ஹாலிபேக்ஸ்

என் ‘ராயர் காப்பி கிளப்’ கிண்டில் மின்நூலில் இருந்து –

நான் இங்கிலாந்தில் யார்க்ஷயரில் கிரிக்கெட்டால் பிரசித்தமான லீட்ஸ் பக்கம் ஹாலிபாக்ஸ் என்ற மலைப்பிரதேச நகரத்தில் இருக்கிறேன்.

பாரதியாரின் சின்னச் சங்கரன் கதையில் வரும் கவுண்டனூர் மாதிரி, பத்து பதினைந்து நிமிஷம் காலாற நடந்தால் ஊர் முழுக்க வலம் வந்து விடலாம். மலைச்சரிவில் ஏற்றமும் தாழ்ச்சியுமாக இருக்கும் இந்த இடத்தில் எதற்கு இத்தனை காரும் வேனும் என்று தெரியவில்லை.

ஊரில் இன்னொரு விசேஷம் எங்கே திரும்பினாலும் பாக்கிஸ்தானியர்கள். இதில் பலபேர் சொல்லி வைத்தாற்போல் தந்தூரி ரெஸ்டாரண்ட் வைத்திருக்கிறார்கள். அல்லது வீடியோ பார்லர் வைத்து பொழுது சாய்ந்தபோது கடையை ஒருக்களித்துத் திறந்து வைத்துக் கொண்டு நல்ல வீடியோ, திருட்டு வீடியோ (இந்திப் படம்) எல்லாம் வாடகைக்குத் தருகிறார்கள். அதுவும் இல்லாவிட்டால் குண்டூசி, கோணி ஊசி, செக்ஸ் புத்தகம், பீடிங்க் பாட்டில் என்று சகலமானதையும் கொட்டிக் குவித்து அடுக்கி வைத்து இண்டு இடுக்கில் கடை வைத்திருக்கிறார்கள்.

சாயந்திரம் ஊரே உறங்கப் போய்விடும் போது இவர்கள் கடைகளும் இந்தி சினிமாப் பாட்டு ஒலிக்கும் தந்தூரி ஓட்டல்களும் தான் நம் மாதிரி சாமானியர்களுக்காகத் திறந்து இருக்கின்றன.

“இங்கே சில பங்களாதேஷிகள் கடை வச்சிருக்காங்க சார் .. ஜாக்கிரதையா இருங்க அவங்க கிட்டே .. ஏமாந்தா பணத்தைச் சுருட்டிட்டுப் போயிடுவாங்க ..”

எனக்கு உபதேசம் செய்த பாக்கிஸ்தானி நண்பரைப் போலவே மற்றவர்களும் இங்கே மைனாரிட்டியான பங்களாதேஷ் காரரகளை சந்தேகக் கண்ணோடு தான் பார்க்கிறார்கள்.

நண்பர் நசீர் உசைன் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை பாக்கிஸ்தான் போகிறாராம்.

இரண்டு மாதம் கழித்துப் போகப் போகிறார். அங்கே போனதும் இந்திய நண்பர்களைப் பற்றி என்ன நினைப்பார்? நான் ஊருக்குப் போனதும் அவரைப் பற்றி என்ன நினைப்பேன்?

ஊரில் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் ஏகமாக இருப்பதால், முடிந்த அளவு தண்ணீரை அதிகமாகச் செலவழியுங்கள் .. சார் தண்ணி குடியுங்க.. மேடம் தண்ணி குடியுங்க என்று காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சாத குறையாகக் கோரிக்கை விடுத்து, வேண்டி விரும்பி வற்புறுத்தி விளம்பரம் செய்கிறது தண்ணீர் வாரியம். அவர்களை ஒரு வாரம் சென்னைக்கு அனுப்பி வைத்து வாழ்க்கை வசதிகளை அனுபவித்து விட்டு வரச் சொல்ல வேண்டும்.

சிங்கப்பூரோடு ஒப்பிட்டால் யார்க்ஷயர் கவுண்டியில், முக்கியமாக ஹாலி•பாக்ஸில் சுத்தம் குறைவுதான்.

பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை அப்படியே அணைக்காமல் தரையில் போட்டுவிட்டு பஸ் ஸ்டாண்டில் நுழையும் மிடில் ஏஜ் வெள்ளைக்காரி மாமிகள் (‘இப்ப என்னாங்கறே’ என்று ஒரு பார்வை), சூயிங்கம்மை உரித்துத் தெருவில் காகிதத்தை எரிந்து விட்டு வரிசை கலையாமல் பள்ளிக்கூட வேனில் ஏறும் பிள்ளைகள், பர்கர் கிங்கில் ‘டேக் அவே’ யாக வாங்கிய மீடியம் சைஸ் ஆமை போன்ற பர்கரைக் கடைக்கு வெளியில் புல்தரையில் காத்தாட உட்கார்ந்து நல்ல வெள்ளை, அழுக்கு வெள்ளை, சோகை வெள்ளை போன்ற நடமாடும் ஒரே நிறப்பிரிகையைப் பார்த்தபடி மொச்சு மொச்சு என்று தின்று விட்டுத் தெருவோரம் பிளாஸ்டிக் டப்பாவை எறிந்து புறங்கை வரை நக்கிக் கொண்டு நடக்கிற இளைஞர்கள் என்று நம் ஊருக்குச் சற்றும் குறையாத விதத்தில் தூய்மையைச் சீராகக் கடைப்பிடிக்கிறார்கள்.

அம்மணிகள் குடித்து வீசி எறிந்த சிகரெட் துண்டுகளாலும், எல்லா விதக் காகிதம், பிளாஸ்டிக்கினாலும் சாயந்திரம் ஆறு மணிக்கு நடைபாதை நிரம்பிக் கிடக்கிறது. தெருமுனையில் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு குத்த வைக்கிறவர்கள் தான் யாரும் தட்டுப்படவில்லை.

திங்கள்கிழமை அலுவலகத்தில் தாமதமாக நுழைந்த நம்ம ஊரு நண்பர் திருப்பதி லட்டு பாக்கெட்டை நீட்டினார். இங்கிலாந்தில் எங்கே ஏடுகொண்ட்ல வாடா என்று அவரைப் பார்க்க, லட்டோடு இலவச இணைப்பாகத் தன் சொந்தக் கதை சோகக் கதையைக் கூறியதன் சுருக்கமாவது –

பக்கத்தில் பர்மிங்க்ஹாமில் வெங்கடாஜலபதி கோயில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, ஒரு ரயில்வே டிக்கட் முப்பத்தேழு பவுண்ட் வீதம் வாங்கி (இதுவே ஒரு மாதம் முன்னால் ரிசர்வ் செய்தால் இருபது பவுண்ட் தான் கட்டணம்), பந்து மித்திர சகிதமாக அங்கே போய் ஞாயிற்றுக்கிழமையன்று தரிசித்துவிட்டுப் பிரசாதத்துடன் சாயந்திரம் திரும்பக் கிளம்ப, லீட்ஸ் வரைக்கும் டிராக்ஷனில் கோளாறு என்று ரயில் நின்று நின்று வந்து வீட்டுக்கு வந்து சேரும்போது நடுராத்திரி கழிந்து விட்டதாம். ஒன்றரை மணி நேரம்தான் பிடிக்கும் ரயில் பயணம் இது.

நம்ம ஊரே தேவலை சார் என்றார். போதாக்குறைக்கு அவர் போனதற்கு முதல்நாள் தான் ரயில்வே ஸ்டிரைக்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்ன என்றால், இங்கே ரயில்வே தனியார் வசம் உள்ள சேவை.

“என்ன சார், டி.வி வாங்கி நிம்மதியாக சினிமா பார்க்கலாம்னு பார்த்தால், டிவி லைசன்ஸ் வாங்கணுமாம். இல்லாட்ட வீட்டுக்குள்ளே நுழைஞ்சு கவர்மெண்டு ஆளுங்க ஜப்தி பண்ணிட்டு அபராதமும் போட்டுட்டுப் போயிடுவாங்களாம்” என்று அலுத்துக் கொள்கிறார் இங்கே புதிதாக வந்த இன்னொரு நண்பர்.

பின்னே என்ன, மூணு மாசத்துக்கு ஒரு தடவை முப்பது பவுண்ட் டி.வி லைசன்ஸ், கேபிள் டிவிக்கு மாதாமாதம் அழ வேண்டியது என்று செலவு அதிகம்தான்.

சின்னவயதில் ஊரில் ரேடியோ லைசன்ஸ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று போஸ்ட் ஆபீஸில் பணம் கட்ட வீட்டில் என்னைத்தான் விரட்டுவார்கள்.

“ஏண்டா உங்க வீட்டிலே இன்னொரு மர்பி ரேடியோ இருக்குமே ..”

போஸ்ட் மாஸ்டர் நாயுடு நைசாகத் தன் நினைவாற்றலைப் பறைசாற்றிக் கெத்தான கவர்மெண்ட் உத்தியோகஸ்தனாக நடந்து கொள்வார்.

“அது ரிப்பேர் மாமா”.

“அப்பக் கொண்டு வந்து எங்கிட்டே காமிச்சுட்டு சர்ட்டிபிகேட் வாங்கிடணும் .. இல்லாட்ட அதுக்கும் சேர்த்து லைசன்ஸ் வாங்கணும் ..”

ஆகாசவாணி .. செய்தி அறிக்கை .. வாசிப்பது பஞ்சாபகேசன் என்று டெல்லியில் இருந்து ஏகப்பட்ட கொரகொரப்புக்கு நடுவே இந்திரா காந்தி ராஜமானியத்தை ஒழித்ததையும், உச்சி வெய்யில் நேரத்தில் நிலைய வித்துவான் கோட்டு வாத்தியம் வாசிப்பதையும் தாத்தா சந்தோஷமாகக் கேட்க எத்தனை ரேடியோவுக்குக் கிஸ்தி கட்டுவது கட்டபொம்மா என்று எனக்கு இன்னும் முளைக்காத மீசை துடிக்கும்.

இப்போது கட்டை மீசை வைத்திருக்கிறேன். ஆனால் என் டி.வி லைசன்ஸைத் தங்கி இருக்கும் ஹோட்டல்காரர்கள் கட்டி விடுவதால் அது துடிப்பதில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன