டெட்டால் சோப் – ஒட்டகம்

 

என்னமோ தெரியலை.. எங்க பேட்டை சூப்பர் மார்க்கெட்டில் என்ன வாங்கினாலும் டெட்டால் சோப் சின்னதாக ஒரு பாக்கெட் இலவசமாக தருகிறார்கள். தாயார் தோசை மாவு வாங்கினால் கூட, ஒட்டிக் கொண்டு டெட்டால் சோப்பு.

தி நகர் வாசிகள் தான் சென்னையிலேயே சுத்தமானவர்கள். கிருமி அழுக்கு கறை படியாதவர்கள். ஆண்டிசெப்டிக் உலகின் அண்ணா ஹசாரே டெட்டால் சோப்புக்கு நன்றி!!
——————————————

மிக கவனமாக 1970-களின் சென்னை வட்டார வழக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன் – நாவலுக்கு இல்லை….

——————————–

சந்திர மண்டல நடையாளர் நீல் ஆம்ஸ்ட்ராங்க் முகம் ‘breakfast food face’ என்று நார்மன் மெய்லர் எழுதினாராம். நம்ம லாலேட்டன் மோகன்லால் முகத்தை, ‘மலையாள bha ப மாதிரி இருக்கற மூஞ்சி’ என்று இலக்கிய விமர்சகர் சுகுமார் அழிக்கோடு எழுதினார். இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு சக மனித வெறுப்பு?

எனக்கு வழக்கம்போல் ஞானக்கூத்தன் ஞாபகம் வருகிறார் –

ஒட்டகம்
ஆயிரம் முறைகள் எண்ணிப்
பார்த்தபின் முடிவு கண்டேன்
ஒட்டகம் குரூபி இல்லை

குரூபிதான் என்றால் மோவாய்
மடிப்புகள் மூன்று கொண்ட
அத்தையும் குரூபி தானே?

அத்தையைக் குரூபி என்றோ
ஒருவரும் சொல்வதில்லை
சண்டைகள் வந்தாலன்றி

சண்டைகள் வந்தபோது
மற்றவர் அழகில் குற்றம்
பார்ப்பது உலகநீதி

ஒட்டகம் குரூபி என்றால்
அதனுடன் உலகுக் கேதும்
நிரந்தரச் சண்டை உண்டோ?

—————————–

(பழைய எழுத்து)
ஹரிதகம் என்ற இணையத் தளத்துக்கு நண்பர் ஜெயமோகன் ஆற்றுப்படுத்தினார். நவீன மலையாளக் கவிதைகளுக்கானது இது.

மெல்ல மலையாளக் கவிதையில் ஒரு மாறுதல் நிகழ்வது தெரிகிறது. மரபும், அடர்த்தியான படிமங்களும் முன் நிற்க விஷ்ணு நாராயணன் நம்பூத்ரி, அக்கித்தம், சுகதகுமாரி போன்ற மூத்த சமகாலக் கவிஞர்கள் எழுதும் கவிதைகளிலிருந்து நிறைய விலகி மொழியை நெகிழ்த்தி, கவிதானுபவத்தைச் சிக்கனமான வாக்குகளில் உண்டாக்கும் இந்த இளம் கவிஞர்களுக்கு அய்யப்பப் பணிக்கரும், சச்சிதானந்தனும் முன்னோடி.

பெண் கவிமொழியில் இந்த நெகிழ்வோடு கூட ஒரு புதிய துணிச்சலும் தென்படுகிறது. மாதவிக் குட்டியும், சாரா ஜோசஃபும் உரைநடையில் சாதித்தது தற்போது கவிதையில் கடந்து வந்திருக்கிறது.

பழைய எழுத்துப் பெண்ணுங்களே

ஸ்வப்னக்காரிகளே

ஆட்டக்காரிகளே

பாட்டுக்காரிகளே

வேச்யகளே

என்று சகல பெண்களையும் விளித்து

சுவடுகள் சுவடுகள்

பாட்டுகள் பாட்டுகள்

கண்ணுகள் தொலிகள்

எல்லாம் ஊஞ்ஞாலினெப்போலெ (ஊஞ்சல் போல்) உயரும்போள்

என்றெ ரஹஸ்யம் நிங்ஙளிளேக்குப் பகராம்

என்று வி.எம்.கிரிஜா தன் கவிதையில் சொல்லும் ரகசியம் –

என் வீட்டுத் தோட்ட மண்ணில்

ஷொரணூர் வழியில்

பசும்புல்போல் வாடையடித்துச்

சுகம் தரும்

அவன் உடலில் ரோமங்கள்.

வித்தியாசமாக, மிக எளிய, அகராதியைத் தேடி ஓட வேண்டாத சொற்களில் சொல்லப்படும் கவிதைகள் நிறைய. கல்லூரியில் வேதியல் விரிவுரையாளரான மோஹனகிருஷ்ணன் காலடி எழுதிய ‘சங்கரேட்டன்றெ ஆன ‘ இது –

சங்கரேட்டனின் யானை

—-

பள்ளிக்கூடம் விட்டாச்சு.

இந்தப் பக்கம் இழுத்தால்

அந்தப் பக்கம் போகும் ஜன்னல்களின்

காதைப் பிடித்து முறுக்கி

கூறுகெட்ட கதவுகளின்

தலையில் குட்டி அடைத்தார்

ஸ்கூல் பியூன் சங்கரேட்டன்.

சுரேஷ்குமாரின் சோற்றுப் பாத்திரம்

ராதிகாவின் குடை

ஞாபக மறதி வாத்தியாரின் பொடி டப்பா

எல்லாம் பெருக்கி வாரினார்.

முகம்மது குட்டியின் முக்கட்டையைக் கண்டார். எடுக்கவில்லை.

மூணு பி வகுப்பு கரும்பலகையில்

அழிக்க மறந்துபோன ஒரு யானை.

என்ன செய்யலாம் என்று யோசித்தபடி

முதல் பெஞ்சில் உட்கார்ந்தார் சங்கரேட்டன்.

யானை சொன்னது :

மலைவெள்ளத்தில் அடித்து வரப்பட்டேன்.

பள்ளிக்கூடம் கண்டு இங்கே படியேறினேன்.

டிராயிங் மாஸ்டர் கட்டிப் போட்டார்.

பள்ளிக்கூடத்திலேயே இருந்துக்கறேனே.

பகல் கஞ்சி குடிக்கக் கிடைக்கும்.

காலையில் காவல் நிற்பேன்.

தலைசுற்றி மயக்கம் போட்டு விழும் குழந்தைகளை

முதுகிலேற்றி வீட்டில் விட்டு வருவேன்.

சங்கரேட்டனுக்கும் ஹெட்மாஸ்டருக்கும்

ஆளுக்கொரு மோதிரம் ரகசியமாய்த் தருவேன்.

கதைகேட்டுத் தூங்கிப் போனார் சங்கரேட்டன்.

அடுத்த நாள் கணக்கெடுக்க வந்த ஏ.இ.ஓ கண்டது

உதைத்து மிதித்து உடைந்த

பெஞ்ச் தோட்டத்தை.

புதுக்கவிதையின் சாத்தியங்களில் அது நீர்த்துப் போவதும் ஒன்று. மலையாளக் கவிதைக்கும் அது நேராதிருக்கட்டும்.(2005)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன