பெருநாவல் மிளகு – Temples, tombs and loquacious spirits of Keladi

நேமிநாதன் மேடை வைத்த லிங்கத்தை வணங்கினான். இந்த மேடை எதற்கு?  அவன் யோசிக்கத் தொடங்கும் முன் இரண்டு பேரில் ஒருத்தனான ஆவிரூபத்தான் வணங்கிச் சொன்னது –

”கெலடி நகர் ஸ்தாபித்தபோது நாங்கள் சவுட கவுடர்,  பத்ர கவுடர் சீமான்களுக்காக மாடு மேய்த்து வந்தோம். அந்தப் பசுக்கள் எறும்புப் புற்றில் பால் சொரிந்த போது எஜமானர்களிடம் ஓடி வந்து சொன்னோம். அவர்கள் முதலில் எங்கள் வாயில் சொற்களைப் போட்டார்கள். புற்றை அகழ, சிவலிங்கம் தோன்றியதாகச் சொல்லச் சொன்னார்கள்.  அந்த சிவலிங்கம் தான் நீங்கள் வழிபட்டது. பின்னால் இருக்கும் மேடைதான் எறும்புப் புற்று இருந்த இடம்”.   ஆவியோன் ஒரு வினாடி மௌனத்துக்கு அப்புறம் கூறினான்.

அவர்கள் இருவரும் மிதக்க, சாரட்டும் குதிரை வீரர்களும் கெலடி வெங்கடப்ப நாயக்கரின் அரண்மனைக்குச் செல்லும் பாதையில் திரும்பியானது.

மிகுந்த  சுத்தம் கொண்டதும், நன்கு பராமரிக்கப்படுவதுமான அந்தப் பாதை அரண்மனைக்குச் செல்லும் தகுதி வாய்ந்து, சிறப்பு இலச்சினை பெற்ற அரசியல், இதர துறை பிரமுகர்களுக்கானது. நேமிநாதன் அரசியல் பெரும் பிரமுகராகச் சுட்டப்பட்டு அதிவேகமாக இப்பாதையில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சாரட் அரண்மனை வளாக வெளி வாசலுக்கு முன் நிற்க, நேமிநாதன் இறங்கினான். மரியாதையோடு அவனுக்குத் தலை வணங்கினர் அங்கே இருந்த காவலர்கள். அது குறைவு படாமல் மெய்யிலும் உடுப்பிலும் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை என்று சோதிக்கப்பட்டு உள்ளே இரண்டாம் வாசலுக்கு தலைவாசல் வழியாகப் போகக் கோரப்பட்டான்.

”எங்களைப் போல் மாடு மேய்த்து, கன்றுகாலி பராமரித்து, வயலில் விதைப்பு முதல் அறுவடை வரை உழைத்த இனம் தான் இப்போதைய மன்னன் வெங்கடப்பனும். அவன் மூதாதையர் சௌட, பத்ர கவுடர்களும். எங்களைப் பலி கொடுத்து புதையல் அகழ்ந்து மேலினமானார்கள் அவர்கள். முதலில் எங்கள் வாயில் வார்த்தைகளைப் போட்டார்கள். அதன்பின் எங்கள் கழுத்தில் வாளைச் செலுத்த எங்களையே வேண்டிக் கொண்டார்கள். எங்கள் உயிரை உடலில் இருந்து நீக்கினார்கள். கேளும் நேமிநாதரே, இது தகுமா?” நிறையப் பேசும் ஆவியோன் வெஞ்சினம் உரைக்க மற்றவன் கண்ணீர் உகுத்தான்.

நேமிநாதனுக்கு   சூரியன் வெளிச்சப்பட்டிருக்கும் பகலில் இப்படி ஆவியும் பூதமும் தன்னை ஏன் பிடித்துக் கொண்டு, தன்னோடு கெலடிக்குள் மிதந்து, பேசுவது பாதி புரிந்தும் மீதி அர்த்த சூனியமாகவும் இருக்கக் கூடவே ஓடி வரவேண்டும் என்று புரியவில்லை.

“ஐயா, அரண்மனைக்குள் அரசரை சந்திக்கப் போகிறேன். நீங்கள் வேறு சலசலவென்று என்னைச் சுற்றி வந்து என் செவியில் விடாது பேசிக்கொண்டிருந்தால் நான் வந்த காரியம் எப்படி நடக்கும்?”

சற்று கோபத்துடன் நேமிநாதன் இதைச் சொல்லும்போது குரலில் கண்டிப்பு ஏறியிருப்பது தெரிந்தது. அப்போது ஆவியோன் ஒருத்தன் நைச்சியமாகச் சொன்னது –

“எங்களுக்கு அரண்மனைக்குள் போயோ, அரசன் வெங்கடபதி நாயக்கரைப் பார்த்து வணங்கியோ ஒரு காரியமும் ஆக வேண்டியதில்லை. உம்மோடு நீர் கெலடியில் இருக்கும் போது கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போவதே உத்தேசம்”.

“அது ஏன் என்னிடம் மட்டும் பேசணும்? ஆயிரம் பேர் இந்தக் கதவுகள் வழியே கெலடி நகரத்துக்கு உள்ளும் வெளியும் சென்றுகொண்டிருக்கிறார்களே. அவர்களில் வேறு யாரையாவது கூப்பிட்டுச் சொல்லலாமே?”

“ஆனால் அவர்கள் விரைவில் மெய்யாகக் கூடிய அரசராகும் கனவுகளோடும் ஆசைகளோடும் கெலடி வரவில்லை. கவுடர்கள் போல் அரசாள அடங்காத ஆசை உமக்கு. அரசனாக வாய்ப்பு அநேகம். அரசனாகும்போது எங்களுக்கும் கடைத்தேற வாய்ப்பு கிடைக்க உம் உதவி வேண்டும். எங்களை ஒரு நிமிடம் நினைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தால்  செய்வீரா?” காளி கேட்டான்.

நேமிநாதன் மௌனமாக அவர்களிடம் சொன்னான் –

“அப்படியென்றால் நான் திரும்பும்போது பேசுங்கள்”.

அவன் சாரட் குதிரை வீரர்களுக்கு வழிவிட அந்த இரண்டு வீரர்களும் முன்னால் போய் கபாடங்களுக்கு முன் மணி ஒலித்துக் காத்திருந்தனர். திட்டிவாசல் திறக்க தலையை மட்டும் நீட்டிப் பார்த்த அலுவலகர் நேமிநாதனைப் பார்த்து தலையசைத்து வணங்கி அவன் முன்னால் கதவு அருகே வரமுடியுமா எனக் கேட்டான்.

நடக்க வேணும் என்றால் நடக்கணும். ஓடணும்னா ஓடணும். தவழணும்னா தவழணும். ராஜாவைப் பார்க்கிறது சும்மாவா என்ன என்று ஆவியோன் சொல்ல, மற்றவன் சத்தமில்லாமல் சிரித்தான். அவனுக்குச் சிரிக்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது.

”ஜெர்ஸோப்பா மகாமன்னருக்கு கெலடி மாமன்னர் ஒரு செய்தி கையில் தரச் சொல்லி இருக்கிறார். அது உசிதமானது என்றால் உங்கள் வரவு நல்வரவானது”.  திட்டிவாசல் அதிகாரி நேமிநாதனை வணங்கிச் சொன்னான்.

மடித்து மரப்பட்டை சேர்த்து ஒட்டிய கரமுர என்ற புதுக்காகிதத்தில் எழுதியிருந்த லிகிதத்தைப் படிக்கும் முன் நேமிநாதன் அதிகாரியைக் கேட்டான் – ”உசிதமில்லை என்று எனக்குத் தோன்றினாலோ?”

“பேரரசரே, உசிதமில்லை என்றால் வந்த வழியே போவது தவிர வேறே வழியேதுமில்லை என்று நேமிநாத ராஜ்குமாரர் அறியாததில்லை”.

“காகிதத்துலே எழுதியிருக்கார். உம்மை பெரிய மனுஷனா எடுத்துத்தான் அதிக பட்ச மரியாதையாக காகித லிகிதம் தர்றார். உசிதமில்லேன்னு அதைப் புறக்கணிக்க வேணாம்”.

காளி குரல் இப்போது ஆலோசனை சொல்வதாக மாறியிருந்தது. அதை விட ஆச்சரியம் அது நஞ்சுண்டய்யா பிரதானி குரல் போல் ஒலித்தது.

லேகனத்தைப் பிரித்துப் படித்தான் நேமிநாதன். வெங்கடப்ப நாயக்கர் எழுதி கையொப்பம் இட்டிருந்த கடிதம் அது-

“இன்று அலுவல் நிமித்தம் மால்பெ போய்க் கொண்டிருக்கிறேன். நீங்கள் திடீரென்று வந்ததுபோல் எனக்கும் அதேபடி ஒரு பயணம் வைக்கவேண்டிப் போனது. இன்று ஒரு நாள், இந்த பிற்பகுதி நாள் மட்டும் தாங்கள் காத்திருக்க முடியும் என்றால் நாம் நாளை காலை ஏழு மணிக்கு சந்திக்கலாம். தங்களுக்கு இங்கே நான் இல்லாத குறையே தெரியாமல் முக்கிய விருந்தினருக்கான உபசரிப்பை ராணியம்மாளும், என் இரண்டு மகன்களான ராஜகுமாரர்களும் தங்களுக்கு அளிக்க தயாராக இருக்கிறார்கள். நல்ல அறையும் சித்தம் செய்யப்பட்டுள்ளது”.

அந்த லேகனத்திலேயே வெங்கடப்ப நாயக்கரின் குணமும் திட்டமிடலும் பிரியமும் புலப்பட, நேமிநாதன் அரண்மனைக்குள் பிரவேசித்தான்.

அரண்மனை உத்தியோகஸ்தன் பின்னால் திரும்பி சைகை செய்ய, நேமிநாதனுக்கான மரியாதையாக ஏழு தடவை பீரங்கி ஒலித்து முரசும் அதிர்ந்தது.

Medieval Cavalry

Pic Ack  en.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன