புது நாவல் : 1975 – “இன்னிக்கு ராத்திரி பத்து மணிக்கு நம்ம பசங்களுக்கு மலையாளம் கிளாஸ் எடுக்கணும்

எதிரே வித்ட்ராயல் ஸ்லிப்பும் பாஸ்புக்குமாக நின்ற இரண்டு பேரிடம் அவற்றை வாங்கி, டோக்கன் கொடுத்து, டோக்கன் நம்பரை ஸ்லிப் பின்னால் எழுதி, வட்டம் போட்டு டோக்கன் தாங்கிக்குக் கீழே பாதுகாப்பாக வைத்துவிட்டு எழுந்தேன். “இதோ வந்துட்டேன்” என்று நான் சொன்னபோது ஜோக்கைக் கேட்டது போல் அங்கே நின்றவர்கள் சிரித்தார்கள். இது மரியாதையைத் தெரிவிக்கும் சிரிப்பு. ’பரவாயில்லே, நாங்க பத்து நிமிஷம் நிக்கறோம். நீ போய் ஒண்ணுக்கு ரெண்டுக்கு இருந்துட்டு வா, இல்லே ஒரு சிகரெட் பத்த வச்சு இழுத்துட்டு வா’ என்று சலுகை காட்டும் சிரிப்பு இது. நான் சொல்லாமல் போனாலோ, இவர்கள் சிரிக்காமல் இருந்தாலோ மரியாதைக் குறைவாகி விடும். வாசலில் பொறுமை குறைவாக நடை பயின்றபடி இருந்தார் ஜெபர்சன். கையில் குடை ஆயுதம் போல ஏறி இறங்கியது.

“என்ன தோழர், அவசரமா ஏதாவது வேலை இருக்கா?”. கேட்டேன். யாருக்காவது இருபதம்சத் திட்டத்திலோ ஐந்தம்சத் திட்டத்திலோ வருகிற மாதிரி டி ஆர் ஐ கடன் கேட்டு வந்திருக்கிறாரோ. நாலே சதவிகித வட்டி இந்திரா காந்தி பெயரைச் சொல்லி, கடன் பணம் ஆயிரம் ரூபாய் வரை அதே அம்மையாரை வாழ்த்தி. கடையே வைக்காத கடைக்காரர்கள், எந்தத் தொழிலும் தெரியாத சிறுதொழில் முனைவோர்கள், விவசாயத்தின் பக்கமே போகாத நகரப் புறத்தில் லுங்கியை தொடை வரை வழித்துக் கட்டிக் கொண்டு திரிகிற லும்பன்கள் இப்படி யார்யாரோ வாங்கிப் போக, தேவையானவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது மிகக் கம்மியாகத்தான். சொன்னால் சோவியத் பிரதமருக்குக் கூடத் தரலாம்தான். ஆனால் அது ஜெபர்சன் தோழர் சொல்லி இல்லை. அதற்கு வேறு கெட்-அப்பில் வரணும்.

ஆனாலும் பெரிய பெரிய முதலாளிகளுக்கும், கம்பெனிகளுக்கும் கொடுத்து வசூல் நிலுவை இருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களோடு ஒப்பிட்டால், அது மலை, இது சின்னக் கூழாங்கல்

“இன்னிக்கு ராத்திரி பத்து மணிக்கு நம்ம பசங்களுக்கு மலையாளம் கிளாஸ் எடுக்கணும் தோழர். நேரம் சரிப்படும்தானே. வேறே வேலை வச்சிக்கலியே அந்த டைம்லே?” ஜெபர்சன் ரகசியம் பேசுகிற குரலில் கேட்டார்.

பத்து பேரை உட்கார்த்தி மலையாளத்தில் அ, ஆ சொல்லிக் கொடுக்க இத்தனை ரகசியமாக ராத்திரி பத்து மணிக்கு வகுப்பு நடத்த வேண்டியது என்னத்துக்காக?

“நீங்க பத்து, பத்தரை மணிக்கு எடுத்தா, தொடர்ந்து நான் அவங்களுக்கு பனிரெண்டு மணிக்கு டயலக்டிக்ஸ் க்ளாஸ் எடுக்கலாம்”, அவர் சீரியஸாகச் சொன்னார். டயலெக்டிகல் மெட்டீரியலிஸம் என்ன மந்திரவாதமா, குட்டிச் சாத்தான் வழிபாடா, நடுராத்திரிக்கு ஆரம்பித்து பாடம் நடத்த?

“வகுப்பு எடுக்கறது எமர்ஜென்சி காலத்துலே வீணா கஷ்டத்தை வரவழைச்சுக்கறதுதான். அதான் யாருக்கும் சந்தேகம் வராம ராத்திரி அதை நடத்தறது” என்றார் அவர். மலையாளம் சொல்லிக் கொடுப்பதில் என்ன சட்ட விரோதம் என்று கேட்டேன். பதில் இல்லை. சட்ட விரோதம் தானோ?

”சரி, ராத்திரி பார்ப்போம்”, அவர் வேறே எதுவும் சொல்லாமல் போய்விட்டார்.

கவுண்டருக்கு நான் திரும்பியபோது இன்னும் நாலு பேர் கையில் வித்ட்ராயல் ஸ்லிப்போடு நின்றார்கள். ஒவ்வொருத்தருக்கும் தொகை எவ்வளவு என்று எழுதிக் கொடுத்து, கையெழுத்து வாங்கி டோக்கன் கொடுத்தேன். இவர்களில் யாராவது ராத்திரி வகுப்புக்கு வந்து மலையாளம் படிப்பார்களா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன