பெரு நாவல் – Venkatappa makes a strategic move without Neminathan’s knowledge, showing him in his true colours

A longish extract from my forthcoming novel MILAGU

மிளகு  அத்தியாயம் எழுபத்தொன்பது                 1606 மிர்ஜான் கோட்டை

விடியற்காலையில் ஜெருஸூப்பாவின் சென்னபைராதேவி மிளகு ராணியின் படை எதிரணியான நேமிநாதனின் படைகளிடம் தோல்வி அடைந்ததை அறிவித்தது.

மிர்ஜான் கோட்டை உள்ளே இருந்து வெள்ளைக் குதிரை மேல் வெள்ளைக்கொடி பிடித்து மூன்று அரசு தரப்பு படையினர் எதிரணியின் தாவளத்துக்குப் போனபோது அந்த அணியின் வீரர்கள் ஒரே குரலில் ஜெய்ஹோ என்று முழங்கினார்கள்.

போர் முடிந்தது என்று தோல்வியை சென்னபைரதேவி ஏற்றுக்கொண்ட கடிதம் நேமிநாதனுக்கும், அந்தப் போர் நிறுத்தத்தை அங்கீகரித்ததாக நேமிநாதன் சம்மதித்ததை அறிவிக்கும் அவனுடைய பதில் லிகிதம் சென்னா ராணிக்கும் அளிக்கப்பட்டன.

மிர்ஜான் கோட்டை உள்ளே அரசு அணியினர் தோல்வியால் முகம் கருத்து, அவமானம் முகத்தில் அடையாக ஒட்டியிருக்க விதிர்விதிர்த்து,  கோட்டை மதிலை ஒட்டி வரிசையேதும் இல்லாது நின்றனர்.

கோட்டை அரச மாளிகைக் கதவுகளும், சாளரங்களும் உள்ளே இருந்து சாத்தப்பட்டிருந்தன. மணி சொல்லும் முரசறைதலும் இல்லை.

கோட்டைக்கு வெளியே எதிரணி கூடாரங்களில் காவல் மிகுந்த ஒன்றில் கேலடி பேரரசர் வெங்கடபதி நாயக்கரும், பிலகி அரசர் திம்மராஜுவும், நேமிநாதனும் ஆலோசனையில் மூழ்கி இருந்தனர்.

நேமிநாதனுக்கு சுருக்கமாக வாழ்த்து சொன்னார் கேலடி அரசர் வெங்கடபதி நாயக்கர். உப்புசம் பாரித்த வயிறு இன்னும் சரியாகவில்லையோ என்னமோ, பில்கி அரசர் திம்மராஜு முகத்தில் வேதனை தெரிய அமர்ந்திருந்தார்.

மாமா, உங்க படை கடைசி ஈடு இருநூறு பேர் முந்தாநாளே கிளம்பிட்டாங்கன்னு சொன்னீங்களே. அவங்களுக்கு இன்னும் வேலை இருக்கா என்று நேமிநாதன் சிரித்தபடி கேலடி அரசரைக் கேட்டான்.

அவங்க வந்தாச்சு என்றார் நாயக்கர் அமர்த்தலாக.

நேரே கோட்டைக்குள்ளே போய்ட்டாங்களா மாமனாரே என்று பிலகி அரசர் வினவினார்.

உன் கொட்டைக்குள்ளே போயிட்டாங்க. நம்ம கண்ணுலே படாம எப்படி மாப்ளே கோட்டைக்குள்ளே போக முடியும் என்றார் வெங்கடபதி நாயக்கர்.

அவங்க வந்து சேர்ந்தது ஜெருஸூப்பாவிலே. நான் கடைசி நிமிஷத்துலே போர்த் தந்திரத்தை கொஞ்சம் மாற்றி விட்டிருக்கேன்.

பூடகமாக சிரித்தபடி நேமிநாதனை உற்று நோக்கினார் அவர்.

நேமிநாதனுக்கு அவர் தன்னிச்சையாக படை நடமாட்டத்தை மாற்றியது தவறு என்று பலமாகத் தோன்றியது. அவர்கள் கேலடி படையினர் தான். ஆனால் இந்த யுத்தத்தில் பங்கெடுக்கும்போது ஒரே பெயர் தான். நேமநாதன் அணி. அப்படி இருக்க அவனுக்கு தெரியாமல் எப்படி கேலடிப் படை ஜெருஸுப்பா போவது?

என் தந்திரம் ரொம்ப சிக்கலானது எல்லாம் இல்லே. நீ சின்னப் பையன். மிட்டாய் தின்பே. மிட்டாய்க்காரி  பிருஷ்டத்தை தடவுவே. இதைத் தவிர போரும், ஓய்வும், போர்க்கால நடவடிக்கையும் நான் வழி நடத்தறேன். பார்த்து கத்துக்கோ.

அவர் மெல்லிய குரலில் அழுத்தமாகச் சொல்ல நேமிநாதன் முகத்தில் சிரிப்பு உறைந்தது.

மாமா இது நல்லா இல்லே சொல்றேன். உங்க சொல் கேட்டு எதுவும் தவறாமே ஜெயிச்சு வந்திருக்கேன். இனிமே என் ஆட்சியை என்னை செய்ய விடுங்க. உங்க ஆட்சியை நீங்க பண்ணுங்க. படை நடத்தி வந்ததுக்கு நன்றி.

அட அப்படி நன்றி சொல்லிட்டு குண்டியிலே மண்ணைத் தட்டி விட்டுக்கிட்டு போயிடறதுக்கா நீ கூப்பிட்டதும் ஏதோ சின்னப் பையன் கூப்பிடறான்னு உதாசீனப்படுத்தாம வந்தேன். சொல்லு.

நாயக்கர் கேட்டபடி உட்கார்ந்திருந்தார்.

அது என்ன மாமனாரே, அஞ்சு நிமிஷத்துலே  ரெண்டு பிருஷ்டம் வந்துடுச்சு. ஒண்ணும் விசேஷமில்லையே என்று கேட்டபடி பிலகி திம்மராஜு கேட்டபடி வயிற்றைத் தடவியபடி எழுந்து கூடாரத்தின் நடுவில் நாட்டியிருந்த தாங்குகம்பமான மூங்கில் கழியில் சாய்ந்தபடி   ஒலியும், வாடையுமாக அபானவாயு வெளியிட்டார்.

நேமிநாதன் முகத்துக்கு நேரே அவர் பின்புறம் ஒரு வினாடி உரசிப் போக அவன் தர்மசங்கடமாகப் பார்த்தான்.

இவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து உதவிக்கு வரச் சொன்னவன் நேமிதான். வந்த பிறகு தான் யுத்தம் ஒரு ஒழுங்குக்கு வந்து ஜெயிக்க முடிந்தது. அதற்காக ஜன்மம் முழுவதும் தோலை செருப்பாகத் தைத்துப் போடுவேன் என்றெல்லாம் அடிபணிந்து நன்றி சொல்ல மாட்டான் நேமி.

யப்பா நேமி, இங்கே வந்து உட்கார். திம்மன் அடுத்து போடறதிலே கம்பம்,  கழி, கூடாரத்துணி எல்லாம் சுருண்டு விழ  போவுது. அதுக்குள்ளே நான் என்ன பண்ணியிருக்கேன்னு சொல்லிடறேன். கெலடி அரசர் சொன்னார்.

pic council meet

ack wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன