பெருநாவல் மிளகு – With dreams of Portugal leading the generation of electromagnetic power, the game changer for the next few centuries

நேமிநாதன் தனக்குப் பரிமாறப்பட்ட அக்காரவடிசல், இட்டலிகள், குழாய்ப் புட்டு, கடலை என்னும் விஸ்தாரமான காலை ஆகாரத்தைப் பார்த்தபடி ஒரு வினாடி இருந்து பின் சொன்னான் –

மகாராஜா தயை செய்து என்னை ஒருமையில் நீ என்றே அழைக்க வேண்டுகிறேன். தாங்கள் என் அன்னை சென்னபைரதேவி மகாராணிக்கும் தகப்பன் போல். ஒருமையில் அவரையே அழைக்கும்போது நேமிநாதனை அவனுடைய அப்பா வயசு அப்பாவின் சிநேகிதர் அப்படிக் கூப்பிடக்கூடாதா என்று கேட்டான் நேமிநாதன்.

நாயக்கர் ஒருமையிலா, அல்லது முழு மரியாதையோடு பன்மையிலா அதுவும் அன்றி அரை மரியாதையோடு நீர் எனவா விளிப்பதில் இந்தப் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக நடந்தேறுவது இருக்கும் என்று நேமிநாதன் திடமாக நம்பியதாகத் தெரிந்தது.

சரி நீ என்றே சந்தோஷமாக விளிக்கிறேன் உம்மை, உன்னை. உன் அப்பாவின் சிநேகிதன். அவன் போல உரிமை எடுத்துக்கொண்டு என் அபிப்பிராயங்களைச் சொல்வதில் தவறு ஏதுமில்லையே, ஏய் யாரது இந்தப் பையனுக்கு இன்னும் கொஞ்சம் புட்டும் கடலையும் வை.

நீங்கள் ஆகக் குறைவாக உண்கிறீர்களே மாமா என்று சொல்லி நிறுத்தி அவரைப் பார்த்தான் நேமிநாதன்.

அதுவும் சரிதான், நான் சென்னாவின் சகோதரன். எது எப்படியோ என் கவிதைகளை படிக்கும், வாசித்து வெளிப்படையாக ரசிக்கும் எல்லோரும் என் அத்யந்த நண்பர்கள் தாம். சென்னா என் கவிதா லோகத்தில் லயிக்கும் சோதர ஜீவன். மருமகனே, மாமா என்றே அழை என்னை. சொல்லு. வர்த்தமானம் என்னவாக்கும்?

வந்து மாமா, நேமிநாதன் தயங்கித் தயங்கித் தொடங்கினான்.

மென்று முழுங்கணும் என்றால் புட்டையும் கடலையையும் மெல்லு. தேங்காய் சேர்த்து ருஜியாக வேகவைத்தது. உண்டபிறகோ அல்லது உண்ட படிக்கோ எனக்கு கார்டெல் என்ற போர்த்துகீசிய நிதிக்குழு பற்றிச் சொல்லு.

தடாரென்று விஷயத்துக்கு வந்து விட்டார் வெங்கடப்ப நாயக்கர்.

மாமா, கை அலம்பி வந்து சொல்லட்டா, எச்சில் கையோடு பேசினால் கை உலர்ந்து அதிர்ஷ்டம் எல்லாம் இறங்கிப் போய்விடும் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நேமிநாதன் எழுந்து வெளியே போய்க் கை அலம்பி வந்தான்.  ஒரு பாத்திரத்தில் சுத்த நீரில் எலுமிச்சை துண்டு போட்டு கையில் எடுத்துக்கொண்டு ஒரு சிப்பந்திப் பையன் நாயக்கரிடம் நீட்ட, அவர் அந்தக் கிண்ணத்தில் கை முக்கி அலம்பி, எலுமிச்சை துண்டால் உதடு துடைத்தபடி, என்ன கை கழுவி வந்தியா? கொஞ்சம் பொறுத்திருந்தால் தண்ணீரே இப்படி உன்னைத் தேடி வந்திருக்கும் என்றார்.

போகுது மாமா என்றபடி கார்டெல் பற்றி வாஸ்கொ ட காமா காலத்து கார்டெல் நடவடிக்கையில் தொடங்கிச் சொன்னான் நேமிநாதன்.

ஆக, அவங்க நா செல்லி சென்னபைராளை இறக்கிட்டு உன்னை ராஜாவாக்கினா, அவங்க கொறைச்ச விலைக்கு மிளகு இங்கே வாங்கிப்போய் வக்கணையா ஐரோப்பாவிலே லாபம் பார்ப்பாங்க. அதானே?

ரொம்ப எளிமையா சொன்னா அதுதான். அது மேலே இருக்கற எளிமை இது. தொழில் சிறக்க நடவடிக்கை எடுத்தல், படிக்க கலாசாலை ஏற்படுத்தறது, லிஸ்பன்லே போய் வேலை  வாய்ப்பு இப்படி நிறைய நன்மை வரும் மாமா. மெல்லச் சொன்னான் நேமிநாதன்.

அது என்ன மேன்மை நன்மை வரும் இப்படி கார்டெல் நிழல் அரசாங்கம் ஏற்படுத்தினா? சென்னாவாவது ஜெரஸோப்பா, ஹொன்னாவர், கோகர்ணம் இப்படி ஒரு நிலப்பகுதிக்கு ராணியா இருக்கா. நீ பார்க்கக் கிடைக்கறது கார்டெல் நிதிக்குழு வெள்ளைக்காரன் குண்டியைத்தான். டர்ர்ர்னு குசு விட்டா ஆஹா என்ன வாசனை என்ன வாசனைன்னு மெய்மறந்து நிப்பே. பாரு நீதான் என்னை ஒருமையிலே கூப்பிட்டு உங்கப்பா மாதிரி வெள்ளையா பேசச் சொன்னே.

பேசுங்க மாமா நான் வேணாம்னு சொல்லலியே.

அப்ப கேளு. மிளகு விலை மிளகு விதைப்பு மிளகு அறுவடை, மிளகு பயிர் பாதுகாப்பு இப்படி ஒரு நாடே மிளகு மேலே மட்டும்  முழு ஈடுபாடு வச்சு நடந்தா, மிச்ச தானியம், காய்கறி, ஆடு, மாடு, கோழி பற்றி எல்லாம் யார் கவலைப்படுவாங்க? நீயும் மிளகு ராஜாதான். கோழி ராஜா ஆட்டு ராஜா பச்சரிசி ராஜா இல்லே. ஆக அதெல்லாம் கவனிக்காம விட்டா நாட்டுலே மிளகு விற்று காசு குவியும்.  காசு கொடுத்து வாங்க அரிசியும் கோதுமையும் புளியும் கிடைக்காது. வேணுமா அது நமக்கு?

நேமிநாதன் நாயக்கரையே பார்த்தபடி இருந்தான்.

அப்புறம் என்ன சொல்றே? நாட்டில் போர்த்துகீஸ்காரன் மூலம் தான் தொழில் அதிகரிக்கும். அப்படியா? என்ன செய்யப்போறே? என்ன செய்யப் போறீங்க?

வயல்லே தண்ணி இரைக்க விசை, விளக்கு வீட்டிலும் தெருவிலும் எரிய விசை, வண்டி இன்னும் வேகமாக போக விசை. நேமிநாதன் கனவுகள் கண்ணில் தெரிய மந்திரம் போல் உச்சரித்தான்.

விசை விசை விசை. எங்கே இருக்கு விசை? லிஸ்பன்லேயே ஒரு தத்துவமா, கோட்பாடாக தான் இந்த விசை வச்சு சக்தி ஏற்படுத்தி உலகத்தை அதைக் கொண்டு இயக்கறதைப் பத்தி பரபரப்பா பேசறாங்க. கடந்த இருபது வருஷமா அதே பேச்சுதான். இன்னும் இருபத்தைந்து வருஷம் அதேதான் பேசுவாங்க. சக்தி உருவாக்கறது இப்போது இல்லே. வந்தாலும் அய்ரோப்பா தான் அதை முதல்லே பயன்படுத்தும். இங்கே அது வருமோ வராதோ.

pic before the advent of electricity

pic ack theguardian.co.uk

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன