சாவடி – என் புது கிண்டில் மின்நூல்

An excerpt from the stage play ‘Chaavadi’

காட்சி 5

காலம் காலை களம் வெளியே (கொத்தவால் சாவடி)

வக்கீல் அய்யங்காரும் அவர் நண்பர் ஹெட் கான்ஸ்டபிள் நாயுடுவும் மெல்ல நடந்து வருகிறார்கள். கட்டி வைத்த வண்டித் தட்டில் காய்கறிப் பையை வைத்து விட்டு அங்கவஸ்திரத்தால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார் அய்யங்கார். நாயுடு வேட்டியை மடித்துக் கட்டியபடி கூட நிற்கிறார்.

அய்யங்கார்: எத்தனை பேர் அவுட்? இங்கிலீஷ் பத்திரிகையிலே அஞ்சுங்கறான்.. கூட நாலு சைபர் சேத்துக்கலாம்னு தோண்றது..

நாயுடு: நாலஞ்சு ஆளுதான்.. இங்கிலீஷ் பத்திரிகைக்காரன் சரியாத்தான் போடுவான்.. நம்ம ஊரு கொலைச் சிந்து பாடறவனா என்ன?

அய்யங்கார்: கொலைச் சிந்தா? காவடிச் சிந்துதான் தெரியும்..

நாயுடு: எம்டன் பாட்டுப் புஸ்தகம் .. இந்நேரம் அச்சுப் போட்டு சூளை நாயக்கர் எறக்கியிருப்பாரு.. ஏழுகிணத்துப் பக்கம் ஒண்ரேணா ஓரணாவுக்குக் கெடைக்கும் .. குஜிலிக்கடை சரக்கு..

அய்யங்கார் : குஜிலிக்கடைன்னா என்ன ஓய்?

நாயுடு: டகல்பாஜின்னா என்ன? டங்குவார்னா என்ன? குஜிலிக்கடைன்னா என்ன? இதுக்கெல்லாம் அர்த்தம் கேக்கக் கூடாது..கொக்கோகம் மாதிரி குஷி சமாசாரம்

அய்யங்கார் நாசமாப் போசு..எம்டனுக்கும் எல்லோரா, கஜுராஹோவுக்கும் என்ன சம்பந்தம்?

நாயுடு : வீள்ளந்த்தாம் எவுரு (இவங்கள்ளாம் யாரு) அய்யரே? டம்பாச்சாரிங்களா?

அய்யங்கார்: விட்டுடும் ஓய்.. இதை ஆரம்பிச்சா இன்னிக்கு முடியாது.. ஆமா, உங்க போலீஸ்லே என்ன ஹேஷ்யம் நிலவரத்துலே இருக்கு?

நாயுடு: ஆர்பர் கப்பல்லே அஞ்சுதானே டெத்.. பின்னாடியே ஜெர்மன் பிளேன் வருதாம்.. ஊர் முழுக்க ஆகாசத்திலே இருந்து பாம் போட்டு பீஸ் பீஸாக்கப் போறானுங்களாம்.. போலீசுக்குத்தான் ரோதனை.

அய்யங்கார்: நீர் காக்கி நிஜார் மாட்டிண்டு லாட்டிக் கம்பை சுழட்டிண்டு கெத்தா நின்னா ஜெர்மன் காரன் பிளேன் சிட்டாப் பறந்துடுமா என்ன?

நாயுடு: இந்த கித்தாப்பு தானே வேணாங்கறது… சாமிகளே.. ஏதோ வெள்ளைக்காரன் தீர்மானிக்கறான்.. கம்பு சுத்தறேன். பாத்துக்கும்.. தோ டிசம்பர்லே ரிடையர்.. ஆட்டம் கலாஸ்.. தெல்சா?

அய்யங்கார்: அதுக்கு நான் என்னய்யா பண்ணனும்?

நாயுடு: தர்ப்பணம் பண்ணணும். பொறந்தா உம்ம மாதிரி மைலாப்பூர் வக்கீலய்யராப் பொறக்கணும்..ஒரு மயித்தைப் பத்தியும் கவலைப்பட வேணாம். ரிட்டயர்… ஸ்பெல்லிங் தெரியுமாய்யா உமக்கு?

அய்யங்கார் உம்மை மாதிரி இங்கிலீஷ்லே கரை கண்டவனா என்ன நான்? ஆர்டினரி க்ரிமினல் லாயர் பிராக்டிஸிங் இன் தி ஹைகோர்ட் ஒஃப் மெட்றாஸ்..அதுவும் இனிமே சந்தேகம். எவாகுவேஷன் இல்லேன்னா எக்ஸ்டிங்க்ஷன்

நாயுடு: அவாஷன் இவாஷன் .. எது வந்தாலும் கருப்புக் கோட்டை விசிறிட்டு ஓடிடலாம்.. நம்ம மாதிரி லீவு சொல்றது, தலையைச் சொறியறது சாங்க்ஷன்.. சள்ளை ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது..

அய்யங்கார்: சொல்ல மாட்டீர்?… என்னை மாதிரி மைலாப்பூர்லே பொறந்து, ஆடுற வீட்டுலே பொண்ணு எடுத்து கல்யாணம் பண்ணி..

நாயுடு: பிருஷ்டம் பண்ணிட்டானுவ அதானே

அய்யங்கார் பிருஷ்டம் பிரம்மனே பண்ணித்தான்யா ஒட்ட வச்சு அனுப்பியிருக்கான்.. பிரஷ்டம் இது

மின்நூலை வாங்க இங்கே சொடுக்கவும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன