சின்னதாக ஒரு ரயில் நிலையம்

பத்து மணிக்கு தெற்கே போக
சாயந்திரம் ஐந்தரைக்கு வடக்கே போக
ரெண்டே ரயில் ஓடும் ஸ்டேஷன்
எனக்குத் தெரியும் இருந்தது ஓர்காலம்.

தெற்கு போவது ராமேஸ்வரத்துக்கு
குளித்துத் தொழுதவர் திரும்ப
சென்னை செல்வர் வடக்கே
போட்மெயில் என்று சிறப்புப் பெயர்
ரெண்டு வண்டிக்கும் உண்டு.

இலங்கை முனையைத் தொட்டு ஓடி
முன்னொரு காலம் இயங்கியதாம்
தனுஷ்கோடியைக் கடல்கொண்டு போக
இலங்கை செல்ல ரயில்வண்டி இல்லை.

ஆக் மொத்தம் இரண்டே ரயில்கள்
சிலநாள் சென்னையில் இருந்தோ
இன்னும் வடக்கே இருந்தோ யாரோ
வந்தால் லக்கேஜ் எடுத்துப் போக
போர்ட்டர் இருவர் உண்டு
நிச்சயமில்லா வருமானத்தில்
அண்ணன் தம்பி போர்ட்டர்கள்
எப்படியோ சுவாசித்து இருந்தனர்
திருமணம் இல்லை இதுவே ரகசியம்.

பச்சை நிறத்தில் வண்ணம் பூசிய
பழநியின் குதிரை வண்டி தவிர
இன்னொன்றும் மட்டக் குதிரை பூட்டி
ஸ்டேஷனுக்கு வந்து நிற்கும்.
சவாரி எதுவும் திகையா விடினும்
பக்கத்தூர் கண்ணாத்தாள் கோவில்போக
பாதி கட்டண சவாரி என்பார் பழநி
உள்ளூர் பக்தர்கள் போவது உண்டு
அதுவும் இல்லா நேரம் என்றால்
சின்னச் சின்னதாய் ஊரில் தேவை
மற்றபடி குதிரைகள் நின்று உறங்கும்.

வடக்கில் இருந்து வருபவர் பலரும்
சொந்த ஊரைத் துறந்து போனவர்
பம்பாய் கல்கத்தா தில்லியில் இருந்து
சென்னை வழி வீடு திரும்பக்
காரணம் என்று பலமுறை கண்டது
பரம்பரை வீட்டில் அறுபதுக்கு அறுபது
எண்பது நிறைவு பாட்டிகள் மறைவு
குதிரை வண்டிகள் ஸ்டேஷனில் இருந்து
தெருவழி சக்கரம் உருள விரையும்
நல்லதும் மற்றதும் குதிரைகள் அறியும்.

அப்புறம் ஒருநாள் டீசலில் இயங்கும்
ரெட்டைப் பெட்டி கோச்சு என்பது
ஸ்டேஷன் வழி மானாமதுரைக்கும்
வடக்கே புதுக்கோட்டைக்கும்
ஓடி ஓடி பழகிப் போனது
போட்மெயில் அழகில்லை கம்பீரமும்
இல்லாத கோச்சு வண்டியில்
கழிப்பறை இல்லை தண்ணீர்கூட
எனினும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தீர்க்கமான வாடை பரத்தி
சரக்கு ரயில்கள் அவ்வப்போது
சத்தம் போட்டுக் கடந்து ஓட
ஸ்டேஷன் மாஸ்டர் போகலாம் என்று
கொடிகள் அசைத்துத் திரும்பி வருவார்
ஒற்றைத் தடம் தான் போகவும் வரவும்
எதிர்ப்படும் வண்டியைப் போகவிட்டு
டீசல்கோச்சே க்ராசிங்கில் நிற்கும்
தங்கச்சி மடம் விட்டு மூட்டையாய்
உலர்ந்த மீன்கள் உலகம் போவது
அவசியம் எதிரே கோச்சுவண்டி
பயணிகள் மூச்சடக்கிக்
காத்திருக்கட்டும் ஆதியில் யாரோ
இந்தியில் எழுதி விதித்தபடிக்கு.

வண்டி ஏதும் வராத மாலையில்
மழையில் நனைந்த தண்டவாளங்களில்
ஸ்டேஷன் பூமரப் பூக்கள் சிதறி
மஞ்சள் பூத்ததைக் கண்டுவர ஆசை.
மரங்களும் மழையும் இல்லாவிடினும்
இப்போது ஓடுவது இருபது ரயிலாம்
ஸ்டேஷன் கொண்ட பரபரப்பு காண
போர்ட்டர் சகோதரரும் பழநியும்
வண்டிக் குதிரையும் இன்றில்லை.

(இரா.முருகன் 2019)

நடையானந்தா கவிதைகள் மின்நூலில் இருந்து 2019

நடையானந்தா கவிதைகள் மின்நூலை வாங்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன