Corporate casuality – human dignityமனிதம் தொலைத்த கார்ப்பரேட்டுகள்

கார்ப்பரேட் கலாச்சாரத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஓர் அம்சம் மனிதம்.

காலை ஒன்பது மணிக்கு வாக்-இன் நேர்காணல் என்று கூப்பிடுவார்கள். உங்களுக்குத் தகுதி இருப்பதாக முன் வரிசை நேர் காணுகிறவர்கள் (பெரும்பாலும் கத்துக்குட்டிகள்) கருதினால், திருப்பதியில் அடுத்த கூடத்துக்கு அனுப்புவது போல் அனுப்பப் படுவீர்கள். அங்கே காத்திருந்து முதல் கட்ட நேர்காணல். அது முடிந்து அடுத்த கூடம்.

அதற்குள் மதியம் ஆகி விடும். நேர்காணுகிறவர்கள் உணவுக்குப் போக, நேர்கண்டு வேலை பெற வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கூட்டத்துக்கு யாரும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள் – ‘போய் சாப்பிட்டு வாங்க.. ரெண்டு மணிக்கு மறுபடி ஆரம்பம்’. இதைச் செய்ய வேண்டிய மனிதவளத் துறை (ஹெச்.ஆர்) பல் குத்திக் கொண்டு ஃபார்ம் அடுக்கிக் கொண்டு சாப்பாட்டுப் பொட்டலத்தை எதிர்பார்த்தபடி இருக்க, முன்னால் வரிசையாக ஒரு பட்டினிப் பட்டாளம் – வந்தவர்கள்.

எனக்கு வேண்டிய் இளம் பெண் ஒருத்தி, இன்று காலையில் ஒரு குவளை பச்சைத் தண்ணீர் குடித்ததோடு இப்படியான நேர்காணலுக்கு வந்திருக்கிறாள். இப்போது மணி மாலை நாலு. ஒரு கவளம் சோறு சாப்பிடவில்லை. எந்த நேரத்திலும் அழைக்கப்படுவாள் இரண்டாம் சுற்று நேர்காணலுக்கு என்று அமர்த்தி வைக்கப் பட்டிருக்கிறாள். அவள் கணவன் பிஸ்கட் பொட்டலங்கள், பழம் இவற்றோடு கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் மனைவிக்காகக் காத்திருக்கிறான் (உள்ளே நுழைந்து மேலே போக அனுமதி இல்லை).

இன்னும் எவ்வளவு மணி நேரம் காக்க வேண்டுமோ?

மனிதம் தொலைத்த கார்ப்பரேட்கள் இருந்தென்ன தொலைந்தென்ன?
————————————–
ஜ.ரா.சு (பாக்கியம் ராமசாமி) சார் ‘கடகடன்னு படிங்க, கலகலன்னு சிரிங்க’ என்ற அவருடைய புதுப் புத்தகத்தை வாழ்த்துகளோடு அனுப்பியிருக்கிறார்.

அருமை நண்பர் நேசமிகு ராஜகுமாரன் இன்று தாமதமான காலை நடையின் போது ‘ஓமந்தூரார் – முதல்வர்களின் முதல்வர்’ என்ற தன் புது நூலை அன்போடு அளித்தார். விகடன் வெளியீடு. வந்த பத்து நாளிலேயே 3000 பிரதி விற்ற மகிழ்ச்சியில் ஒரு சுற்று பெருத்திருக்கிறார். 300000 ஆகட்டும் அது.

நாளை மறுநாள் கோழிக்கோடு பயணத்தில் படிக்க நல்ல நூல்கள் கிடைத்திருக்கின்றன..
—————————————————–
தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரம்-

மேம்பொருள் போகவிட்டு, மெய்மையை மிகவுணர்ந்து
ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கி
காம்பறத் தலைசிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் அரங்கமாநகருளானே

காம்பறத் தலை சிரைத்தல் என்றால் முழுமொட்டையா? அதுக்கும் மேலே தத்துவார்த்தம் உண்டா?

மொட்டையடிச்சுக்கிட்டு உன் காலடியிலே இருக்கற சோம்பேறித்தனமும் பிடிக்குமோன்னு பெருமாளைக் கேட்கிறார் ஆழ்வார்.

பெருமாள் திருவடியிலே போய்ச் சேர்ந்த பிற்பாடு, மழிக்க, நீட்ட, பல் துலக்க, குளிக்க என்ன அவசியம்?
—————————————————–
ஆங்கில இந்து பத்திரிகையில் Kellog’s விளம்பரத்துக்காக ஒரு பெரிய கோதுமைக் கதிரின் புகைப்படமும் நடுவில் சிறிய பிளாஸ்டிக் கவரில் ரெண்டு தேக்கரண்டி கோதுமையும் ஒட்டி வைத்துக் கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருதி, பிளாஸ்டிக் உபயோகத்துக்கு எதிராக இந்து பத்திரிகை குரல் கொடுத்த நினைவு…

சரி, ரெண்டு ஸ்பூன் கோதுமையை வேலை மெனக்கெட்டு அரைத்து ஐந்து ரூபாய் காசு சைசில் ரொட்டி சுட்டுத் தின்ன உத்தேசமிலலை. பேப்பர் கவரில் ஒரு கை கெல்லாக்ஸ் சீரியல்ஸையே வைத்து அனுப்பியிருக்கலாமே..

(தமிழ் தி இந்துவோடு நெல் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்த்தவர்கள் சொல்லவும்)
——————————————-
மகாபாரதம் கும்பகோணம் பதிப்பு – ஒன்பது தொகுதிகள் என்ற அரிய நூல் தொகுப்பு திரும்ப வெளியாகிறது என்று நண்பர் பா.ராகவன் தகவல் பகிர்ந்துள்ளார்.

வாங்கிப் படிக்க ஆசைதான். ஆனால், வீட்டில் இனிமேல் புத்தகம் வைக்க இடமில்லை. ‘ஊருக்கு உரைப்போம்’ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த என்று இரண்டு வாரமாகப் புத்தகங்களைக் கொடுத்து அனுப்புகிறார்கள். அறிமுகப்படுத்திய புத்தகங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு விட்டேன். இன்னும் நாலு தற்போது கைவசம் உண்டு. இனியும் எதிர்பார்க்கலாம். நிகழ்ச்சி ஒளிப்பதிவு முடிய முடிய அந்தப் பிரதிகளையும் பகிரத் திட்டம். .

நூல் அறிமுகம் என்பதால் ஒரு கடமை கருதிப் படிக்க வேண்டிய நூல்களும் வந்து சேர்கின்றன. நிச்சயம் எந்தக் குறையையும் எந்தப் புத்தகத்திலும் சுட்டிக் காட்ட மாட்டேன். ஆனால் நிறைவளிக்கும் விஷயம் இருந்தால் எடுத்துச் சொல்வது கடமை என்றே கருதுகிறேன்.

யாருக்கு எந்தப் புத்தகம் பிடிக்கும் என்று தேடி எடுத்துப் போய் அளிப்பது சுவாரசியமான வேலைதான். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ‘தீட்சிதர் கதைகள்’ புத்தகத்தை நண்பர் கிரேசி மோகனின் தந்தையார் திரு ரங்காச்சாரி அவர்களோடும், கண்ணதாசனின் கட்டுரைகளை அலுவலக நண்பர் கணேசன் சுப்பிரமணியனோடும் பகிர்ந்து கொண்டேன். மற்றவை? பேஸ்புக் எதுக்கு இருக்காம்?
——————————————————————–
நீல பத்மநாபன் – 75

’நீல பத்மநாபனுடன் ஒரு நாள்’ ஆவணப் படம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இன்று மாலை திரையிடப்பட்டது.

வழக்கமான ஆவணப்பட பாணியில் இருந்து வேறுபட்டது. உரையாடல்களை மையமாகக் கொண்டது இந்தப் படம்.

நீல பத்மநாபனின் ஆளுமை படம் முழுக்க நிறைந்து நிற்கிறது.

‘நான் இவ்வளவு பேசினேனா’ என்று படம் முடிந்தபோது ஆச்சரியப்பட்டார் நீல.ப. அவரைப் பேச வைத்தது முதல் வெற்றி.

This is the first cut and runs for 62 minutes. We still have an hour or so of footage left. The final cut with inserts of story reading by the author himself and other visuals will be ready soon.

படம் பற்றியும், விழா பற்றியும் விரிவாகப் பின்னர் சொல்கிறேன்.

ண்பர் பி.கே.சிவகுமார் ஒரு சுவாரசியமான கருத்தை முன்வைக்கிறார்.

பாரதி வைணவ பக்தி இலக்கியத்தில் காட்டிய அக்கறை குறைவென்று தான் எனக்குப் படுகிறது. சைவ பக்தி இலக்கிய திருவாசகமும் திருச்சாழலும் அவர் கதைகளில் வரும். நம்மாழ்வார் பற்றித் தன் பகவத்கீதை மொழிபெயர்ப்பில் சொல்வது தவிர ஆழ்வார்கள் பற்றி அவர் அதிகம் பேசவில்லை.

பாரதி பற்றி அவருடைய நண்பர்-சீடர் குவளைக் கண்ணன் (குவளை கிருஷ்ணமாச்சாரியார்) 1938-ல் ‘ஹிந்துஸ்தான்’ பற்றி எழுதிய கட்டுரையில் இருந்து –

//ஒரு நாள் பாரதியார் “கிருஷ்ணா, இந்த நாலாயிரம் எத்தனை ஆழ்வார்கள் சேர்ந்து பாடியது?” என்று கேட்டார். அதற்கு நான், “பதினோரு ஆழ்வார்களும் ஆண்டாளும் திருவரங்கத்தமுதனாரும் சேர்ந்து பாடியது நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” என்றேன்.

“பன்னிரண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களா? நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!” என்றார். //
http://www.mahakavibharathiyar.info/kuvalai_kannan.htm

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன