புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ தமிழ்ப் புத்தாண்டு 2023 வெளியீடாக ..

புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 2023 வெளியீடாக இருக்கக் கூடும்

நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி

பயணத்துக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது ஒரு சுறுசுறுப்பில்லாமல் நடந்து கொண்டிருந்ததாக குயிலிக்கும் வானம்பாடிக்கும் மனதில் பட்டது. ஆரம்ப வேகம் அப்புறம் இல்லை.

ஏழு மணி காலை நேரத்தில் வந்தவர்கள் பத்தரை மணி ஆகியும் புறப்படவில்லை. பயண அலுவலகத்தின் புறப்பாடு பகுதியில் ஆரஞ்சு நிற விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்குப் பயணம் இருக்கிறது என்று மட்டும் சொல்கிறவை இந்த விளக்குகள்.

குயிலியின் உள்ளங்கையில் டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது. பொருள் வயின் பயணம் என்று எழுதிய அறிவிப்புப் பலகை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவர் இதே பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு சூரிய மண்டலத்தில் வரும் ஏதோ கிரகத்து வாசி என்று முகம் சொன்னது. காதுகள் குமடு வரை நீண்டு கூர்த்திருக்க சாய்ந்து அமர்ந்தபடி நோக்கினார் அவர்.

“குயிலி சற்றுப் பொறுங்கள். காசுகள் வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன”.

மனிதர் மொழியில் சரளமாக அறிவித்த அவர் குரல் வெளிவர முகத்தில் தீற்றி வைத்தாற்போல் இருந்த வாய் போதாது. காதில் அணிந்த சிறு யந்திரம் அந்தச் செயலைச் செய்வது மின்னி மின்னி நடத்தும் இயக்கத்தில் தெரிந்தது.

வார்த்து முடித்து அரசு இலச்சினை போட்ட பொதியில், ஒரு வினாடி பிரத்யட்சமான தங்கசாலை ஊழியர் ஒருவரால் அவை எடுத்து வரப்பட்டன. அவர் குயிலி காசுகளை ஒரு முறைக்கு இரண்டாக இருநூறு என்று எண்ணி முடிப்பது வரை நின்றிருந்தார்.

என்ன என்று பார்வையால் கேட்டாள் குயிலி. ஒரு காசு கொடுங்க என்று அவர் ஈயென்று இரப்பது பரிதாபமாக இருக்க குயிலி தன் கைப்பையை திறந்து நாணயப் பொதியை வைத்தபடி உள்ளே வேறு காசு உண்டா எனத் தேட, சென்ற வாரம் குறிஞ்சி நிலம் காணப் போய் வந்தது நினைவு வந்தது.

மெய்யும் பொய்யும் கலந்து காட்சி சமைந்த அந்தப் பயணம் ஒரு செலவும் இல்லாமல் நடந்த ஒன்று என்பதில் அவளுக்கு மகிழ்ச்சிதான். அப்போது கொடுத்த ஐந்து பாண்டியன் காசுகளில் ஒன்று தட்டுப்பட அதை காசுசாலை ஊழியரிடம் கொடுத்தாள்.

மிக்க நன்றி, என் மகன் காலந்தோறும் காசுகள் என்ற தலைப்பில் காட்சி நடத்த பல்வேறு காலக் காசுகள், உடை, புழங்கு பொருட்கள் என்று சேகரிக்கிறான். அவனுக்குத்தான் இது என்று சொல்லி வணங்கிப் போனார் ஊழியர்.

வாருங்கள் நேரமாகி விட்டது. என் தரப்பில் தான் தாமதமாகி விட்டது. மன்னியுங்கள் என்றபடி உயரம் கூடிய தலை முடி நரைத்துப் போன ஒரு அதிகாரி புன்முறுவலோடு குயிலியையும், வானம்பாடியையும் புறப்பாடு என்று எழுதிய வழியின் ஊடாக நடத்திக் கூட்டிப் போனார்.

காலப் பயணப்படும் ஊர்தி அந்த ஒழுங்கையின் அற்றத்தில் வெய்யிலில் காய்ந்தபடி, பயன் ஓய்ந்த பழைய பயிற்சி விமானம் போல், யார் கவனத்தையும் ஈர்க்காமல் நின்று கொண்டிருந்தது.

வானம்பாடி கண்ணை மூடியபடி அவளுக்கான இருக்கையைப் படுக்கையாக நீட்டிச் சாய்ந்து படுத்துக்கொண்டாள்.

பயணம் தொடங்கியது.

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 7

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன