கொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019

இரண்டு தலைமுறை முன்னால்
வாழ்க்கை எளிது உலக யுத்தமும்
யாரோ நடத்திய சுதந்திரப் போரும்
இலக்கணம் வழுவா இந்து பேப்பரும்
எருமைப் பாலில் பில்டர் காப்பியும்
நெரிசல் இல்லாத் தெருக்களுமாக.

இரண்டு தலைமுறை முன்னால்
எல்லாவற்றிலும் குடையே பிரதானம்
கல்யாண வீட்டுக்கும் இல்லாத வீட்டுக்கும்
கக்கத்தில் குடையோடு நடந்து செல்வர்.
முந்தி வந்ததாக மௌனமாய் முழங்கிப்
பந்தியில் இடம்பிடித்தார் குடையைப் போட்டு.
தோளில் மாட்டிய குடையோடு ஒருசிலர்
ஓடிச் சாடினர் ஒன்றும் ஆகலையாம்.

வெய்யில் மிகுந்தால் வீழ்ந்து சிறுதுயில்
கைக்குடை தானும் தலையணை ஆகும்
பையக் களைத்து நடை தளர்ந்தால்
ஊன்றுகோலும் ஆகும் பரிவுடன் அதுவே.
கொடியில் துணியை மடியாய் உலர்த்திட
கொம்பாகும் சிலவேளை; ஒருத்தர்
பழம் பறிக்கலாம் குடையாலென்றார்
பார்த்ததில்லை யாருமிங்கு.

குடைகள் கருவியாய் நீட்டிப் பாய்ந்து
சண்டைகள் யாரும் போட்டது இல்லை
குடைதனை மறந்து விட்டுப் போனவர்
தேடித் திரிந்த சோகம் கொடிது.
தொலைத்தால் கிடைக்குமா
கொழும்புக் குடைகள்?

உலாப் போகும் சாமிக்கும்
ஊர்வலம் போகும் தலைவர்களுக்கும்
குடைபிடிக்கக் கூடவே ஆள்வேணும்
தன் குடையைத் தானே பிடித்த
தலைவர் சிலையேதும்
கண்டதுண்டா உலகில் எங்கும்?

குடைகள் மிகுந்த உலகம் என்பதால்
குடைரிப்பேர் தொழிலாகக்
கொண்டவருண்டு.
மழைமேகம் திரளும் காலம்
இவர்குரல் கேட்க ஏங்கியிருந்து
தேடிப் போகணும் குடைத்துணி கிழிசல்
தைத்துக் கம்பிகள் நிமிர்த்தி வைக்க.

கத்திகள் கத்திரி இன்னும் புழங்குவதால்
சாணைக் காரர் சுற்றி வருகிறார்
குடையில்லா, மழையில்லா காலமின்று
குடைரிப்பேர் சாயபு வரமாட்டார் என்றும்.

————————————————-

அச்சாணி நாட்டணி ஆங்குதோற்று மண்டியிட
மிச்சமின்றி நாஜிபோக ஆக்ரமிப்பு – எச்சமில்லை
தட்டிவீழ்ந்து காலுடைந்து சர்ச்சிலுக்கு காத்திருக்கும்
இட்லர் அமர்ந்தவிருக் கை.

அச்சாணி நாட்டணி – Axis Power nations Germany, Japan etc in WW II

Weird History‏ @WeirdHistoryPix Jun 20

Winston Churchill sitting in what remains of Hitler’s Arm chair, 1945

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன