கும்பகோணம் – 1935 ராமோஜியம் நாவலில் இருந்து

an excerpt from the forthcoming novel ‘RAMOJIUM’ – Kumbakonam 1935

”என்ன பேசினாலும் கோபப்பட வேணாம், பீமா நல்லவன், முதலில் கோபப்படுவான்.. அப்புறம் வழிக்கு வந்துவிடுவான். திட்டினாலும் பொறுமை காக்கவும்” என்று ஐந்து நிமிட உபதேசம் செய்து ஓடினாள் என் ரத்னா.

இரண்டு நாள் கழித்து பிடாரிகுளம் தெருவில் சகலமானவர்களுக்கு டீ உபசாரம் நடத்திக் களைத்து நடந்து வருகிறபோது வாடகை சைக்கிளில் கூடவே வந்தான்.

வாங்களேன், காத்தாட போய்ட்டு வரலாம், பின்னாலே ஏறிக்குங்க என்றான் நைச்சியமாக. விட்டோபாவை போகச்சொல்லி விட்டு நான் அவனோடு பட்டீஸ்வரம் கோவிலுக்கு தரிசனம் செய்யப் போனேன்.

ஐந்து மைல் சைக்கிள் மிதித்துப் போனான். எதிர்காற்று வேறே. வரும்போது நான் சைக்கிளை ஓட்டி வரவேண்டும் என்று தீர்மானித்தேன், அவன் அனுமதித்தால். ரத்னா பின்னால் இருக்க சைக்கிளில் அவளோடு தள்ளுகாற்றில் போகும் பயணத்தைக் கற்பனை செய்ய சுகமாக இருந்தது.

பட்டீஸ்வரம் என்ற மழபாடியில் பெரிய புராதனமான கோவில். நல்ல தரிசனம். துர்க்கை சந்நிதியில் சீக்கிரம் கல்யாணம் முடிந்து ரத்னாவோடு அம்மனை தரிசிக்க வர அருள் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தேன்.

அங்கிருந்து திரும்ப வரும்போது கோபுரவாசலில் பீமாராவ் என்னிடம் கேட்டான், “ரத்னாவை கல்யாணம் பண்ணிக்க உத்தேசமா?”.

இத்தனை வெளிப்படையாகக் கேட்டபிறகு பதில் சொல்ல தயக்கம் ஏன்? ஆமா, அப்படித்தான் என்றேன். டீ வித்து குடும்பம் நடத்த முடியுமா என்று நக்கலாக அடுத்த கேள்வி.

”சார், நான் டீ சாப்பிடற பழக்கத்தை மகா ஜனங்கள் கிட்டே அதிகப்படுத்த பீல்ட் லெவல்லே வேலை செய்யற சர்க்கார் உத்தியோகஸ்தன். வாழ்க்கை பூரா பீல்ட் ஆபீசரா இருக்கப் போறதில்லே. நீங்க நியூஸ்பேப்பர் ஆபீஸ்லே என்ன தகுதியோட சேர்ந்து என்னவா இருக்கீங்களோ அதை விட மேலே எனக்குத் தகுதி. முழுசா எஸ் எஸ் எல் சி பாஸ் பண்ணியிருக்கேன்.சர்வீஸ் கமிஷன் எழுதியிருக்கேன். ரிசல்ட் எப்போவும் வரலாம். அதுக்கு முன்னாடி டீபோர்ட் கவர்மெண்ட் வேலை. இங்கே இருந்தாலும் சர்வீஸ் கமிஷன் பாஸ் பண்ணி தாசீல்தார் ஆபீஸ்லே குமாஸ்தா ஆனாலும் சம்பளத்துக்கு குறைச்சல் இல்லே. ரத்னாவை, அவளும் நானுமா ஒரு குடும்பத்தை பராமரித்து முன்னே கொண்டுவர என்னால் முடியும்”.

இந்த நீளமான பேச்சை நானும் ரத்னாவும் கிட்டத்தட்ட பத்து தடவை ஒத்திகை பார்த்திருந்ததால் பேச்சு சீராக வந்து விழுந்தது.

அவன் கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னான் –

“ரத்னாவை நான் சுத்த மராட்டிக்காரனுக்கு கல்யாணம் பண்ணித் தரணும்னு மனசிலே நினைச்சிருக்கேன்”.

நான் சிரித்தேன். அண்ணியோட அப்பா பேர் என்ன? கேட்டேன்.

”சுமத்ராவை எப்படி பழக்கம்?”

“ நேற்று காலையிலே சக்ரபாணி கோவிலுக்கு ரத்னா கூட்டி வந்திருந்திச்சு..”

”நெனச்சேன் .. சுமித்ரா ஹர்சரண்பிர் சிங் ரானா வோட மகள். சுமித்ரா கவுர்”.

“அந்த சர்தார், அவரோட மகளான சர்தாரிணியை இன்னொரு சர்தாருக்குத்தான் கட்டி வைப்பேன்னு சொல்லியிருந்தா?”

”அதுலே என்ன கஷ்டம். அவர் சொல்லியிருந்தா நான் சர்தார் ஆகியிருப்பேன். பெயர் கூட ரெடியா வச்சிருந்தேன். க்ருபால் சிங்”.

அவனும் ஒத்திகை பண்ணியிருப்பான் போல. என் தோளில் தட்டி அவன் சிரிக்க, இறுக்கம் தளர்ந்து நானும் சிரித்தேன்.

அடுத்த நாள் ரத்னாவை வழக்கம்போல் தனியாகச் சந்திக்க முடியவில்லை. கங்காவோடு அவளும் சுமித்ரா அண்ணியும் கடைத்தெருவுக்கு பாவை விளக்கு வாங்க வந்தபோது ஒரு நிமிடத்தில் ரத்னா தன் இச்சல்கரஞ்சி விலாசத்தை எழுதிய துண்டு சீட்டை கங்கா மூலம் கை மாற்றினாள். நான் அப்போது ராமாராவ் மாமா மளிகைக் கடையில் டீத்தூள் பாக்கெட்கள் சில்லறை விற்பனை கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.

விடிகாலை ரயிலில் ரத்னா மெட்றாஸ் போனபோது நடுநிசிக்கே ஸ்டேஷனில் போய் உட்கார்ந்து விட்டேன். கலைந்த தலையும் களைத்த கண்ணுமாக இருந்த என்னைப் பார்த்து ரத்னா கண் கலங்கினாள். பீமா அசந்திருந்த ஒரு வினாடி சுமித்ரா கண்காட்ட அருகில் நின்ற என்னிடம் காதில் சொன்னாள் ரத்னா –

“என் ராஜா.. சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிப் போயிடு.. உன்னையே நினைச்சிட்டிருப்பேன்”.

“வந்துடறேண்டா. அழாம போ. அப்புறம் அந்த முகம்தான் சதா நினைவிலே எனக்கு வரும்”, என்றேன் கண் நிறைந்து நிற்க.

அபத்தமாகத் தெரியும். ஆனால் இந்த வார்த்தைகளின் ஆத்மார்த்தம் வேறெதிலும் வராது.

ரயிலோடு கிறுக்கன் போல் அவுட்டர் வரைக்கும் ஓடினேன். அன்றைக்கு் உடம்பு சரியில்லை என்று விட்டோபாவுக்கும் லீவு கொடுத்து விட்டு நானும் வேலைக்குப் போகவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன