புது நாவல் ‘மிளகு’ – எழுதப்படும்போதே … அம்பலப்புழையில் ஒரு பகல் -பரமேஸ்வரன் வந்திருக்கார்

திலீப் திலீப் ராவ்ஜி ஆனது மலையாள பூமியில் வர்த்தகம் விருத்தியாகி பெரிய ஹோட்டல் உரிமையாளராக ஆன இந்த முப்பது வருடங்களின் மத்தியில் தான். கொஞ்ச நாள் அவரை திலீபன் பரமேஸ்வர ஐயர் என்று அழைத்தார்கள். இத்தனை நீளமான பெயர் எதற்கு என்று நடுவில் சுருக்கி திலீப் பி ஐயர் என்று அழைத்துப் பார்த்தார்கள். அது ஏனோ ஒட்டவில்லை.

ஓட்டல் முதலாளிகள் அதுவும் பெரும் தோதில் சைவ உணவகம் நடத்துகிற வெற்றி பெற்ற ஹோட்டல்காரர்கள் எல்லாம் உடுப்பி பின்னணியிலிருந்து வரும் ராவ்ஜிக்கள் என்று எல்லோருக்கும் தெரியும். திலீபையும் ராவ்ஜி ஆக்கி விட்டார்கள் நண்பர்களும் விரோதிகளும். விரோதிகள் என்றால் தொழில் முறையில் போட்டியில் ஈடுபட்டு நேரில் தனிமனுஷராகப் பழக பிரியமும் நேசமும் உள்ளவர்களாக எல்லோரும் தட்டுப்பட வைத்தது திலீப் ராவ்ஜிக்கு பகவான் கொடுத்த கொடை.

அவர்களோடு வாணிபம் பேசுவார். தொழில் அபிவிருத்தி பற்றிப் பேசுவார். ஹோட்டல் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளையும் தரவேண்டிய தீர்வுகளையும் பற்றிப் பேசுவார். ராவ்ஜியாகப் பேசுவது எளிதாக இருக்கிறது அதற்கெல்லாம். திலீப் பி ஐயர் மும்பை ஷவர ப்ளேட் கம்பெனி ஆபீசில் டைப்பிஸ்ட் பெயர் போல ஒலிக்கிறதாக அகல்யா சொல்லியிருந்தாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றில்லை. அவரை வெறும் திலீப்பாகக் காணவே அவளுக்கு இஷ்டம்.

வெறும் திலீப்போ ஐயரோ ராவ்ஜியோ திலீப்புக்கு அகல்யா காலமானதும் பேச்சுத் துணை அற்றுப் போனது முதல் துக்கம். அவருக்கு மராட்டி இலக்கியத்தையும் மலையாளக் கவிதையையும் மார்க்க்சீயத்தையும், ஷேக்ஸ்பியரையும் சர்ச்சை செய்யப் பேச்சுத் துணை வேண்டாம்.

அதெல்லாம் தெரியும் தான். ஆனால் அது சம்பந்தமான பேச்சு திலீப் ராவ்ஜியின் தந்தையார் பரமேஸ்வர ஐயர் காலத்திலேயே ஓய்ந்து போனது. தில்லி போய் வருகிறேன் என்று பம்பாயில் இருந்து புறப்பட்டுத் திரும்பும்போது திடீரென்று நாக்பூரில் காணாமல் போனவர் பரமேஸ்வரன்.

திலீப்புக்கு அரசியலோ இலக்கியமோ அத்துப்படி எல்லாம். ஸம்ஸாரிக்கான் மடுப்பு தோணுண்னு. பேசிக் களைத்துப் போயாச்சு. இனி எதுவும் பேச வேண்டாம். மத்திய சர்க்காரையும் மாநில அரசாங்கத்தையும் இங்கிலாந்து தொழிற்கட்சி மகாநாட்டையும் பற்றிப் பேசித் தீர்க்க அவரால் முடியாது. ஆனால் நேற்றைக்கும் இன்றைக்கும் தட்பவெப்ப நிலை எப்படி இருக்கிறது, இன்றைக்கு மழை பெய்யுமா, நாளை புயல் உருவாகிறதாமே என்று வானிலை பேசவோ, புது இந்தி மற்றும் பழைய மலையாள சினிமா, வந்து போகும் விழாக்கள் பற்றி ஏலம் தட்டிப் போட்ட தேநீர் குடித்தபடி உற்சாகமாக்ப் பேசவோ திலீப் இருந்தார். அகல்யா போனதும் அவரும் காணாமல் போனார்.

அவருக்கு வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு வெகு நாளாகிறது. ஓட்டல் நடத்தினாலும் வீட்டில் ஒரு பொரியல், ஒரு துவையல், ஒரு ரசம், ஒரு கீரை மசியல், ஒரு பப்படம் என்று ஒரே ஒரு நாள் சாப்பிடக் கிடைத்தால் அம்பலப்புழை கிருஷ்ணனை வந்தித்து நன்றியும் கடப்பாடும் சொல்லி வணங்குவார். பெரிய விருந்து, ஓணமும் பொங்கலும் விஷுவும், தீபாவளியும் எல்லாம் கொண்டாட இலை நிறைய அதுவும் இதுவும் வந்து கொண்டிருக்க வேண்டாம். அகல்யா இருந்த வரை தினசரி அனுபவப்பட்டுக் கொண்டிருந்தது அது.

திலீப் ராவ்ஜிக்கு அண்டை அயலில் சிநேகிதர்கள், தூரத்து, பக்கத்து சொந்தக்காரர்கள், ஏன், பழக்கமானவர்கள் என்று பலர் உண்டு. இவர்கள் மதியச் சாப்பாட்டுக்கு உட்காரும் நேரம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும். அதற்கு ஒரு மணி நேரம் முன்பே நலம் விசாரிக்கிற தோரணையில் ராவ்ஜி அவர்களின் வீடுகளுக்கு அழைக்காமலேயே போவதுண்டு.

அதிலும், விடிந்ததும் சோற்றில் விழிக்கிற, காலை ஏழு மணிக்கு சாதம், சாம்பார், ரசம் என்று விஸ்தாரமாக உண்டு விட்டு ஓடும் ஆபீஸ்காரர்களைத் தவிர்த்து விடுவார். மதியம் சிற்றுண்டி சாப்பிட்டு காலையில் சம்பிரதாயமான சாப்பாடு சாப்பிடும் அவர்களை மனுஷர்களாகவே அவர் மதிப்பதில்லை.

மீதி இருப்பவர்கள் எல்லோரும் அவருடைய அன்புக்குப் பாத்திரமானவர்கள். சகல சௌபாக்கியமும் கூடிவரப் பெற்றவர்கள். எனினும் இவர்களில் ஒருத்தர் கூட சாப்பிடறீங்களா என்று அவரைக் கேட்டதில்லை. இவ்வளவு பெரிய மனுஷனை எங்க வீட்டில் வற்றல் குழம்பு சாதம், சுட்ட அப்பளம் சாப்பிட வாங்கன்னு கூப்பிடச் சங்கடம் தான்.

பேஷா வரேன், அந்த அப்பளத்திலே, உளுந்து அப்பளம் தானே, சுட்டதுக்கு அப்புறம் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவி வை என்று குஷியாக வந்து விடுவார் திலீப் ராவ்ஜி. இதுவரை. போகட்டும். எல்லா சௌகரியங்களும் பெற்று விளங்கட்டும்.

திலீப் ராவ்ஜி அழைக்காமல் விருந்தாடப் போகும்போது மறக்காமல் ஒரு சீப்பு வாழைப்பழமோ, இருப்பதிலேயே பெரிய பாக்கெட் வெண்ணெய் பிஸ்கோத்தோ கடலை உருண்டைகளோ வாங்கிப் போவார். போகிற வீட்டுக் குழந்தைகளுக்குப் பிடித்த சமாசாரம் இவை இரண்டும்.

குழந்தைகளுக்கு வந்திருக்கும் தாத்தாவைப் பிடித்துப் போனால், பெரியவர்கள் போனால் போகிறது என்று அவரைக் குழந்தைக்கு சமமாக மதித்துச் சாப்பிடக் கூப்பிடலாம். குழந்தைகள் வீட்டுப் பெரியவர்களை நச்சரித்து ஒன்றிரண்டு முறை அப்படி அழைக்கப்பட்டிருக்கிறார் அவர்.

அவருக்குப் பணம் செலவழிப்பது ஒரு பொருட்டே இல்லை. வீட்டுச் சாப்பாடு. அதற்காக பத்து கிலோமீட்டர் கூட அவருடைய காரில் போவார்.

தானாக விருந்தாடப் போகும் வேளைகளில் அவர் கடைப்பிடிக்கும் இன்னொரு ஒழுங்குமுறையும் உண்டு. சாப்பாடு எவ்வளவு மோசமாக இருந்தாலும் குடும்பத் தலைவருக்கும், வீட்டம்மைக்கும் குறைவில்லாமல் பாராட்டுகளை எடுத்து விடுவது முக்கியம் என்பதை அவர் அறிவார். இந்தப் பாராட்டுகள் பொய்யாக ஒலிக்காமல் இருக்க அவர் கடைப்பிடித்த யுக்தி அவர் என்றைக்கோ உண்டு நினைவில் இன்னும் இருக்கும் சாப்பாட்டை நினைவு கூர்வதாக அந்தப் பாராட்டை அமைத்துக்கொள்வதாகும்.

நினைவில் நிற்கும் அந்த உணவு அகல்யா ஒரு ஞாயிற்றுக்கிழமை சமைத்ததாகவோ, கற்பகம் பாட்டி கண்ணை இடுக்கிக்கொண்டு பம்பாய் சாலில் ஸ்டவ்வோடு மல்லுக்கட்டி கிண்டிக் கிளறி இறக்கியதாகவோ, திலீப்பின் அம்மா ஷாலினிதாய் மேத்தி பொரட்டாவும் ஆம்பா ஊறுகாயும் அவருக்கு உண்ணக்கொடுத்த அபூர்வமான தினமாகவோ நினைவில் உடனடியாக அழைக்கப்படும்.

அப்புறம் மனதில் செயற்கைத் தன்மை இல்லாமல் அந்த நினைவு நெஞ்சாற பகிரப்படும். “அகல்யா சமைக்கற கீரை மசியல் நினைவுக்கு வந்துதும்மா. நல்லா இரு. நல்லா இரு. எங்கம்மா சமையல்கட்டுக்கு வந்திருந்தாளா என்ன? கத்தரிக்காய் ரசவாங்கி எவ்வளவு ருசியா இருந்தது தெரியுமா? எங்கம்மா பண்ணினா இதே போலதான் இருக்கும். ஜீத்தே ரஹோ பிட்டியா. ஷாலினி மோரே கேட்டிருக்கீங்களா, எங்கம்மா தான். அவ பண்ணின மேத்தி ரொட்டியும் புரட்டாவும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். சொல்லப் போனா நீ பண்ணினது ஷாலினிதாய் சமைச்சதை விட ஒரு லவலேசம் இன்னும் பிரமாதம். இப்படி அவர் பாராட்டுகளை அள்ளித்தர கண் கலங்கிய பெண்கள் அவரை விரைவில் அடுத்த எளிய விருந்துக்கு அழைக்கத் தயங்கியதில்லை.

திலீப் ராவ்ஜிக்கு கூட்டம் கூட்டமாக வைதிக காரியங்களுக்காகச் சஞ்சரிக்கும் புரோகிதர்கள் என்னமோ அவர் அலைவரிசைக்கு ஒத்து வந்ததில்லை. அவர்கள் ஒரு காலத்தில் வெய்யிலோ மழையோ, தொலைவிலிருக்கும் இடங்களுக்குக் கூட கால்தேய நடந்து போய் வந்தார்கள். அப்புறம் மாங்குமாங்கென்று சைக்கிள் மிதித்து வைதீக காரியங்களை நிர்வகித்து நடத்தித்தரப் போய்க் கொண்டிருந்தார்கள். சைக்கிள் மோட்டார் பைக்கோ ஸ்கூட்டரோ ஆக நாள் அதிகம் பிடிக்கவில்லை. அவர்களில் சிலர் புத்தம்புதுக் கார்களை நேர்த்தியாக ஓட்டியபடி வைதீகம் செய்துதரப் போவதை திலீப் ராவ்ஜி சுவாரசியத்தோடு பார்க்கிறார்.

அது மட்டுமில்லை. பேரம் ஏதும் பேச வாய்ப்புத் தராத கட்டண விகிதங்கள், அவர்கள் நிச்சயித்த வேறு யாரும் மாற்ற முடியாத நாள்-நட்சத்திரம்-நேரம் சார்ந்த நிகழ்ச்சி அட்டவணைகள், ஹோமம் வளர்க்கவும், நிகழ்ச்சியை அனுசரிக்க, தெய்வத்துக்குப் படைக்க என்ன என்ன உணவு, எவ்வளவு என்று கண்டிப்பான கட்டளைகள் என்று அவர்கள் சொன்னபடி எல்லாம் நடந்தாலே ஆசுவாசம் கொள்கிறார்கள். அகல்யாவின் இறுதிச் சடங்குகள் நடந்த போது அதைக் கவனித்திருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன