என் கிண்டில் மின்நூல் – ஏதோ ஒரு பக்கம்

என் கிண்டில் மின்நூலான ’ஏதோ ஒரு பக்கம்’ – ஒரு சிறிய பகுதி

பயண இலக்கிய பஜனை

பயண இலக்கியம் எழுத சென்ஸ் ஆப் ஹ்யூமர், கொஞ்சம் பேங்க் பாலன்ஸ், விக்ஸ் இன்ஹேலர், எலாஸ்டிக் போகாத ஜட்டி, எழுதியதை பிரசுரம் செய்ய பதிப்பகம் எல்லாம் தேவை. பால் தோரோவும் பில் பிரைசனும் இந்த விஷயம் அத்துப்படியான காரணத்தால் உலகத்தைச் சுற்றி வந்து சந்தோஷமாகச் சில்லறை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சீனியரான பால் தோரோ ஒரு ரவுண்ட் முடித்து அடுத்த சுற்றுக்காக சமீபத்தில் திரும்ப இந்தியா வந்திருந்தார். அதுவும் சென்னைக்கு.

எண்பதுகளின் தொடக்கத்தில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரசில் ஏறி தில்லிக்கு உத்தியோக உயர்வில் (பேசிக் ரூ310; பஞ்சப்படி 235; மற்றவை 130) கிளம்புவதற்கு முன் மூர்மார்க்கெட்டில் புத்தகம் தேடப் போய் மாட்டியது பால் தோரோ எழுதிய ‘தி க்ரேட் ரெயில்வே பஜார்’. இதைவிட சரோஜாதேவியே மேல் என்று பின் அட்டையில் யாரோ கிறுக்கி இருந்ததை மினிமம் கியாரண்டியாக நம்பி வாங்கிவிட்டேன். ரயிலில் புரட்டிய புத்தகத்தில் அந்தத் தரம் கிட்டாத ஏமாற்றம்.

‘’தில்லியிலிருந்து கிளம்பி குறுக்கு வெட்டாக 1800 மைல் கடந்து தெற்கு நோக்கி சென்னைக்கு ஓடிவரும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் நின்ற பிளாட்பாரம் முழுக்க பேருக்கு ஏற்ற மாதிரி பிரம்மாண்டமான டிரங்குப் பெட்டிகள். சடசடவென்று கம்பார்ட்மெண்ட் முழுக்க ஆக்கிரமித்த தமிழர்கள் அதை சொந்த வீடாகப் பாவித்து பேண்டை அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். கூடாரம் போல் பெட்ஷீட்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு முட்டியை இப்படியும் அப்படியும் நீட்டி மடக்கி, எம்பி எம்பிக் குதித்தார்கள்.

செருப்பும் அப்புறம் பேண்டும் கால் வழியாகக் கீழே நழுவி விழுந்தன. இப்படி லுங்கி பனியனுக்கு மாறும்போதும் பேசுவதை நிறுத்தவே இல்லை. பேச்சா அது? ஷவரில் குளித்துக் கொண்டே பாடுகிறதுபோல் ஒரு சத்தம். எல்லோரும் நல்ல கறுப்பு. பல் மட்டும் வெள்ளை வெளேர். பின்னே இல்லையா? மரத்திலிருந்து பறித்த குச்சியை கரகரவென்று பல்லால் ராவி அறுக்கிற மாதிரி ரொம்ப நேரம் பல் தேய்ப்பார்கள் இவர்கள். அப்புறம் சாப்பாடு. நீர்க்க வேகவைத்து பச்சை மிளகாயும் குடமிளகாயும் தூக்கலான காய்கறிக் கூட்டு, இரண்டு பிரம்மாண்டமான மலை போல சோறு.”

ரயில்வே பஜார் புத்தகத்தில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பற்றிய இங்கிலீஷ்காரன் கட்டுரை எடுத்த எடுப்பிலேயே அதிர வைத்தது. அதற்குப் பத்து நிமிடம் முன்னால் தான் நானும் எம்பிக் குதித்து பேண்டை விழுத்துவிட்டூ சங்கு மார்க் லுங்கிக்கு மாறி டு டயரில் மேல் பர்த்துக்கு ஏறி இருந்தேன். அங்கே இருந்து கீழே பார்த்தபோது விஜயவாடாவில் நடுராத்திரிக்கு இறங்க வேண்டிய ஆந்திர ஜோடி மேலே ஒருத்தன் இருக்கான் என்ற நினைப்பே இல்லாமல் அவசரமாக அந்நியோன்னியமாகிக் கொண்டிருந்தார்கள்.

கடைசிப் பக்கத்தைத் திருப்பி கிறுக்கலை இன்னொரு தடவை படித்துவிட்டுக் கண்ணை மூடியதுதான் தெரியும். பொலபொலவென்று விடிந்தபோது ஆந்திரா பார்டருக்கு அந்தப் பக்கம் இருந்தேன். எப்போது எல்லை கடந்தது என்று தெரியவில்லை.

பால் தோரோவைத் திரும்பப் புரட்டினேன். லண்டன் கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் தொடங்கி பாரீஸ், இஸ்தான்புல், கைபர் கணவாய், லாகூர், தில்லி, சென்னை, ராமேஸ்வரம், இலங்கை என்று முழுக்க ரயில் யாத்திரையாகவே ஊர் சுற்றிய பயண எழுத்தாளர் அவர். கிண்டலைக் கடந்து உள்ளே போனால் வாழ்க்கையை அதன் சகல அபத்தங்களோடும் ரசிக்கிற, சக மனுஷனை நேசிக்க முடிந்த, எந்த சந்தர்ப்பத்திலும் நகைச்சுவை உணர்வை இழக்காத தோரோ தட்டுப்பட்டார்.

அங்கங்கே கவிதை தெறிக்கும் அழகான ஆங்கிலம் அவருடையது. ‘A joss stick was lit. No one said a word. The train passengers looked at the villagers. The villagers avered their eyes. The canvas ceiling dropped; the tables were worn shiny; the joss stick filled the room with stinking perfume. The train passengers grew uncomfortable and in their discomfort, took an exaggerated interest in the calendar, the faded colour prints of Shiva and Ganapathi. The lanterns flickered in the dead silence as our shadows leaped on the walls’.

பால் தோரோ புத்தகத்தை முழுக்கப் பாராயணம் செய்து முடித்தபோது குளிர்காலப் பனிமூட்டத்தோடு தில்லி வந்திருந்தது. தோரோவின் எந்தப் புத்தகத்தை அப்புறம் படித்தாலும் அந்தக் குளிர்ச்சியும் சிரிப்பும் கொஞ்சம் கதையும் கோடு போட்டது போல் சோகமும் தட்டுப்படாமல் போகாது. அவர் சென்னை வந்திருக்கிறார் என்று தெரிந்து லேண்ட்மார்க் போவதற்குள் ஆபீஸ் நந்தி மறைத்துவிட்டது. மறுநாள் வழக்கம்போல் இந்து பத்திரிகை பேட்டியில் பால் தோரோவை ஒரு மோர்க்குழம்பு பெர்சனாலிட்டி ஆக்கியிருந்தார்கள். அது தோரோ இல்லை, வேறே யாரோ.

சுஜாதா மறைந்தது தோரோ வந்துபோனதற்கு ஒருவாரம் கழித்து. வாத்தியார் உலகம் முழுக்கச் சுற்றி இருந்தாலும், கதையிலும் கட்டுரையிலும் அவ்வப்போது அந்த அனுபவத்தை அளவோடு வெளியிடுவாரே தவிர உட்கார்ந்து பயணக் கட்டுரை என்று எழுதியதாக நினைவு இல்லை. ஆனாலும் பெங்களூர் மார்க்கெட் போனபோதெல்லாம் அங்கே அவர் குறிப்பிட்டபடி ‘குல்லா வைத்த ராயர்கள் பூ வாங்கிக் கொண்டிருந்தார்கள்’. தில்லி கரோல்பாக் அஜ்மல்கான் ரோடில் சாயங்கால வேளைகளில், ‘குனியும்போது தெரியும் மார்பு வளப்ப ரகசியங்களோடு’ திடகாத்திரமான பஞ்சாபி மங்கையர் சாயம் நனைத்த உதடு மினுமினுக்க நடந்து போனார்கள். பாலிகா பஜாரில் வெள்ளைக்காரர்கள் ‘அலங்கரித்த ஜிகினாக் குப்பைகளை வாங்க அலைந்து கொண்டிருந்தார்கள்’. அவர் எழுதியபடிக்கு, விமானத்தில் எமர்ஜென்சி வாசல் அருகே இருக்கையில் இருந்து ஏர் ஹோஸ்டஸின் எதிர் சீட் புன்னகையில் குளிர் காய்ந்திருக்கிறேன். நீங்களும்தான்.

பயண இலக்கியம் என்றதும் இதையெல்லாம் கடந்து சட்டென்று ஹைபர்லிங்கில் நினைவு வருவது ஒரு பழைய புத்தகம். போன நூற்றாண்டு துவக்கத்தில் தெற்கு சீமையிலிருந்து கிளம்பி ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் காசிக்கு யாத்திரை போனார்கள். அங்கங்கே ராத்தங்கி, ஏரி, குளம், அருவி, சமுத்திர ஸ்நானம் செய்து, கோவில் தோறும் கும்பிட்டு கடைசியில் காசிக்கும் போய்ச் சேர்ந்து வழிபட்டுவந்த நீண்ட பயணம் அது. போய் வந்தவர்களில் ஒருத்தர் திரும்பி வந்ததும் கைகால் குடைச்சலைப் பொருட்படுத்தாமல், பேப்பரும் பேனாவும் எடுத்து வைத்துக் கொண்டு அக்கறையாக அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதில் ஒரு இடத்தில் வருவது (தோராயமாக) இப்படி இருக்கும்:

‘நாங்கள் அந்த ஊருக்குப் போனபோது இருட்டி விட்டது. சத்திரத்தில் போய்த் தங்கினோம். சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்தபோது மராத்திய அடியார் கூட்டம் ஒன்று அங்கே வந்து சேர்ந்தது. அத்தனையும் பெண்கள். அப்புறம் நாங்கள் எல்லோரும் அந்தப் பெண்களோடு சேர்ந்து ராத்திரி முழுக்க பஜனை செய்து கொண்டிருந்தோம்”.

எந்த வார்த்தைக்கும் ஓவர்லோடிங் இல்லாமல் ஒரே ஒரு எளிமையான அர்த்ததோடு எழுதியும் பேசியும் வந்த பொற்காலம் அது என்பதால் அப்போது இதைப் படித்தவர்கள் சகஜமாக அடுத்த பக்கத்தைத் திருப்பி இருப்பார்கள்.

இங்கே சொடுக்கவும்

ஏதோ ஒரு பக்கம் : 23 கட்டுரைகளும், 3 நேர்காணல்களும்
விலை : ரூ 70

யுகமாயினி இலக்கிய இதழில் எழுதிய ‘ஏதோ ஒரு பக்கம்’ பத்திக் கட்டுரைகள். மூன்று விரிவான நேர்காணல்கள் – எம்.டி.வாசுதேவன் நாயர், என்.எஸ்.மாதவன், நீல.பத்மநாபன்

இது என் ஆறாவது கிண்டில் மின்னூல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன