எம்.டி.வாசுதேவன் நாயரும் எம்.டி.ராமநாதனும்

என் மின்நூல் ‘ஏதோஒரு பக்கம்’ புத்தகத்திலிருந்து மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல் எஞ்சியது

9) நான்: மலையாளத்தின் பாரம்பரிய வரலாற்று புனைவுகளில் கொடியவனாகச் சித்தரிக்கப்படும் ‘சதியன்’ சந்துவைக் கதாநாயகனாக்கி ஏழெட்டு வருஷம் முன்பு, ‘ஒரு வடக்கன் வீரகாதை’ திரைக்கதை உருவாக்கினீர்கள். இப்போது நீங்கள் திரைக்கதை அமைத்த ‘பழசிராஜா’வில் இன்னொரு சந்து வருகிறான். பழையம்வீடன் சந்து. வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்ததாகக் காட்டியிருக்கிறீர்களே இந்தச் சந்துவை? அவனும் வேறு மாதிரி இருந்திருக்கலாம் இல்லையா?

எம்.டி: கொலைக்கும் துணிந்த சதியன் சந்து பணிக்கர் என்ற கற்பிதம் வடக்கு கேரள பிரதேசத்தில் வழங்கும் வடக்கன்பாட்டு கிராமிய இசை வடிவில் இல்லை. மலையாள மண் இன்னும் போற்றிப் புகழும் ஆரோமல் உண்ணி போல் அவனும் வடக்கன் பாட்டுகளின்படி ஒரு வீரன் தான். 50-60களின் மலையாள சினிமா சரித்திரப் புனைவுகளைத் தொட்டுப் பார்க்க முயற்சி செய்த போது சந்து சதிகாரன் என்ற பொய் கட்டிச் சமைக்கப்பட்டது. வடக்கன் வீரகாதை படத்தில் நான் சித்தரித்த சந்து சூழ்நிலையால் குற்றவாளி ஆக்கப்பட்ட ஒரு வீரன். இப்போது பழசிராஜா படத்தில் வரும் பழையம்வீடன் சந்து ஆங்கிலேயருக்குத் துணை போனவன் என்பது தொன்மமில்லை. புனைவுமில்லை. வரலாறு. ஆவணப்படுத்தப்பட்டது.

10) நான்: உங்கள் படமான ‘பரிணயம்’, கேரளத்தில் பரபரப்பு சிருஷ்டித்த ‘குறியேடத்து தாத்ரிகுட்டி’ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது இல்லையா?

ஆமாம். நம்பூத்ரி சமுதாயத்தைச் சேர்ந்த குறியேடத்து தாத்ரிகுட்டியின் வாழ்க்கை சம்பவங்களுடைய பாதிப்பு பரிணயம் படத்தில் உண்டு. போன நூற்றாண்டு தொடக்கத்தில், நம்பூதிரி பிரிவினரை மட்டுமில்லாமல் கேரளத்தில் பொதுவாகப் பெண்ணை ஆணாதிக்க சமுதாயம் நடத்துவதை மறு பரிசீலனை செய்ய வைத்த நிகழ்வு அது. நம்பூத்ரி இனப் பெண் பிறழ்ந்து போக நேர்ந்த சூழ்நிலையைப் கவனமாகப் பரிசீலனை செய்யும் முயற்சி ‘பரிணயம்’.

11) நான்: மாடம்பு குஞ்ஞுகுட்டன் கூட அது குறித்து ப்ரஷ்டு என்ற நாவல் எழுதியிருக்கிறார் இல்லையா? அவருடைய பூர்வீக இல்லமான மாடம்பு மனையின் அடுதிரிப்பாடு தானே தாத்ரிக்குட்டியை ஸ்மார்த்த விசாரம் (சமூக விசாரணை) செய்ய நியமிக்கப்பட்டவர்?

எம்.டி: மாடம்பு மனை அடுதிரிப்பாடு விசாரணைக் கமிஷன் உறுப்பினர். அவ்வளவே.
12) நான்: எப்போதும் உங்கள் கதைகளையே திரைப்படமாக்கும் நீங்கள் ‘செறு புஞ்சிரி’ படத்தை, தெலுங்கு எழுத்தாளர் ஸ்ரிராமன் எழுதிய ‘மிதுனம்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கியது ஏன்?

அந்தச் சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வயதான தம்பதியர் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் ஆழமான காதலை மென்மையாகச் சொல்லும் கதை. அதுபோல் வேறு மொழிக் கதைகள் கிடைத்தால் மலையாளத் திரைப்படமாக்கத் தடையேதும் இல்லை. யார், எந்த மொழி என்பது முக்கியமில்லை, நல்ல கதை எங்கேயும் எப்போதும் நல்ல கதைதான்.

13) நான்: நீங்களோ ஒரு முற்போக்கு இலக்கியவாதி. ஆனாலும் உங்களின் முக்கியப் படைப்புகளான ‘ரெண்டாம் ஊழம்’ (நாவல்), ‘வைசாலி’ (திரைக்கதை), ‘பெருந்தச்சன்’ (திரைக்கதை) போன்றவற்றில் இதிகாசம் மற்றும் தொன்மத்தின் பாதிப்பு இருக்கிறதே.

ரெண்டாம் ஊழம், வைசாலி இந்த இரண்டுமே மகாபாரதம் என்ற இதிகாசத்தை சற்றே மாறுபட்ட பார்வையில் நோக்கிய படைப்புகள். ரெண்டாம் ஊழம் பீமனின் பார்வையில் மகாபாரதம். வைசாலி மகாபாரதத்தில் ஒரு கிளைக்கதையை தற்கால சூழலுக்குப் பொருத்திப் பார்ப்பது. எக்காலத்திலும் பெண்ணை போகப் பொருளாக உபயோகப்படுத்தி விட்டு காரியம் முடிந்ததும் தூக்கி எறிகிற போக்கை கோடிட்டுக் காட்டிய திரைக்கதை அது. பெருந்தச்சன் கர்ண பரம்பரைக் கதை. தச்சுக் கலைத் திறமையில் சொந்த மகனையே முந்தவிடாத கலா கர்வமும் பொறாமையும் கொண்ட வித்தியாசமான அந்தக் கலைஞன் உருவாக்கியதென்று பன்றியூர் அம்பலத்தில் (கோவில்) இன்றைக்கும் ஒரு பெரிய மண்டபத்தைக் காட்டுகிறார்கள். அந்த வாய்வழிச் செய்திக்கு காட்சி உருவம் கொடுத்தது பெருந்தச்சன் திரைக்கதை. புராணத்தில் நம்பிக்கை வைப்பதற்கும் வைக்காததற்கும் இந்தக் கற்பனை நீட்சிகளுக்கும் தொடர்பு இல்லை.

14) நான்: உங்கள் நாலுகெட்டு, ருதுபேதம் (திரைக்கதை) இரண்டுமே நாயர் சமுதாயம் மரபு சார்ந்த கட்டுக்கோப்பில் இருந்து விலகி பெரும் சமூக மாற்றம் ஏற்பட்ட காலகட்டத்தைச் சித்தரிப்பவை. மருக்கத்தாயம் (மகனுக்கு இல்லாமல் மருமகனுக்குப் பரம்பரை சொத்து உரிமையாவது) ஒழிப்பு, விமோசன சமரம் போன்ற சரித்திர நிகழ்வுகள் ஏற்பட்ட போன நூற்றாண்டில், இந்தப் படைப்புகளில் சித்தரிக்கப்படும் பிரச்சனைகள் நடைமுறை வாழ்க்கையோடு ஒத்திசைந்திருக்கலாம். அவை தற்காலத்துக்குப் பொருத்தமானவை என்று சொல்ல முடியாதல்லவா?

சரிதான். அறுபதுக்களின் சமூகத்தில் அந்தப் பழைய கேரளத் தனிமையை ஆத்மார்த்தமாக அனுபவித்த ஏராளமானவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள் அவை எல்லாம். இப்போதைய தலைமுறைக்கு இது அந்நியமான சங்கதி.

நாலுகெட்டும் எட்டுக் கெட்டும் எல்லாம் இப்போது கேரளத்தில் அபூர்வம். பழைய கட்டிடங்களை இடித்துப் பொளித்து புதுசு புதுசாக ஏதோ கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கூடலூரில் நான் பிறந்த நாலு கெட்டு மனையில் சுற்றுப் பகுதியை இரண்டு புறமும் இடித்துவிட்டு மத்தியப் பகுதியை மட்டும் அப்படியே விட்டுவிட்டு மாற்றியமைத்துக் கட்டிவிட்டார்கள். என்னமோ போல இருக்கிறது. யாரையும் குறை சொல்ல முடியாது. கூட்டுக் குடும்பக் கலாசாரம் இப்போது கேரளத்தில் மட்டுமில்லை. இந்தியா முழுக்கவே மறைந்து வருகிறது. மாறுதல்தானே நியதி?

(நான் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியில் நகரத்தார் சமூக பெரும் இல்லங்கள் இன்னும் அதே பொலிவுடன் இருப்பதைச் சொல்கிறேன். ஓ, அதை எல்லாம் போய்ப் பார்த்திருக்கிறேனே என்கிறார் எம்.டி. தமிழகம் பற்றி அவருக்கு நுணுக்கமாகத் தெரிந்திருக்கிறது. இந்த மண்ணோடு அறுபது வருடப் பழக்கம் இல்லையா!)

15) பழசிராஜா படத்துக்கு கவிஞர் ஒ.என்.வி எழுதிய கானங்கள் உணர்வு பூர்வமான சூழலைப் பிரதிபலிக்கவில்லை என்று இசையமைத்த இளையராஜா சொல்லி இருக்கிறாரே?

எம்.டி:திரைக்கதை ஆசிரியன் என்ற முறையில் படத்தில் எந்தக் காட்சி எப்படி வரவேண்டும் என்றுதான் நான் எழுதுவேனே தவிர பாடல், இசை என்று சகலமானதிலும் தலையிடுவதில்லை. அது திரைக்கதாசிரியருக்கோ வசனகர்த்தாவுக்கோ தேவையில்லாத ஒன்று. எனக்கு ஒ.என்.வி, இளையராஜா இருவர் மேலும் மதிப்பு உண்டு.

16) 1957-ல் மாத்ருபூமி உதவி ஆசிரியராகப் பணி புரிய ஆரம்பித்து, 1999-ல் அந்தப் பத்திரிகை ஆசிரியராக ஓய்வு பெற்றவர் என்ற வகையில் அனுபவம் மிகுந்த பத்திரிகையாளரும் கூட நீங்கள். மலையாள இதழியல் இன்னும் பால பருவத்திலேயே இருப்பதாக எனக்கு ஒரு தோணல்….

இதற்கு சிரிப்பையே பதிலாகத் தருகிறார் எம்.டி. நான் என் கம்ப்யூட்டர் கான்வாஸ் பையில் இருந்து ஒரு மலையாள தினசரியை எடுத்து அதன் நாலாம் பக்கத்தில் ‘குருவாயூரில் குட்டி கொம்பன் மேல் தெங்கு வீணு; கொம்பிளகி’ (குருவாயூரில் குட்டியானை மேல் தேங்காய் விழுந்து கொம்பு முறிவு) செய்தியைப் படிக்கிறேன். சிரிக்கிறார்.

தினசரியை மடக்கி தினசரியின் முதல் பக்கத்து செய்தியைக் காட்டுகிறேன். ‘அடடா, மராட்டி கவிஞர் திலீப் சித்ரே இறந்து போய்ட்டாரா?’ எம்.டி பதற்றத்தோடு பத்திரிகையைக் கையில் வாங்கிப் படிக்கிறார். ‘இங்கிலீஷ் பத்திரிகையிலே கூட வரலியே’ என்று முணுமுணுக்கிறார். ‘தமிழிலும் இதெல்லாம் போட மாட்டாங்க சார்’ என்கிறேன். ‘திலீப் எனக்கு நல்ல நண்பர். அருமையான கவிஞர், எழுத்தாளர், அற்புதமான நண்பர்’.

எம்.டியின் கண்கள் தொலைவில் நோக்குகின்றன. மெல்ல அடுத்த பீடியைக் கட்டில் இருந்து உருவி எடுத்துப் பற்ற வைத்துக் கொள்கிறார். சந்தோஷமோ துக்கமோ அவருக்குத் துணையாக பீடி உண்டு.

17) சார், நீங்கள் கர்னாடக சங்கீதத்தை ரசிக்க மாட்டீர்கள் இல்லையா? இசைமேதை எம்.டி.ராமநாதனைப் பற்றி நீங்கள் சொன்னதாக ஆறேழு மாதம் முன்பு மலையாளப் பத்திரிகையில் வாசித்த நினைவு – ‘எம்.டி.ராமநாதனை ஒரு இசைமேதையாகப் போற்றிப் புகழ்வது ஏன்? அவருக்கும் மற்ற வித்வான்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு பாமரனுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியுமோ?’ என்று கேட்டீர்களாமே? M.D யாரென்று இப்போதாவது M.T-க்கு மனசிலாயோ?

எம்.டி: நான் சொன்னதைத் தப்பாகப் புரிந்து கொண்டு செய்தியாக்கியதின் விளைவு இது. எனக்கு சங்கீதம் பிடிக்காது அல்லது எம்.டி.ராமநாதனைப் பிடிக்காது என்றா சொன்னேன்? அவர் பாடியது அற்புதமான சங்கீதம் என்று இங்கே இசை ரசிகர்கள் – கேரளத்தில் நிறையப் பேர் அவருக்கு விசிறிகள் – சொல்கிறார்களே, அதைக் கேட்கும்போது, எந்த மாதிரி வித்தியாசமானது அவர் சங்கீதம் என்று தெரிந்து கொள்கிற ஆர்வத்தில் தான் கேட்டேன். ஆர்வத்தோடு எதையாவது புரிந்து கொள்ள முயலும்போது அட்டாக் செய்கிறதாக ஏன் நினைக்கணும்? நான் இசை, நடனத்துக்கு விரோதியா என்ன?
(எம்.டி தன் குடும்பம் பற்றிச் சொல்கிறார் – அவர் மனைவி நாட்டியம் பயின்று ஆடி வந்தவர். மகள் மகா கவிஞர் வள்ளத்தோல் நிறுவிய கேரள கலாமண்டலத்தில் நாட்டியம் பயின்று ஆடி வருகிறவர்.   அவர் காதலித்துக் கைபிடித்த தமிழர் ஸ்ரீகாந்த், பத்மா சுப்ரமண்யத்தின் நாட்டியக்குழுவில் முதன்மையான ஆட்டக் கலைஞர்)

18) உங்களுக்கு கோழிக்கோடு பல்கலைக் கழகம் 1996-ல் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது. 2005-ல் மத்திய அரசின் பத்மபூஷன் விருதும் பெற்றவர் நீங்கள். ஆனாலும் எந்தப் பட்டத்தையும் பெயருக்கு முன்னால் போடாமல் எப்போதும் வெறும் ‘எம்.டி’யாகவே இருக்கிறீர்களே?

விருதுகள் பற்றிச் சொன்ன பதில் தான் இதுக்கும்.
(சிரிக்கிறார். அடுத்த பீடி கட்டில் இருந்து விடுபடுகிறது)

19) பிரபல ஓவியர் எம்.வி.தேவன் கலாகௌமுதி பத்திரிகையில் உங்களைப் பற்றி பேட்டியில் அவமரியாதையாகச் சொல்லியிருந்ததற்காக அவர் மேல் வழக்கு தொடர்ந்தீர்களே. 2002-ல் தானே அது?

எம்.டி (சிரித்தபடி): நேற்று தான் தேவனோடு தொலைபேசிக் கொண்டிருந்தேன்.
20) எம்.டி கூடலூர் ஸ்வதேசி அல்லே. வள்ளுவநாட்டில் ஜனிச்சு நிளாநதியில் குளிச்சொருங்கி கொடிக்குன்னு பகவதியெ தொழுது குமாரநல்லூர் ஸ்கூலிலேக்கு நடக்கும் குட்டி கால ஜீவிதம் திரிச்சு கிட்டியால் சார் அது ஆஸ்வதிக்குமோ?

(நீங்க கூடலூர்காரர் இல்லே? வள்ளுவநாடு பிரதேசத்தில் பிறந்து பாரதப்புழையில் குளித்து, கொடிக்குன்னு பகவதி கோவிலில் தொழுது, குமாரநல்லூர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தப் பருவம் உங்களுக்குத் திரும்பவும் கிடைத்தால்?)

இது ஒரு ஹைபாதெட்டிகல் கேள்வி ஆச்சே. அந்தக் காலம் போனது போனதுதான். இனி ஒரிக்கலும் திரிச்சு வரான் போகுன்னில்ல.

21) முடிக்கும் முன்னால் ஒரு சம்பிரதாயமான கேள்வி. தமிழ் இலக்கியத்தை மலையாள மண்ணில் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள்?

தமிழ் வாசகர்களுக்குத் தமிழ் எழுத்தாளர்களைத் தெரிந்த அளவுக்கு மலையாள இலக்கிய ரசிகர்களுக்குத் தமிழ்ப் படைப்புகள் பரிச்சயம் உண்டு என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

(ஒரு பீடி புகைத்தபடி நானும் அதேபடி தமிழ் இலக்கிய அன்பர்களுக்கு உள்ள மலையாள இலக்கியப் பரிச்சயம் பற்றிச் சொல்வதாகக் கற்பனை செய்தபடி விடைபெறுகிறேன். எம்.டியின் சிரிப்பும் பீடிப் புகையும் வாசல் வரை வந்து வழி அனுப்புகின்றன).

December 11, 2009

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன