rava upma ரவா உப்புமா ஆண்டு – 1899


PVR sir கன்னட ரவா உப்புமா நேசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் சற்று முன் –

விஸ்வரூபம் நாவலில் இருந்து –

ஏப்ரல் 14 1899 விகாரி வருடம் சித்திரை 2 திங்கள்கிழமை

குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி தரையில் வந்து உட்கார்ந்தான் வேதையன்.

அண்ணாவுக்கு இலையைப் போட்டு பரசேஷணம் செய்ய ஜலம் எடுத்து வையடா.

துளு பிராமணன் உக்கிராணத்தைப் பார்த்து உரக்கச் சொல்லிவிட்டு உடனடியாகத் திருத்திக்கொண்டான்.

இலையைப் போட்டு சூடா ரெண்டு கரண்டி உப்பிட்டு விளம்பு. ரவா கேசரியும் வரட்டும் கூடவே. அண்ணா, காப்பி ஒரு வாய் எடுக்கச் சொல்லவா? கள்ளுச் சொட்டாட்டம் ரம்யமா இருக்கும் இந்த இடத்திலே.

காப்பி எல்லாம் வேதையனுக்குப் பழக்கமில்லை. ஜான் கிட்டாவய்யனின் சாப்பாட்டுக் கடையில் அது பரபரப்பாக விற்றழிந்தாலும் வீட்டில் காப்பியும் தேத்தண்ணீரும் நாவேறாமல் ஜாக்கிரதையாக இருந்தான் கிட்டாவய்யன்.

உள்ளே இருந்து வந்த பரிசாரகன் நீளமாக ஒரு பச்சை வாழை இலையை விரித்து வேதையன் தண்ணீர் தெளிக்கக் காத்திருந்தான். அவன் சும்மா இருக்கவே பரிசாரகனே பக்கத்துக் குவளையில் இருந்து தண்ணீர் எடுத்து அந்த இலையை ஆசிர்வதிக்கிறதுபோல் விசிறினான். ஆவி பறக்க உப்பிட்டுவை அதில் பரிமாறி ஒரு கரண்டி காய்கறிக் குழம்பையும் கூடவே விட்டான் அடுத்து. வெல்லம் கரைத்து சேர்த்து அசட்டுத் திதிப்பாக இருந்த குழம்பு அது.

அவல் கேசரியா ரவா கேசரியா?

அவன் கேட்க ரெண்டுமே வேணாம் என்றான் வேதையன். கன்னடத்துக்காரர்கள் ராத்திரி படுக்கப் போவதே விடிந்த பிறகு ரவா கேசரி சாப்பிடத்தான் என்று தோன்றியது. இப்படி உடம்பில், ரத்தத்தில் தசையில் ஏகப்பட்ட சர்க்கரையை ஏற்றிக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு என்று எல்லா தேசத்து வைத்தியர்களும் ஏகோபித்துச் சொல்கிறார்கள். இவர்கள் யாரும் கேட்பதில்லை.

விடிய ஒரு நாழிகை இருக்க கிண்டி எடுத்து வச்சுட்டேன். இன்னொரு தடவை கிண்டணும் போல் தெரியறது. இலை இலையா வார்த்து கையே நோவெடுக்கறது.

பரிசாரகன் தன் சாமர்த்தியத்தைத் தானே அதிசயித்துக் கொண்டு அப்பால் போக, வேதையனுக்கு நேரே கிழக்கே பார்த்து உட்கார்ந்து உப்பிட்டு சாப்பிட ஆரம்பித்த ஒரு நோஞ்சான் திடீரென்று பெருங்கூச்சலாக ஒச்சை எழுப்பினான். அவன் பூணூல் இல்லாத வேதையனின் வெற்று மாரைப் பார்த்தபடி இருந்தான்.

இதென்ன இந்த மனுஷ்யர் பிராமணர் இல்லை போல இருக்கே. நாலு வர்ணமும் கூடி இருந்து போஜனம் கழிக்கும் ஸ்தலமா இது? ஓய் மனுஷா இந்த நபரை வெளியே நீர் அனுப்பாத பட்சத்தில் ஒரு கவளம் உப்பிட்டு கூட எனக்குத் தொண்டையில் இறங்காது. நான் பட்டினி கிடக்கிற பாவம் உமக்குச் சேரும்.

அந்த சோனியான மனிதன் தன் சாப்பாட்டில் நரகலை யாரோ கலந்த மாதிரி பதற்றத்தோடு இரைந்தான். வேதையனுக்கு இதெல்லாம் அனந்தையிலும் கண்ணூரிலும் பார்த்து அனுபவித்துப் பழகிய சங்கதி. பட்டன்மாரும் நம்பூத்ரிகளும் அவ்வப்போது தாண்டிக் குதிக்கிறது வழக்கம்தான். நாக்கை நொட்டை விட்டுக் கொண்டு ஜான் கிட்டாவய்யன் சாப்பாட்டுக் கடையில் படி ஏறுகிறபோதோ அவனிடம் ரகசியமாக வட்டிக்கு காசு கடன் வாங்கிப் போகும்போதோ இதொண்ணும் அவர்களுக்கு சவுகரியமாக நினைவு வராமல் ஒழிந்துவிடும்.

ஓய், ஓய், என் சஞ்சியைக் கொஞ்சம் எடுத்து வாரும்.

வேதையன் அதிகாரமாக விடுதிக்காரனிடம் சொன்னான். அவன் ஓட்ட ஓட்டமாக வேதையன் காபந்து செய்யக் கொடுத்து வைத்த தோல் சஞ்சியோடு வந்து சேர்ந்தான். அதை வேதையன் பக்கத்தில் பிரியத்தோடு நிலத்தில் வைத்தான். சஞ்சி சரிந்து விழவே சுவரோடு அதைச் சார்த்தி வைத்தான் விடுதிக்காரன். வந்திக்கப்பட வேண்டிய தெய்வரூபம் போல் வெகு மரியாதையாக நடந்தேறிய காரியம் அது.

வேதையன் உப்பிட்டுவை மென்றபடியே சஞ்சியைத் திரும்பத் தரையில் கவிழ்த்து சக்கரமும் ராணி தலைப் பவுன் காசுமாக ஒரு பக்கமாகக் குவித்தான். அதை இடது கையால் எண்ணி வலது பக்கம் நகர்த்தினான். அப்போதும் அவன் வாய் ஆகாரத்தை மென்றபடிதான் இருந்தது.

நான் இதோ இந்த க்ஷணமே இடத்தை ஒழிச்சுப் போறேன் ஐயா. குளிக்க வெள்ளம், இப்ப இந்த பிராதல், ஒரு மணிக்கூர் என் சஞ்சியைப் பார்த்துண்டதுக்கான கூலி, எல்லாம் மொத்தமா எவ்வளவு ஆச்சு, சொல்லும். விட்டெறியக் காசு உண்டு.

ஐயோ, நீர் ஏன் ஸ்வாமி ஸ்தலம் ஒழிக்கணும்?

விடுதிக்காரன் அதிகார பாவனையோடு கூச்சல் போட்ட நோஞ்சான் எதிரில், இலையில் பாதம் பட்டு சவிட்டுகிற நெருக்கத்தில் நின்றான். அவனுடைய முன் குடுமியைப் பற்றி இழுக்கத் தோதாக கையை நீட்டிக்கொண்டு இரைந்தான்.

ஓய் ஸ்வாமின், இஷ்டம் இருந்தால் வாயையும் பின்னாலேயும் பொத்திக் கொண்டு போட்டதைச் சாப்பிட்டு இடத்தை ஒழித்துப் போம். இல்லையோ, எச்சில் கையை உம்முடைய அழுக்கு சோமனில் துடைத்துக் கொண்டு இப்படியே அந்தாண்டை ஓடும். நீர் கொடுக்க வேண்டிய நாலு சல்லியை பொணம் தூக்குறவனுக்கு தருமம் வார்த்ததாக கணக்கு எழுதிக்கறேன். காலை நேரத்திலே வழக்கு வம்பு என்று என் நேரத்தைப் பாழடிக்கவே வந்து சேர்ந்தீரா? வீட்டு ஸ்திரி பிரஷ்டையான கோபத்தை எல்லாம் இங்கே வந்து கொட்டி ஏனய்யா எழவெடுக்கிறீர்? பெரிய மர உலக்கையாகக் கிடைத்தால் சேர்த்துப் பிடித்துக்கொண்டு படுத்து சுகியும், போம்.

அந்த ஒல்லியான கிரகஸ்தன் அரண்டு போய் விடுதிக்காரனைப் பார்த்தான்.

கலிகாலம். கலிகாலம்.

கிரகஸ்தன் இதைச் சொன்னபடிக்கு இலையோடு சாப்பாட்டை சுருட்டிப் பிடித்து எடுத்துக் கொண்டு வெளியே போனான்.

இலையை வச்சுட்டுப் போமய்யா.

விடுதிக்காரன் ஓசையிட ஆரம்பித்து சட்டென்று அதை நிறுத்தி உரக்க சிரித்தான். வேதையனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

********************

பேஸ்புக்கில் புகைப்படமும் உரையாடலும்

உரையாடல்

about an hour ago

I really wish Chennai has eateries like Bangalore!!

   Arun Kumar K likes this.
  • Arun Kumar K Price seems to b nominal!
    48 minutes ago via mobile · Like · 1
  • PV Ramaswamy MTR is the legendary, so premium service and rates. Surprisingly, I had Masal Dasa at half this rate. Totally un-thinkable at Chennai.

    Before entering BLR I delayed my evening snax. Did not want it from TN side. Post Hosur, in KA, we had Masal Dosa & Mini coffee. Delicious. Crispy, good brown masala dosa was 25/- and the superb coffee was 5/=. 

    A ‘dharshini’ type (self-servicing) Upahaur eatery!! :))
  • EraMurukan Ramasami 35 ரூபாய் கொடுத்து ரவா உப்புமா (காரா பாத்) சாப்பிடும் கன்னட சோதரரைப் பாராட்டவா, பார்த்து பரிதாபப்படவே என்று தெரியவில்லை. கேசரி கூட 25 ரூபாய் தானாம். வாழ்வாதாரம் ஆச்சே அங்கே அது ப்ளஸ் ’ஒன் பை த்ரி காப்பி கொட்றீ’
  • PV Ramaswamy EraMurukan Ramasami Karnataka probably has mastered the art of cooking. Rava Upma – I never knew it tasted so well, till I had it couple of times earlier in Bangalore.
  • EraMurukan Ramasami நிஜமா எனக்குப் புரியலே சார்.. இப்படி உப்புமா மேலே உசிரையே வச்சிருப்பாங்கன்னு தெரிஞ்சா சரவண பவன் ரவா உப்புமா காவிரி நீருக்கு மாறு கொள்ளுவோம்

 

2 comments on “rava upma ரவா உப்புமா ஆண்டு – 1899
  1. PVRamaswamy சொல்கிறார்:

    கால எந்திரப்பயணம்.

    இதைத் திரையில் காட்டுவதென்றால், எப்படி காட்டவேண்டும்என்று எண்ணிப்பார்க்கிறேன்.

  2. PVRamaswamy சொல்கிறார்:

    சொகுசான, ஜிலுஜிலுவென்ற நடை. இப்போதையவர்கள் சரியாக காட்டுவார்களா என்ற கவலையும்… 🙂

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன