மலையாளமான தமிழ்

என் கட்டுரைத் தொகுப்பு ‘ராயர் காப்பி கிளப்’ (அச்சுப் புத்தகம், மின்நூல்) கட்டுரை ஒன்று –

வழியெனக்கு பிழயாத வண்ணம்முற்றருள் செய்யென்
மனகுருந்திலிளகொண்டு புனல் கொண்டு வடிவாண்டு
எழுந்த கொண்டல் பதரும் நெறி தழுத்த குழலி
இளமதிக்கு துயர் பொங்கி விளையின்ற நுதலி
சுழலின்றகிலலோகர் வணங்கின்ற குழலி
துகில் புலித் தொலி கொள்ளின்றரநுதல் கண்ணிட பெட்டு
அழிவு பெட்ட மலர்வில்லியெயனங்கனெ
அவ்வளவு தோற்றின செருப்பமுள்ள வெப்பின் மகளே

இது என்ன? பனிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கேரள இலக்கியமான (கவனிக்கவும் – மலையாள இலக்கியம் என்று சொல்லவில்லை) ‘ராமசரிதம்’ நூலில் மலைமகள் வழிபாடு.

இந்நூலை எழுதியவர் பெயர் இன்னும் தெரியவில்லை. திருவிதாங்கூர் அரசராக இருக்கலாம் என்று கருத்து நிலவுகிறது.

தமிழிலிருந்து மலையாளம் கிளை பிரியத் தொடங்கிய காலமாக இருக்கலாம் ராமசரிதம் எழுந்த போது.

பாடலை அலகிட்டுப் பார்த்தால் முக்காலே மூணு வீசம் தமிழ்தான்.

வழியெனக்கு(ப்) பிழையாத வண்ணம் உற்றருள் செய் என்
மனகுருந்தில் இளைகொண்டு புனல் கொண்டு வடிவு ஆண்டு
எழுந்த கொண்டல் பதரும் நெறி தழுத்த குழலி.
இளமதிக்கு துயர் பொங்கி விளையின்ற நுதலி
சுழலின்ற அகில லோகர் வணங்கின்ற குழலி
துகில் புலித் தொலி கொள்ளின்ற அரன் நுதல் கண் இடைப்பட்டு
அழிவு பட்ட மலர்வில்லியை அனங்கனை
அவ்வளவு தோற்றின செருப்பமுள்ள வெப்பின் மகளே

மலையாள நிகண்டில் ‘இளை’ என்பதற்கு பூமி, நிலம் என்று பொருள் காணப்படுகிறது. ‘பதரும்’ என்பதற்கு ‘wave like’ – அலையாடும் என்று பொருள் கிடைக்கிறது. நெறி நெற்றியாக இருக்கும்.
தழுத்த – தழைத்த.

எளிய தமிழில் சொன்னால்

எனக்கு வழி தவறிப் போகாமல் அருள் செய்யம்மா
என் மனதில் மண்ணும் நீருமாக உருக் கொண்டு
எழுந்தவளே.. கருமேகம் அலையசையும்
நெற்றி கொண்ட, தழைத்த கருங்குழலி!
சந்திரன் ஏங்கும் வண்ணம்
அழகுடைய பிறைநுதல் கொண்டவளே..
சுழலும் உலகோர் வணங்கும் குழலி
புலித்தோல் துகிலாய் உடுத்த அரன் நெற்றிக் கண் பட்டு
அழிந்த மலர்வில்லாளன் மன்மதன் போல் அழகோடு
அவதரித்த இளையவளான மலைமகளே.

கவனித்துப் படித்தால், தமிழ் மலையாளமாக மெல்ல மாறும் பரிணாம நிகழ்வின் கூறுகள் தெரிகின்றன –

1) ஐகாரம் அகரமாவது – ‘பிழை’ என்பது ‘பிழ’ யாவது; ‘வில்லியை’ என்பது ‘வில்லியெ’ ஆவது

2)”கின்ற’ சிதைவது – ‘சுழலின்ற’ (சுழல்கின்ற), ‘வணங்கின்ற’ (வணங்குகின்ற) – இது பின்னாட்களில் ‘சுழலும்’, ‘வணங்கும்’ என்று இன்னும் எளிமைப் படுத்தப் பட்டிருக்கிறது.

3) அகரம் எகரம் ஆவது – பட்டு என்பது பெட்டு என்றாகிறது.

4) சொல்லாக்கம் – செருப்பம் – ‘இளமை’ என்ற பொருளில். ‘சிறு’ – ‘செறு’ – ‘செருப்பம்’ . வல்லினம் இடையினமானதற்குக் காரணம் தெரியவில்லை. செறு என்பதற்கு ஏற்கனவே போர் என்ற பொருள் இருந்ததாலோ? பேச்சு மொழியிலிருந்து வந்திருக்கலாம்.

5) வெப்பு – இது வெற்பு என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு. தற்கால மலையாளத்தில் வெப்பு பெரும்பாலும் சமையல் செய்வதைக் குறிக்கும் –

அரிவெப்பு – வைத்தலிலிருந்து வைப்பு வந்து அது வெப்பாகி இருக்கலாம். அல்லது வெப்பப் படுத்துவதாலா?

மனிதன் சமுதாயத்தோடு கலந்து உறவாட ஏற்பட்ட ஊடகமான மொழி ஒரு static சமாசாரமாக இல்லாமல் வளர்சிதைமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு மேலே கண்டது உதாரணம்.

மொழியை ஊடகமாகப் பார்க்கும் போது வியத்தலும், இகழ்தலும் நீங்கிப் போகிறது. ஊடகம் என்பதால், ஆதிக்கம் செய்கிறவர்கள் மொழியை வழங்குவதிலும், அடிமைப் படுத்தப் பட்டவர் வழங்குவதிலும் (வழங்க வைக்கப்பட்டதிலும்) புலப்படும் வேறுபாடுகள் சமூகவியல் ஆய்வுக்கு உரியன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன