வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து : அகல்யா வந்த தினம்

’மிளகு’ -வளர்ந்து வரும் நாவலில் இருந்து –

பெரும்பாலான சடங்குகள் விரிவான விருந்துகளில் முடிவடைகின்றன. அவற்றைப் பற்றித்தான் திலீப் ராவ்ஜியின் ஆதங்கம் மனதில் அழுத்த வேரூன்றி இருக்கிறது. புரோகிதர்கள் நிர்வகித்து நடத்தித் தரும் வருஷாப்திகம் என்ற நீத்தார் நினைவஞ்சலி, காது குத்துதல், பிரம்மோபதேசம் என்று எந்த சடங்கிலும் ராவ்ஜி அழைக்கப்படுவதில்லை. அவர் முப்புரிநூல் அணியாததே அதற்கான பிரதம காரணமாக இருக்கலாம் என்பதை ராவ்ஜி அறிவார்.

ஆனால், புரோகிதர்கள் இல்லாமல் அவர் எப்படி அகல்யாவுக்கு சாப்பாடு தர முடியும்?

இறந்து போயிருந்தாலும் அவளுக்கும் பசி உண்டே? பஞ்சாங்கம் கணித்துக் கொடுத்த வருடாவருடம் வரும் நட்சத்திரம் சார்ந்த ஒரு நாளில் அகல்யா பசியோடு சரீரமின்றி பசித்து வந்து நிற்பாள். புரோகிதர்கள் மூலம் தான் அவள் உண்ணவும் தண்ணீர் பருகவும் வேண்டும். அகல்யா மட்டுமில்லை, திலீப் ராவ்ஜியின் அம்மா ஷாலினிதாய் அம்மாளும் அகல்யாவோடு கூடவே வந்து திவசச் சோற்றுக்காகக் காத்திருப்பாள். பசித்த பெண்மணிகள்.

யார் கண்டது? கற்பகம் பாட்டியும் இவர்களோடு வந்து பசியாற நிற்கிறாளோ என்னமோ? ஏன், திலீப் ராவ்ஜியின் தகப்பனார், சகா பரமேஸ்வரன் அய்யர் திவசச் சாப்பாட்டுக்காக அலைகிறாரோ? திலீப் யோசித்துப் பார்த்தார். அவர் எப்படி வருவார்? இருக்கும் வரை இடதுசாரியாக இருந்தவர் ஆச்சே அப்பா? திவசத்திலும் திதியிலும் நம்பிக்கை இல்லாதவர் எப்படி நாள் நட்சத்திரம் பார்த்துப் பசியாற வர முடியும்?

ஒருவேளை அப்பா இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரோ. திலீப் ராவ்ஜிக்கு இந்த நினைப்பு கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது. இருந்தால் என்ன, ஒரு நூற்றுப் பதினைந்து வயதாகி இருக்குமே.

அவர் ஒரு அவசரக் குளியல் போட்டார். ஹாலில் சிறு அலமாரிக்குள் வைத்த ஸ்ரீகிருஷ்ணனின் சிறு பிரதிமை முன் கண் மூடி கை கூப்பி நின்று வணங்கினார்.

அகல்யா ஆத்மான்னு இருந்தா அது சாந்தமா, சௌக்கியமா, அலைந்து திரியாமல் அமைதியாக இருக்க கிருபை செய்யூ கிருஷ்ணா. அச்சுதம் கேசவம் ராம நாராயணம் ஜானகி வல்லபம் வாசுதேவம் பஜே.

அவர் உரக்கச் சொல்லி, ராகம் இழுத்துப் பாடி கிருஷ்ணனை வணங்கினார்.

கிருஷ்ணா, இன்னிக்கு அகல்யாவுக்கு திதி. புரட்டாசி திரியோதசி அவள் போன நாள். அகல்யாவோட என்னோட எங்களோட பிள்ளை அவளோட சிரார்த்தத்தை நடத்த இதுவரை முன்கை எடுக்கலே. எடுத்து திவசம் பண்ணியிருந்தா இன்றைக்கு அவளுக்கு ஒரு குத்து சோறும் மேலே எள்ளும் தண்ணியும் இரைச்சுக் கிடைக்கும். இன்னும் ஒரு வருஷத்துக்கு அவளோட ஆகாரமும் பானமும் அதுதான்னு விதிச்சவன் நீதானேப்பா. அவ இந்த ரெண்டுக்காகவும் இல்லே வேறே எதுக்காகவும் அலையாமல் நிறைவோடு இருக்க கிருபை செய்யப்பா. கூடவே ரெண்டு வயசான ஸ்திரிகள், எங்கம்மாவும் என் பாட்டியும். அவாளுக்கும் ஆகாரமும் பானமும் வருஷம் முழுக்கக் கிட்ட இன்னும் கொஞ்சம் கருணை செய்யூ கிருஷ்ணா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன