பெரு நாவல் ‘மிளகு’ – Thus went the deliberations of the Gerusoppa Administrative Council

An excerpt from my forthcoming novel MILAGU

குதிரை லாயம் முழுக்க கொள்ளு வாடையும் பன்னீர் வாடையும் சேர்ந்து மணத்தது. பின்னால் இருந்து கோட்டை உத்தியோகஸ்தர் ஒருவர் ஆடம்பரமில்லாத நாற்காலியைக் கொண்டு வந்து போட, சென்னா மகாராணி அமர்ந்தாள்.

“நான் எப்போதும் இந்த கூட்டத்தை நின்று கொண்டு தான் விளித்துப் பேசுவேன். இப்போது அமர்ந்திருந்து பேச உங்கள் அனுமதி கேட்கிறேன். கிடந்து பேசும் நாள் வந்தால் நான்.

பாதி சொல்லில் நிறுத்தி கூட்டத்தைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்தாள் மகாராணி. வகுளாபரணனுக்கு இந்த நாடகத்தன்மை பிடிக்கவில்லை தான். வெளியே சொல்வது மரியாதை இல்லையென்று சும்மா இருந்தான் அவன்.

பேராயம் அமைதியாக நின்றது. நஞ்சுண்டையா பிரதானி இருகையும் தலைக்கு மேல் கூப்பி அகவும் குரலில் சொன்னார் – அப்படி விதிக்கப்பட்டிருந்தால் மகாராணிக்கான விதிப்பை என் கணக்கில் சேர்த்துக் கொண்டு அவர்களை நூறாண்டு செயலோடு இருக்க மல்லிகார்ஜுன சுவாமியைப் பிரார்த்திக்கிறேன். ஜெயவிஜயீ பவ. மிளகுராணி வாழ்க.

இருமலுக்கு இடையே குரல் உயர்த்தினார் நஞ்சுண்டையா. மற்ற பேரவையினரும் கூடவே முழக்கினார்கள். சென்னா முகத்தில் சற்றே ஓடி மறைந்தது புன்னகை ஒன்று. முழு நாடகீயமாக இது நடக்கப் போகிறதா?

நஞ்சுண்டரே உமக்குப் பேராசை என்று சொல்வேன். நூறாண்டு இருக்க என்னை ஏன் சபித்தீர்? அறுபத்தேழு நடந்துகொண்டிருக்கிறது. சுமையோடு பயணம் போகிற வழிப்போக்கனாக என்னை உணர்கிறேன்.

நான் பயணி. வீடில்லை தங்குமிடம் இல்லை. நகர்ந்து போய்க் கொண்டிருக்க விதிக்கப்பட்ட பயணி நான் என்று தில்லி முகல் ஏ ஆஸம் அக்பர் சக்ரவர்த்தியின் தர்பாரில் அரங்கேறிப் புகழ்பெற்று இந்துஸ்தானம் எங்கும் பரவிய  மெல்லிசை கானத்தின் வரிகளைச் சொன்னாள் ராணி.

பறவைகள் சரணாலயத்தில்/மூத்த புறாவுக்கு முதல் இடம்/களைப்பு நீங்க இறகு கொண்டு/காலமெல்லாம் விசிறுவோம்/சற்றே ஓய்வெடுக்கட்டும்

வகுளாபரணன் குரல் எடுத்துப் பாட்டாகச் சொன்னான். கவிதை அரங்கேறும்போது ஒன்றிரண்டு முறை அதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடமிருந்து வாஹ் வாஹ் என்று பாராட்டு எழுவது வாடிக்கை. வகுளாபரணன் கவிதைக்கு மௌனத்தை பரிசாக எல்லாரும் அளித்தார்கள். ஒரு நிமிடம் மௌனத்துக்குப் பிறகு ஒற்றைக் குரல் வாஹ் வாஹ் என்று பாராட்டி மெல்ல எழுந்தது. சென்னபைரதேவி மகாராணி குரல்.

அம்மா இந்த அவையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது. எனக்குத் தோன்றுவது நீங்கள் சற்று ஓய்வெடுக்க வேண்டும். பயணம் கொஞ்சம் எளிதாக, சிரமமின்றி அமைய சுமையைப் பகுதியாவது கைமாற்ற வேண்டும்.

மாட்டுவண்டிக் காளையை அசைத்துக் கிளப்பும் தார்க்குச்சி மேலே விழுந்த புலி போல் கண்கள் ஜ்வலிக்க சட்டென்று பார்வையை முழுக்க வகுளாபரணன் மேல் பதித்து என்ன சொல்கிறாய் என்று கேட்பதாக உற்று நோக்கி,  வீறுகொண்டு நாற்காலியில் வீற்றிருந்தாள் சென்ன பைரதேவி.

அம்மா மீண்டும் சொல்கிறேன், நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதைப் பற்றிச் சர்ச்சை செய்யத்தான் இந்தப் பேராயம் கூட்டப்பட்டிருக்கிறது. மற்ற பேராயக் கூட்டங்கள் போல் தாங்கள் எங்களை வரச்சொல்லி கூட்டவில்லை. நாங்கள் உங்களை ஒரு தாயைக் குழந்தைகள் கூப்பிடுவதுபோல் உரிமையோடு கூப்பிட்டிருக்கிறோம்.  உங்கள் நலமும், ஜெரஸோப்பா மாநில நலமும் நம் எல்லோருக்கும் பிரதானமான விஷயங்கள். அவற்றைப் பற்றி ஏனோதானோ என்று இருக்க முடியாது என்பதை யாரும் மறுக்க இயலாது.

வகுளன் ஒரு வினாடி நிறுத்தி விட்டு சென்னாவைப் பார்த்தான். மேலே போ என்கிறது போல் கண்ணால் சைகை செய்தாள் அவள். தலையசைத்து வணங்கி அவன் மேலே பேசலானான் – இந்தக் கூட்டம் சிக்கலான, இடர் மிகுந்த ஒரு காலத்தில் நடக்கிற ஒன்று. போன வாரம் மகாராணியின் உயிருக்கே ஆபத்து நேர இருந்தது. யாரால் அனுப்பப்பட்டவள் என்றே தெரியாத ஒரு பெண் குறுவாளால் மகாராணியைக் கொல்ல முற்பட்டாள். விசுவாசமான ஊழியை தாதி மிங்கு தன்னுயிர் கொடுத்து அரசியார் உயிர் காப்பாற்றினாள்.

அவன் சொல்லும்போது எல்லோர் பார்வையும் வைத்தியர் மேல். தலை குனிந்து வெறித்துப் பார்த்துக் கொண்டு அங்கே நின்றதோ வைத்தியரின் சோகையான நிழல்.

Pic Royal Court

Ack en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன