என் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா’ நூல் மதிப்புரை

சாகித்ய அகாதமி கேட்டுக் கொண்டபடி நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் வரும் எழுத்தாளர் சுஜாதா பற்றிய நூலுக்கு நண்பர் மந்திரமூர்த்தி அழகு அவர்கள் எழுதிய அறிமுகம் – மதிப்பீடு.

இந்நூல் விரைவில் வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து சாகித்ய அகாதமியால் வெளியிடப்படும்.

இந்திய இலக்கியச் சிற்பிகள்(சுஜாதா) – இரா முருகன்
வெளியீடு: சாகித்ய அகாதமி
முதல் பதிப்பு- 2020
பக்கங்கள்: 130
விலை: ரூ 50

இந்திய இலக்கியச் சிற்பிகள்- சுஜாதா என்ற இந்த நூல் பதிமூன்று தலைப்புகளில் எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகளை அணுகி இருக்கிறது; முக்கியமாக சிறுகதைகள், அறிவியல், புனைவு, அறிவியல் கட்டுரைகள், நாடகங்கள், வரலாற்றுப் புதினங்கள், ஸ்ரீரங்கத்துக் கதைகள் ஆகியவற்றைக் குறித்துச் சற்று விரிவாக தகவல்களைத் தருகிறது. சுஜாதாவின் நகைச்சுவை குறித்த ஓர் அத்தியாயம் சாகித்ய அகாதமியின் பக்கங்களின் எல்லை அளவு காரணமாக இந்த நூலில் இடம் பெறாமல் போனது வாசகர்களுக்கு ஓர் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

எழுத்தாளர் சுஜாதா தமிழ் வாசகர்களிடம் இரண்டறக் கலந்தவர்; தமிழில் வாசிப்பை வார்த்து எடுத்ததிலும், வளர்த்ததிலும் சுஜாதாவுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. எந்தவிதமான வெளிச்சமும் இல்லாமல் எழுபது எண்பதுகளில் எழுத்துத் துறைகளில் புதிதாக எழுத வருகின்ற இளைஞர்களை அவர்களது படைப்புகளின் அடிப்படையில் அடையாளம் கண்டு வாசகர்கள் மத்தியில் அடையாளம் காட்டிய பெருமையும் சுஜாதாவிற்கு உண்டு.

சுஜாதா இலக்கியச் சிந்தனைக்காக 12 சிறந்த சிறுகதைகளை வரிசைப்படுத்திச் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுத்த கட்டுரை, கதைகளை எப்படி அணுக வேண்டும் என்பதை உணர்த்துகின்ற ஒன்று. இந்த நூலில் எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் சுஜாதாவைப் பற்றிய செய்திகளை முழுமையான ஓர் ஆய்வு கட்டுரையாகவே தந்திருக்கின்றார். நடிகர் திலகம் சிவாஜி பாரத் பட்டம் பெறாததால் எப்படி அவர் நடிப்புப் பெருமைக்குக் குறைவில்லையோ அது போல சுஜாதா சாகித்ய அகாதமி விருது பெறாததால் அவரதுஎழுத்துப் பெருமைக்கு ஒருவிதத்திலும் குறை இல்லை என்றே சொல்ல வேண்டும்.

எழுத்தாளர் சுஜாதாவின் இளமைக்காலம் முதல் அவருடைய இறுதிக்காலம் வரை உள்ள சுஜாதாவின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளையும், அவருடைய வாழ்நிலை குறித்த தகவல்களையும் இந்த நூலில் தருகிறார் இரா.முருகன. சுஜாதாவை வரையறுக்கப்பட்ட பக்கங்களில் பாரபட்சமில்லாமல் நுணுக்கமாக அணுகி இந்த நூலில் பதிவு செய்கிறார் இரா.முருகன்.

இனி எழுத்தாளர் இரா.முருகன் இந்த நூலில் தரும் முக்கியமான தகவல்களைக் காணலாம்.
400-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 60 நாவல்கள், 40 நாவல்கள், 15 மேடை நாடகங்கள், 20 கட்டுரைத் தொகுதிகள், பத்துக்கும் மேற்பட்ட திரைக்கதை உரையாடல்கள், ஒற்றைக் கவிதை தொகுதி என்று தமிழில் சாதித்து காட்டினார் சுஜாதா. அந்தக் கால எழுத்தாளர்கள் ‘கல்கி கோத்திரம்’ போல இந்தக் கால எழுத்தாளர்கள் பலரும் ‘சுஜாதா கோத்திரம்’ என்று ரா.கி ரங்கராஜன் சொல்வதை நினைவு கூர்கிறார் இரா.முருகன். புனைவிலும், அபுனைவிலும் அவர் சாதித்தது அனேகம். தொழில் நுட்ப அறிவையும் அது சார்ந்த அனுபவ அறிவையும் தமிழில் பகிர்ந்துகொண்ட அவருடைய எழுத்துகள் தனித்துவம் வாய்ந்தவை. இந்த 21ஆம் நூற்றாண்டுக்கு இளைஞர் அணியைத் தயார் படுத்திய எழுத்துகள் அவை.

சுஜாதாவின் பள்ளித் தோழரான கஸ்தூரிரங்கனுடைய கணையாழி பத்திரிக்கையில் 1966 -இல் இருந்து 1996-ஆம் ஆண்டு முடிய சுமார் 30 ஆண்டுகள் அதனுடைய கடைசிப் பக்கத்தை எழுதிய பெருமை சுஜாதாவுக்கு உண்டு. கணையாழி கடைசிப் பக்கம் தமிழ் இலக்கிய உலகில் வழிகாட்டுதலாக உச்சக்கட்டப் பெருமையாக இன்றும் விளங்குகிறது.

சிறுகதைக்குரிய எளிய விளக்கமாக சுஜாதா ” உருவம், உள்ளடக்கம் என்று பலர் சிறுகதை குறித்து ஜல்லி அடிப்பதைக் கேட்டிருக்கிறேன். டெண்டர் நோட்டீஸ் கூட உருவமும் உள்ளடக்கமும் இருக்கிறது. பின் சிறுகதை என்பதுதான் என்ன? கூர்ந்து கவனியுங்கள்! சிறுகதை என்பது ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம் . சிறுகதை வெற்றியடைய எழுத்தாளரின் செறிவான அனுபவப்பகிர்வின் அடிப்படையில் அது அமைவது மட்டுமல்ல. எழுத்தாளர் கேட்ட, பார்த்த நிகழ்வுகள் அவருள் ஏற்படுத்திய சலனமும் கூட சிறுகதைக்குக் கைகொடுக்கும். சிறுகதை என்பது கோபம், ஆர்வம், வெறுப்பு போன்ற ஒன்பதில் ஏதேனும் ஒன்று வருமளவுக்கு ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும். பிரச்சனைக்குத் தீர்வு காண்பதையும், பிரச்சனை என்ன என்று சொல்வதையும் குழப்பாமல் ஒரு கலைஞனுக்கு பின்னதுதான் கட்டாயமானது எனபதை உணர்ந்து எழுதுவது” என்று குறிப்பிடுகிறார்.

சுஜாதாவினுடைய மிகச் சிறந்த சிறுகதைகளாக மட்டுமல்ல; தமிழின் சிறந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்ததாகவும் ரேணுகா, முதல் மனைவி, குதிரைக் கிச்சாமி, ஒரு லட்சம் புத்தகங்கள், நகரம், திமலா, நச்சுப் பொய்கை, மஹாபலி ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார் இரா.முருகன். அவற்றின் கதைச் சுருக்கத்துடன், முக்கியத்துவத்தையும் அவர் இந்த நூலில் விளக்குகிறார்.

அறிவியல் கதை என்றால் என்ன? என்று இந்த நூலில் விளக்குகிறார் இரா.முருகன். சுஜாதாவின் அறிவியல் கதைகளில் ராகவேனியம் 277, சூரியன், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, சொர்க்கத் தீவு, திசை கண்டேன் வான் கண்டேன் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் குறிப்பிடுகிறார்.

தன் கல்லூரிக் கால நண்பரும் முன்னாள் ஜனாதிபதியுமான திரு அப்துல் கலாம் குறித்து சுஜாதா சொல்வது: ” கலாமும் நானும் சேர்ந்து இந்திய ராக்கெட் இயலைப் பற்றி திப்பு சுல்தானிலிருந்து ஆரம்பித்து ஒரு புத்தகம் எழுதுவதாக திட்டம் போட்டோம் அவரை எப்போது விமானத்திலோ, விமான நிலையத்திலோ பார்த்தாலும் ‘கலாம், என்ன ஆச்சு புத்தகம்?’ என்பேன் எம்ஐடி-யின் ஐம்பதாம் ஆண்டு துவக்க விழாவில் பார்த்த போது கூட இதோ…. அடுத்த மாதம் லீவு எடுத்துட்டு 10 நாள் வரேன்யா! ரெண்டு பேரும் முதல்ல மைசூர் போவோம். அங்கே எழுத ஆரம்பிச்சுரலாம்” என்றார்.

எப்படிக் கணையாழியின் கடைசி பக்கங்கள் சுஜாதாவின் இலக்கியப் பரிச்சயம் கொண்ட வாசகர்களின் உள்ளம் கவர்ந்து நீண்ட காலம் சிறு பத்திரிக்கையான கணையாழியில் வெளியானதோ அதேபோல வெகுஜனப் பத்திரிகையில் தொடர்ந்து வாசகர்களின் பேராதரவோடு நீண்ட நெடும் பயணம் செய்த பத்திக் கட்டுரைகள் ‘கற்றதும் பெற்றதும்’. நான்கு நூல்களாக இவை தொகுக்கப்பட்டுள்ள செய்தியையும் நூலில் பதிவு செய்திருக்கிறார் இரா.முருகன்.

நாடகங்களைப் பொறுத்த அளவில் சுஜாதாவினுடைய படைப்புகள் நடிப்பதற்காக மட்டுமல்ல, வாசிப்பதற்கும் எழுதப்பட்ட சிறப்புடையது அவை என்பதை மறக்கக்கூடாது என்கிறார் இரா. முருகன்.

இந்த நூலின் மிகப் பெரிய சிறப்புகளில் ஒன்றாக எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் சுஜாதாவினுடைய ஸ்ரீரங்கத்துக் கதைகள் குறித்து தனியாக ஒரு அத்தியாயம் அமைத்ததுடன் அவற்றை ஆதியோடு அந்தமாக அலசுவதைக் கூறலாம். இந்த நூலை வாசிக்கின்ற ஒவ்வொரு வாசகனுக்கும் ஸ்ரீரங்கத்துக் கதைகளை வாசிக்க வேண்டும்/ மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துவதுதே இரா. முருகனின் வெற்றி. பயோ பிக்ஷன் என்ற பிரயோகம் தமிழில் பரவலாக தற்போது பயன்படுத்தப்படுகிறது. சுஜாதா வெகு காலத்திற்கு முன்பே அவ்வகைக் கதைகளை நிறைய எழுதியிருக்கிறார். மூன்று பகுதிகளாக இந்த ஸ்ரீரங்கத்துக் கதைகள் வெளியானவை. 83 -இல் சாவி வார பத்திரிக்கையில் முதல் 7 கதைகள் வெளிவந்தன 2003-ஆம் ஆண்டில் இன்னொரு எட்டுக் கதைகள் ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் என்ற பெயரில் விகடன் வாரப் பத்திரிகையில் வெளியாகின. 1983-ஆம் ஆண்டுக்கும் 2003 -க்கும் இடைப்பட்ட சுமார் 20 வருட காலத்தில் அவ்வப்போது பல பத்திரிகைகளில் சுஜாதா ஸ்ரீரங்கம் பற்றிய கதைகளை எழுதியிருக்கிறார். அவற்றை சுஜாதாவின் சீடரும், நண்பருமாகிய ஸ்ரீரங்க தேசிகன் கோர்த்திருக்கிறார். இவை அனைத்தும் ஸ்ரீரங்கம் கதைகள் என்ற பொதுப் பிரிவில் அடங்குபவை.

காலம் எப்படி எழுத்தாளனை நடத்திப் போகிறது என்பதைச் சுருக்கமாக தனது ஸ்ரீரங்கத்து கதைகள் தொகுப்பில் சொல்கிறார் சுஜாதா. “ஓர் எழுத்தாளன் கதை எழுதும் போது மூன்று விதமான சக்திகள் பின்னணியில் செயல்படுகின்றன. ஒன்று அவனுடைய கதை சொல்லும் திறமை, உத்தி, நடை போன்றவை. இரண்டு அவன் ஞாபகங்கள் மூன்று மாறிவரும் அவன் கவலைகள் ”
சுஜாதாவின் வரலாற்றுப் புதினங்கள் ரத்தம் ஒரே நிறம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை ஆகிய இரண்டைப் பற்றியும் நூல் பேசுகிறது.

சுஜாதாவினுடைய சிறந்த அரசியல் புதினங்களாக பதவிக்காக, 24 ரூபாய்த் தீவு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார் இரா. முருகன்.

சுஜாதாவின் திரைப்படத்துறை பற்றிய நாவலான ‘கனவுத் தொழிற்சாலை’ திரைக்குப் பின் இயங்கும் ஒளியும் நிழலும் ஆன உலகத்தைக் காட்டுவதில் வெற்றி பெறுகிறது.

இளைய சமுதாயத்தோடு உற்சாகமாகத் தன் படைப்பாற்றலை சுஜாதா இணைத்துக்கொண்டு எழுதியதற்குச் சான்று அவரின் ‘பிரிவோம் சந்திப்போம்’ நாவல். இரண்டு பகுதிகளாக இந்தியாவையும், அமெரிக்காவையும் கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டு வெளியான புதினம் இது.

எழுத்தாளர் சுஜாதாவை இன்றையத் தமிழ் வாசகருக்கு முழுமையாக வெளிச்சம் செய்து காட்டுகின்ற மிகச் சிறப்பான நூல் இது. சுஜாதாவினுடைய எழுத்தின் வீச்சினையும், பரந்து, விரிந்து கிடக்கும் அவரது படைப்புகளையும் குறித்து ஒரே பார்வையில் உணரவைக்கும் நூல் இது.

இந்திய இலக்கியச் சிற்பிகள் – சுஜாதா என்ற இரா.முருகனின் இந்த நூல் எழுதப்பட்டவர், எழுதியவர் ஆகிய இருவரது பெயர்களையும் என்றும் பெருமையோடு தாங்கி நிற்கும் என்றால் அது மிகையல்ல.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன