New : சிறுகதை ‘கொட்டி’ (இரா.முருகன்)


கல்யாண வீட்டிலிருந்து செண்டை மேளம் கேட்டுக் கொண்டிருந்தது. தவுல் சிவத்தையா பிள்ளை ஓரமாக ஒதுங்கி ஒரு வினாடி நின்று ஒத்துக்காரர் மேல் படாமல் காறித் துப்பினார். லொங்கு லொங்கென்று விடிகாலை ஐந்து மணிக்கு எலக்ட்ரிக் ரயில் பிடித்து ஓடி வந்தாலும், தாடியைத் தடவிக்கொண்டு கொட்டி முழக்க மலையாளக் கரைக் கூட்டம் அதுக்கும் முன்னே வந்து நின்று விடுகிறது. இந்த இரைச்சலில் என்னத்தை மேளம் கொட்டி, நாகசுவரம் ஊதி காசு வாங்க. ஒரு காப்பித் தண்ணி கூட கிடைக்காமல் போகலாம். நாசமாகப் போகட்டும் நாடு விட்டு நாடு வந்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் கொட்டிகள் எல்லோரும்.

தாடையில் வடிந்த வெற்றிலை எச்சிலைப் புறங்கையால் துடைத்தபடி அடுத்து நடந்து வந்த ஜெபராஜ் நாயனக்காரனைப் பார்த்தார் சிவத்தையா. அவன் ஜெபராஜ் இல்லை. கல்யாண வீட்டுக்கு வாசிக்கப் போகும்போது ஜெயராஜ் ஆகிவிடுவான். கிறிஸ்துவன் வாசித்துத் தாலி கட்டுவதை சம்பிரதாயக் கிழவர்கள் விரும்புவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒருத்தராவது இப்படி பிழைப்பைக் கெடுக்க பென்ஷன் வாங்கி உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களை பத்தடி தூரத்திலேயே சிவத்தையா கண்டுபிடித்து விடுவார். ஜெயராஜுக்கு எதுவுமே தெரியாது. வாசிப்பும் சுமார் தான். நூறு ரூபாய் கிடைத்தால் போதும் அவனுக்கு. சிவத்தையாவுக்கு மூன்று புத்ரிகள். நூறு ரூபாயில் ரெண்டு நாள் தள்ளுவது கூட கஷ்டமானது. அந்தக் காசும் வரவிடாமல் கேரளத்து இறக்குமதிகள். பத்து பேராக நின்று என்ன சத்தமாக வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் விடிகாலை நேரத்தில்கூட.

இரண்டு நாளைக்கு முன்னால் கோவில் வாசலில் சிவத்தையா நின்றபோது மலையாளி புரோக்கரும் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான். விலகிப்போ என்று சைகை காட்டினார் அவர். தமிழ் தெரியாதது போல பாவனை செய்து கொண்டு , கோவில் உள்ளே இருந்து அர்ச்சனைத் தட்டும் அதில் கல்யாணப் பத்திரிகையுமாக வந்து கொண்டிருந்தவர் முன்னாடி போய்த் துள்ளி விழுந்தான் அந்த அயோக்கியன். விலகி நின்றார் வந்தவர்.

சிவத்தையா விஸ்தாரமாகக் கும்புடு போட்டு ‘ராஜராஜேஸ்வரி கிருபையிலே அதிவிமர்சையா நடக்கும் ஐயா உங்க வீட்டுக் கல்யாணம். நூறு வருஷம் நல்லா இருப்பாங்க’ என்று இலக்கைக் குறிவைத்து நற்சொல் அருளத் தொடங்க, தட்டோடு வந்தவர் சொன்னார், “இப்பவே எம்ப்ளது. இன்னும் நூறா, தாங்காது”. யாருக்கோ எண்பது வயது முடிந்து சதாபிஷேகத்துக்கு மேளம் அடிக்கக் கசக்கவா செய்யும் சிவத்தையாவுக்கும் குழுவுக்கும்? ‘நல்ல விதமா, சம்பிரதாயம் மாறாம முழுநாள் வாசிக்கறோம் ஐயா, பார்த்துக் கொடுங்க”.

அவர் சொல்லி முடிக்கும் முன்னால், தட்டுக்காரர் ‘நாள் முழுக்க வேணாம். காலையிலே அஞ்சரைக்கு தொடங்கி பத்துக்கு இலை போடறாதோட ஏறக்கட்டினா போதும்”. அவர் பேசிப்போக, கூட வந்த பெண், ‘அச்சானியமா பத்துக்கு சாப்பாடுன்னு பேச வேணாம். சுபகாரியம் சதாபிஷேகம் நடக்க இருக்கு’ என்று அவரை அடக்கினாள். நூறு ரூபாய் அட்வான்ஸும், வாசித்து முடித்ததும் நானூற்றைம்பது ரூபாயும் என்று அப்புறம் முடிவானது.

“செண்டை மேளத்தையும் பிக்ஸ் பண்ணிடுங்கோ. மாமி பூர்வீகம் பாலக்காடு ஆச்சே. என்னமா ரசிப்பா தெரியுமோ. எந்திருந்து கூடவே ஆடுவாளாக்கும்”.

இதில் என்ன பெருமையோ. பாலக்காட்டுக்காரர்கள் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது? சிவத்தையா தவில்காரருக்குப் புரியவில்லை என்றாலும், கேரளத்தான் சப்ஜாடாக வந்து கொட்டுவதற்கு வெகுமுன்னால் புறப்பட்டு மங்கல இசை பொழிய முடிவெடுத்தார். தூக்கக் கலக்கத்தோடு ஜெயராஜையும் ஒத்துக்காரனையும் இழுத்து வருவதற்குள் அவர் பட்டபாடு.. இங்கே வந்தால், மலையாளத்தான் அதற்கு முன் வந்து சேர்ந்து காட்டடி மாட்டடியாகக் கொட்டி அடித்துக் கொண்டிருக்கிறான்.

“நடையை எட்டிப் போடுங்கய்யா”, அவர் தவிலோடு முன்னால் ஓடினார்.

தாடிக்காரர்கள் அகலமாகக் கால் பரப்பி நின்று, நீட்டிப் பிடித்த மத்தளங்களில் அடித்து துவம்சம் செய்து கொண்டிருக்க, அந்த விடிகாலையிலும் விவஸ்தையே இல்லாமல் சின்ன வயசுப் பெண்களும், வாலிபர்களும் சந்நதம் வந்து சாமியாடுவது போல கொட்டுக்குக் குதித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் களேபரத்தில் தவுலோடு உள்ளே போய் என்னத்தை வாசிக்க, யாருக்கு வாசிக்க? சிவத்தையாவுக்குப் புரியவில்லை.

நல்ல வேளையாக, ஒரு வடக்கத்தி ஜிப்பாக்காரர் இந்தக் கோஷ்டியை இனம் கண்டு உள்ளே அழைத்துப் போய் முதிய மாப்பிள்ளை பெண்ணுக்காக அக்னி வளர்த்துக் கொண்டிருந்த மேடை ஓரமாக புரோகிதர்களின் பின்னால் உட்கார்த்தி வைத்தார். அவர் கால் தரையில் பாவாமல், ஐந்து மில்லிமீட்டர் உயரத்தில் மிதந்து வந்த மாதிரி சிவத்தையாவுக்குத் தோன்றியது. காயப்போட்டுக் கிடந்த வெறும் வயிறு இப்படியும் காட்டும், இன்னும், எல்லோரையுமே மிதக்க வைத்துக் குறக்களி வித்தையும் காட்டும்.

சிவத்தையாவுக்கு கண் இருண்டு வர, யாரோ ’மாமி எங்கே?’ என்று யாரிடமோ கேட்டார்கள். செண்டையர்களைக் காட்டிப் போனார் அவர். சிவத்தையா அங்கே பார்க்க, தீவிரமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். ’நாட்டாமை நடையை மாத்து’ என்று ஒரு குரல். ஏற்று வாங்கி, டகரடகர என்று ஏதோ தாளத்தில் செண்டை கோஷ்டி அடிக்க, ஏகத்துக்குக் கைதட்டு, சிரிப்பு.

’டிபன் காப்பி ரெடி’ என்ற அழைப்பைத் தொடர்ந்து ஆட்டம் ஓய, ”நீங்க வாசிக்கலாம்”, பெரியவர் சிவத்தையாவிடம் சொன்னார். புகையில் பிடித்து வைத்த மாதிரி அவருடைய புருவமும் நரைத்த தலைமுடியும் இருந்தது. செண்டைக்கார்கள் தேசலாகத் தொடர்ந்து முழங்கினார்கள்.

“அதை நிறுத்தச் சொல்லட்டுமா?”, அவர் சிவத்தையாவைக் கேட்டார். “வேணாம் சாமிகளே” என்றார் சிவத்தையா. தூங்கி விழ ஆரம்பித்த ஜெயராஜை அம்சத்தொனி வாசிடா என்றார் அடுத்து. என்ன மாமா என்றபடி கொட்டாவியை அடக்கி, அவன் சங்கு ஊதுகிற தோதில் பூம்பூமென்று முழக்க, கிரகம் என்றபடி தவுலில் சிவத்தையா துணைக்குப் போனபோது பெரியவர் சிரித்தார். வாசித்து நிறுத்தி, செண்டையைக் குழந்தை மாதிரிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அந்தப் பையன்கள் வரிசையாக ஓரமாக தரையில் உட்கார்ந்ததைப் பார்க்க ஏனோ பரிதாபமாக இருந்தது சிவத்தையாவுக்கு.

“கொஞ்சம் காப்பித்தண்ணி தரச் சொல்லுங்க தாயி, புண்ணியமா போகும்”, ஆடிவிட்டு வந்த மாமியிடம் அவர் யாசிக்க, இதோ என்று போனார் மாமி. அந்தப் பையன்களுக்கும் நாக்கு நனைக்க அரை டம்ளர் காப்பி தரச் சொல்லி இருக்கலாமோ. ஜெயராஜ் திடமான அபசுவரமாக ஊத, அதை மறைத்து இன்னும் உச்சத்தில் கொட்டி முழக்குவதில் மற்ற யோசனை எல்லாம் முழுகிப் போனது. ‘கொஞ்சம் சத்தம் கம்மியா வாசியுங்கோ. உள்ளே எல்லாம் தொம்தொம்னு இரைச்சல்”. சமையல்கோஷ்டி ஐயர் பையனும் காப்பி ஜக்குமாக வந்த மாமி சொல்லிப் போனாள். செண்டை வாசித்து அடுத்த ஆட்டம் ஆட அவள் தயாராக இருப்பதாகச் சிவத்தையாவுக்குத் தோன்றியது.

பிளாஸ்டிக் தட்டுகளில் பொங்கலும் வடையும் இட்லியுமாகச் செண்டை கோஷ்டிக்கு உள்ளே இருந்து வந்த யாரோ நீட்ட அவர்கள் திருப்தியாகப் பசியாறியதைப் பார்த்தபடி எச்சில் எங்கும் சிதற ஜெயராஜ் வாதாபி கணபதியை உத்தேசமாகப் பிடித்து வைத்தான்.

சூடும் சுவையுமாக காப்பி உள்ளே போக, சிவத்தையாவுக்குத் தெம்பு மேலெழும்பி வர, யாருக்காவது நன்றி சொல்லத் தோன்றியது. ஜிப்பாக்காரப் பெரியவருக்குச் சொன்னார். ஜெயராஜ் நாகசுவரத்தை நீட்டிப் பிடித்து சின்னஞ்சிறு பெண்போலே என்று நாலைந்து கோணலோடு யானை பிளிறுவது மாதிரி ஏதோ வாசித்தான். சிவத்தையா காசு அட்வான்ஸ் வாங்கிச் செய்யும் கடமை உணர்ச்சியோடு தொடர்ந்தார்.

”வாத்யம் நிக்கலாம்”, பெரியவர் தான். மிதப்பதுபோல் சிவத்தையா பக்கம் வந்தார். அவர் முகத்தில், சோபாவில் பாட்டியம்மாளிடம் எதையோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்த எண்பதாம் கல்யாண மாப்பிள்ளை சாயல் இருந்ததைக் கவனித்தார் சிவத்தையா. புரோகிதர்கள் ஓத ஆரம்பித்தார்கள்.

“இந்த மாசம் பூரா இன்னும் பத்து முகூர்த்தம் இருக்கு. அதுலே எட்டு கல்யாணம் நம்ம வகையிலேயே இருக்கு. வாசிக்கறீங்களா?” அவர் சிவத்தையாவைக் கேட்டார். “எங்கே, எங்கே, எப்போ வந்து வாசிக்கணும்?”, சிவத்தையா சிலிர்த்து எழுந்தார். கனவு கண்டு கொண்டிருப்பதாக அவர் புத்தி அறிவித்ததைச் சட்டை செய்யாமல் பெரியவரையே பார்த்தபடி உறைந்து போயிருந்தார். நாகசுரத்தைத் தரையில் நங்கூரம் மாதிரி ஊன்றிக்கொண்டு சீவாளியை சரிபார்த்துக் கொண்டிருந்தான் ஜெயராஜ். ஒத்துக்காரர் மாடியில் சாப்பிட்டு விட்டு அலம்பிய ஈரக்கையை உதறிக்கொண்டு வரும் கூட்டத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். சாப்பிட்ட தெம்பில் அவர்கள் எல்லோரும் செண்டை கோஷ்டி பக்கம் போய் ஏதோ சொன்னார்கள். சாப்பிட்டு வலு ஏறிய பையன்கள் தொம்தொம் என்று வேறு ஏதோ பாணியில் முழக்க, ஆண் பெண் சகலரும் மறுபடி ஆட ஆரம்பித்தார்கள். சிவத்தையாவுக்கு நல்ல பசி.

“பசிக்குதா?” பெரியவர் தான். “அது இருக்கட்டுமுங்க. கல்யாணக் கச்சேரி வாசிக்கணும்னு சொன்னீங்களே”, சிவத்தையா பசியை ஓரம் கட்டி நிறுத்தி காசு பண விவகாரத்தில் புத்தியைச் செலுத்தலானார். “நாகசுர வித்வானையும், ஒத்து ஊதறவரையும் ஓரமாப் போய்ச் சாப்பிட்டு வரச் சொல்லுங்க. நீங்க மட்டும் இங்கே இருங்க” என்றார் பெரியவர். சந்தோஷமாக எழுந்து போன ஜெயராஜும் ஒத்து பையனும் ஓரமாக உட்கார்ந்து அவசர அவசரமாக இட்லியை விண்டு போட்டுக் கொண்டிருப்பதை அசூயையோடு பார்த்தார் சிவத்தையா. கிடக்கட்டும், ஒரு மாசம், ரெண்டு மாசம் பிழைப்புக்கு வழி சொல்கிறார் இவர். இதை விடவா ஒருவேளை டிபன்? அவர் தவிலை மடியில் இருந்து இறக்கி வைத்து விட்டுப் பெரியவர் பக்கம் மரியாதையாகக் குனிந்தார். செண்டைச் சத்தம் காதுக்குள் குடைகிற மாதிரி வலுத்துக் கொண்டிருந்தது. யாரோ உள்ளே வந்து சோபா தாத்தாவையும் பாட்டியையும் தாளத்துக்குத் தகுந்தால் போல் உட்கார்ந்தபடியே அசையச் சொன்னார்கள்.

”சிவத்தையா, அதானே உங்க பெயரு?” பெரியவர் இரைச்சலுக்கு நடுவே தெளிவாக ஒலிக்கும் குரலில் கேட்டார். ஆமாம் என்றார் இவர். எப்படித் தெரியுமோ, அது பற்றி ஒன்றும் இல்லைதான்.

“இந்த செண்டைப் பையன்கள் சீக்கிரமே பத்திலிருந்து நூறாக, அதிலிருந்து ஐநூறாகப் பெருகிடுவாங்க. இனி இங்கே விசேஷம்னா நாயனமும் மேளமும் இல்லை, வெறும் செண்டை மட்டும்னு ஆகிடும்”, பெரியவர் பேசி நிறுத்தினார். சிவத்தையா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“உங்களுக்குப் பத்து கல்யாணம் வாசிக்க ஏற்பாடு செஞ்சு அட்வான்ஸ் தரேன். நீங்க அந்தப் பசங்க கையை உடச்சு மோளத்தையும் பீஸ்பீஸா கிழிச்சு இனிமேல் திரும்பவே வராதபடிக்கு மிரட்டி அனுப்பி வைக்கணும். அப்போ தான் வாசிக்க மீதி பணம் உங்க கைக்கு வரும்”.

”ஐயோ அதெல்லாம் நம்மளாலே செய்ய முடியாதுங்க, சாமி” என்று பின்னால் சாய்ந்தார் சிவத்தையா. யார் பெற்ற பிள்ளைகளோ. தானும தவுலை நேராக நிறுத்தி செண்டை மேளம் போல் வாசிப்பதாகக் கற்பனை செய்தார் அவர். கூட்டமாக எழும் அந்தத் தாளமும் நன்றாகத் தான் இருந்தது. அவர்களை ஆள் வைத்து அடிப்பதாவது. எதுக்கு? அவருக்கு அதொன்றும் தெரியாது.

“அப்போ, ஒண்ணு செய்யுங்க”, யோசித்து விட்டு புகைக்காரர் தொடர்ந்தார். “இந்தப் பொம்மனாட்டிகள் எல்லோரும் வயசு வித்தியாசம் இல்லாம, ஒரு லஜ்ஜை இல்லாம ஆடிண்டு திரியறா. அவா வெட்கப் படணும். நாக்கைப் பிடுங்கற மாதிரி, இவன்கள் தோள்லே துண்டைப் போட்டு இறுக்கிக் கேட்டுட்டு வாங்க”. அவர் நிறுத்த, சிவத்தையா கேட்டார், “என்ன மாதிரி?”.

“கும்காரமும் ரீங்காரமும் என்னன்னு தெரியாம. இதென்னடா வாசிக்கறீங்க. இது தாளம்னா உங்கம்மா உங்கப்பாவுக்கு உங்களைப் பெத்திருக்க மாட்டா. ஊரே கூடப் படுத்து உற்பத்தி பண்ணியிருக்கும்”. ஐயோ என்று பதறினார் சிவத்தையா. “இது ஒரு தொடக்கம் தான். இன்னும் காட்டமா வரணும்” என்று ஜிப்பாக்காரர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, புரோகிதர்கள் மந்திரம் சொல்லித் தொடர்ந்தார்கள். புது வேட்டியும் பட்டுப் புடவையுமாக இருந்த வயதான ஜோடியோடு எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

“வேறே அவங்களை என்ன செய்ய முடியும்?” பெரியவர் கேட்க, ஒரு நிமிஷம் முழுக்க யோசித்து சிவத்தையா சொன்னார் – “ஒரு ஓரமா அவங்க திசையிலே பார்த்து நின்னு காறித் துப்பலாம். வரும்போது அதான் செஞ்சேன்”. பெரியவர் மண்டையோடு சிரிப்பது போல ஈறைக் காட்டிச் சிரித்தார். “சரி அது போதும் இப்போதைக்கு”. சிவத்தையா எழுந்து நின்றார்.

”இந்தாங்க, நூத்துப் பதினோரு ரூபா அட்வான்ஸ். அவனுங்க விரலை முறிக்க கிளம்பியிருந்தீங்கன்னா இதுவே ஆயிரத்து நூத்துப் பதினொண்ணு ஆகியிருக்கும்”. அவர் சிவத்தையாவின் சட்டைப்பையில் திணித்து விட்டுக் கூட்டத்தை நோக்கிப் போனார். அப்புறம் அவரைக் காணவில்லை. குனிந்து பார்த்துக் கொண்டார் சிவத்தையா. மொடமொடவென்று புது நோட்டுகள்.

”மாமா, போகலாம், வாங்க”. வாசலில் இருந்து ஜெயராஜ் கூப்பிட்டான். ”வாசிச்சதுக்கு பணம்?” சிவத்தையா கையை அசைத்து சமிக்ஞை செய்தார். “போனால்தான் கிடைக்கும்”, அவன் பதிலுக்கு கை காட்டினான். “தாலி கட்டலியேடா?’, சிவத்தையா திரும்பி மேடையைப் பார்க்க, செண்டை சத்தம் மேலோங்கி வந்தது. மாலையோடு இருந்த முதிய தம்பதி எங்கே?

யார் கண்டார்கள். அந்தக் கிறுக்குப் பிடித்த ஜிப்பாக் கிழவரோடு வியாபாரம் பேசிக் கொண்டிருந்தபோது தாலி கட்டியிருக்கலாம். சோபாவோடு அந்த ஜோடியை அப்படியே பெட்ரூமுக்குச் சுமந்து கொண்டு போயிருக்கலாம்.

இல்லை, அவர்களும் கழுத்தில் மாலையோடு சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். ஜெயராஜ் முன்னால் நடக்க, நாதசுவர்மும் ஒத்தும் தோளுக்கு ஒன்றாகத் தாழ புகையிலை அதக்கியபடி ஒத்துக்காரர் பின்னால் போனார். தவுலைத் தூக்கிக் கொண்டு தளர்ந்து போய் நடந்தார் சிவத்தையா.

முன்னால் போனவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியாமல், நீண்டு போன பாதையில் நடந்து போனார் அவர். இன்னும் பிடிவாதமாக விடியற்காலை தான். முன்பனிக் காலத்து மெல்லிய குளிர்த் திரை படிந்து விலகிக் கொண்டிருந்தது. தெருவில் சைக்கிள்கள் ஒன்றிரண்டாக மணியடித்துப் போக, எதிரே வந்த டெம்போவுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்.

சட்டென்று சத்தம் கேட்க நின்றார். கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி இடம் முழுக்கச் சூழ்ந்து நின்றது செண்டை மேளச் சத்தம். பந்தல் போட்ட கட்டிடத்தின் முன் நின்று வாசிக்கிற இளைஞர்கள் சிவத்தையாவைப் பார்த்துக் கண்ணால் சிரித்தபடியே வாசித்தார்கள். இவர்களை எங்கே பார்த்தோம்? சிவத்தய்யா யோசித்தார். இவர்கள் தானே அங்கே, அந்த வீட்டில் வாசித்து ஓய்ந்து, உண்டு, குடித்து, நின்று, மறுபடி வாசிக்கிறவர்கள்! வாயில் ஊறிய எச்சிலை எங்கும் துப்பாமல் ஜாக்கிரதையாக முழுங்கினார்.

மண்டப வாசலில் ஒத்துக்காரர், ‘அண்ணே, ரொம்ப லேட் பண்ணிட்டீங்க’ என்று பதறினார். அவரைப் பிடித்து இழுத்துக் கூட்டிப் போகாத குறையாக உள்ளே நடத்திப் போக, அதே புரோகிதர்கள். அக்னி வளர்க்கும் மேடையில் அவர்களின் வியர்த்த முதுகுக்குப் பின் நாகசுவரத்தோடு ஜெயராஜ். புதுசாக, மறுபடியும் புதுசாக அவன் வாதாபி கணபதிம் வாசிக்க ஆரம்பிக்கிறாஅன். புதுசாக அபசுவரம். சற்று நிறுத்தி, ‘தூங்கிட்டீங்களா அண்ணே? நாங்க சேத்துப்பட்டுலே காத்துட்டிருந்துட்டு நேரமாயிடுச்சுன்னு ரயில் பிடிச்சு”. அவன் முடிப்பதற்கு முன் செண்டை கொட்டி முழக்க ஆணும் பெண்ணும் ஆடுகிறார்கள். அவர்களை சிவத்தையா ஏற்கனவே சந்தித்திருக்கிறார். ‘நாட்டாமை நடையை மாத்து’. அதே மாமி சொல்கிறாள். நடை மாற அவர்கள் எல்லோரும் அசைந்து ஆடுகிறார்கள். மேடையில் சோபாவில் அதே வயதானவரும் முதியவளும் பூமாலைகளோடு உட்கார்ந்திருக்கிறார்கள்.

“எங்கப்பா அந்தக் காலத்துலே மிருதங்க மேஸ்ட்ரோ”, சோபா பெரியவர் யாருக்கோ மேடையில் வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினார். சிவத்தையா அந்தப் படத்தைப் பார்த்தார். ஜிப்பாக்காரர் நடுநாயகமாக உட்கார்ந்து சிரிக்கும் படம். கூட்டத்தில் அவரைக் காணோம்.

சிவத்தையா சட்டைப் பையில் பார்த்தார். வெறுமையாக இருந்தது. தவிலைக் கொட்டி முழக்கி ஜெயராஜோடு வாசிக்க ஆரம்பித்தார் அவர். காப்பியோடு பையன் அவர்களை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தான்.

இடம் பெற்ற நூல் : இருவாட்சி இலக்கியத் துறைமுகம் பொங்கல் சிறப்பு வெளியீடு ஜனவர் 2018
ஓவியம் : ஜீவா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன