ஏமப் பெருந்துயில் மண்டபத்தில் உறைவோரும் மற்றோரும்

நாவல் தினை அல்லது சஞ்சீவனி-யில் இருந்து

ஏமப் பெருந்துயில் மையத்தில் மொத்தம் எட்டு பேழைகள் மின்சாரக் குளிரை உயிர்த் தேனாகக் கொண்டு கிட்டத்தட்ட இறப்பு நீக்கி உறைந்து கிடந்தன. எட்டில் ஒன்று மட்டும் பாதி தேளுடல் கொண்ட மாற்றுடல் பெண்.

இடுப்புக்கு மேல் மனுஷி உடல் வனப்பாக மலர்ந்திருந்தது. கீழே சிவப்பு உக்ரமாக உயிர் பறிக்கும் செந்தேளுடலோடு கால்கள் சிறு மயிர் பூத்து மூடித் தளர்ந்து கிடந்தன.

கண்ணாடியும் தேறலியமுமாக*** நீண்டிருந்த பெட்டிக்குள் தேள்ப்பெண் உடலின் உறுப்புகள் ஓய்வெடுத்தபடி அவசியமான அளவு மட்டும் இயங்கின. துர்வாடை உடலின் சகல துவாரங்களில் இருந்தும் மெழுகு போல் சொட்டியது. பேழைக்குள்ளிருந்து நீளமாக வெளியேகும் சன்னமான குழாய்கள் காற்றழுத்தம் மிகுத்துத் தள்ள சுமந்து வந்த கழிவைப் பேழையை ஒட்டி வெளியே பிரிந்தன.

ஏமப் பெருந்துயில் ஆய்வு என்று அடுத்த ஆய்வுக்கான தேதி பேழைக்குப் பக்கவாட்டில் பொறித்திருந்தது. அந்தத் தேதி ஒரு மாதம் சென்று ஏற்படும் என்று பொறித்த தகவல் சொன்னது.

வாசலுக்கு அருகே அமைந்த நோய்த் தடுப்பு மிகுந்த இந்த ஆழ்வுறக்க அறைக்கு அடுத்து உள்நோக்கிக் கதவு திறக்கும் அறையில் கை, கால், காதுகள், குறிகள் என்ற பிறப்புறுப்புகள் என்று அவயவங்கள் கண்ணாடிச் சுவருக்கு அப்புறம் வெற்றிடம் இடைபட ரகவாரியாகக் குவிக்கப் பட்டிருந்தன.

அந்தக் குவியல்களை இயங்க வைக்கும் மின்னுயிர் காந்த ஈர்ப்பு அலை சுற்றிச் சுழன்று வரும்போது, சிறிதுபோல் அழுத்தம் அதிகரிக்க, கைகளும், கால்களும் துள்ளி எழுந்து ஆடி அடங்குவதை ஏமப் பெருந்துயில் குறித்து அறியாதவர்கள் குழு நாட்டிய நிகழ்வாகக் கருதி மயங்குதல் இயல்பாகும்.

அதற்கு அடுத்த ஏமப் பெருந்துயில் அறையில் தற்போதைய பெருந்தேளர் மகா சக்கரவர்த்திகளின் தந்தையாரின் உடல் மின்னுயிர் கொண்டு சீராகப் பேணப்பட்டு வருகிறது. இந்தக் காலத்துக்கு அடுத்து வரும் காலம் எதிலும் இறந்தவர்கள் உயிர்க்க வழி கண்டால் பழைய அரசரின் உடல் உயிர்பெற்று மறுபடி ஆள வருவார் என்ற நம்பிக்கைதான் இதற்கு அடிப்படை.
*** தேறலியம் Polyvinyl material

அந்த அறைக்கு மட்டும் சிறு தேளரும் கரப்பரும் பள்ளியிலிருந்து வந்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிப் போவது தவறாது நடக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் ஆண்டிலொரு முறை அஞ்சலி செலுத்துவது கட்டாயமானது.

அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே நடைபாதையில் புரண்டு தலையைக் கல்லில் மோதி ஓவென்று அலறி மண்டியிட்டுப் பழைய அரசர் நேற்றுத்தான் இறந்தது போல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து துயர் களைவது எவ்வளவு அதிகம் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் இடமாற்றலும் நிச்சயமாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன