காலப் பயணத்தில் சந்தித்த இரண்டு வயது உத்தமதான புரம் சாமிநாதய்யர் – பொது யுகம் 1854

மார்ச் 26 2023 திண்ணை இணைய இதழில் வெளியாகியிருக்கும் நாவல் – தினை அல்லது சஞ்சீவனி- ஒரு சிறு பகுதி

காலப் படகின் நாற்பரிமாணக் கூறுகளை சற்றே கணினி கொண்டு திருத்தி தன்னை எல்லோரும் பார்க்கக் கூடியபடி அலகுகளை மாற்றியமைத்தாள்.

பத்து வினாடியில், அவள் அணிந்திருந்த உடுப்பு கால்சராய், மேல்சட்டையிலிருந்து புடவை, ரவிக்கை ஆனது. தலைமுடியைக் கைப்பையிலிருந்து எடுத்த சீப்பால் வாரி, புடவைத் தலைப்பை நேராக்கிக் கொண்டு நடந்தாள். வாயில் மென்றிருந்த சூயிங் கம்மை எதிர்ப்பட்ட வீட்டு வாசல் ஓரமாகத் துப்பினாள்.

அவள் பார்த்துப் போக வேண்டியது பிறந்த குழந்தையை இல்லை. குழந்தை பிறந்த வீட்டுக்கு மேற்கே இரண்டு வயது சாமிநாதரைப் பார்த்துப் பேசிப் போக வேண்டும். குயிலிக்கு சாமிநாதய்யரைத் தெரியும். . பக்கத்து வீட்டுக் குழந்தையைத் தெரியாது. அவளுக்கு முன்னால் கால ஊர்தியில் யாரோ ஆண்டு ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தேழு போயிருக்கிறார்கள். சாமிநாதய்யர் அவதரித்தது ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தைந்தாம் வருடம்.

அந்தப் பழைய பயண சமாசாரங்களை நீக்காமல் குயிலியின் பயண விவரணைகள் அதற்கு மேலே படிந்திருக்கும்படி அமைத்திருக்கிறார்கள். காரணமாகத்தான், தவறாக ஏதும் இல்லை. போனவனுக்கோ போனவளுக்கோ சாமிநாதய்யர் அவதரித்த தினத்தில் இங்கே வந்து அவரைப் பிறந்ததும் பூஜித்துப் போக வேண்டும் என்று விருப்பம். அது 1855ஆ 1857ஆ என்று கவலையில்லை.

ஆக, அவர் தவறுதலாக அந்தக் குழந்தை பிறந்த வீட்டுக்கு அடுத்த வீட்டு விசேஷத்தைக் கொண்டாடிப் போயிருக்கிறார், அங்கேயும் கர்ப்பிணிப் பெண், அங்கேயும் ஆண் குழந்தை, குழந்தை குழந்தைதானே, எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன, அவர் கொண்டு வந்த பரிசை எல்லாம் சாமிநாதய்யருக்கு இரண்டு வயது இளைய பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு அளித்து விட்டு வண்டியேறி இருக்கிறார்.

அந்தப் பயண அனுபவத்தை வேறு யாரும் மொழி அன்பர்கள் இருந்தால் அவர்களோடு பகிர்ந்து கொள்ள ஊர்தியின் நினைவு அமைப்போடு விளையாட்டாக இணைத்து வைத்துப் போயிருக்கிறார்.

அவர் செய்த தவறு அப்புறம் தெரிய வந்திருக்கிறது. அவர் கொஞ்சி விளையாடிப் பொம்மை வாங்கிப் போய் சாமிநாதய்யருக்கு என்று தவறுதலாக அடுத்த வீட்டுக் குழந்தைக்கு கொடுத்தது லைப் ஆஃப் ப்ரைன் மாண்டி பைதான் Life of Brian (Monty Python) நகைச்சுவைப் படம் போல் ஆகிப் போனது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் போய்க் கொண்டாடிய அடுத்த வீட்டுக் குழந்தை, ஆறு மாதத்தில் குடும்பம் அரசூருக்குக் குடிபெயர, அங்கே நாளடைவில் சுந்தர கனபாடிகள் என்றானதாம்.

தவறான குழந்தை என்று கொடுத்த பரிசை எல்லாம் பிடுங்கிக்கொண்டு போகவில்லை, அதுவரை க்ஷேமம். குயிலிக்கு சாமிநாதய்யரைப் பையனாகச் சந்திக்க ஆசை.

நளினமாக 1857,8,9 என்று மூன்று வருடம் காலப் படகை முன் எடுத்துப் போய், இதோ வீட்டுத் திண்ணையில் கோமணம் தரித்த சாமிநாதச் சிறுவன். துயில் கலைந்து எழுகிறான். பக்கத்தில் பாய் மேல் ஒரு செப்புக்கிண்ணம். அதை மூடி ஒரு செப்புத் தட்டு. கூடவே ஒரு கரண்டி.

குயிலி சாமிநாதய்யரின் இந்தக் குழந்தை வழக்கத்தைப் பற்றிப் படித்திருக்கிறாள்.

எழுந்ததும் சாமிநாதக் குழந்தைப் பையன் கண்ணை மூடியபடியே கிண்ணத்தின் மேல்தட்டைக் கீழே வைத்து கரண்டியால் கிண்ணத்துக்குள் ந்ங் என்று தட்டுவான். தட்டினார். கிண்ணத்தின் உள்ளே இருந்து சின்னச் சின்னதாக அப்பம் எடுத்து சந்தோஷமாகச் சாப்பிட்டு விட்டு எழுந்திருப்பதே தினசரி முதல் வேலை.

கிண்ணத்தில் இருந்து அப்பம் எடுக்கும்முன் குயிலி பாய்ந்து நாலு அப்பத்தில் ஒன்றை எடுத்து வாயில் போட்டு மெல்லுகிறாள். சாமிநாதக் குழந்தை கண் திறந்து கிண்ணத்தைப் பார்க்க, அடுத்து குயிலியைப் பார்க்க, நீ எடுத்து சாப்பிட்டுட்டியா என்று கேட்கிறார். குயிலி இல்லவே இல்லை என்று சிரித்தபடி தலையாட்டுகிறாள். ரெண்டு வயசுக்கு நல்ல உயரமான குழந்தை.

என் புது நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’யில் இருந்து

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன