ராமோஜியம் நாவலில் இருந்து – கடிதங்கள் பகுதி கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு 1945-இல் எழுதிய கடிதத்திலிருந்து.

ராமோஜியம் நாவலில் இருந்து
– கடிதங்கள் பகுதி

கும்பகோணம் விட்டோபா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.

1945-ல் தமிழில் எழுதப்பட்டது இந்தக் கடிதம்
//

சிக்கனம் பேணுவோம் என்று வரும் சர்க்கார் விளம்பரத்தில் அடுத்து சொல்கிறது வீட்டில் நிம்மதியை ஒரு வழி பார்த்து விடும்.

வீட்டில் அதிகமான அறைகளை வாடகைக்கு விடுங்கள். இது அந்த சிக்கன யோஜனை.

என் வீட்டில், கும்பகோணம் தெருவில் பல வீடுகளில் உள்ளது போல திண்ணையோடு வாசல், ஒரு ரேழி, அங்கே கேமிரா அறை என்கிற சின்ன ரூம், ஹால், ஹாலுக்கு தெற்காக ஸ்டோர் ரூம், இது தவிர மாடியில் சின்ன ஹால், மாடி ஓரமாக சேந்தி என்ற கண்டாமுண்டா போட்டு வைக்கும் இடம், சமையல்கட்டு, ஒட்டி பின்கட்டு நடை, பாத்ரூம், கிணற்றடி, தோட்டம், கக்கூஸ், கொல்லைக்கதவு இப்படித்தான் இருக்கும். நான், வீட்டுக்காரி, ரெண்டு மகன், ஒரு மகள், ஒரு வயோதிகத் தாயார் இப்படியான குடும்பத்துக்கு இதில் எதெல்லாம் புழங்குவதற்கு வேண்டியதை விட அதிகமான இடம்? யார் அதைத் தீர்மானிப்பது?

திண்ணையை வாடகைக்கு விட்டுவிடலாமா? யாருக்கு? அங்கேயும் ஒரு குடும்பத்தைக் குடிவைத்தால் நாம் பால் வாங்க, காய்கறி வாங்க வெளியே போகும்போது அவர்கள் குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்ன சொல்லி நடந்து போக வேண்டும்? அவர்கள் குளிக்க கொள்ள காலை விசர்ஜனம் முடிக்க எங்கே போவார்கள்? எங்கள் கக்கூசையும் பாத்ரூமையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டால், எங்களுக்கு அத்தியாவசியமான இடம் குறையுமே. சமையலை அவர்கள் திண்ணையிலேயே வைத்துக் கொள்வார்களா? செய்தாலும் செய்வார்கள். திண்ணைக்குக் குடி வந்தவன் வாசல் படியில் கூட குமுட்டி அடுப்பு வைத்து காப்பி போட்டுக் கொள்வான். வாடகை முன்னே பின்னே ஆனாலும் சதா திண்ணையைத் தாண்டி உள்ளே போகும்போது காப்பி வாசனை மூக்கில் படும்.

இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்ள நான் ஆசைப்படுவது, எனக்கே திண்ணையில் டீ போட்ட அனுபவம் உண்டு. அதுவும் ஒரு வீட்டில் இல்லை, தெருத்தெருவாக பல வீட்டுத் திண்ணையிலும். அந்தக் கதையை சாவகாசமாக ஒருநாள் எழுதி அனுப்புகிறேன் சமூகம் படித்து ரசிக்க.

சரி திண்ணைக் குடித்தனத்தார் குடும்பமாக இல்லாமல் தனிநபராக இருந்தால் என்ன செய்வார்? பிரம்மசாரிப் பையன் வாசலில் பப்பரப்பே என்று சகலத்தையும் திறந்து போட்டுக்கொண்டு வாளியில் தண்ணீர் வைத்துக்கொண்டு ஸ்நாநம் செய்வது நம் வீட்டளவில் மட்டுமில்லாமல் தெருவுக்கும் அபக்யாதி பெற்றுத் தருமே.

வாசல் திண்ணை பிரம்மசாரி குளித்து விட்டு வாசலிலேயே கொடி கட்டி லங்கோட்டை உலர்த்தினால் அதைக் கண்டும் காணாமல் வயசுப் பெண்டுகள் எப்படிப் போகவர?

ரேழியில் ரெண்டு பேர் ஜோடியாக நடந்து வந்தாலே எதிரில் வருகிற யாரும் பின்வாங்கி ஒருக்களிச்சு நிக்க வேணும். இதிலே அங்கே வாடகைக்கு விட சௌகரியப்படாது. ஹால், ஸ்டோர் ரூம், சமையல்கட்டு, பின்கட்டு நடை, பாத்ரூம், தோட்டம் எதுவும் வாடகைக்கு விடத் தோதுப்படாதே. இப்படி ஒரு உருப்படியில்லாத யோஜனையை இங்கத்திய சர்க்கார் சொல்ல, லண்டனில் சர்க்கார் தூண்டுதல் காரணமா?

இன்றைக்கு என் வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் இடத்தை வாடகைக்கு விடச்சொல்லி நச்சரிக்கும் குசும்பன்கள் நாளைக்கு உங்கள் மேன்மை பொருந்திய மகாராணியும் நீங்களும் சௌகரியம்போல் எல்லா சௌபாக்கியங்களும் கொண்டு வசித்து வரும் பக்கிங்ஹாம் அரண்மனை என்ற க்ரஹத்தில், இப்படி நூறு பேரை சிக்கன நடவடிக்கை என்று குடியேற்றினால் நீங்கள் என்ன பாடு படுவீர்கள்.

ராஜாவும் ராணியம்மாளும் காலை பசியாற, அங்கத்திய சாப்பாடாமே, சொல்லக் கேள்வி, பன்றி இறைச்சியை நீள நீளமாகப் பொரித்து வைத்த சாசேசு என்றோ எதோ பெயர் உள்ள அந்த காலை ஆகாரத்தை இட்லி தோசை தேடாமல் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, எவன் எவனோ இரும்பு பக்கெட்டும் தாம்புக் கயிறுமாக அண்டர்வேர் வெளியே தெரிய வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு குளிக்க, மலசல விசர்ஜனத்துக்காக என்று அரன்மணைக்குள் திரிந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும் சமூகத்துக்கு. அதில் ஒரு குசும்பாதி குசும்பான் உங்க கிட்டேயே கக்கூஸ் போகிற வழி என்ன என்று கேட்டாலோ.

ஆகவே இந்த சிக்கன யோசனையை கைவிடுமாறு பிரியத்தோடும் வந்தனத்தோடும் மகாராஜா அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன