய யதார்த்தத்தை நோக்கி நான் நகர்ந்தது இந்தக் குறுநாவல் மூலம் தான்.

பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்ட புதிய பார்வை இதழில் பிரசுரமான இந்தக் குறுநாவலுக்குப் பிறகு, ‘மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’ தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதைகள் வழியே ‘அரசூர் வம்சம்’ வந்தடைந்தேன்.

——————————

அத்தியாயம் 1

பாக்கியலட்சுமி என்று பெயர் கொண்ட எருமையின் கரைச்சல். தெருவில் சினிமாப் பட வண்டிக்குள் கொட்டு சத்தம். தெரசாள் மெழுகுவர்த்திக் கம்பெனி ஒலிபெருக்கியிலிருந்து, ‘ஓசன்னா பாடுவோம்… தேவனைப் போற்றுவோம்’.

முத்தம்மா டீச்சரின் காலைப் பொழுது சகல சப்த அலங்காரங்களோடு விடிந்தது.

எருமைக்காரன் தெருவில் ஐந்தாவது வீடு முத்தம்மா டீச்சருடையது. எந்தப் பக்கத்திலிருந்து ஐந்து .. இடமா வலமா என்ற சம்சயங்கள் வர முடியாத தெரு அது.

ஒரே வசத்தில் வீடுகள். ‘அஞ்சுகல்’ சந்திப்பில் இருந்து கிழக்கே சரசரவென்று விரிந்து, மெழுகுவர்த்திக் கம்பெனியின் சுவரை முட்டி நிற்கிற தெருவில், எல்லா வீட்டிலும் எருமை வளர்க்கிறார்கள்.

வீட்டு வாசலுக்கு நேரே முளையடித்துக் கட்டி வைக்கும் எருமைகளுக்குப் பெயர் வைப்பதில்லை என்றிருந்த வழக்கம், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பால் பாண்டியனால் போன மாதம் உடைக்கப் பட்டது. அவர் தெருவின் முதல் வீட்டை வாங்கிக் குடியேறியபோது, தெருவின் வளமுறை கருதி எருமை வாங்கியதோடு இல்லாமல், பாக்கியலட்சுமி என்று அதற்கு ஒரு வினோதப் பெயரும் வைத்தார்.

பாக்கியலட்சுமி கயிற்றை அறுத்துக் கொண்டு முத்தம்மா டீச்சர் வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டதில் டீச்சரின் ஞாயிற்றுக்கிழமைத் தூக்கம் கலைந்து போனது.

அது நல்லதுக்குத்தான்.

’வீட்டைக் காலி பண்ணிக் கொடுத்திடு.. நான் வித்துப் பணத்தை எடுத்துக்கிட்டு பினாங்கு போகணும்.. நிக்க நேரம் கிடையாது..’

முத்தம்மா டீச்சரின் தம்பி வாசலுக்கும் கூடத்துக்குமாக நடந்து கொண்டு சண்டை போட்ட கனவு பாக்கியலட்சுமி குரல் கொடுத்ததும் தான் முடிவுக்கு வந்தது. ஆனாலும் டீச்சரின் கண்ணில் இன்னும் இருந்தது அது.

சண்டை போடுகிற தம்பி.. பினாங்கிலிருந்து ஏரோகிராம் கடிதாசில் நுணுக்கி நுணுக்கி எழுதிச் சண்டை போடுகிறான் அவன். போன வாரம் தான் அந்தக் கடுதாசி வந்தது.

இருபத்தஞ்சு வருடம் முன்னால், ஜோதி அக்கா தலைச்சன் பெண் பிரசவத்துக்கு வந்திருந்த சமயம், டீச்சர் போட்டு வைத்திருந்த பிராவிடண்ட் ஃபண்ட் கடன் தொகையையும், மாதச் சம்பளத்தையும் எடுத்துக் கொண்டு, மெழுகுதிரி கம்பெனி வீட்டு எலிசபெத்தோடு ஓடியவன் தான் அவன்.

‘வீட்டை வித்துட்டா நான் எங்கேடா போவேன்? வேணாம்டா…சீக்கிரமா ரிடையர் ஆயிடுவேன்.. செத்தும் போயிடுவேன்.. வீடு மட்டுமில்லேடா.. பிஃஎப்.. கிராஜுவிட்டி..’

கனவில் முத்தம்மா டீச்சர் அவன் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

‘என்னாத்த வரும்.. உன் அக்காவோட எளைய மக கல்யாணத்துக்கு லோன் போட்டுக் கொடுக்கப் போறியே.. அதை அடைச்சுட்டு எம்புட்டுன்னு வரும்?’

தம்பி பெண்டாட்டி எலிசபெத் ரெட்டைச் சடையில் கலர் ரிப்பனும், ஓட்டைப் பல்லுமாக முகத்துக்கு நேரே கையை நீட்டிப் பழிப்புக் காட்டியபோது, கூடத்து ஃபோட்டோவிலிருந்த டீச்சரின் அம்மா விரலை மடக்கிக் கணக்குப் போட ஆரம்பித்தாள்.

‘பத்தொம்பதாயிரம்.. வட்டி ஒரு நாலாயிரத்துச் சில்லறை போக பதினஞ்சாயிரத்து முன்னூறு… வேண்டியிருக்கும்’டி முத்து…தோசைக்கல் வாங்க.. உன் அக்கா மவ கல்யாணம்.. பெறகு பிரசவம்.. காது குத்து. வரிசையா வந்துடும்..’

‘ஏம்மா, நானும் கல்யாணம் கட்டிக்கட்டா?’

முத்தம்மா டீச்சர் நாணிக் கோணிக்கொண்டு சொல்லும்போது எலிசபெத் கீச்சுக் கீச்சென்று இரைந்தாள்.

‘கெளவி..கெளவி.. கல்யாணம் கட்டிக்கிற மூஞ்சியாடி இது?..’

ரசம் போன கண்ணாடியில் முகம் பார்த்த முத்தம்மா டீச்சர் நரைத்துக் கலைந்து குத்திட்டு நின்ற தலைமுடியை ஒதுக்கிக் கொண்டாள்.

‘ஔவைக் கிழவி நம் கிழவி..’

எலிசபெத் சுற்றி வந்து குதித்து ஆடினாள்.

எப்போதோ பார்த்த எலிசபெத் முகம் இன்னும் ஐந்து வயசில் உறைந்து குழந்தைக் களையோடு இருக்க, உடம்பு மத்திய வயசுப் பெண்பிள்ளையாக ஊதித் தடித்திருந்த வினோதத்தை நினைத்தபடி டீச்சர் தெருவில் இறங்கினாள்.

பாக்கியலட்சுமி பின்னாலிருந்து கூப்பிட்டது.

ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வீட்டில் போய்ச் சொல்ல வேண்டும். மாடு ஓடிப் போய் பவுண்டில் அடைத்து விட்டால் அப்புறம் மீட்டுக் கொண்டு வர ஏகமாகச் செலவாகி விடும்..ரெவின்யூ இன்ஸ்பெக்டர் சர்க்கார் உத்தியோகஸ்தன் என்பதால் சும்மா கூட விட்டு விடுவார்கள் தான்..

என்றாலும் போய்ச் சொல்லாமல் முடியாது. பால்பாண்டியன் தயவு, ரிடையரானதும் ஏதாவது விதத்தில் தேவைப் படலாம். அதற்கு முந்தியும்..

‘சார்,, பினாங்குலேருந்து என் தம்பி கடுதாசி போட்டிருக்கான்.. என்னைப் பாக்கணும் போல இருக்காம்… அடுத்த மாசம் வரப் போறானாம் ..’

‘வரும்போது எனக்கு ஒரு காமிரா வாங்கியாறச் சொல்லுங்க டீச்சர்..’

‘அப்ப ஒண்ணு செய்யி.. பாக்கியலச்சுமி கூட நம்ம வீட்டு வாசல்லேயே தங்கிக்க.. மாடு கறக்க, சாணி அள்ளன்னு உபயோகமா இருக்கும்..எருமைச் சாணி.. வளிச்சு எடுத்துக் கூடையிலே கொண்டு போ மூதி..’

டீச்சர் தலையைக் குலுக்கிக் கொண்டாள். ஒரு கோப்பை சாயா குடித்தால் மனசு இப்படி எல்லாம் ஜோடித்துக் காட்டிக் கொண்டிருக்காது…

பின்னால் பலமாகக் கொட்டு சத்தம். டீச்சர் திரும்பிப் பார்த்தாள். சினிமா வண்டி நடுத் தெருவில் அடைத்தது போல் நின்றது. இனிமேல் முன்னால் வந்தால் மெழுகுவர்த்தி கம்பெனி சுவரில் தான் முட்ட வேண்டும்.

வண்டியில் இருந்து குதித்து இறங்கிய சின்னப் பையன் கையில் கலர் கலராக நோட்டீசுகளைப் பிடித்துக் கொண்டு முத்தம்மா டீச்சரைப் பார்த்துக் கையசைத்தான்.

‘என்ன எளவெடுத்த படமோ.. போய்த்தான் ஒரு நோட்டீசு வாங்கிட்டு வாயேன்..’

பாக்கியலட்சுமி மறுபடி சத்தம் போட்டது.

முத்தம்மா டீச்சர் மாட்டின் கயிற்றைப் பிடித்து இழுக்க, அது சிலுப்பிக் கொண்டது.

‘போடி கெளவி… போய்க் காம்போசிசன் நோட்டு திருத்து..’

ராத்திரி உடுத்தியிருந்த சாயம் போன, கிழிந்த புடவையோடு அயலார் வீட்டு வாசலில் போய் நிற்க முத்தம்மா டீச்சருக்குக் கூச்சமாக இருந்தது

போகாமல் முடியாது.

மூன்றாம் வீட்டு வாசல். நாற்பது வருடமாக இப்படித்தான் பச்சை வர்ணம் அடித்த இரும்புக் கதவு.

கதவில் சாய்ந்து கொண்டுதான் ராசாத்தி வீட்டுக்காரர் ஆலங்குச்சியால் பல் விளக்குவார்.

நாற்பது வருஷம் முன்னால் ராசாத்தி கல்யாணம் ஆன புதிதில் அப்படி..

‘பரலோக சாம்ராஜ்ஜியம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.. கடைத்தேற இதுவே கடைசி தருணம்..’

தெரசாள் மெழுகுதிரிக் கம்பெனி ஒலிபெருக்கியில் சுவிசேஷ பிரசங்கம் ஆரம்பமாகி இருக்கிறது. தெரசாள் புருஷன் மரியஜெகத்தின் குரல் ஒலிக்கிறது.

ராசாத்தி வீட்டுக்காரர் மாப்பிள்ளைராஜு என்ற மாப்பிள்ளை குரலும் இதேபோல் தான் கணீரென்று. பக்கத்தில் வந்து கிசுகிசுக்கும் போது மட்டும் பிசிறடிக்கும்.

‘பேரு என்ன?’

‘முத்தம்மா.. முத்துன்னு எல்லோரும் கூப்பிடுவாங்க..’

‘நானும் கூப்பிடட்டா?’

‘கூப்பிட்டு என்ன பண்ணப் போறீங்களாம்?’

முத்தம்மா டீச்சர் சிரிப்பை அடக்கிக் கொண்டு நடக்க, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வீட்டுக்குள்ளிருந்து ஒரு தாட்டியான ஸ்திரி வெளியே வந்தாள்.

‘பாக்யலஷ்மி.. இக்கட ரா..’

தெலுங்கு தெரிந்த பாக்கிய லட்சுமி அவள் பக்கமாகத் திரும்பி நடக்கும்போது முத்தம்மா டீச்சரை உரசிக் கொண்டு போனது.

சினிமா வண்டிப் பையன் பறக்க விட்ட சினிமா நோட்டீஸ் டீச்சர் காலடியில்.

குனிந்து எடுத்தாள்.

காதல் சித்திரம்.. காதுக்கு இனிய கானங்கள் .. கேவா கலர்.. புத்தம் புதிய காப்பி…

‘பளய படத்துக்கு மடியைப் பிடிச்சு இளுத்து நோட்டீசு வச்சாலும் ஒரு பய வரமாட்டான்.. தெலுங்கு டப்பிங் போடச் சொல்லு.. டிக்கெட் கிளிச்சு மாளாது..’

சைக்கிள் ஓட்டியபடியே சொல்லிப் போகிறவன் முத்தம்மா தம்பி ஓடிப் போனபோது இருந்த வயசுக்காரன்.

பழைய படம்.. பழைய பாட்டு..

பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா ..கேட்டதும் கிடைத்திடுமோ இந்தத் தோட்டத்து ரோஜாப் பூ..

பாட்டொன்று …

முத்தம்மா டீச்சருக்கு அடி வயிற்றில் இருந்து வலி கிளம்பியது.

———————————————————
அத்தியாயம் 2

தெரசாள், முத்தம்மா, அழகு மீனா, ராசாத்தி, சாந்தா, போதும்பொண்ணு, செல்வி..

ஒரு கூட்டமே தரை டிக்கெட்டில்.

ராசாத்தியின் அவ்வா அலமேலம்மாக் கிழவி புகையிலைக் கட்டையை வாயில் அடக்கிக் கொண்டு தடுப்புச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள்.

தடுப்புக்கு அந்தப் பக்கம் களவாணிப் பயல்கள். சினிமா கொட்டகைக்கு வருவதே குட்டிகளைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கத்தான். சமயம் கிடைத்தால் உரசியும் பார்ப்பார்கள். யாருமே எவனுமே யோக்கியமில்லை. காலம் கெட்டுக் கிடக்கிறது.

‘ஆட்ட பாட்டத்தைக் கொறச்சுக்கடி பேதியிலே போறவளே.. நீ எப்ப உக்காந்து வைக்கப் போறியோன்னு மனசு திக்கு திக்குன்னு அடிச்சுக்குது.. பெரியவ தெரண்டு ஆறு வருசமாச்சு .. அவளுக்கு இன்னும் ஒரு வழி பொறக்கலியேன்னு ராப்பூரா தூக்கம் இல்லே.. இவரானா ஒரு கவலையும் இல்லாம காக்கிப் பையை மாட்டிக்கிட்டு கடுதாசி கொடுக்கக் கிளம்பிடறாரு..சினிமா போறாளாம் சினிமா.. காசு என்ன கொட்டியா கிடக்குது .. தம்பி கையைப் பிடிச்சு ஆனா ஆவன்னா எளுத சொல்லித் தர்றது… வீடு கூட்டறது..நாயனா சட்டையிலே பொத்தான் தைக்கிறது..ஒண்ணாவது செய்ய வணங்குதாடி உனக்கு..’

‘எல்லாரும் படத்துக்குப் போறாங்க அம்மா.. தரை டிக்கெட்டு தான்.. நாலணா தான்.. ராசாத்தியோட் அவ்வா இருக்கில்லே.. அந்தக் கெளவியம்மா தொணைக்கு வருது..நாலணாக் கொடும்மா..’

அம்மாவிடம் பெயராத நாலணாவை நாயனா வந்ததும்தான் வாங்கிக் கொள்ள முடிந்தது.

போஸ்ட்மேன் பங்காருசாமிக்கு சின்ன மகள் முத்தம்மா செல்லம் தான்.

‘ஏண்டி புள்ளே முத்தம்மா.. உங்கம்மா ஒரு தாவணி போட்டு அனுப்ப மாட்டாளா.. அதும்பாட்டுக்கு நிக்குதே.. கண்ணுலே படலியா..’

முத்தம்மா போதும்பொண்ணு பின்னால் ஒண்டிக் கொண்டாள். கிழவி நேரம் காலம் தெரியாமல் உசிரை வாங்குவாள்.

‘எங்கேடி நிக்குது? இதுவா? கெளவி கண்ணுலே எருக்கம்பாலைத் தான் விடணும்..’

தெரசாள் முத்தம்மா கழுத்துக்குக் கீழே உற்றுப் பார்த்து விட்டு அழகுமீனா காதில் சொல்ல, ரெண்டு பேரும் பம்மிப் பம்மிச் சிரிக்கிறார்கள்.

தெரசாள் முத்தம்மாவுக்கு ரெண்டு வருசம் மூத்தவள். ராசாத்தி நாலு வருசம் போல மூப்பு. பெயிலாகிப் பெயிலாகி இந்த வருசம் முத்தம்மா கிளாஸ் தான்.

‘நம்ம சாதி சனமா இருந்துட்டு வேதத்துலே ஏறிட்டாங்க.. வேதத்துலே ஏறினா என்ன.. எருமை வளக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கா என்ன .. மாட்டை வித்தது தான் வித்தாங்க.. சொல்லிட்டு வித்தா வாங்கியிருந்திருப்போமில்லே.. ‘

தெரசாள் வீட்டில் மாட்டை விற்றதும் மெழுகுதிரிக் கம்பெனி தொடங்கியதும் முத்தம்மா பிறக்க முந்தி என்றாலும் அம்மா இன்னும் சொல்வதை நிறுத்தவில்லை.

என்றாலும் தெரசா வீட்டில் முத்தம்மா சர்வ சாதாரணமாக வளைய வருவாள். தெரசாளும் இங்கேயேதான் எப்போதும்… சதா வடிகிற மூக்கைப் புறங்கையில் துடைத்துக் கொண்டு அழுக்கு கவுனோடு அவள் தங்கை எலிசபெத்தும்..

ராசாத்திக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகிறதென்று வீட்டில் பேசிக் கொண்டார்கள். ஈர்க்குச்சி உடம்பில் சீட்டிப் பாவாடையும், பச்சைத் தாவணியுமாக வளைய வருகிற அவளை நிச்சயம் புருஷன்காரன் இடுப்பில் இடுக்கிக் கொண்டு போய் ஊர்க் கோடிக் கிணற்றில் போட்டு விட்டு, நல்ல வடிவான ஒரு பொம்பளையைக் கல்யாணம் செய்து கொண்டு விடுவான்.

இது தெரசாள், ராசாத்தியோடு சண்டை வரும் நேரங்களில் மற்றவர்களிடம் சொல்வது.

தெரசாளுக்குப் புருஷனாக வரப் போகிற மரியஜெகம் வீட்டோடு இருக்கப்பட்டவன். மெழுகுதிரி வேலையையும் சுவிசேஷத்தையும் அவனுக்கு தெர்சாளின் அப்பா அடித்து அடித்துச் சொல்லிக் கொடுப்பது எருமைக்காரன் தெருவுக்கெல்லாம் கேட்கும்.

யாரோ யாரையோ கல்யாணம் செய்து கொள்ளட்டும். படம் எப்போது ஆரம்பிக்கும் என்று இருந்தது முத்தம்மாவுக்கு. பீடிப் புகை வாடையும், முறுக்கு வாடையும், வியர்வையும், செம்மண் கிளப்பிய நெடியுமாக டெண்ட் கொண்டகை மூச்சை முட்ட வைத்துக் கொண்டிருந்தது.

‘எல்லோரும் வாழ வேண்டும்..’

பாட்டு சத்தம். திரை தூக்கி விட்டார்கள்.

இந்தியன் நியூஸ் ரீல். ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத், பீகாரின் வறட்சிப் பிரதேசங்களைப் பார்வையிட்டார். துணைக்குப் போகிற ஒற்றைப் புல்லாங்குழல் சத்தம்.

சோவியத் வீராங்கனை வாலண்டினா தெரஷ்கோவா விண் கப்பலில் உலகைச் சுற்றிக் கொண்டிருக்க, முத்தம்மாளுக்கு அடி வயிற்றில் வலி ஆரம்பமானது.

பொரிகடலை மென்று கொண்டிருந்த போதும்பொண்ணுவின் தோளைத் தொட்டாள் முத்தம்மாள்.

‘வயித்தை வலிக்குதடி.. வீட்டுக்குப் போகலாமா?’

‘கிறுக்கோ… ஓரமாப் போய் ஒண்ணுக்கிருந்துட்டு வாடி.. எல்லாம் சரியாயிடும்..’

விளக்கு அணைந்து, மேலே ஆப்பரேட்டர் ரூமிலிருந்து படர்ந்த கிரணங்கள் வெள்ளைத் திரையை வண்ணமயமாக ஒளிவிடச் செய்ய, முத்தம்மா வயிற்று வேதனையைக் கொஞ்சம் மறந்தாள்.

‘அய்.. கலர்ப் படம்டீ..’

தெரசாள் தொடையில் நிமிண்டினாள்.

கேவா கலர். முகம் முழுக்க சிகப்பு அப்பிய கதாநாயகியும், தோழிகளும் கால்ச்ட்டை போட்டுக் கொடு கடற்கரையில் நடந்து போகிறார்கள். பின்னால் பாடிக்கொண்டு கதாநாயகன்.

‘அளகா இருக்கான் இல்லே.. அப்படியே புடிச்சுக் கடிச்சுத் திங்கணும் போல இருக்கு..’

போதும்பொண்ணு செம்மண்ணில் ரெண்டு கையையும் அளைந்து கொண்டு சொன்னாள்.

கொஞ்சம் பெண் சாயலாக, தொப்பை போட்ட கதாநாயகன்.

அவன் அழகுதான் என்று முத்தம்மாவுக்கும் பட்டது. கடித்தால் பவுடர் வாடை அடிக்குமோ என்னமோ…

‘பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..’

கிண்டல் செய்து சீண்டுகிற பாட்டு.

கதாநாயகன் கூடவே, அவசரமாக மீசை வைத்த, கிழடு தட்ட ஆரம்பித்திருக்கும் காலேஜ் நண்பர்கள் வேடிக்கையாக ‘ஹோ ஹோ… ஹே.. ஹே..’ என்று குதித்துக் கொண்டு போகிறார்கள்.

கடைவாயில் புகையிலைச் சாறு வடிய அலமேலம்மாக் கிழவி ரசிக்கிறதை, மங்கின வெளிச்சத்தில் முத்தம்மா கையைக் கிள்ளித் தெரசாள் காட்டுகிறாள்.

கையைக் கிள்ளினால் திரும்ப அடி வயிறு வலிக்குமா? முத்தம்மாவுக்குப் புரியவில்லை.

தொப்பைக்காரன் கதாநாயகியை அணைத்துப் பிடிக்க யத்தனிக்கிறான். போதும்பொண்ணு உட்கார்ந்தபடிக்கே பாம்பு போல அப்படியும் இப்படியுமாக நெளிகிறாள்.

கதாநாயகி பொய்க் கோபத்தோடு விலகி ஓடுகிறாள். முத்தம்மாவுக்கு வலியும் சந்தோஷமுமாக இருக்கிறது. அவன் விடாமல் துரத்துகிறான்.

தொப்பை குலுங்க ஓடிக் கதாநாயகியைக் கட்டியணைத்து அப்புறம் மார்பில் சாய்த்துக் கொள்கிறான். அவள் கண்களை மூடிக் கொள்கிறாள்.

முத்தம்மாவும் கண்ணை மூடிக் கொண்டாள்.

‘பாட்டொன்று பாடலாமா?’

வயிற்றில் ஆயிரம் ஊசி குத்திய வலி. மெல்லக் கண்ணைத் திறந்தாள்.

கதாநாயகன் முகம் திரை முழுக்கப் பெரிதாகி முத்தம்மாவைப் பார்த்துக் கண்ணடித்தபோது அவள் அலறினாள்.

அலமேலம்மாக் கிழவியோடு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த அந்த ராத்திரியில் முத்தம்மா பெரிய மனுஷியாகி இருந்தாள்.

—————————————————-

அத்தியாயம் 3

முத்தம்மா டீச்சர் வென்னீரை எடுத்து வைத்துக் குளியலறைக் கதவைச் சாத்திக் கொண்டபோது அங்கே ராசாத்தி வீட்டுக்காரர் மாப்பிள்ளை ராஜு…

ஆலங்குச்சியால் பல் விளக்கிக் கொண்டு .. காறிக் காறி உமிழ்ந்து கொண்டு..

குறக்களி காட்டுகிறது மனது.

பின்னால் வந்து புஜத்தைப் பற்றும் கைகள் நாற்பது வருஷம் முந்திய வலுவோடு

‘முத்தம்மா.. முத்துன்னு கூப்பிடணும் இல்லே.. என்ன படிக்கறே முத்து?’

‘ஒம்பதாவது ராசாத்தி வந்துடுவா.. அங்கெல்லாம் தொடாதீங்க..’

‘ஒம்பதாவது தானா.. இது காலேசுலே படிக்குது போல இருக்கு..’

முத்தம்மா டீச்சரின் வற்றிய மார்பில் அந்தக் கைகள் படர, மெல்லத் திரண்டு விடியும் இணை…

குறக்களி காட்டுகிறது மனசு தொடர்ந்து..

முத்தம்மா டீச்சர் வென்னீரை எடுத்து ஊற்றிக் கொண்டாள். பின்னால் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே நிற்கிறார். வெட்கம் பிடுங்கித் தின்கிறது.

‘இத்தனை வருசமா எங்கே போனீங்களாம்?..’

சோப்பு நழுவித் தரையில் விழுகிறது.

‘நானா.. நான் செத்துப் போய் பதினஞ்சு வருசமாச்சே.. ராசாத்தி சொல்லலே?’

ராசாத்தி திருப்புவனத்தில் மருமகள் கொட்டும் புழுத்த சோத்துக்காகத் திண்ணையில் கிடக்கிறாள்..

‘மவராசன்.. போய்ச் சேர்ந்துட்டாரு.. பாவி நானு பூமிக்குப் பாரமா உசிரை வச்சுக்கிட்டு..’

போன முழுப் பரிட்சை விடுமுறை சமயத்த்தில் ராசாத்தியைப் பார்த்தபோது அவள் அழுதது முத்தம்மா டீச்சர் காதிலேயே இருக்கிறது.

தெரசா போயாச்சு.. செல்வி போயாச்சு.. அழகுமீனா.. சாந்தா.. எங்கே இருக்காங்கன்னே தெரியலே… போதும்பொண்ணு கைகால் விளங்காம இளுத்துக்கிட்டுக் கிடந்து போன மாசம் தான் உயிரை விட்டா.. இப்போ.. செத்துப் போன மாப்பிள்ளை வந்து உடம்பைத் தடவி விட்டு.. மனசு.. மனசு இட்டுக் கட்டுது எல்லாம்.. இல்லே, எனக்கும் தான் நேரம் வந்தாச்சோ..

முத்தம்மா டீச்சரின் கண் நிறைந்து போனது.

‘ஏண்டி முத்தம்மா.. கல்யாணத்துக்குப் போக வேணாம்? எம்புட்டு நேரமாக் குளிப்பே.. கல்யாணப் பொண்ணு ராசாத்தியா, நீயா? சீக்கிரமா வெளியே வாடி..’

கூடத்தில் மாட்டியிருந்த புகைப்படத்தில் இருந்து அம்மா குரல் தேசலாகக் கேட்கிறது.

‘புட்வையை உடுத்திட்டுப் போ.. பாந்தமா இருக்கும்..’

நாயனா குரல் கூடவே வருகிறது.

மரப்பாச்சி போல ராசாத்தி.. தலை கொள்ளாமல் மல்லிப்பூ… பட்டுப் புடவை..

‘பொண்ணை அழைச்சுக்கிட்டு வாங்க..’

ராசாத்தியைக் கையைப் பிடித்து எல்லோரோடும் அழைத்து வந்தபொழுது தான் மாப்பிள்ளையைப் பக்கத்தில் பார்த்தது.

கருப்பா .. உசரமா.. பெரிய மீசை.. கண்ணைப் பாரு.. செக்கச் செவேல்னு.. முத்தம்மாவுக்கும் கல்யாணமாகும். வரப் போறவர் இது மாதிரித்தான் இருப்பாரு.. ஜம்முனு .. ஆகிருதியா. இந்தாளு மோட்டர் சைக்கிள் ஓட்டுவாரா.. பாட்டுப் பாடுவாரா?

அரசாணியை நடுவில் வைத்துப் பெண்கள் எல்லோரும் சுற்றி வந்து பூவும் நெல்லும் தூவிக் குலவையிடும்போது, முத்தம்மா புடவை தடுக்கி மாப்பிள்ளை மேலேயே சாய்ந்துவிட்டாள்.

ஐயோ.. வேத்து மனுசர்.. என்ன நினைப்பாரோ.. எல்லோரும் வேறே பார்க்கிறாங்க..

முத்தம்மா தடுமாறி எழுந்தபோது ஒரு வினாடி மாப்பிள்ளை கை அவள் இடுப்பில் வருடி விலகியது.

உடம்பு பற்றி எரிந்து குளிர்ந்து சிலிர்த்து வியர்க்கிறது.

வென்னீர்க் குவளையைக் கீழே வைத்தாள் முத்தம்மா டீச்சர்.

‘லேசுப்படவரில்லே நீங்க..’

எச்சில் வடியும் ஆலங்குச்சியால் அவள் அடிவயிற்றில் வருடிக் கொண்டு மாப்பிள்ளை அமர்த்தலாகச் சிரிக்கிறார்.

‘நீ மட்டும் லேசுப்பட்டவளா.. கதிரேசன் வாத்தியைக் கேட்டாச் சொல்லுவானே..’

முத்தம்மா டீச்சர் அடிக்கக் கை ஓங்கினாள் செல்லமாக.

‘இதைச் சொல்லத்தான் வந்தீங்களா?’

முத்தம்மா சோப்புத் துண்டை வயிற்றோடு அமுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

‘அதில்லே.. ஞாயித்துக்கிழமையாச்சே.. கவிச்சி ஏதும் சமைக்கலியா?’

மாப்புள்ளைக்குக் கவிச்சி ரொம்ப இஷ்டம். அதுவும் மட்டன் கவாபு.

‘கவிச்சியா? சமைச்சா என்ன கொடுப்பீங்க?’

பின்னாலிருந்து தழுவ வருகிற கைகள்.. கண்ணாடியில் நீராவி படிந்து உடம்பு தெரிய மாட்டேன் என்கிறது.

‘சாயந்திரம் படத்துக்கு கூட்டிட்டுப் போறேன்.. உனக்குப் பிடிச்ச படம்..’

புடவையைச் சுற்றிக் கொண்ட போது வாசல் கதவைத் தட்டுகிற சத்தம்.

‘பாட்டொன்று பாடலாமா?’

வாய்க்குள் பாடிக் கொண்டே முத்தம்மா டீச்சர் கதவைத் திறந்தாள்.

மெஸ் வீட்டுப் பையன்.

‘டீச்சர்.. இட்டலியும் கறிக்குழம்பும் இருக்குது.. பாத்திரத்தை சாயந்திரம் வாங்கிக்கறேன்..’

மேஜை மேல் அடுக்குப் பாத்திரத்தை வைத்து விட்டு ஓடுகிற பையன்.

‘காசைக் கரியாக்காதேன்னா கேட்டாத்தானே. மெஸ்ஸிலே வாங்கித் தின்னுட்டுக் கிடக்க பணம் என்ன கொல்லையிலே வெளையுதா.. நாளைக்கே ஜோதி பொண்ணுக்குக் கல்யாணம்.. வளைகாப்பு.. பந்தி போஜனம்..’

புகைப்படத்திலிருந்து அம்மா முழங்காலைப் பிடித்துக் கொண்டு இறங்கிவர முயற்சி செய்கிறாள்.

‘இட்லியும் கறிக் குழம்புமா.. தோசைக்கு இல்லே நல்லா இருக்கும் அது.. இட்லிக்கு வடகறிதான்..’

காம்போசிஷன் நோட்டு அடுக்கி வைத்திருந்த மேசை மேல் உட்கார்ந்து சுருட்டுப் பிடித்தபடி மாப்பிள்ளை சொல்கிறார்.

’எறங்குங்க.. நோட்டெல்லாம் பத்திக்கப் போவுது.. காம்போசிஷன் கரக்ட் பண்ணி நாளைக்கு ஸ்கூலுக்கு எடுத்துப் போகணும்..’.

‘இட்லிக்கு கறி நல்லாத்தானே இருக்கும்..’

நாயனா புகைப்படத்தில் பக்கத்தில் நின்ற அம்மாவிடம் விசாரித்தார்.

’அது கெடக்கு.. தோசைக்கடை போட்டு வாய்க்கு வக்கணையாப் பரிமாறி நாலு காசு சமபாதிக்கலாம்னேன்.. பணம் இல்லேன்னுட்டா..’

புகைப்படத்திலிருந்து அம்மா முணுமுணுக்க்கிறாள்.

‘கூறு கெட்டவளே.. தோசை தோசைன்னு அடிச்சுக்கறியே.. இவளுக்கு ஒரு கல்யாணம் காச்ச்சி நடத்திப் பார்க்க ஏதாவது வழி பண்ணினோமா..’

முத்தம்மா டீச்சரின் நாயனா அந்தக் கல்யாணப் புகைப்படத்திலிருந்து இறங்கித் தபால் பட்டுவாடா பையை ஓரமாக வைத்து விட்டுத் தரையில் உட்கார்கிறார்.

நின்றபடியே, ஒரு இட்லியை விண்டு குழம்பில் புரட்டினாள் முத்தம்மா டீச்சர். வயிறு கொள்ளாத பசி எழும்பி வந்து நெஞ்சில் அடைத்தது.

‘அம்மா.. படம் வந்திருக்கு.. போகட்டா?’’

‘அதான் ராசாத்தி கல்யாணத்துக்கு அப்புறம் போனியே..’

அம்மா சின்ன நக்கலோடு சொல்ல நடுக் கூடத்தில் நீட்டி நிமிர்ந்து அசையாமல் படுத்துக் கொண்டார் நாயனா.

‘அன்னிக்கு நான் தானே படம் பார்க்க கூட்டிப் போனது..’

மாப்பிள்ளை கள்ளக்குரலில் காதில் கிசுகிசுக்கும் போது மூச்சு முட்ட வைக்கிற சுருட்டு வாடை.

‘அன்னிக்கும் காலையிலே பசியாற இட்டலிதான்.. கவிச்சி இல்லேன்னுட்டாங்க.. பொண்ணைக் கூட்டிப் போறதுக்கு தலைநாள் சைவம் சமச்சு விரதம் இருக்கறதாம்..என்ன பளக்கமோ.. அன்னிக்கு என்ன கெளமை? ஞாபகம் இருக்கா முத்து?..’

இல்லாமல் என்ன.. செவ்வாய்க் கிழமை. கல்யாணத்துக்கு வந்த பொண்ணோட தோழிப் பெண்டுகளும் மற்றவர்களும் ஓய்ந்து கிடக்கிற பகல் பொழுது. முத்தம்மாவும், தெரிசாவும், போதும்பொண்ணும், செல்வியும், அலமேலம்மா கிழவியும் சீர்வரிசைப் பாத்திரத்தை எடுத்துப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சந்தனம் சிதறிக் காய்ந்து போயிருந்த ஜமுக்காள விரிப்பில் ராசாத்தி மல்லாந்து படுத்துக் கிடக்கிறாள்.

‘இப்படியே பளகிடுச்சாடி?’

தெரசாள் சீண்ட, ஓவென்று உயரும் சிரிப்புச் சத்தம்.

முண்டா பனியனும் லுங்கியுமாக மாப்பிள்ளை உள்ளே வரும்போதே சின்னதாகச் சிரித்துக் கொண்டுதான் வருகிறார். அவரும் கேட்டிருக்க வேண்டும்.

ராசாத்தி அவசரமாக எழுந்து உட்கார, கண் செருகுகிறது.

‘இதுக்கே இப்படிக் கெறங்கிப் போனா எப்படி.. இன்னும் மூணு நாள் தனிப் பொட்டியிலே ரயில் பயணம்.. கல்கத்தா போய்ச் சேர்ந்து மாப்பிள்ளை இவளை தோள்லேதான் தூக்கிட்டுப் போகணும்…’

போதும்பொண்ணு சொல்ல மறுபடி எழுந்த சிரிபபாணி.

முத்தம்மாவுக்கு சந்தோஷமாக இருக்கிறது. பயமாக இருக்க்கிறது. இனிமேல் கொல்லைப் பக்கம் போகக் கூடாது. வீட்டில் போய்த்தான் ஒன்றுக்கு இருந்து விட்டு வர வேண்டும். இல்லையோ போச்சு…

ராசாத்தி வீட்டுக் கொல்லையில் பெரிது பெரிதாக வேப்ப மரமும், மாமரமும்…

மரத்துக்குப் பின்னால் சுருட்டுப் பிடித்தபடி நின்ற மாப்பிள்ளை.. அவர் முத்தம்மாளைக் கூப்பிடுவார். கூப்பிட்டார்.

மாப்பிள்ளை உள்ளே வந்தபோது அவ்ர் கண்ணைப் பார்க்காமல் முகத்தைக் கவிழ்ந்து கொண்டாள் முத்தம்மா .

ரொம்ப மோசம் நீங்க..

மாப்பிள்ளை நுழைந்ததைப் பார்த்து அலமேலம்மாள் மட்டும் நாணிக் கோணிக் கொண்டு எழுந்து நின்றாள்.

‘இதுங்க எல்லாத்துக்கும் வாய் சாஸ்தி.. தப்பா நெனச்சுக்காதீங்க..அவ அவளுக்கு வீட்டுக்காரன் வந்து வாயிலே போட்டா அப்புறம் பேச்சு எளும்புமான்னேன்..

மாப்பிள்ளை முத்தம்மாவைப் பார்த்துச் சிரித்தார். அப்புறம் ராசாத்தியைப் பார்த்தார்.

‘’ராசாத்தி.. சாய்ந்திரம் எல்லோருமா சினிமாவுக்குப் போறோம்.. எல்லோரும்னா எல்லாரும் தான்.. உன் சினேகிதிங்க வீட்டுலே நான் சொன்னேன்னு சொல்லு..’

சொல்லி விட்டுத் திரும்ப வாசலுக்கு நடக்கிற மாப்பிள்ளை..

முத்தம்மா டீச்சர் கடைசி விள்ளல் இட்லியை கறிக் குழம்பில் தோய்த்து வாயில் போட்டபோது, மாப்பிள்ளை போய் விட்டிருந்தார்.

————————————-

அத்தியாயம் 4

எல்லோருக்கும் நாற்காலி டிக்கெட்.

அலமேலம்மாக் கிழவி கூட கதவோரம் நாற்காலியைக் கோணலாக இழுத்துப் போட்டுக் கொண்டு வாயில் புகையிலைக் கட்டையைக் குதப்பியபடி கெத்தாக உட்கார்ந்திருந்தாள்.

ஒரு பெரிய பொட்டலம் நிறைய மட்டன் கவாப்பும், மீன் கவாப்பும் வாங்கி வந்து, படம் ஆரம்பிக்க முன்னால் எல்லோருக்கும் கொடுத்தார் மாப்பிள்ளை.

‘கொடுங்க..கொடுங்க.. நாளைக்கு ராசாத்தி கஜானாவைப் பிடிச்ச பிறகு சுக்கு மல்லி காப்பி கூடக் கெடைக்காது..’

போதும்பொண்ணு உரக்கச் சொல்ல, வழக்கமான சிரிப்புச் சத்தம்.

இந்த நாலு நாளில் சிரித்துச் சிரித்து முத்தம்மாவுக்கு, சிநேகிதிகளில் யாராவது பேச ஆரம்பித்தாலும், தானே சிரிப்பு வந்து விடுகிறது.

‘தெரசாளும் வந்திருந்தா நல்லா இருக்கும்..’

அழகுமீனா சொன்னாள்.

தெரசா வரவில்லை.

‘கல்யாணம் ஆகப் போற பொண்ணு.. கண்ட சினிமாவுக்கெல்லாம் போகக் கூடாது..’

வீட்டில் சொல்லி விட்டார்களாம்..

‘நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் கூட்டிப் போறேன்.. பத்துக் கட்டளை மாதிரி நல்ல படம் வரும்…’

அவளைக் கட்டிக்கொள்ளப் போகிற மரியஜெகம் சொல்லியிருக்கிறானாம்.

பத்துக் கட்டளையும் கேவா கலர்ப்படமா, அதில் பாட்டு உண்டா என்று தெரசாளுக்குத் தெரியவில்லை.

‘ரெண்டு வருஷம் முந்தி இதே படம் வந்தது. நாங்க எல்லோரும் இப்படிக் கூட்டமா வந்தோம்..’

பின்னால் இருந்து ராசாத்தி குரல்.

கவாப்புக் கடித்தபடி முத்தம்மா பின்னால் பார்க்க, பின் வரிசையில் மாப்பிள்ளை தோளில் தலையைச் சாய்த்தபடி ராசாத்தி சொல்லிக் கொண்டிருந்தது மெலிசாகக் காதில் விழுந்தது.

முத்தம்மாவுக்கு நேர் பின்னால் கட்டை மீசையைத் தடவிக் கொண்டு, அவளையே பார்க்கிற மாப்பிள்ளை.

மதியம் பாத்திரம் அடுக்கும்போது, நடுவில் ஒரு நிமிஷம் தோட்டத்துக்கு ஒண்ணுக்கிருக்கப் போய் விட்டு வருகிற நேரத்தில், கழிப்பறை வாசலில் முத்தம்மாவின் உதட்டைக் கவ்விச் சிரித்துப் போன கைகாரர்.

யாராவது பார்த்திருந்தால்… தைரியம் தான்.. தப்பில்லையா.. சீ…

விளக்கு அணைத்து மணியடிக்கப் படம் போட்டானது.

கடற்கரை. மோட்டார் பைக் சத்தம்.

முத்தம்மாவுக்குக் குறுகுறுவென்று வந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

‘பாட்டொன்று பாடலாமா .. பக்கம் வந்து பேசலாமா..’

தொப்பை தள்ளிய கதாநாயகன் கண்ணடித்தபடி ஆடிக் கொண்டு வர, முத்தம்மாவுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது.

கதாநாயகிக்கும் பெரிய உதடுகள். முத்தம்மா போல.

ஒரு பெரிய பூவைக் காட்டுகிறார்கள். அப்புறம் கதாநாயகனின் உதடுகள் திரை முழுக்க விரிகின்றன.

பெண்ணைப் போல உதட்டுச் சாயம் தீற்றிய கதாநாயகன். கடித்துத் திங்கலாம் போல அழகானவன். கடித்தால் பவுடர் மணக்கும். மாப்பிள்ளை வேறு மாதிரி அழகு. கடித்தால் கவாப்பு மணக்கும்.

கதாநாயகன், படகில் சாய்ந்து நின்று கண் இமையைப் படபடவென்று விரிக்கும் கதாநாயகியின் உள்ளங்காலை வருடுகிறான். முத்தம்மாவின் மனம் வாலண்டினா தெரஷ்கோவா மாதிரி தெரிந்த ஆகாசத்தை எல்லாம் கடந்து பறக்கிறது.

பின்னாலிருந்து மாப்பிள்ளையின் கால் விரல்கள் முத்தம்மாவின் உள்ளங்காலில் வருடி விஷமம் செய்கின்றன.

துள்ளிக் குதித்து ஓடிப் படகைச் சுற்றி வருகிற கதாநாயகி மார்பு விம்ம நிற்கிறாள். காலேஜ் படிக்கிறவள். மாப்பிள்ளைக்கு ரொம்பப் பிடிக்கும்.

உள்ளங்கால் சில்லென்று எரிகிறது.

கதாநாயகியின் இடுப்பை வளைத்துப் பிடித்துக் குனிகிற கதாநாயகன்.

‘வண்டாக நானும் தேன் உண்ணலாமா?’

பகலில் தோட்டத்து மூலையில் சுருட்டு வாடையோடு தேன் உண்ட உதடுகள்..

கடைவாயில் தெற்றுப்பல் தெரிந்திருக்குமா…

சிநேகிதிக்குத் துரோகம் இல்லையா…

முத்தம்மா கொடுத்தால் தானே.. வாங்கினதெல்லாம் அதில் சேர்த்தியா..

காலை நகர்த்த, ஏனோ மனசு நகர மாட்டேன் என்கிறது.

கதவுப் பக்கம் சின்னதாக ஒரு விளக்கு வெளிச்சம். டிக்கட் செக் பண்ண வருகிறவன்.

டார்ச் வெளிச்சம் தொடை தொடையாக நகர்கிறது.

முத்தம்மா பக்கம் யாரோ குனிகிறார்கள்.

சொல்லி விடலாமா?

பின்னாலே உக்கார்ந்து என் கால்லே உரசற ஆளு கிட்டே டிக்கெட் கேட்டுப் பாருங்க..

காதருகில் கிசுகிசுப்பு சத்தம்.

‘படம் பார்த்தது போதும்.. கிளம்பு..’

முதல் வீட்டு சடகோப ராமானுஜ மாமா குரல்.

முத்தம்மா புரியாமல் இருட்டுக்குள் பார்க்கிறாள். காலைக் கவ்விப் பிடித்தபடி மாப்பிள்ளையின் கால்கள்.

மனசேயில்லாமல் விலக்குகிறாள் முத்தம்மா.

திரையில் பிருஷ்டங்கள் ஆடிக் குலுங்க இடுப்பை ஒயிலாக ஒடித்து ஒடித்து நடந்து போகும் கதாநாயகி. தூரத்தில் ரயில் விடுகிறது போல் ஒருத்தி கையை இன்னொருத்தி பிடித்தபடி ஒற்றை வரிசையாக ஓடுகிற தோழிகள்..

அதில் ஒரு தோழியாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..

‘எந்திரு முத்தம்மா.. சொல்றேன் இல்லே..’

சடகோப மாமா அவசரப்படுதுகிறார். எழுந்திருக்கிறாள்.

போகாதே போகாதே என்று சைகை காட்டியபடி கதாநாயகன் காற்றில் பூப்போட்ட கைக்குட்டையைப் பறக்க விடுகிறான்.

திரும்பத் திரும்பப் பார்த்தபடி முத்தம்மா வெளியே வந்தாள்.

இருட்டு. தூறிக் கொண்டிருந்தது.

‘காரியர்லே உக்காரு..’

அப்புறம் ஒன்றும் பேசாமல் சைக்கிள் மிதிக்கிற சடகோப மாமா..

முத்தம்மாவுக்கு உள்ளங்காலில் மாப்பிள்ளை கால் நகம் பட்ட இடம் எரிந்தது. சைக்கிள் காரியரில் உட்கார்ந்தபடி காலைத் தடவிப் பார்க்க முடியாது.

கதாநாயகி மோட்டார் பைக் பின்னால் உட்கார்ந்து போவாளா?

ஏரிக்கரையில் சைக்கிள் ஏறியபோது டெண்ட் கொட்டகையிலிருந்து கேவி அழுகிற சத்தம் கேட்டது. பாவம், கதாநாயகிக்கு என்னமோ..

முத்தம்மா வீட்டு வாசலில் சின்னக் கூட்டம்.

முத்தம்மாவின் நாயனா உடம்பை வீட்டுக் கூடத்தில் கிடத்தி இருந்தது. மூக்கில் பஞ்சு. பக்கத்தில் ஊதுவத்தி சுருள் சுருளாகப் புகைந்தது.

——————–

அத்தியாயம் 5

இயற்கை மனிதனுக்கு அளித்த செல்வங்களில் மகத்தானவை நிலமும் நீரும் ஆகும். நிலத்தில் வளரும் செடிகொடிகளும், மரங்களும், மனிதனின் பசியைப் போக்க உணவையும், சுவாசிக்க நல்ல காற்றையும் வழங்குகின்றன. நிலத்தின் அடியிலும் இயற்கை பல்வேறு கனிம, படிவ வளங்களை வெகுமதியாகக் கொடுத்துள்ளது. நான் அவற்றில் ஒன்று. என் பெயர் நிலக்கரியாகும்.

முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டு திருத்திக் கொண்டிருந்தாள்.

ஏழாவது வகுப்புப் பாடம். முப்பத்தாறு நோட்டுகளில் நிலக்கரி தன் வரலாறு கூறுகிறது.

கண் மெல்ல இருள்கிறது.

‘நாங்க ரொம்ப ஆசைப்படலே… ஒரு அம்பதாயிரம்.. அப்புறம் பத்திரம் பதியற செலவு..வீடு பழசா இருக்குன்னு பாக்காதீங்க.. இந்தக் கெளட்டு முண்டையைத் தூக்கி வெளியே எறிஞ்சிட்டு, துப்புரவா வெள்ளையடிச்சுக் கொடுத்துடறோம்….அடுத்த வாரம் நாங்க பினாங்கு திரும்பணும்..அதுக்குள்ளே பணத்தோட வந்துடுங்க..’

எலிசபெத் விசுக் விசுக் என்று இடுப்பை ஒடித்து நடந்தபடி வீட்டைச் சுற்றி வருகிறாள். கூடவே, வீடு பார்க்க வந்த யாரோ.

‘இருடி..அவசரப்படாதே.. அக்கா காம்போசிஷன் நோட்டு திருத்தி முடிக்கட்டும்..’

முத்தம்மா டீச்சரின் தம்பி சமாதானப் படுத்துகிற குரலில் சொல்கிறான்.

‘ஆமா.. முப்பது வருசமா நிலக்கரி கதை சொல்றது..நான் சென்ற இன்பச் சுற்றுலா..இந்த மொகரைக் கட்டைக்கு சுற்றுலா…எங்கேயாவது போயிருக்கியாடி?..’

எலிசபெத் இடுப்பில் கை வைத்தபடி கேட்கிறாள். குரலில் எகத்தாளம்.

‘ஒன்னிய மாதிரி ஓடுகாலியாடி..பாத்துப் பாத்து வளர்த்த புள்ளை..மதுரையிலே டீச்சர் டிரயினிங் படிக்கத் தனியா அனுப்பினபோது என் மனசு என்ன பாடு பட்டது தெரியுமா?’

படத்திலிருந்து அம்மா முட்டியைப் பிடித்தபடி மறுபடி இறங்கி வர முயற்சி செய்கிறாள்.

‘வாசல்லே கட்டின எருமையை வித்து பணம் புரட்டின வருத்தம்டி அது..’

நாயனா அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஒரே முட்டாகச் சிரிக்கிறார்.

‘சும்மா இருங்க.. நீங்களும் போய்ச் சேர்ந்துட்டீங்க..இவனானா சின்னப் பய…ஜோதியெ கடனோ உடனோ வாங்கிக் கட்டிக் கொடுத்தாச்சு..சம்பாதிச்சுக் கொட்ட முத்தம்மாவைத் தவிர வேறே யாரு இருந்தாங்க.. அப்பப் படிக்க வைக்காட்ட இப்படி சம்பாதிக்க முடியுமா..தோசைக் கடையும் போட வேணாம்னுட்டா.. ஜோதி பிரசவம்…தம்பி படிப்பு..நாங்க சாப்பிட.. துணிமணி..இவளுக்குக் கஞ்சிப் பசை போட்ட புடவை..மூக்குக்க் கண்ணாடி.. குடை.. சம்பளமும் லோனுமா இன்னும் வந்துட்டுத்தானே இருக்கு..எருமை எட்டு வருசத்துலே பால் மரத்துப் போயிடும்..’

அம்மா நீளமாகப் பேசி மூச்சு வாங்க படத்தில் உறைந்து போகிறாள்.

‘நீ ஒண்ணு.. ஜோதியோட மக கல்யாணத்துக்குக் குதிர்ந்துட்டா…அவ வீட்டுக்காரன் போலீஸ் உத்தியோகத்திலே பெரிய வயத்தைத் தவிர வேறே என்னத்தைச் சேர்த்து வச்சான்..முத்தம்மா பணம் வந்தாத்தான் வீட்டுலே சுப காரியம் நடக்கும்..சரி நான் கடுதாசி டெலிவரி பண்ணிட்டு வந்துடறேன்..ஏகமா கல்யாணக் கடுதாசு கொடுக்காம தங்கிப் போச்சு..’

நாயனா சைக்கிள் விடுகிறது போல கையை நீட்டி வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வருகிறார்.

‘என் கல்யாணம் கூட வருதே நைனா.. பத்திரிகை அடிக்க வேணாமா?..’

சைக்கிள் மணிச் சத்தத்தில் முத்தம்மா குரல் அமுங்கிப் போகிறது.

‘என்ன இருந்தாலும் அக்கா பணத்தை எடுத்துக்கிட்டி நான் போயிருக்கக் கூடாது.. தப்புதான்.’

தம்பி மேசை விளிம்பில் உட்கார்கிறான்.

‘அதுனாலே என்ன.. வ்ட்டி வேணா போட்டு இவ மூஞ்சியிலே விட்டு எறிஞ்சிடலாம் .. அதுக்குத்தானே வந்தது..’

எலிசபெத் சொல்லும்போது தெரசாள் மெழுகுதிரிக் கம்பெனி ஒலிபெருக்கியில் மரிய ஜெகத்தின் குரல்..

‘வாருங்கள் … வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே…தேவன் அழைக்கிறான்.. இளைப்பாறுங்கள்..அற்புத சுகமளிக்கும் ஆத்தும சரீர பிரார்த்தனைக் கூட்டம் தொடங்கப் போகிறது . வாருங்கள்..’

‘அயித்தான் கூப்பிடறாரு பாருங்க.. எங்க தெரசாக்கா போனபோது கூட வர முடியாம போயிடுச்சு..வாங்க .. போய்ப் பார்த்துட்டு வரலாம்..’

வயதுக்குப் பொருத்தமில்லாமல் அழுக்கு கவுன் போட்டுக் கொண்டு மேசைக்குப் பின்னால் நிற்கிற எலிசபெத்.

முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டின் அடுத்த பக்கத்தைத் திருப்பினாள்.

நான் தமிழ்நாட்டில் நெய்வேலியில் வெட்டி எடுக்கப் படுகிறேன். பீகாரில் தன்பாதில் பெரிய நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. என்னுடைய பலன்கள் பலப்பல. புகைவண்டிகளில் நீராவி எஞ்ஜின்களில் என்னை எரித்துத்தான் இயங்கத் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள்.

‘நீராவி எஞ்ஜின் எல்லாம் எப்பவோ ரிடையர் ஆயிடுத்து..நீயும் சீக்கிரம் ஆக வேண்டியது தான்..’

காம்போசிஷன் நோட்டுக்களைக் கட்டி எடுத்து வந்த கொச்சக் கயிற்றில் ஸ்கிப்பிங் விளையாடியபடி எலிசபெத் ஓட்டைப் பல் தெரியச் சிரிக்கிறாள்.

‘பினாங்குலே என்னடா யாவாரம்.. பேதியிலே போறவனே..’

அம்ம குரல் திரும்பப் படத்தில் இருந்து வருகிறது.

‘தோசைக் கடை.. எலக்டிரிக் அடுப்பிலே தோசை சுடறது.. ஒரே கல்லுலே ஆறு தோசை போடலாம்..’

‘மட்டன் கவாப்பு கூட போடறோம்..’

எலிசபெத் முத்தம்மா டீச்சரைப் பார்த்துக் கண்ணடிக்கிறாள்.

‘கடையை வேலையாளுங்க கிட்டெ விட்டுட்டு வந்திருக்கோம்.. அடுத்த வாரம் திரும்பிடணும்..’

முத்தம்மா திருத்தி முடித்த காம்போசிஷன் நோட்டுகளை ஓரமாக நகர்த்தினாள்.

‘இன்னும் ஒரு வாரம் தான்.. அதுக்குள்ளே நெலக்கரி, தெருப்புழுதி எல்லாம் வரலாறு சொல்ல வச்சுட்டு வீட்டைக் காலி பண்ணிடு.. தெரியுதாடி..’

எலிசபெத் கராறாகச் சொல்ல, முத்தம்மா டீச்சரின் தம்பி சும்மா இருக்கிறான்,

‘வீட்டை வித்துட்டு நான் எங்கே போறது அம்மா?..’

டீச்சர் கண் கலங்கியது.

அம்மாவும் படத்தில் புடவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்.

‘ஜோதியக்கா வீட்டுலே போய் இருக்கலாமே..’

தம்பி நைச்சியமாகச் சொல்கிறான்.

‘இவ பங்குக்கும், உங்க பெரியக்கா பங்குக்கும் வித்து வர்றதிலேருந்துதான் விட்டெறியப் போறோமே…வச்சுக்கிட்டு குடிலோ குச்சோ பார்த்து முடங்க வேண்டியதுதான்..’

நிறுத்தாமல் பேசுகிற எலிசபெத். வீட்டுக்காரனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே போகிறாள்.

முத்தம்மா டீச்சர் அடுத்த காம்போசிஷன் நோட்டைத் திருத்த எடுத்தாள்.

நான் சாதாரணமான நிலக்கரி. என் சகோதரனோ விலையுயர்ந்த வைரம். வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம்! பூமிக்கு அடியில் சில பௌதிக, ரசாயன மாற்றங்களால் என் சகோதரன் கண்ணைப் பறிக்கும் ஒளியும், நல்விலை மதிப்புமாக எங்கணும் போற்றப் படுகிறான். நானோ..

‘என்ன டீச்சர், இன்னும் எத்தனை நோட்டு பாக்கி இருக்கு?’

கதிரேசன் வாத்தியார் குரல்.

மேசைப் பக்கம் மசங்கலாகத் தெரியும் முகம்.

இவரெங்கே வந்தது? உயிரோடு தான் இருக்கார.. இல்லே, மாப்பிள்ளை மாதிரி…

முத்தம்மா டீச்சர் அவசரமாகப் புடவைத் தலைப்பைச் சரி செய்யக் கையை வைத்து, சும்மா விட்டுவிட்டு, புன்சிரிப்போடு, திருத்தி முடித்த நோட்டில் இனிஷியல் போட்டாள். ஓரமாக, சிவப்பு மையால் ‘நன்று’ என்று எழுதினாள்.

‘முத்தம்மா டீச்சர் கையெழுத்தும் முத்து தான்..’

துடித்து எழுந்து நின்ற மார்பையும் பின்புறத்தையும் பார்வையால் வருடியபடி கதிரேசன் கருப்பு வெள்ளைப் படமாகச் சுவரில் நகர, முத்தம்மா டீச்சரின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

‘சுறாப்புட்டு வேணுமா சார்?’

முத்தம்மா தரையைப் பார்த்துக் கொண்டு, சிரித்தபடி கேட்கிறாள்.

‘எல்லாந்தான் வேணும்.. கூட உக்காந்து சாப்பிட்டு, இப்படிக் கை போட்டு அணைக்க..பாட்டுப் பாடி.. உடம்பெல்லாம் முத்தி…தலைமுடியோட ஈரம் என்னமா இதமா இருக்கு..சந்தன சோப்பு போட்டுக் குளிச்சாப்பிலேயா டீச்சர்.. வாடை மனசைக் கெறக்கறதே..’

கதிரேசன் வசீகரமாகச் சிரிக்கிறான். சிகப்புச் சாயம் பூசிய உதடுகளோடு அவன் முகம் இப்போது கேவா கலரில் பிரகாசிக்கிறது. தொப்பை போட்டு பவுடர் அப்பியிருக்கிறான்.

நான்காம் வகுப்புக்கு வாத்தியார் கதிரேசன். முத்தம்மா ஐந்தாம் வகுப்பு டீச்சர்.

கதிரேசன் மனைவி விசாலாட்சி டீச்சர். பாதி நாள் லீவு. சீக்கு உடம்பு…

வாத்தியார் சாப்பிட ஒரு நாள் வீட்டிலிருந்து இன்னொரு டிபன் பாக்ஸில் சுறாப்புட்டு எடுத்துப் போனாள் முத்தம்மா டீச்சர்.

பாவம்.. நாக்கு செத்த மனுஷன்..

‘அய்யோ இம்புட்டுமா.. எப்படி சாப்பிடறதாம்?’

கதிரேசன் கேட்டான் அன்றைக்கு.

‘மீதி இருந்தா வச்சுடுங்க.. நான் சாப்பிட்டுக்கறேன்..’

சொல்லி முடிப்பதற்குள் வெட்கத்தில் உடம்பு சிலிர்த்துப் போனது.

‘டீச்சர்.. அடுத்த மாசம் ஆண்டு விழா வருது..ஒரு புரொகிராம் செய்யண்மெ.. டான்ஸ் வச்சுடலாமா… ‘

சாப்பிட்டபடி கேட்ட கதிரேசன் வாத்தியார் சுறாப்புட்டை மிச்சம் வைக்கவில்லை.

‘நீங்க ஆடப் போறீங்களா?’

முத்தம்மா கண்ணில் குறும்பு தெரிய விசாரித்தாள்.

‘நீங்க கூட நின்னு ஆடினா, நானும் ரெடி தான்.’

கதிரேசன் சளைக்காமல் சொன்னான்.

‘டீச்சர் .. இந்தப் பாட்டு எப்படி.. மெட்டு நல்லா இருக்குல்லே.. பழசுதான்..’

‘எந்தப் பாட்டு?’

‘பாட்டொன்று பாடலாமா?’

முத்தம்மாள் கண்கள் மின்னக் கதிரேசனைப் பார்த்தாள்.

தோழிகளோடு கடற்கரையில் நடந்து போகிற முத்தம்மா. பக்கத்தில் வந்து பாடிக் கொண்டு கதிரேசன்…

‘சேவை நாமும் செய்யலாமா.. சேர்ந்தே செய்யலாமா.. பாலர்களும் கூடியே பாங்கோடு செய்யலாமா..’

முழுப் பாட்டையும் ஒரே நாளில் எழுதி விட்டான் கதிரேசன். ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் ஆட வேண்டும்.

‘முத்தம்மா டீச்சர்.. நீங்களும், கதிரேசன் சாரும் டிரெயின் பண்ணிடுங்க..’

எட்மாஸ்டர் சாதாரணமாகச் சொல்ல மற்ற வகுப்பு டீச்சர்கள் அர்த்த புஷ்டியோடு கள்ளச் சிரிப்பு சிரித்தார்கள்.

‘நாளைக்கு கடைசி ரிகர்சல் வச்சுக்கலாமா?’

‘நாளைக்கு ஞாயித்துக் கெளமையாச்சே சார்?’

‘அதான் சவுகரியம்.. வேறெ வேலையிருக்காப்பலே டீச்சருக்கு..’

‘இல்லே … அக்கா பிரசவத்துக்கு வந்திருக்கா.. அதான்..’

‘சீக்கிரமா முடிச்சுட்டுப் போயிடலாம்.. மதியம் சாப்பிட்டு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டாப் போதும்.. கலர் ஜிகினா எல்லாம் கத்தரிச்சு ரெடியா ஒட்ட எடுத்து வச்சுடலாம்.. பசங்க காலையிலே வந்து ஒட்டிப்பாங்க..’

‘அப்போ ரெண்டு மணியைப் போல வரேன் சார்… காம்போசிஷன் நோட்டு வேறே திருத்த வேண்டியிருக்கு..’

முத்தம்மா டீச்சர் கடைசி நோட்டை மூடி வைத்து, மூக்குக் கண்ணாடியைக் கழற்றினாள்.

————————-

அத்தியாயம் 6

கடைசி ஒத்திகைக்கான ஞாயிற்றுக் கிழமை,

காலையிலிருந்தே ஜோதி அக்கா அழுது கொண்டிருந்தாள்.

புகுந்த வீட்டிலிருந்து பிரசவத்துக்கு வந்து ஒரு மாதமாகிறது. வீட்டுக்காரனோ வேறு யாருமோ வந்து பார்க்கவில்லையாம்.

சீர் செனத்தியில் குறைச்சலாம்..

‘பொம்பளைப் புள்ளே… சின்னவ இவ தலையெடுத்து எல்லாம் செய்ய வேண்டியிருக்கு..கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா பொறுத்துக்குங்க சம்பந்தி.. அடுத்த மாசம் லோன் போடப் போறா..’

போட்டு வைத்திருக்கிறது. ஒரு பவுனில் மோதிரம் வாங்க வேண்டும். முதல் ஆடிக்கு அழைத்தபோது கொடுக்க விட்டுப் போனது.

நாலு தடவை எஸ்.எஸ்.எல்.சி தவறிவிட்டுச் சும்மா சுற்றி வருகிற தம்பி… சைக்கிள் கடை வைக்கப் பணம் கேட்கிறவன்..

தோசைக்கடை வைத்து சிறுவாடு சேர்க்கலாம் என்று சதா நச்சரிக்கிற அம்மா..

எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. நிறையவே.

முத்தம்மா டீச்சருக்கு ஒரு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். இருபத்து மூணு வயசில் வெள்ளெழுத்து வருமா என்ன?

ஆனாலும் முத்தம்மா டீச்சர் அழகு தான். இல்லாவிட்டால் கதிரேசன் டீச்சர்…டீச்சர் என்று சுற்றிச் சுற்றி வருவானா..

வரச் சொல்லிக் கூப்பிட்டிருக்கிறான். தட்ட முடியவில்லை.

முத்தம்மா டீச்சர் பள்ளிக்கூடம் போய்ச் சேர்ந்தபோது பகல் மூன்று மணி.

‘என்ன டீச்சர் தூங்கிட்டீங்களா?’

கதிரேசன் விசாரித்துக் கொண்டு சைக்கிளில் வந்திறங்க, மழையும் ஆர்ப்பாட்டமாக வந்து இறங்கியது.

வராந்தா பக்கம் ஓடினான் கதிரேசன்.

‘கொஞ்சம் இருங்க.. படம் எழுதின தட்டியை எல்லாம் உள்ளே வச்சுடறேன்.. நேத்து ராத்திரி பத்து மணியாச்சு எல்லாம் வரஞ்சு முடிக்க..’

ஆண்டு விழா மேடைக்கு இரண்டு புறமும் நிறுத்தி வைக்க நீள நீளமாகப் பேப்பர் ஒட்டி, மேலே படம் வரைந்த தட்டிகள்.

ஒன்றில் லட்சுமி. அடுத்தது சரஸ்வதி.

இரண்டு முகமும் முத்தம்மா டீச்சர் ஜாடையில்.

‘லட்சுமிக்குக் கைவிரல் ஏன் புளியங்காய் மாதிரித் தொங்குது?’

முத்தம்மா டீச்சர் கதிரேசனைக் கேட்டாள்.

‘எனக்குக் கை போட வராது டீச்சர்’

தட்டியை ஓரமாக வைத்துவிட்டுக் கதிரேசன் சொன்னான்.

பொய்க் கோபத்தோடு முறைத்து விட்டு முத்தம்மா டீச்சர் வாசலைப் பார்க்க அடர்ந்து இறங்கிய மழை.

’பசங்க எப்படி வருவாங்க சார்.. இப்படிக் கொட்டுதே..’

‘வந்துடுவாங்க..’

கதிரேசன் ஈரச் சட்டையோடு நெருக்கமாக நின்று வாசலைப் பார்த்தான்.

‘ரேணுகாவுக்குச் சரியாவே ஆட வரலியே சார்… அவளைப் பின்னுக்கு நிப்பாட்டிட்டு, ஆரோக்கியமேரியை முன்னுக்கு வச்சுடலாமா?’

முத்தம்மா கேட்டாள்.

‘அய்யே.. அவ கொக்கு மாதிரி உசரம்..பின்னாடி நிக்கற பிள்ளைங்களை எல்லாம் மறைச்சுடுவா.. நீங்க கவலையே படாதீங்க டீச்சர்.. இன்னிக்கு ரேணுகாவுக்கு நான் ஸ்பெஷலா கோச் பண்றேன்..’

‘ஏன் சார், ஆண்டுவிழாவுக்கு எஸ்.கே.சி ஆர்டர் கொடுத்தச்சா?’

வானம் மெல்ல இடிக்கிறது. நிற்காத மழை. நின்று, பிள்ளைகள் வர வேண்டும்.

‘எஸ் கே சி.. இங்கத்திய வார்த்தையாச்சே.. ஸ்வீட் காரம் காப்பி.. ரைட்டா டீச்சர்..’

‘சார் சொன்னா தப்பாகுமா?’

முத்தம்மா அவன் கண்ணை பார்த்துச் சிரித்தாள். சாரல் மேலே விழாமல் கதிரேசன் இன்னும் நெருக்கமாக நின்றான்.

‘எஸ்கேசி சொல்லியாச்சு டீச்சர்.. ஆனந்த பவன்லே .. ஐநூறு லட்டு.. பஜ்ஜி.. காப்பி.. காப்பி வேணாம்னுட்டாரு எச்.எம்.. டீ தான் எல்லாத்துக்கும்.. ஆமா, இப்படி மழை பெஞ்சா நாளைக்கு எங்கிட்டு ஆண்டுவிழா நடத்தறதாம்?’

கதிரேசன் கொண்டு வந்த பிளாஸ்கைத் திறந்து காப்பி எடுத்து பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றி முத்தம்மா டீச்சரிடம் நீட்டினான்.

‘சாப்பிடுங்க டீச்சர்.. மழைக்கு இதமா இருக்கும்..’

‘அய்யோ இம்புட்டுமா?’

முத்தம்மா கண்ணை அகல விரித்தாள்.

‘மீதி இருந்தா வச்சிடுங்க.. நான் சாப்பிட்டுக்கறேன்..’

மழை இன்னும் வலுக்க, நான்காம் வகுப்பு ஆ பிரிவு மூலையிலிருந்து ஒழுக ஆரம்பித்தது. சில்லென்று குளிர்ச்சியோடு உள்ளே வந்த காற்றில், சுவரில் இந்தியா மேப்பும், சாலை விதிகள் படமும் பேயாட்டம் போட்டன.

‘ஒரு தடவை பாடிப் பாத்துடலாமா டீச்சர்?’

நெருங்கி வந்த கதிரேசன் குரல்.

‘சேவை நாமும் செய்யலாமா?’

முத்தம்மா டீச்சர் கள்ளக் குரலில் பாடினாள்.

‘பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..’

இப்போதுதான் ஆரம்பமாகிறது.

தரையில் வரிசையாகப் பலகைகள். பிள்ளைகள் குந்தியிருந்து பாடம் கேட்க அதெல்லாம்.

‘சார், சாரல்லே பலகையெல்லாம் ஈரமாகுது.. நகர்த்தி வச்சுடலாம்.. ஒரு கை பிடிக்கறீங்களா?’

கதிரேசன் கையைப் பிடித்தான்

மழை மணமும், சாக்பீஸ் வாடையும் கவிந்த, வரிசையாகப் பலகை விரித்துக் கிடந்த நாலாம் வகுப்பு ஆ பிரிவில், பலகைகளுக்கு மேலே கதிரேசன் முத்தம்மாவைச் சாய்த்த போது, மழையும் மனதும் தொடர்ந்து பாடின.

பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..

முத்தம்மாவின் கண்கள் செருகி, இமைகள் சிப்பியாகத் திறந்து குவிந்தன. முகத்தில் இதமாகப் படியும் மழை ஈரம். உள்ளங்காலில் முத்தமிடும் உதடுகள். உடம்பெல்லாம் நனைக்கும் சாரல். ஈர உதடுகள். உடையை அலைக்கழித்து நெகிழ்த்திய மழைக்காற்று. வலிமையான கரங்கள். ஈர வாடை. ஆண் வாடை.

வண்டாக நானும் தேன் உண்ணலாமா ..

கன்னத்தில் ஈரம். ஈர இறக்கையை முகத்தில் வீசுகிறது ஏதோ ஒரு பறவை. கருப்பும் ஈரமுமாக முகத்தில் அறையும் இறக்கைகள் குத்திப் பிராண்டுகின்றன.

முத்தம்மா டீச்சர் அரைக் கண்ணைத் திறந்து பார்த்தாள்.

ஈரக் குடையால் முத்தம்மா டீச்சர் முகத்தில் தொடர்ந்து அடித்தபடி கதிரேசன் வாத்தியார் சம்சாரம் விசாலாட்சி டீச்சர் கத்தினாள்.

‘தட்டுவாணிச் சிறுக்கி..’

மழையில் நனைந்தபடி முத்தம்மா வெளியே ஓடினாள்.

ஜோதி அக்காவுக்கு இடுப்பு வலி எடுத்து, அம்மா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருந்தாள். திறந்து கிடந்தது வீடு.

தம்பியைக் காணோம். பணத்தையும்.

குடையைப் பள்ளிக்குடத்திலேயே மறந்து விட்டு ஓடி வந்த அந்த நாளின் மிச்சம் மழையில் கரைந்தது.

———————-

அத்தியாயம் 7

’கனகாம்பரம்.. மல்லி.. பிச்சிப்பூ..’

எருமைக்காரன் தெருவில் அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. வீடு வீடாக நின்று போகிற பூக்காரி முத்தம்மா டீச்சர் வீட்டு ஜன்னல் பக்கம் ஒரு வினாடி நின்று குரல் கொடுத்தாள்.

இன்றைக்கு வெள்ளிக்கிழமை இல்லை. டீச்சர் கதம்பம் வாங்கி வீட்டில் படத்துக்கு எல்லாம் சார்த்துவது வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான்.

ஆனால் என்ன.. மற்ற நாளில் பூ வாங்கக் கூடாதா என்ன?

‘மல்லிப்பூ நாலு முழம் கொடு..’

டீச்சர் சினிமாவுக்குப் போகப் போகிறாள். சினிமா போகிற பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ள வேண்டும். வயதானாலும் அப்படித்தான்.

காம்போசிஷன் நோட்டுக்களைக் கயறு கொண்டு கட்டினாள். நாளைக்குப் பள்ளிக்கூடத்துக்கு எடுத்துப் போக வேண்டும்.

‘கர்த்தர் வருகிறார்.. என் மணவாளன் வருகிறார்..’

தெரசாள் மெழுகுதிரிக் கம்பெனியில் சாயந்திர ஒலிபரப்பு ஆரம்பமாகி இருந்தது.

முத்தம்மா டீச்சர் வெளியே வந்தபோது, சீராக வீசுகிற காற்று, எருமைச்சாண வாடையோடு கவிந்தது. ஒன்று இரண்டாகக் குன்று சரிந்ததுபோல படுத்திருந்த எருமைகள் அசை போட்டபடி கிடக்க, யார் வீட்டிலிருந்தோ புல்புல்தாரா வாசிக்கிற சத்தம்.

தியேட்டர் வாசலில் ஒரு கூட்டமும் இல்லை.

கையில் குடையும், நரைத்துப் போன தலையில் மல்லிகைப் பூவுமாக முத்தம்மா டீச்சர் படம் பார்க்க உள்ளே போனாள்.

‘என்ன டீச்சர்…இப்பவே வந்துட்டீங்களே.. ஆறரைக்குத்தானே படம்.. சரி.. உள்ளே வந்து உட்காருங்க.. என்னை ஞாபகம் இருக்கா.. உங்க ஸ்டூடண்ட் தான்..’

தியேட்டர் மேனேஜர் சிரித்துக் கொண்டே வரவேற்றான். எந்த வருஷத்து ஸ்டூடண்டோ?

‘மேலே பால்கனிக்குப் போங்க டீச்சர்.. டிக்கட் அனுப்பறேன்.. காப்பி சொல்லட்டுமா?’

‘வேணாம்பா … சாப்பிட்டுத்தான் வந்தேன்..இந்தா ஒண்ணரை ரூபா.. வேணாம்னு சொல்லிடாதே.. ஓசியிலே பாக்கக் கூடாது பாரு..’

‘டீச்சர், நீங்க எந்தக் காலத்துலே இருக்கீங்க..பால்கனி டிக்கெட் நாலு ரூபா இப்போ .. அது பரவாயில்லே.. என் பாஸ் தரேன்.. நீங்க பாருங்க..’

‘ரொம்ப நன்றி’ப்பா..ஃபேன் எல்லாம் போட்டிருக்கா?’

‘போடச் சொல்றேன் டீச்சர்.. மேலே போங்க..பாத்து படியேறுங்க..’

தியேட்டர் இருட்டும் தூசி வாடையுமாக இருந்தது. கதவை ஒட்டிய நாற்காலி வரிசையில் மெல்ல நடந்து கடைசிக்கு முந்திய நாற்காலியில் போய் உட்கார்ந்தாள் முத்தம்மா டீச்சர்.

கண்ணைப் பற்றிக் கவ்விக் கொண்டிருக்கும் இருட்டு. தலையில் வைத்த மல்லிகைப் பூ சுற்றிவர உதிர்ந்து வாசனை. குடையை மடியில் வைத்துக் கொண்டாள் டீச்சர்.

நாற்காலி வரிசை நிறைந்து கொண்டிருந்தது. இருட்டு கண்ணுக்குள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்தது.

மாப்பிள்ளை வந்து பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்தார்.

வாட்டசாட்டமாக, பட்டு வேட்டியோடும் வாயில் சுருட்டோடும்.

’உள்ளே சுருட்டு குடிக்கக் கூடாது’

மேனேஜர் பையன் டீச்சரைப் பார்த்துச் சொல்கிறான்.

’புகை மாதிரி வந்தேன்.. புகை மாதிரி போயிடறேன்.. ஒரே ஒரு சுருட்டு.. போவியா..’

மாப்பிள்ளை அவனை விலக்கியபடி முத்தம்மா டீச்சர் தலையில் வைத்த மல்லிப்பூ சரத்தில் மிச்சம் இருந்த பூவைக் கிள்ளுகிறார்.

’அது எனக்கு..’

கதிரேசன் வாத்தியார் இந்தப் பக்கம் நாற்காலியில் உட்கார்ந்து காலால் டீச்சர் காலை வருடிக் கொண்டே சிரிக்கிறான்.

‘அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாமய்யா..’

மாப்பிள்ளை சுருட்டை அணைத்துக் காதில் வைத்தபடி சொல்கிறார்.

கடலை மிட்டாய் ஸ்லைட் திரையில் நகர்ந்து போகிறது.

‘சேவை நாமும் செய்யலாமா?’

கதிரேசன் மெல்லப் பாடுகிறான்.

‘எச் எம் வரப் போறாரு.. ‘

டீச்சர் கதிரேசன் தோளைத் தொட்டுச் சொல்கிறாள்.

முட வைத்திய சாலை ஸ்லைட். உடைந்த கை, கால் நேராக, அறுந்த காது ஒட்ட வைக்க பாகனேரி முட வைத்திய சாலை.

ஸ்லைடில் கையில் கட்டுப் போட்டபடி முத்தம்மா டீச்சரும், பின்னால் குடையால் அவளை அடித்தபடி கதிரேசன் சம்சாரம் விசாலாட்சி டீச்சரும் சிரிக்கிறார்கள்.

’ரொம்ப வேர்க்குதே.. ஃபேன் போடலியா?’

கதிரேசன் மேலே பார்க்க, ராட்சச வேகத்தில் மின்விசிறி சுழல ஆரம்பிக்கிறது. அந்தக் காற்றில் கதிரேசன் வாத்தியார் உடம்பில் இருந்து ஜவ்வாது வாடை டீச்சர் மனசுக்கு இதமாக வீசுகிறது.

இந்தப் பக்கம் மாப்பிள்ளை சுருட்டு வாடையோடு மட்டன் கவாப் வாடையும் உக்ரமாக மூக்கில் தாக்குகிறது.

ரெண்டு பக்க வாடையும் வேண்டி இருக்கிறது டீச்சருக்கு.

ராவுத்தர் பேக்கரி ஸ்லைட்.

தம்பிக்கு ராவுத்தர் பேக்கரி பன்ரொட்டி ரொம்பப் பிடிக்கும்.

முத்தம்மா டீச்சர் முதல் மாதச் சம்பளத்தில் அவனுக்குப் பன்னும் கேக்கும் வாங்கிப் போனாள். எடுத்துச் சாப்பிடச் சாப்பிடப் பரிவோடு பார்த்துக் கொண்டு..

‘அக்கா.. பன்னு சாப்பிடறியா?’

பின் வரிசையிலிருந்து தம்பி குரல்.

‘சும்மா இருக்க மாட்டீங்களா.. பிள்ளைக்குன்னு வாங்கியாந்திருக்கேன்.. அக்கா அக்கான்னு உசிரை விடறீங்களே.. எங்கே…நம்ம புள்ளைக்கு அரை பவுன்லே மோந்திரம் பண்ணிப் போடச் சொல்லுங்க பார்ப்போம் உங்க அக்காளை..’

எலிசபெத் குரல் கீச்சு கீச்சென்று பின்னால் இருந்து வருகிறது. அவளும் அங்கே தான் இருக்கிறாளா..

‘ப்ராவிடண்ட் லோன் போட்டுப் பணம் வந்ததும்..’

முத்தம்மா டீச்சர் சொல்லிக் கொண்டிருக்க, ‘வீடு வாங்க, விற்க..’ ஸ்லைட்.

’வீடு விக்கப் போறோம்.. படம் பார்த்துட்டு அப்படியே எளுந்து போயிடு.. என்ன தெரியுதா?..’

எலிசபெத் மிரட்டுகிறாள். அவள் பிள்ளை அழுகிறது. பன்னு வேணாம்… மோதிரம் போடு..

நியூஸ் ரீல் ஆரம்பமாகிறது.

மூணு நாள் நல்லெண்ண விஜயமாக போலந்து போகிறார் பிரதமர்.

வரிசை வரிசையாகக் கொடி பறக்க நகர்கிற கார்கள்.

போலந்தின் தலைநகரம் வார்சா. முத்தம்மா எட்டாம் வகுப்புக்குப் பாடம் எடுத்திருக்கிறாள்.

பிரதமரின் கார் ஊர்ந்து வர, அவள் கையசைக்கிறாள். அவர் கனிவாகச் சிரிக்கிறார்.

‘நானும் உங்க கூட வார்சா வந்துடட்டுமா.. வீட்டை விட்டுப் போகச் சொல்றாங்க..’

டீச்சர் மன்றாடுகிறாள். பிரதமர் சிரித்தபடி போகிறார்.

‘வார்சா எல்லாம் போக வேணாம்.. பள்ளிக்கூடத்திலேயே தங்கிக்கலாம்..’

கதிரேசன் வாத்தியார் காதில் கிசுகிசுக்கிற சத்தம்.

‘ஆமாமா.. நாலு பலகையை இளுத்துப் போட்டா படுக்கை..’

மாப்பிள்ளை சிரித்தபடி முத்தம்மா தோளில் கை வைக்கிறார்.

’படத்தைப் பாக்காம வளவளன்னு என்ன பேச்சு..’

பின்னால் இருந்து அலமேலம்மாக் கிழவி சத்தம் போடுகிறாள்.

படம்.

ஆரம்பமாகி விட்டது.

முத்தம்மா டீச்சர் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு பால்கனியில் சுற்றிலும் பார்க்க, அவள் மட்டும்தான் அங்கே.

திரையில் பெயர்கள் நகர்ந்து போகின்றன.

திரை வெளிறி, சிகப்பும் பச்சையுமாக அங்கங்கே கீறல் விழுந்த பெரிய பங்களா.

கால்சராய் போட்டுக் கொண்டு காரில் ஏறும் கதாநாயகி.

‘முத்தம்மா.. நீயும் வாயேன்.. கடற்கரைக்குப் போறோம்..’

அவள் கூப்பிடுகிறாள்.

‘காம்போசிஷன் நோட்டு திருத்தணுமே..’

‘அந்த கவாப்பு மூஞ்சி தடியன் வந்து பாட்டொன்று பாடலாமான்னு ஆடுவானே.. உனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டாச்சே முத்தம்மா..’

யாரோ காலை விந்தி விந்தி நடந்து வந்தார்கள். நாயனா.

‘நாயனா, பீச்சுக்குப் போயிட்டு வரட்டா.. நாலணா கொடுங்க.. பொரிகடலை வாங்கணும்..’

முத்தம்மா நாயனா தோளில் தொங்கியபடி கேட்கிறாள்.

‘சும்மா சத்தம் போடாதேடி.. தம்பிக்காரன் வந்திருக்கான்.. ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வீட்டுலே பால் வாங்கிட்டு வந்து ஒரு வாய் காப்பித்தண்ணி வச்சுக் கொடேன்.. வீட்டு வாசல்லே பாக்கியலச்சுமி வந்து நின்னப்போ பிடிச்சுக் கறந்திருக்கலாமில்லே.. பொழைக்கத் தெரியாதவளே..’

அம்மாவும் பின்னால் தான் உட்கார்ந்திருக்கிறாள்.

‘நாயனா.. நான் பீச்சுலே கவாப்பு மூஞ்சிக்காரனோட பாடிட்டுத் திரும்பி வர்றதுக்குள்ளே தம்பி வீட்டை வித்துட்டான்னா நான் எங்கே போறது?’

நாயனா அவள் சொல்வதைக் கவனிக்காமல் தோளில் மாட்டிய பையில் இருந்து கத்தை கத்தையாகக் கடிதங்களை வெளியே எடுக்கிறார்.

‘அம்மா.. இண்டர்வ்யூவிலே நல்லா செஞ்சிருக்கேன்.. கட்டாயம் வேலைக்கு ஆர்டர் வந்துடும் பாரு.. அப்புறம் உன்னை கண் கலங்க விட மாட்டேன்..’

திரையில் கதாநாயகன் வெள்ளைச் சேலை கட்டிய அம்மா கையைப் பிடித்தபடி சொல்கிறான்.

நாயனா ஒரு கடிதத்தை எடுத்து பால்கனியில் மங்கிய வெளிச்சத்தில் கண்ணைக் கவிந்து கொண்டு படிக்கிறார்.

‘ராஜசேகர்னு போட்டிருக்கு..யாருக்கு வந்த கடுதாசின்னு தெரியலியே..’

‘அவர்தான் நாய்னா.. வேலைக்கு ஆர்டர்.. சொன்னாரில்லே.. பாட்டொன்று பாடலாமான்னு பீச்சுலே ஓடியாறப் போறாரு.. நானும் போகணும்.. காசு வேணும்..’

முத்தம்மா நாயனா தோளைப் பிடித்தபடி சிணுங்குகிறாள்.

‘பி.எப் பணம் வந்ததும் போயேன்..’

நாயனா காலை இழுத்துக் கொண்டு சைக்கிள் பக்கம் போகிறார்.

கடற்கரை.

சென்னை கடற்கரை உலகிலேயே இரண்டாவது பெரிய, அழகிய கடற்கரை. நாங்கள் சென்னைக்கு இன்பச் சுற்றுலா சென்றபோது, கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணா சமாதி என்று பல இடங்களுக்குப் போனோம். கலங்கரை விளக்கம் என்பது கப்பல்களை வழிப்படுத்தும் விளக்கு அமைந்த, கடற்கரையில் உயர்ந்து நிற்கும் கட்டிடமாகும். அங்கே யாரும் குடியிருக்க முடியாது. வாசலில் எருமை மாடு கட்டிப் பால் கறக்க முடியாது.

முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டை மூடி வைத்துவிட்டுக் கடற்கரை மணலில் நடக்கிறாள். கையில் குடை,

நாயனா வேலைக்கான உத்தரவை பட்டுவாடா செய்ததும், தொப்பை வைத்த, சிவந்த உப்பிய உதடும், பூனை மயிர் மீசையும் உடைய கதாநாயகன் இங்கே வருவான்.

டீச்சர் மணலில் உட்கார்கிறாள்.

‘ப்பீப் .. ப்பீப்..’

விசில் ஊதிக்கொண்டு காக்கி டிராயரும், தொளதொளப்பான காக்கி சட்டையும் அணிந்த போலீஸ்காரன் மணலில் கால் புதைய நடந்து வருகிறான்.

‘யாரும்மா இங்கே தனியா உக்காந்துக்கிட்டு.. வீட்டுக்குப் போ..’

ஜோதி அக்கா வீட்டுக்காரன் அவன்.

‘வீடு இல்லையே.. உங்க கூட வந்துடட்டா..ரிடையர் ஆகி வ்ர்ற பணம்.. வீடு வித்ததுலே வர்ற பங்கு எல்லாம் கொண்டாறேன்.. ஒரு ஓரமா முடங்கிப்பேன்.. ஜோதி மகளுக்குப் புள்ளை பொறந்தா, பீ தொடப்பேன்.. மூத்திரம் அலம்பி வுடுவேன்.. வாய்ப்பாடு சொல்லித் தருவேன்.. தோசை சுடுவேன்.. கவாப்பு பண்ணுவேன்..’

போதும்பொண்ணு மாதிரி மணலில் இரண்டு கையையும் ஊன்றி அளைந்தபடி அவன் முகத்தைப் பார்க்கிறாள் டீச்சர்.

‘உனக்கு விசயமே தெரியாதா.. உங்கக்கா எனக்குச் சொல்லியிருக்காளே.. நீ ஒரு மாதிரிப்பட்டவளாம்… படி ஏத்தக் கூடாதாம்.. பணத்தை மட்டும் அப்பப்ப வாங்கிக்கிட்டு போஸ்ட் கார்டுலே நாங்க சுகம்.. நீ சுகமாவோட நிறுத்திடணுமாம்.. இல்லாட்ட நான் எப்பவோ கூட்டிப் போயிருப்பேனே.. இந்த மாப்பிள்ளப் பய ஆரம்பிச்சு வச்சான்.. வாத்தி மேல்கொண்டு போனான்.. நான் காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிருப்பேனே..’

ஜோதி அக்கா வீட்டுக்காரன் லாத்தியைச் சுழற்றிக் கொண்டே சிரிக்கிறான்.

‘நான் அப்படிப் பட்டவ இல்லே..நாயனா கிட்டே கேட்டுப் பாருங்க..’

முத்தம்மா அழுகிறாள். அவன் சும்மா சிரிக்கிறான்.

‘பிரதமர் கிட்டே கேட்டுப் பாருஙக்.. போலந்து போய்ட்டு வந்திருப்பாரு.. ‘

அவன் லாத்தியை வீசியபடி நடந்து போகிறான்.

‘நான் அப்படிப் பட்டவ இல்லே’

முத்தம்மா டீச்சர் பெருங்குரலெடுத்துக் கத்துகிறாள்.

அவளுடைய சத்தம் கடல் இரைச்சலில் கரைந்து ஒன்றுமில்லாமல் போக, ஜோதி வீட்டுக்காரன் ஒரு வினாடி திரும்பிப் பார்த்து விட்டு விலகி நடக்கிறான்.

முத்தம்மா டீச்சர் திரையில் படகுப் பக்கம் உட்கார்ந்து கொண்டு நாற்காலி வரிசையைப் பார்க்கிறாள்.

கையில் மெழுகுதிரிகளோடு தெரசாள் வீட்டுக்காரர் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்.

‘உங்க நாயனா இறந்துட்டாரு.. இறங்கி வந்து உன் நாற்காலியிலே உக்காரு.. சடகோப மாமா கூட்டிப் போக வ்ரப் போறார் இப்ப.. கவலைப்படாதே.. தேவனை விசுவாசி.. ரெபக்காளை அழைத்து இந்த மனுஷ்யன் கூடப் போகிறாயா என்று கேட்டார்.. அவளும் சரியென்று சொல்லி..’

கணீரென்று தொடரும் குரலை அமுக்கி, ‘பாம் பாம்’ என்று கார் சத்தம்.

‘வா.. தேவன் அழைக்கிறார்’.

தெரசாள் வீட்டுக்காரர் மெழுகுதிரியைக் கொளுத்திப் பிடித்தபடி தலையசைக்கிறார்,

‘பாட்டொன்று பாடலாமா பாடிட்டு வந்துடறேன்..’

முத்தம்மா காம்போசிஷன் நோட்டை கடற்கரை மணலில் பரத்தி வைத்து திருத்த ஆரம்பிக்கிறாள்.

கடல் ஆழமானது. கடல் பீதியளிக்கக் கூடியது. பெரிய கண்டங்களைக் கடல் கொண்டுள்ளது. லெமூரியாவும் அவற்றில் ஒன்று. எருமைக்காரன் தெருவையும் கடல் கொள்ளும்.

முத்தம்மா எழுந்து நிற்கிறாள். கதாநாயகியும் தோழிகளும் படகை நெருங்கி அவள் பக்கம் வருகிறார்கள். கடல் பின்னால் இரைகிறது. அலையடிக்கிறது.

’என்ன பண்றே முத்தம்மா?’

கதாநாயகி பிரியத்தோடு விசாரித்தபடி அவளுடைய மூக்குக் கண்ணாடியை உருவுகிறாள். தோழிகள் சிரித்தபடி ஆடுகிறார்கள்.

இருங்கடி… கவாப்பு மூஞ்சிக்காரன் வந்து பாட்டுப் படிச்ச பின்னாடி தான் ஆடணும்’

கதாநாயகி கண்டித்தபடி தூரத்தில் மோட்டார் சைக்கிள் வருகிறதா என்று பார்க்கிறாள்.

முத்தம்மா காம்போசிஷன் நோட்டுகளை படகுக்குப் பின்னால் ஒளித்து வைக்கிறாள். கதாநாயகியும் தோழிகளும் விடாமல் தேடிப் பிடித்து ஒவ்வொரு காகிதமாகக் கிழித்துக் கப்பல் செய்து விளையாடுகிறார்கள். முத்தம்மாவும் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மோட்டார் பைக் சத்தம்.

முத்தம்மா டீச்சர் இருதயம் ஒரு வினாடி நின்று போகிறது. அப்புறம் சந்தோஷத்தில் திக்குமுக்காடுகிறது.

‘பாட்டொன்று பாடலாமா..’

இழைந்து வருகிற குரல்.

கதாநாயகி ஓட ஆரம்பிக்கிறாள். தோழிகளும் ஓடுகிறார்கள். வரிசைக் கடைசியில் குடையைத் தூக்கிக்கொண்டு முத்தம்மாவும் ஓடுகிறாள்.

அவன் துரத்திக் கொண்டு வருகிறான். பவுடர் அப்பிய முகம் மட்டன் கவாப்பு போல ஊதிக் கிடக்கிறது.

கதாநாயகி வளைந்து நெளிந்து அவன் கையில் பிடிபடாமல் ஓட, முத்தம்மாவும் மற்றவர்களும் தாளத்துக்குத் தகுந்தபடி தொம்தொம் என்று குதித்துக் கொண்டு, மார்பைக் குலுக்கி ஓடுகிறார்கள்.

‘பருவச் சிட்டே.. எங்கே நீ போனாலும்..’

கதாநாயகியின் கையைப் பிடித்து இழுக்கப் போகிறான். அப்புறம் அவள் அவனுடைய மார்பில் சாய வேண்டும். கண்ணை மூடி சந்தோஷத்தை அவள் அனுபவிப்பாள்.

‘தேன் உண்ட வண்டாக..’

வேண்டாம் .. அவளுக்கு இதெல்லாம் கிடைக்க வேண்டாம்..’

முத்தம்மா பணம் கொடுத்திருக்கிறாள். அவள் ‘ஆடு’ என்றால் எல்லோரும் ஆட வேண்டும். ‘பாடு’ என்றால் பாட வேண்டும். கர்ணம் அடிக்கச் சொன்னால், கர்ணம் அடித்து வேடிக்கை காட்ட வேண்டும்.

‘போடி.. போய்த் தரையிலே விழுந்து புரளு.. தட்டுவாணிச் சிறுக்கி..’

முத்தம்மா குடையால் கதாநாயகி விலாவில் இடித்துத் தரையில் தள்ளிவிட, அவள் ஈர மண்ணில் புரள்கிறாள்.

முகம் சுருக்கம் தட்டி, முலை வற்றி, தலை நரைத்துக் கிடக்கும் கதாநாயகி. கண்ணாடி போட்டவள். புறங்கையில் சாக்பீஸ் பொடி அப்பியிருப்பவள்.

உருண்டு திரண்ட உடம்போடு, முகம் பளபளவென்று முத்தம்மா.

அவளுக்கு இருபது வயது. காலேஜில் படிக்கிறாள். காரில் கடற்கரைக்கு வந்திருக்கிறாள்.

முத்தம்மா டீச்சர் திரையிலிருந்து பால்கனியைப் பார்க்க, மாப்பிள்ளையைக் காணோம். கதிரேசனையும். அப்புறம் அம்மா, நாயனா, பினாங்கிலிருந்து வந்த தம்பி, எலிசபெத், மரியஜெகம்…

வேறு யாரும் இல்லாத நாற்காலி வரிசையில் கடையில் உட்கார்ந்து தலையைப் பிடித்தபடி முத்தம்மா டீச்சர் மட்டும்..

‘பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..’

(நிறைவு)

1994 – ’புதிய பார்வை’ இலக்கிய இதழில் பிரசுரமானது. ‘பகல் பத்து ராப் பத்து’ குறுநாவல் தொகுப்பு 1997 நூலில் இடம் பெற்றது. தமிழ்ப் புத்தகாலயம் பிரசுரம்

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன