Mr.Tr.Santhanakrishnan on ‘Number 40, Rettai Theru’’நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ பற்றி நண்பர் டி.ஆர்.சந்தானகிருஷ்ணன்

Tr Santhanakrishnan shared a link.
19 September
நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை ரசிப்பது ஒரு சுகம்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் சாவி எழுதிய “இவர்கள் இப்படித்தான்” படித்ததுண்டா? பால்காரரிளிருந்து வீடு பேருக்கும் வேலைக்காரி வரை அனைவரின் குணாதிசயங்களையும் அழகுற எழுதி நம் மனதில் ஒரு நேசம் கலந்த புன்னகையை வளர்த்து விடுவார்.

இருபது ஆண்டுகளுக்கு முன் சுஜாதா எழுதிய “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” இதே வகையைச் சேர்ந்தது தான். பத்தணா அய்யங்காராக மருவிய பத்மநாப அய்யங்காரை யாரும் மறக்க முடியாது. அப்பாவின் எட்டு நாடியும் குளிர்ந்து இருக்கும்போது சைக்கிள் கேட்கச் சொல்லிய கோதைப் பாட்டியையும் கூடத்தான். தேவதைகளைப் பற்றி படிக்கும்போது எங்கள் பிருந்தாவனம் தெரு தேவதைகளை நினைவுப்படுத்தியதால் புத்தகம் எங்கள் மனிதர்களைப் பற்றி எழுதியதைப் போலவே தோன்றியது.

எதையோத் தேடப்போய் எதுவோ கிட்டியது போல ராஜாஜியின் வியாசர் விருந்து படிக்க ஆசைப் பட்டு விஸ்வரூபம், அரசூர் வம்சம் வழியாக 40, ரெட்டைத் தெரு கிடைத்தது. இரா முருகன் அரசூர் வம்சத்திலிருந்து ஆரம்பிக்கச் சொன்னார். அவரது இரசிகர் (எனது பால்ய நண்பர்) இரகுநாதன் ரெட்டைதெருவிலிருந்து ஆரம்பிக்கச் சொன்னார். இரகுப் பேச்சைத் தான் கேட்டேன்.

மிக ஆருமையானப் புத்தகம். நம் எல்லார் வாழ்விலும் ரெட்டைதெரு ஒன்று இருக்கிறது. நாமும் அரை நிஜாரை நழுவாமல் பிடித்துக்கொண்டு குருவி லேகியம் விற்பவர் பேச்சை பதிமூன்று வயதின் ஆர்வத்தோடு கேட்டிருந்திருக்கிறோம். நமது நண்பர்கள் கூட்டத்திலும் ஒரு “குண்டு ராஜு” உண்டு. நாம் உடல் நலமின்றி பள்ளிக்கு போக முடியவில்லை என்று சொன்னால் ஒரு இன்ஸ்பெக்ஷன் உண்டு.

இரா முருகனின் எழுத்து கொஞ்சம் நேயம், கொஞ்சம் குறும்பு, நிறைய நிஜம் கலந்து நம்மை நமது கடந்த காலங்களுக்குக் கூட்டிச் செல்கிறது. சுஜாதா நம்மை ஒரு மிடில் கிளாஸ் அய்யங்கார் சூழலுக்குக் கூட்டிச் சென்றார். இரா முருகன் நம்மை நம் சூழலுக்கே கூட்டிச் செல்கிறார்.

சுஜாதாவின் மறைவை ஈடு செய்ய ஒரு புதிய படை புறப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்தப் படையின் முன்னோடியாக இரா முருகன் நடக்கிறார்.

“40, ரெட்டைத் தெரு” வாங்கிப் படியுங்கள்.

(நன்றி டி.ஆர்.எஸ் – இரா முருகன்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன