மிளகு – பெரும் நாவல் மதிப்புரை – திரு.சரவணன் மாணிக்கவாசகம்

மிளகு – இரா.முருகன்:

இரா.முருகன் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்தவர். வெளிநாட்டில் வசித்தவர். 1977ல் கணையாழியில் ஆரம்பித்த இலக்கியப் பயணம் ஐம்பதாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முப்பதுக்கும் மேல் நூல்கள், புனைவின் எல்லா வகைமைகளிலும் எழுதியவர். எல்லாவற்றுக்கும் மேல் முகமில்லாதவரையும் சமமாக நடத்தும் அந்த Humbleness தமிழில் ரொம்ப அரிதான சரக்கு.

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் மிர்ஜான் கோட்டையில் சென்னபைராதேவியின் அறுபதாமாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ஆரம்பிக்கும் நாவல், இருபதாம் நூற்றாண்டிற்கு ஒரே தாவலாகத் தாவி, கடவுள் தேசத்தின் அம்பலப்புழையில், அகல்யாவின் சிரார்த்தஉணவில் மிளகு சேர்க்காமல், மிளகாய் போட்டதன் சிறிய தகராறைக் கடந்து, லண்டனுக்குப் பயணமாகிறது. 1189 பக்கங்கள் கொண்ட பெருநாவல் இது.

இரண்டு காலகட்டங்களில் நான்கைந்து கிளைச்சாலைகளில் நடக்கும் கதை இது. சென்னபைராதேவி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்டது வரலாறு, போர்த்துகீசியர் மிளகு வியாபாரம் செய்தது, கந்தஹாருக்கு இந்திய விமானம் பயணிகளுடன் கடத்தி செல்லப்பட்டு, தீவிரவாதிகளை விடுவித்துப் பயணிகளை மீட்டது என்பதெல்லாமே வரலாறு. எனவே சரித்திரச் சட்டகத்திற்குள் கச்சிதமாக புனைவை நுழைத்திருக்கிறார் இரா.முருகன்.

ராணி சமண மதத்தைப் பின்பற்றினாலும், சைவ, வைணவக் கோவில்களுக்கு ஆதரவு அளித்தது உண்மை. கர்நாடகா, ஒரிஸ்ஸா போன்ற பகுதிகளில் சமணமும், பௌத்தமும் பின்பற்றப்பட்ட போதும் கூட இந்து தெய்வ வழிபாடுகள் நிற்கவில்லை. சமணம் தேய்கின்ற காலகட்டம் இது. திகம்பரர்கள் பிறக்கும் போதிருந்த உடைகளுடன் அலைகிறார்கள். சமண குருக்கள் வந்து பிராத்தனை செய்தால் மழை பெய்யும், போரில் வெல்லலாம் என்று ராணிகள் தீர்க்கமாக நம்புகிறார்கள்.
மொழிநடை இந்த நாவலின் சுவாரசியங்களில் ஒன்று. நானூறு வருடங்கள் இடைவெளியில் கதைகள் தொடர்ந்து நடப்பதால் அந்தந்த காலங்களுக்கான மொழியை உபயோகிக்க வேண்டியதாகிறது. அதிகம் மெனக்கெடாமல் எளிதாக அதைச் செய்திருக்கிறார் இரா.முருகன். நானூறு வருடங்கள் முன்பின் நகர்கையில், ஹரிதாஸில் பாகவதர், ராஜகுமாரியைக் காதல் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது சூரியா இடையே வந்து ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் என்று சொன்னால் வரும் அதிர்ச்சி, வாசகர்களுக்கு வந்து பின் அதுவும் நூறுபக்கங்களுக்குள் பழகிவிடுகிறது.

மாயயதார்த்தத்தைத் தன்னுடைய கதைகளில் அதிகம் பயன்படுத்தியவர் இரா.முருகன். இதில் ஒரு மாறுதலுக்கு Fantasy. காலத்தில் தொலைந்து நானூறு வருடங்கள் முன் சென்று, நாற்பது வருடங்கள் கழித்து நிகழ்காலத்திற்கு நூற்றுப்பத்து வயதில் திரும்பும் முதியவர். நானூறு வருடங்களுக்கு முன்னான பாட்டிகளின், பாட்டிகளின், பாட்டிகளைக் காதலித்துத் திரும்பிய பாக்கியவான். மாயயதார்த்தம் தன் பங்கிற்கு ராட்சஷக் கொடியாய் வீட்டைச் சுற்றி வளரும் பேய்மிளகு, ஆவிகள் நேமிநாதனுடன் பேசுவது என்பது போல் இடையில் கலக்கின்றன.

சிருங்காரமும், மிளகும் நாவல் முழுவதும் விரவி இருக்கின்றன. இவரது ஒவ்வொரு அடுத்த நாவலுக்கும் சிருங்காரம் கூடுவதாகத் தோன்றுவது என்னுடைய பிரமையாகக்கூட இருக்கலாம். ராமோஜியத்தில் ரத்னாபாயின் ஒருமுனைத் தாக்குதலில் இருந்து இதில் பன்முனைத் தாக்குதல். மிளகு, கதையின் உயிர்நாடி. நானூறு வருடங்கள் முன்பு கப்பலில் நடத்திய வர்த்தகம் முதல், மிளகு Option வரைக் கதையில் வருகிறது. மிளகு வர்த்தகத்தை உலகமெங்கும் நடத்திய, ஐம்பத்து நான்கு ஆண்டுகள் அரசாண்ட, கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ராணியை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் மிளகுராணியாக. பெண்கள் வரலாற்றில் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் ஜான்சி ராணி போல் குழந்தையைக் கட்டிக்கொண்டு போருக்கு செல்லவேண்டும்.

மிர்ஜான் கோட்டை வரலாற்று சாட்சியாக இன்னும் இருந்துகொண்டு இருக்கிறது.

சமணம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. சமணம், பௌத்தத்தை அழித்த சைவத்தால் அதற்குப் பின் வந்த இரண்டு மதங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லாக் காலங்களிலும் உடன்இருந்து கொல்லும் வியாதி போல், மண்ணாசை கொண்டு ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டு அடுத்தவர்களை உள்ளே நுழையவிட்ட வரலாறு இந்த நாவலிலும் தொடர்கிறது. முந்தைய நாவல் ராமோஜியத்தைப் போலவே இதிலும் ஏராளமான தகவல்கள். கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு பக்கங்கள் கொண்ட நாவலில் கொச்சு பகவதியைப் பற்றி கொஞ்சமே தெரிந்துகொண்ட மனக்கிடக்கையுடன் நாவலை முடிப்பவர்கள் அச்சுதம் கேசவம் வாசிக்கவும்.

#நாவல்கள்
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் 89250 61999
முதல்பதிப்பு பிப்ரவரி 2022
விலை ரூ.1400.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன