Sitham Sirukaleசித்தஞ் சிறுகாலை..


திருப்பாவை – 29

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். 29
திருப்பள்ளி எழுச்சி – 9

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

//

முந்தைய ’குறையொன்றும் இல்லாத கோவிந்தா, அறியாச் சிறுமியர், சீறி அருளுக’ திருப்பாவையும் இந்த கோஹினூர் வைரப் பாடலும் பி.ஏ.கே சொன்ன மாதிரி pastoral prayers. முல்லை நிலத்து முழுமுதற் கடவுளை ‘வடவரையை மத்தாக்கி’ என்று தொடங்கி, ‘நாராயணா என்னா நாவென்ன நாவே’ எனப் பெருஞ்சொல்லால் நிறைவு செய்கிற சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையோடு சேர்த்து வைத்து எண்ணவும் துய்க்கவும் தக்கவை.

இந்த ஆயர்பாடிச் சிறுமிகள் பறை பறை என்று இதுவரை சொன்னது ஒரு சௌகரியமான சாக்குதான். கண்ணனைத் தரிசித்து வணங்கி அவன் தன்னோடு இருக்க பறையைக் கொடு, விளக்கைக் கொடு, கண்ணாடியைக் கொடு என்றெல்லாம் போட்ட பட்டியலும் முக்கியமில்லை.

பின் ஏன் வந்தார்கள் சிற்றஞ் சிறு காலை, பனித்தலை வீழ?

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்

இந்த வேண்டுதலுக்கு உருகி ஓடி வராத கடவுளும் ஒரு கடவுளா?

கண்ணன் கண்ணில் கண்ணீர் மல்க ஆண்டாளை அடைக்கலம் புகுந்திருப்பான்.

பிரதிவாதி பயங்கரரின் உரையில் அவர் சிறப்புப் பொருளில் ஈடுபட்டு விடுவதால், சஹானாவாக, தேஷ் ராகமான தொனியில் ஒலிக்க வேண்டிய இந்தப் பாடல் அடாணாவாக, கொஞ்சம் அதிகாரத்தோடு வருகிறது.

நீ வந்து பிறந்ததற்கு ஒரு பயன் வேண்டாவோ? எங்களிடத்தில் நீ கைங்கரியம் கொள்ளாதொழிவாயாகில் உன்னுடைய இப்பிறவி பயனறற்தாமான்றோ? என்கிறார்கள்.
– இல்லை, அப்படி மிரட்டவில்லை.

கொண்டுபோங்கள் என்று ஒரு பறையை எடுத்துவரப்புக்கான்; அது கண்ட ஆய்ச்சிகள், ‘அப்பா! கருத்தறியாமற் செய்கிறாயே; நாங்கள் ‘பறை’ என்று சொன்னதற்குக் கருத்துரைக்கின்றோம் கேளாய்’ என்று உரைக்கத் தொடங்குகின்றனர் “- இந்தத் தொனியும் கவிதையில் இல்லை. கண்ணனிடம் ‘புத்தியில்லாம செய்யறியே’ என்று சிறுசொல் சொல்ல வரவில்லையே இவர்கள்..

எனினும் பயங்கரரின் உரை சிறப்புடையது என்பதால் அதிலிருந்து –

//சிற்றஞ்சிறுகாலை – அருணோதய காலத்தைக் கூறியவாறு. ‘சின்னஞ்சிறுப் பையன், செக்கச் சிவந்த தலை’ என்னும் பிரயோகங்களை யொக்கும் இப்பிரயோகம். “சிற்றஞ்சிறுகாலே” என்றும் ஓதுவர்’

“காலைவந்து” என்னாமல், ‘சிறுகாலைவந்து’ என்னாமல், “சிற்றஞ்சிறு காலை வந்து” என்றதற்குக் கருத்து – எங்கள் பருவத்தை ஆராய்ந்தால் பொழுது விடிந்து பதினைந்து நாழிகையானாலும் குளிருக்கு அஞ்சிக் குடிலைவிட்டுக் கிளம்பமாட்டாதாரென்று தோற்றுநிற்க, குளிரை ஒரு பொருளாக நினையாமல் நாங்கள் இத்தனை சிறு காலையில் வந்தது எவ்வளவு ஆற்றாமையின் கனத்தினாலாகக் கூடுமென்பதை ஸர்வஜ்ஞனான நீயே ஆய்ந்தறிந்துகொள் என்றவாறு.

“உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்” என்றது – நாங்கள் எதை உத்தேசித்து உன்னைக் காப்பிடுகின்றோமோ அந்த உத்தேசத்தை வெளியிடுகின்றோம், கேட்டருள் என்றபடி. அந்த உத்தேசத்தை வெளியிடுகின்றன, மற்ற அடிகள்.

(பெற்றம் மேய்த்து இத்தியாதி.) நித்ய ஸூரிகளின் நடுவே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கு மிருப்பைத் தவிர்ந்து இவ்விடைக்குலத்தில் நீ வந்து பிறந்ததற்கு ஒரு பயன் வேண்டாவோ? எங்களிடத்தில் நீ கைங்கரியம் கொள்ளாதொழிவாயாகில் உன்னுடைய இப்பிறவி பயனறற்தாமான்றோ? என்கிறார்கள்.

எங்களை – உருபு மயக்கம்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் கொள்க. “குற்றேவலெங்களைக் கொள்ளாமற் போகாது” என்றவிடத்தில், “கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர்குற்றேவல், இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யத் தவந்தானென்” என்ற நாச்சியார் திருமொழியை நினைப்பது.

இப்படி, ‘எங்களிடத்திற் குற்றேவல் கொள்ளவேணும்’ என்று வேண்டின ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ணபிரான், ‘பெண்காள்! அது அப்படியே ஆகிறது; அந்தரங்கமாக ஏவிக்கொள்ளுகிறேன்; நீங்கள் மார்கழி நீராட்டத்திற்கு உபகரணமாகக்கேட்டவற்றைத் தருகிறேன், கொண்டுபோங்கள் என்று ஒரு பறையை எடுத்துவரப்புக்கான்; அது கண்ட ஆய்ச்சிகள், ‘அப்பா! கருத்தறியாமற் செய்கிறாயே; நாங்கள் ‘பறை’ என்று சொன்னதற்குக் கருத்துரைக்கின்றோம் கேளாய்’ என்று உரைக்கத் தொடங்குகின்றனர் “இற்றைப்பறை” இத்யாதியால்.

இன்று + பறை, இற்றைப்பறை. இப்போது நீ எடுத்துக்கொடுக்கும் பறை என்றபடி. கொள்வானன்று – கொள்வதற்காகவன்று; ‘நாங்கள் வந்தது’ என்று சேஷ பூரணம் செய்க.

எற்றைக்கும் – என்றைக்கு மென்றபடி. “ஏழேழ் பிறவிக்கும்” – “தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வே ச மாநுஷீ” என்றபடி எம்பெருமானுடைய பிறவி தோறும் ஒக்கப் பிறக்கும் பிராட்டியைப் போலே தாங்களும் ஒக்கப்பிறந்து ஆட்செய்ய நினைக்கிறார்கள்.// நன்றி dravidaveda.org

 

திருப்பள்ளி எழுச்சி

பதப்பொருள் : விண்ணகத் தேவரும் – விண்ணில் வாழும் தேவர்களும், நண்ணவும் மாட்டா – அணுகவும் முடியாத, விழுப் பொருளே – மேலான பொருளாயுள்ளவனே, உன் – உன்னுடைய, தொழும்பு அடியோங்கள் – தொண்டைச் செய்கின்ற அடியார்களாகிய எங்களை, மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே – மண்ணுலகில் எழுந்தருளி வந்து வாழச் செய்தவனே, வண்திருப்பெருந்துறையாய் – வளப்பம் பொருந்திய திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே, வழியடியோம் – பரம்பரை அடியாராகிய எங்களுடைய, கண்ணகத்தே நின்று – கண்ணில் நின்று, களி தரு தேனே – களிப்பைத் தருகின்ற தேன் போன்றவனே, கடல் அமுதே – பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே, கரும்பே – கரும்பு போன்றவனே, விரும்பு அடியார் – அன்பு செய்கின்ற அடியவரது, எண்ணகத்தாய் – எண்ணத்தில் இருப்பவனே, உலகுக்கு உயிர் ஆனாய் – உலகமனைத்துக்கும் உயிரானவனே, எம்பெருமான் – எம்பெருமானே, பள்ளி எழுந்தருளாய் – பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.// நன்றி tamilvu

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன