1975 நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி – எமர்ஜென்சி கால மேன்ஷன் வாழ்க்கை

“என்ன ஆச்சு போத்தி, வாசல்லே நின்னு முழிச்சிட்டு இருக்கே?’

என் அறைக்குத் தெற்கே அடுத்த ரூம்காரரான நாராயணசாமி ஸ்கிப்பிங் கயிறில் தாண்டிக் குதித்துக்கொண்டு தன் அறைக்குள் இருந்தபடிக்கே விசாரித்தார்.

காலை ஏழு மணிக்கு எண்ணூரில் வேலைக்குப் போய் இரவு ஏழுக்கு வருகிறதால் ராத்திரி படுக்கும் முன் ஸ்கிப்பிங்க் ஆடுகிற உடல் பயிற்சி அவருக்கு விதிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். ராத்திரியில் ஸ்கிப்பிங் ஆடி ஆடி அவர் நடக்கும்போதே குதித்துக் குதித்துப் போவதாகத் தான் தோன்றும். என்ன சாப்பிட்டாலும் சதையே போடாத பூஞ்சை உடம்பு அவருடையது. மூக்கு இந்திரா காந்தி மாதிரி நீளம். பழைய எகிப்து ஜனாதிபதி நாசர் கூட நீண்ட மூக்கர் தான். ஆனால் அவரை யாரும் பதவி நீக்கவில்லை. நாசர் சாவியைத் தொலைத்திருக்க மாட்டார். நாராயணசாமியும்.

“நாராயணசாமி சார், சாவியை ரூம் உள்ளே விட்டுட்டேன். என்ன பண்றது?”

பெல்காவி டிரான்சிஸ்டரைக் கட்டிச் சுமந்தபடி என் அறைக்குள் ஜன்னல் வழியே பார்க்க, குல்கர்னி பின்னாலேயே வந்து உள்ளே டார்ச் அடித்தார்.

“எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று அமெரிக்காவோ, பிரிட்டனோ உற்சாகமாகச் செய்தி சொல்ல, நான் குழப்பத்தோடு அறைக்குள் பார்த்தேன். கதவு ஓரமாக சின்ன மேஜையில் சாவி பத்திரமாக இருக்கிறது.

நாராயணசாமி வந்து ஜன்னல் கம்பிகளுக்குள் கையை நீட்ட குட்டி மேஜைக்கு நாலு அங்குல உயரத்தில் அவர் விரல் அலை பாய்கிறது. பழைய எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் மூக்கு போல் விரல் கொஞ்சம் நீளமாக இருந்தால் சாவியைக் கைப்பற்றி இருக்கலாம்.

நாராயணசாமியும் ஸ்கிப்பிங்க் கயிறை ஓரமாகப் போட்டு விட்டு அவருடைய டிரான்சிஸ்டர் ரேடியோவில் பிபிசி போடுகிறார்.

“மொரார்ஜி தேசாய் போயாச்சு”.

அவர் சொன்னதைக் கேட்க நடுக்கம் வருகிறது. அதுவும் அனாதையாக அறைக்கு வெளியே நின்று மொரார்ஜியை நினைக்கும் சோகம். சுட்டுட்டாங்களா அவரை? கொலையும் செய்வார் அந்தம்மாவா?

“எழுபத்தேழு வயசு. அவரை ஜெயில்லே போட்டுட்டாங்க. அநியாயம்”,

குல்கர்னி குரலில் ஆத்திரம் புலப்பட்டது. ரொம்ப சாந்தமான மனிதர் அவர்.

கோவிந்தனுக்கு ஃபோன் செய்து பார்க்கலாமா? நாராயணசாமி தன் பர்சில் தேடி ஒவ்வொன்றாக அவர் அறையில் தரையில் போட்ட பொருட்கள் – தினசரி காலண்டர் காகிதத்தில் மடித்த கோவில் வீபுதி. எழும்பூர் ரயில்வே ஜங்க்ஷன் பிளாட்பாரம் டிக்கட். மின்சார ரயில் சீசன் டிக்கெட். கோளறு திருப்பதிகம் ஒன்றும் பின்னால் பனியன், ஜட்டி விளம்பரமுமாக சிறு அட்டை. மடாதிபதி படம். நுணுக்கி அச்சடித்த புகையிலைக் கம்பெனி கேலண்டர். பஸ் டிக்கட். சின்ன, மினிக்கும் மினியாக பாக்கெட் சைஸ் நோட்புக்.

அதுதான் என்றார் நாராயணசாமி. எடுத்துப் பிரித்து கோவிந்தனை அழைக்க, அவருடைய டெலிபோன் அவுட் ஆப் ஆர்டர். நாசமாகப் போகட்டும் அதுவும் அவரும்.

“வாஜ்பாய் அரெஸ்டெட். அத்வானியும் உள்ளே தான்”. பெல்காவி சொன்னார்.

“கலைஞர் கருணாநிதி?”

அந்தக் குழப்பமான நேரத்திலும் எனக்குக் கேட்கத் தோன்றிய பெயர் அதுதான்.

“இன்னும் இல்லை” என்றார் நாராயணசாமி. அந்தப் பதில் மற்ற எதையும் விட மிரட்டலாக கதிகலக்க வைத்தது.

அது இருக்கட்டும். அறைக்குள் எப்படிப் போக? நாளைக்கு எப்படியாவது சமாளித்து, கோவிந்தன் வீட்டுக்குப் போய், எந்த அட்ரஸோ தெரியாது, அவரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கூட்டி வந்தால் கதவு திறக்குமா? என் ஒரு வருடம் சம்பளம் முழுக்க அவருக்கு அபராதமாகத் தர வேண்டி வருமா? பாண்டி பஜாரில் ட்யூப்ளிகேட் சாவி பண்ணுகிறவர் கீதா கபே அருகே மரத்தடியில் உட்கார்ந்திருப்பாரே. அவரைக் கூப்பிட்டால் செய்து கொடுப்பாரா? பூட்டு இருந்தால் சாவி போடுவார். கதவிலேயே பதிந்த பூட்டுக்கு? தப்புக் காரியமா அப்படி சாவி போடச் சொல்வது?

“ஆகாசவாணி. ஒரு முக்கிய அறிவிப்பு. நாளை, ஜூன் 26-ந்தேதி, வியாழக்கிழமை, காலை ஏழு மணிக்கு இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். ஆகாசவாணியின் அனைத்து நிலையங்களும் இந்த உரையை அஞ்சல் செய்யும். அடுத்த நிகழ்ச்சி, வாத்திய கோஷ்டி”.

நான் கதவில் சாய்ந்து கொண்டு நடையில் காலை நீட்டி ஓய்ந்து போய் உட்கார்ந்தேன். எமெர்ஜென்சி என்றால் இருப்பிடத்துக்குள் போக முடியாமல் தவிக்கிற ராத்திரி. இப்படித்தான் என் அகராதியில் எழுதப் படும்.

திடீரென்று ராத்திரியின் அமைதியைக் குலைத்துக் கொண்டு, தன் அறைக்கு உள்ளே இருந்து நாற்காலியைத் தூக்கிப் போட்டுச் சுவரில் அடித்து ஓவென்று அலறினார் குல்கர்னி. ”பாவி, மகா பாவி” தெரு வரைக்கும் அந்தத் தீனமான அலறல் எதிரொலித்தது. இந்திரா புகைப்படம் அட்டையில் போட்ட ஒரு கன்னட வாரப் பத்திரிகை உள்ளே இருந்து தரையில் வந்து விழுந்தது. அதை உக்ரமாகக் காலால் மிதித்தபடி அரைத்துத் தேய்த்து நசித்தார் குல்கர்னி.

“இட்ஸ் ஆல் ரைட், இட்ஸ் ஆல் ரைட்”, பின்னாலேயே பெல்காவி குரல் ஆதரவாக ஒலித்தது.

”ஜெயப்பிரகாஷ் நாராயண் உடல் நலம் சரியில்லை என்பதால் ஆஸ்பத்திரியில் காவலில் வைக்கப் படலாம்”. பெல்காவி எங்களுக்குச் சொல்லியபடி குல்கர்னி தோளில் தட்டி சமாதானப் படுத்தினார்.

நேரம் கெட்ட நேரத்தில் நிலைய வித்வான் தில்ரூபா வாசித்துக் கொண்டிருந்தார் ஏதோ ஸ்டேஷனில். மற்றப்படி எல்லா அலைவரிசையிலும் கொரகொரவென்று ஒரு சத்தம் வார்த்தையின்றி பயமுறுத்தி எமெர்ஜென்சித் தகவல் கொடுத்தது. அந்த ராத்திரி தொடங்கி பிபிசி, இந்தியாவின் பொய் சொல்லாத வானொலி ஆனது.

”போத்தி, உள்ளே வந்து படுங்க, காலையிலே பார்க்கலாம். உங்க ரூமுக்குள்ளே போக வழி பிறந்துடும். அது நிச்சயம். ஆனால், நாளைக்கு தேசம் என்ன ஆகுமோ, அது தெரியாது”.

நாராயணசாமி இன்னொரு முறை டிரான்சிஸ்டரின் குமிழைத் திருப்ப, சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்கள் அசோக் மேத்தா, மது தந்த்வாதே அரஸ்ட் ஆனார்கள்.

“ஒவ்வொரு தடவை ரேடியோ வைக்கறபோதும் புதுசா யாராவது தலைவர் கைதான செய்தி. இனிமேல் நான் கேட்கப் போறதில்லே. விடிஞ்சுதான்”, என்றார் சலிப்போடு நாராயணசாமி.

நான் தூக்கம் பிடிக்காமல் அடுத்த சில மணி நேரங்கள் நாராயணசாமி சார் அறையில் வெறும் தரையில் புரண்டபடி கிடந்தேன். நாளைக்குக் காலை மாடிப்படி நிறைத்து, தெருவிலும் உஸ்மான் ரோடிலும் பஸ் ஸ்டாண்டிலும் ரங்கநாதன் தெருவிலும், மேற்கு மாம்பலத்திலும் அகஸ்தியர் கோவிலிலும் இந்தி பிரசார சபைக் கட்டடத்துக்குள்ளும், எதிரே லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் இயங்கிய தீரர் சத்தியமூர்த்தியில் சுந்தரா மாளிகையிலும் ராணுவம் நிற்கும். நான் ஆபீஸ் போக ஸ்கூட்டருக்குப் போட பெட்ரோல் கிடைக்காது. பஸ் கிடைக்காமல் ராணுவம் அவற்றில் நிறைந்து வெங்கட்நாராயணா வீதியில் வீறிட்டு ஓடும். நடந்தே ஆபீஸ் போவேன். பச்சைச் சீருடை உடுத்திய சிப்பாய்கள் கத்தி பொருத்திய துப்பாக்கிகளைக் காட்டி வழியில் போக விடாமல் தடை செய்வார்கள். காமராஜர், மொரார்ஜி தேசாய், ஜெயப்ரகாஷ் நாராயணன் என்று முதியவர்களை விலங்கிட்டுத் தெருவில் இழுத்துப் போவார்கள்.

புரண்டு படுத்தேன். இடுப்பில் துண்டும் இளைத்த உடம்புமாக அறைக்கு வெளியே நிற்பது யார்? காந்தியா? தாடி வைத்த காந்தி. எல்லைக் காந்தியா? நாடே ஒழுங்கைக் கடைப்பிடிக்க நேரம் வந்து விட்டது என்கிறார் அவர். எழுந்து நிற்கச் சொல்கிறார் என்னை. எழுந்து நிற்க முயற்சி செய்கிறேன். முடியவில்லை. சோம்பலாக இருக்கிறது. தளர்ச்சியாக இருக்கிறது. பயமாக இருக்கிறது. விடியப் போகிறது என்று பல குரல்கள் சேர்ந்து ஒலிக்கின்றன. அப்புறம் அதையே கூட்டமாகச் சேர்ந்து பாடுகின்றன. இருட்டில் புறாவின் இறகுச் சிலிர்ப்புகள். கைகளின் ஓரம் கழுகின் நகங்கள். அந்த நகங்களிடம் இருந்து தப்ப இன்னும் புரண்டு படுக்கிறேன். உடன் அனலாகக் கொதிக்கிறது.

நான் எழுந்தபோது விடிந்து வெகு நேரமாகி இருந்தது. மெல்ல அறைக்கு நடந்து கதவைத் தள்ளினேன்.

திறந்து கொண்டது.

நேற்று அதை யாரும் முயற்சி செய்யவில்லை. சாவி தேடுவதில் நேரம் தொலைந்து போனது. எமர்ஜென்சி பயத்திலும் என் நேரம் கடந்து போயிருந்தது. பயத்தைக் கொன்று போடு, எந்தக் கதவும் தடுத்து அடைத்து இருக்காது. தள்ளினால் திறக்கும் அதெல்லாம். நம்பிக்கை எழுந்து வந்தது.

”ஜெயப்ரகாஷ் நாராயணை இன்னிக்கு காலையிலே ரெண்டு மணிக்கு அரஸ்ட் பண்ணி தில்லி பார்லிமெண்ட் வீதி போலீஸ் ஸ்டேஷன்லே வச்சிருக்காங்களாம். வினாச காலே விபரீத புத்தி. நான் சொல்லலே. அவர் தான் சொன்னதா பிபிசி நியூஸ்”, குல்கர்னி படி இறங்கிப் போனார்.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த காலை ஏழு மணி. உள்ளே போய் டிரான்சிஸ்டரை ஆன் செய்தேன்.

“இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியவர்கள் இப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்”.

கேட்கத் தொடங்கினேன்.

1975 நாவல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன