தாவரங்கள் இனியவை ஆகுக. தண்ணீர் இனியதாகுக. ஆகாயம் இனியதாகுக. வெளி இனியதாகுக.

‘வாழ்ந்து போதீரே’ நாவலின் இறுதி அத்தியாயத்தில் இருந்து –

ஹோமம் ஆரம்பமாறது. கலந்துக்க வேணும்.

திராவிடப் பண்டிதர் வேண்டுகோள் விட, எல்லோரும் அங்கே தான்.

எந்தக் கடவுளின் கருணையினால் நாமனைவரும் நலமாகவும் எந்தக் குறையுமின்றியும் உயிர்த்திருக்கிறோமோ அந்த க்‌ஷேத்ரபதியை வழிபடுகிறோம். நம்முடைய பசுக்களும் குதிரைகளும் நலம் பெற்று இருக்க, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வர, அவரைத் துதிக்கிறோம். இயற்கை அன்னையின் கருணை எம் பசுக்கள் சுரக்கும் பால் போல் பெருகி ஓட அருள்க.

நான்கு வட இந்திய புரோகிதர்கள் தெளிவான உச்சரிப்போடு ரிக்வேத மந்திரங்களை ஓதிச் சடங்குகளைத் தொடங்கினார்கள்.

தாவரங்கள் இனியவை ஆகுக. தண்ணீர் இனியதாகுக. ஆகாயம் இனியதாகுக. வெளி இனியதாகுக.

புருஷசூக்தம் சொல்றாளா என்று பாட்டியம்மா விசாரித்தாள்.

அம்மாவுக்கு வேதம் என்ன, கஜானனம் கூட ரெண்டாவது வரி சொல்லத் தெரியாது. ஆனாலும் புருஷசூக்தம்ங்கற பெயர்லே ஒரு ஈர்ப்பு.

தியாகராஜ சாஸ்திரிகள் சொன்னார்.

பாட்டியம்மா கேட்டுட்டாங்க இல்லே? புருஷசூக்தம் சொல்லச் சொல்றேன் பண்டாக்களை.

திராவிடப் பண்டிதர் சிரித்தார்.

இன்னும் கொஞ்சம் தட்சணைக் காசு எடுத்துக் கொண்டு அவர் ஹோமம் செய்ய இருந்த புரோகிதர்கள் பக்கம் போனார். அவர்களின் ஒருமித்த குரலில் கம்பீரமாக வேத மந்திரங்கள் தொடர்ந்து மேலெழுந்து வந்து கொண்டிருந்தன.

இந்த வரிகள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இருந்து வருகிறவை. என்னோடு இவற்றைத் திரும்பவும் சொல்லுங்கள் சகோதரி.

திராவிடப் பண்டிதர் கனமும் கம்பீரமும் நிரம்பிய குரலில் சொல்லச் சொல்ல கொச்சு தெரிசா திரும்பச் சொன்னாள் –

யார் மகத்தான ஒளியாக இருக்கிறாரோ, யார் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறாரோ, யார் எங்கும் எதிலும் எவரிலும் நிலவும் தலையாய சத்தியமாக இருக்கிறாரோ, யார் தலை சிறந்த இலக்காக இருக்கிறாரோ, அந்த விஷ்ணுவை வணங்குவோம்.

துளசி இலை மிதக்கும் சுத்தமான கங்கை நீர் அருந்தக் கிடைத்தது. மூன்று முறை அந்நீரை உள்ளங்கையில் வாங்கி அருந்தி, கண்கள் மூடியிருக்க, ஹரி என்று உச்சரித்து குழிந்த உள்ளங்கையை உச்சிச் சிரசில் பொத்தி வைத்துப் பூசிக் கொண்டாள்.

மகாவிஷ்ணுவில் அனைத்தும் அடக்கம். மகாவிஷ்ணுவே அனைத்தாகவும் காணப்படுவார். அனைத்துயிர்களின் சாரமாக உணரப்படுவார். அவர் உலகைக் காக்கிறார். அவர் அழிவற்றவர். அவர் அனைத்தையும் அனைவரையும் ஆள்கிறவர். மூவுலகிலும் நிறைந்து நிலைத்திருக்கிறார் அவர். எல்லோருமானவர். எல்லாவற்றிலும் இருந்து இருத்தலின் பேரின்பம் நுகர்கிறார்.

பால், தேன், பழக்கூழ், தேங்காய், ஏலம் கலந்ததை ஹோமம் நடத்தியவர்கள் நிவேதனம் செய்து ஆராதித்துக் கொடுக்க, தெரிசாவின் வலது உள்ளங்கையில் சிறு உத்தரிணி கொண்டு அதை வார்த்தார் திராவிடப் பண்டிதர்.

இதை எச்சிலாக்காமல் வாயிலிட்டுச் சுவைத்து உண்ணுங்கள். நாராயணனைத் தித்திக்கத் தித்திக்க உங்களுக்குள் ஏற்று வாங்கிக் கொள்கிறீர்கள்.

கேசவா, நாராயண, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, சங்கர்ஷணா, வாசுதேவா, ப்ரத்யும்னா, அநிருத்தா, புருஷோத்தமா, அதோக்ஷாஜா, நரசிம்மா, அச்சுதா, ஜனார்த்தனா, உபேந்திரா, ஹரி, கிருஷ்ணா.
விஷ்ணுவின் இருபத்துநான்கு திருநாமங்களை ஒவ்வொன்றாக அந்த நாமத்தில் மனம் லயித்து திராவிடப் பண்டிதர் சொல்ல, கண் மூடியிருந்து கொச்சு தெரிசா அவற்றைத் திரும்ப உச்சரித்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது.

பண்டிதர் எழுந்தார். கையில் பஞ்ச பாத்திரமும், உத்தரிணியுமாக, கங்கா தீரத்துக் கல் பாளங்களின் வெம்மையில் பாதம் தோய நடந்து ஆற்று நீரில் கால் அமிழ்த்தி நின்றார்.

இது சாமவேதம்.

அவர் நீண்ட சொற்களும் திரும்பித் திரும்பி ஒலிக்கும் குறுஞ்சொற்களும், உயர்ந்து உயர்ந்து மேலெழும் குரலுமாகச் சாம கானம் பாடத் தொடங்கினார்.

தண்ணீரே, நீ ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வருகிறாய். நாங்கள் சக்தி மேம்பட்டிருக்க, அது குறித்து மகிழ்ந்திருக்க எமக்கு உதவு. பனித்துளியை எங்களுக்குப் பங்கு வைத்து நீ கொடு நீரே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன