வெண்பா – 1000 நான் அண்மையில் எழுதியவை : முதல் ஈடு

தினசரி ஒரு வெண்பாவாவது காலை நடையின்போது மனதில் எழுதிப் பின் முகநூலில் எழுதுகிறேன். எல்லாமே சொற்புதிது, சுவைபுதிது, பொருள் புதிது.

விரைவில் மின்நூலாக இவை தொகுக்கப் படும்.

நீயுமா ப்ரூட்டஸே போய்நான் இறந்திடுவேன்
ஓயுமொழி சீசர் உரைத்திட – மாயுமுடல்
ஆனை நடைநடந்து வீழ்ந்த இடத்தினில்
பூனைகள் காப்பகம் இன்று.

ஓயுமொழி – இறுதிச் சொற்கள்

சார்சாரே ஒண்ணுக்கு! போகாதே உட்காரு
நேர்வகுப்பில் ஏறுமுன்பே நீமுடித்து – வாரணும்
ஓலைப்பாய் மோண்டதுபோல் சார்பேசக் கேளாமல்
மூலையில் பெய்தான் பயல்

ஷாங்காய்க்கு ஏர்பஸ் சரியான சில்லறை
தாங்க எனக்கேட்டு ஏற்றிவிட்டீர் – ஏங்காணும்
மெய்தானா ப்ளேனிலே பையப் பழுதுநீக்க
சய்பீர்யா வந்ததும் ஏன்?

மற்ற பலபோல் மரபணுவில் கொத்திவைத்து
சற்றிங்கு ஆட அனுப்பினான் – பற்றுவைக்கக்
காப்பியும் பாகல் கசப்பும் பிடிப்பதேன்
கேப்பாய் அவனெழுத்தா ஆம்

வகுப்பில் அமர வரைமுறைகள் உண்டாம்
தகுந்தபடி கைக்கொள் தவிர்த்தால் – சகியாதே
காலுயர்த்தி முன்வரிசை சீட்டின்மேல் போட்டிருந்தால்
போலீசு வந்திடும் பார்

பள்ளிக்குப் போகாமல் துள்ளிக் களிக்காமல்
கள்ளம் பயின்று தெருத்திரியும் – உள்ளபடி
அஞ்சில் வளையாது வஞ்சம் பழகிவரும்
பிஞ்சில் பழுத்தயித்தா லி

ஒப்பாரி வைக்காமல் ஓரம் அழுதபடி
அப்பப்போ நின்றிருந்தால் ஆண்வர்க்கம் – தப்பாது
செப்பத் துயர்கேட்கும் வெப்பப் பெருமூச்சில்
அப்போ வலைவீசு நீ.

கரந்து மறையா கரவாஜ்யோ வாழ்நாள்
விரைந்து முடிய உயிர்த்த– திரைதனில்
தாழ்ந்த தெருவேசி யாசகரும் தெய்வமானார்
வாழ்வையும் வென்ற கலை…

உடல் சீசருக்கு, உயிர் ரோமுக்கு
—————————————–
தலைக்குள்ளே கூர்வாள் நுழைத்துச் செருகி
நிலைத்ததோர் கூடெலும்பு தேகம் – மலைப்பீர்
கெழுமிப் புறமுதுகு காட்டியோ டாது
விழுப்புண் துளைத்த உடல்

பெண்சைக்கிள் ஓட்டப் பெரிதாய் முகம்வீர்த்துக்
கண்விரிந்து கோரமாகும் சொன்னாரே – எண்ணிடாமல்
கைக்கொள் திறமையுடன் கல்பனா சாவ்லாபோல்
சைக்கிள் கமலம்நீ வா…

தூங்கிடப் போகணும் வாங்க கதைசொல்ல
ஓங்கியே ஓர்பேத்தி தால்ஸ்தாயை – ஆங்கழைத்தாள்
போரும் அமைதியும் கூறி முடித்தபின்
பேரக் குழந்தை அழும்

ஓடவேணாம் நாம்கொள்வோம் ஒப்பந்தக் கல்யாணம்
போடுநீ கோடொன்று தாண்டேன்நான் – வேடிக்கை
பாரத்தான் வந்துசொல்வேன் பாதை மறிக்காதே
மாரத்தான் ஓடுமங் கை

பிற்பகலில் ஓர்தூக்கம் அப்பப்போ சாப்பாடு
அற்புதக் காதல்செய் அன்புமிகு – சொற்கள்
பணிக்கு நடுநடுவே பக்குவமாய் பீர்கொள்
கணித்தோமுன் ஆயுசுநூ று.

கூடவே உட்புகுந்த கொஞ்சம் எலுமிச்சை
தேடிக்கொள் உப்புக்கும் தேசங்கள் – ஏடுசொல்லும்
மக்கில்லை என்றால் மகிழ்ந்துரைப்பீர் மெக்சிகோவில்
டெக்கீலா தான்பிறந்த ஊர்

ஒளிவேகம் மீறியே ஓயாப் பறப்பு
வெளிவென்று காலத்தில் முன்பின் – களித்தபடி
நேரப் பயணம் நிகழ்த்தும் வழிசொல்லார்
ஓரம் வளியடங்க ஓய்ந்து

சீனக் கழிப்பறைகள் பேணாத சுத்தமின்மை
போனநூற் றாண்டுமுதல் மாறவில்லை – போனாராம்
கொட்டிச் செலவழித்துக் கோமகனார் பில்கேட்ஸ்சார்
கட்டியது கம்ப்யூட்ரா காண்

மதலையர் தாய்தேடி வாடிப் பசித்து
வதம்நோக்கி நிற்கவன நீதி – மதியா
புவனத் தெருவுலா பாராட்டு கொள்வார்
அவனியைக் கொன்ற உலகு

அச்சடிப்பு ஐநூறு அன்பளிப்பு முன்னூறு
மச்சிலே பொத்தி மழைநனைந்து – மிச்சம்போ
ஆய்ரங்கள் விற்பனை ஆங்கோர் கனவுவரும்
போய்ரம் அருந்திப் படு

புழுமொய்த்த சோற்றோடு பூஞ்சாண ரொட்டி
அழுகும் கறிகாய் பழங்கள் – குழைந்து
தருமோர் அனுபவம் தான்தரும் உண்டி
அருவருப்பும் கற்றுப் பழகு

உண்ண உணவும் உடுத்தத் துணிமணியும்
எண்ணி வருநாளே ஏங்கினார் – மண்ணில்
மிடுக்குடன் வென்று முகமதலி கொண்டார்
படுக்கை பரிசுப் பணம்

கறக்கத் துணிச்சல் கணிசமாய் வேண்டும்
கரந்துதான் காட்டில் உறையும் – மறைந்தாங்கே
சென்னி கிழித்திட்டுச் சேர்த்தெடுத்த மாமிசத்தைத்
தின்னுமாம் நாஜிப் பசு

எழுத்தை அறிவித்தல் என்றும் இறைமை
எழுத்தை அறிதல் தவமே– பழுத்ததோர்
நூறருகே தேர்வெழுதித் தேர்வுகொண்டார் முந்திவந்து
பேருபற காத்திமுத்தச் சி

தெங்கொரியர் எந்தநாடு சென்றாலும் கஞ்சாத்தூள்
அங்கு புகைப்பது ஆகாதாம் – தங்களூர்
வந்தபின்னர் ஊதவைத்து வாய்நாறக் கண்டுகொள்வர்
எந்தநாளும் பல்துலக்கா தே

(தெங்கொரியர் – தென்கொரியர்)

ஏது பெயரோ எதிரே நடந்துவந்தார்
சூதுவா தேதுமே சூழ்வாரோ -யாதறிவேன்
பக்கத்தில் கைவீசிப் போகின்ற புட்டினுக்கு
றெக்கை அசையாப் புறா

உண்டி சுருக்கி உலவப்போய் மாடியேறி
கொண்ட கனம்குறைப்பீர் கோமகனே – கண்டால்
தடையேதும் இல்லை கடைதனில் வாங்க
எடைகுறைத்துக் காட்டும்த ராசு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன