வளரும் மிளகு நாவல்கொடியில் ஒரு சிறுபிடி மிளகு – அப்பாவுக்குக் கல்யாணம், அம்மாவுக்கும்

கோகர்ணம் மகா கணபதி க்‌ஷேத்ரத்தில் கோவில் ஸ்தானிகர் சுருக்கமாக மந்திரம் சொல்ல, கஸாண்ட்ராவும், ரமணதிலகனும் ரோகிணிக்கும் பரமனுக்கும் மாலை எடுத்துத்தர, மாலை மாற்றித் திருப்பூட்டியானது. பிள்ளையார் சந்நிதி வெளிப் பிரகாரத்திலேயே ஓர் ஓரமாக கல்யாண விருந்தாகக் கொண்டு வந்த ஜெயவிஜயிபவ இனிப்பு, பிஸிபேளாஹூளியன்ன, மிளகு சாதம், எலுமிச்சை சாதம், ததியோன்னம் என்று இலைத் தொன்னைகளில் வழங்கப்பட்டு கடைசியாக பால் பாயசமும் பருகத் தந்து கல்யாணம் ஒரு வழியாக நிறைவேறுகிறது.

சடங்குகள் நிகழும்போது கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தரோடு ஒருத்தர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதும், அந்தப் பதினாலு பேர் கூட்டத்தில் தணிந்த குரலில் விருந்தாளிகள் பேசியது மட்டுமல்லாமல், மஞ்சுநாத் சிறுபையலைத் தவிர ஓடியாடி உற்சாகமாகப் பொழுது கழிக்க யாரும் முற்படவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது ஆகும்.

கல்யாணம் முடிந்த பிறகு ஏதோ சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதுபோல் கல்யாண கோஷ்டியே கோகர்ணம் கடற்கரைக்குப் போய் அலைகளைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தது. பெரியவர்கள் விளையாடும் பொழுது குழந்தை மஞ்சுநாதன் உறங்கிவிட, சாரட்டின் உள்ளே துயில வைக்கப்பட்டான்.

கோகர்ணம் கடற்கரையில் இருந்து இரண்டு சாரட் வண்டிகளும் புறப்படும் முன் ராஜகம்பீரமாக இன்னொரு சாரட் அங்கே வந்து நின்றது. யாரும் மகிழ்ச்சியையோ ஆத்திரத்தையோ தெரிவிக்கும் முகபாவங்கள் இல்லாது பார்த்துக் கொண்டிருக்க, சாரட்டில் இருந்து நேமிநாதன் இறங்கினான். வந்தவன் பரமனை நகரச் சொல்லிவிட்டு, சாரட்டில் ரேணுகாவைத் தனியாக ஏறச் சொன்னான். உள்ளே அவன் பலமாகச் சிரிக்கிற சத்தம் அலைகளோடு போட்டியிட்டுக் கேட்டது. கல்யாணப் பெண்ணை எப்படி முத்தமிடணும் என்று கேட்டபடி சாரட் கதவை அவன் சார்த்தி ஐந்து நிமிடம் சென்று திறந்தது பிடிக்காமல் கஸாண்ட்ரா அலைகளில் கலந்து அவன் முகத்தில் வடியட்டும் என்று சொல்லித் துப்பிய எச்சில் அமிலமாக கோகர்ணம் கடற்கரையைத் தகித்தது.

ராத்திரி பதினொரு மணிக்கு சோபான ராத்திரிக்கு ரேணுகாவை அழைத்து வந்து கஸாண்ட்ராவும், பரமனைக் கூட்டி வந்து ரமணனும் காத்திருக்க, நேமிநாதன் அதிரடியாக உள்ளே வந்தான். பரமனை வெளியே போகச்சொல்லிக் கைகாட்டி ரோகிணியைக் கதவைச் சார்த்தச் சொன்னான். அவள் பரமனைக் கெஞ்சுவது போல் பார்த்துக்கொண்டு தன் விதிக்கு சுயபச்சாதாபப்பட்டது போல் முகம் தழதழத்திருக்க கதவைச் சார்த்தப் போனாள். உண்மையாகவே அப்படி நினைப்பு இருக்கும். அல்லது இதுதான் தேவைப்படும் உணர்ச்சி என்று கருதி முகத்தில் அணிந்திருக்கலாம். பரமன் போகும்போது ரோகிணியைக் கட்டி அணைத்து அவள் வளைகள் குலுங்க நேமிநாதன் முத்தமிட்ட சத்தம் நாராசமாகப் பரமன் காதில் ஒலித்தது.

உள்ளே இருந்து வந்த ஒலிகளைக் கேட்டுக்கொண்டு குழந்தை மஞ்சுநாதன் அருகில் படுத்துக் கிடந்தார் பரமன். அந்த சத்தம் தேய்ந்து மறைய ராப்பறவை ஒன்று ஒலியிட்டு மெல்லப் பறந்து போனது. கடல் வீட்டுக்கு அருகே வந்தது போல் தோன்றியது.

ஹொன்னாவர் கடற்கரையில் அலைகள் மூர்க்கமாக மோதி நேமிநாதனை சபிப்பதைக் கேட்டபடி அவர் சற்று நேரத்தில் உறங்கியும் விட்டார்.

படம் :கொங்கணி கல்யாண விருந்து
நன்றி டெக்கான் ஹெரால்ட்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன