ஆறு மடிப்பு அம்சா

 

Kungumam Column – அற்ப விஷயம் 16

பழைய கருப்பு வெளுப்பு சினிமாக்களை, அதுவும் தென்னிந்திய மொழித் திரைப்படங்களை டி.வியில் பார்க்கும்போது இதயம் கனக்கிறது. கனக்காமல் என்ன செய்யும்? வஞ்சனையில்லாத வாளிப்பும் பூரிப்புமாக, இடுப்பில் டயர் வைத்த மாதிரி சதை போட்ட அந்தக் காலக் கதாநாயகியர் சிரமத்தைப் பார்க்காமல் ஓடுகிறார்கள். மேட்டூர், கல்லணை என்று ஒரு அணைக்கட்டு விடாமல் ஏறி இறங்குகிறார்கள். ஆடுகிறார்கள். இடைவேளைக்கு முன் அழ ஆரம்பிக்கிறார்கள். கதாநாயகர்கள் பற்றிச் சொல்வது தற்போதைக்கு ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது.

இரண்டு கன்னமும் பப்ளிமாஸ் போல உப்பி, கை கால் உருண்டு திரண்டு இருப்பதே உடம்பு மற்றும் பர்ஸ் வளத்துக்குச் சான்றாகக் காட்டப்பட்ட பொற்காலம் அது. திரையிலும் தரையிலும் அப்படியானவர்கள் கம்பீரமாகப் பவனி வந்த நேரத்தில் உடல் பயிற்சி என்பது பள்ளிக்கூடத்தில் பிற்பகல் வகுப்பாக மட்டும் இருந்தது. இப்போது எல்லாம் தலைகீழ். ஜிம் போய் காசு கொடுத்து எக்சர்சைஸ் செய்வது செல்வத்தின் அறிகுறி. அது ஆண்களுக்கு. பெண்ணாக இருந்தால், கன்னம் ஒட்டிப் போய், பென்சிலுக்குக் கை கால் முளைத்தது போல் பூஞ்சை உடம்போடு விசுக் விசுக்கென்று நடமாட வேண்டும். ஒவ்வொரு கவளம் சாப்பிடும் முன்னாலும் ஏகப்பட்ட சிக்கலான கணக்குகள் போட்டு உடம்பில் ஏறக் கூடிய கலோரி அளவைத் தீர்மானிப்பதும் அவசியம். இது பெரும்பாலும் எடுத்த சோற்றைத் தூற எறிந்து விட்டு ஒரு கிளாஸ் மினரல் வாட்டர் குடிப்பதில் முடியும். என்றைக்காவது நாக்கு பிடிவாதம் பிடித்து அரை கப் பால் பாயசம் சாப்பிட்டால் வயிற்றில் இடி இறங்கின மாதிரி மனசு பயமுறுத்தும். அந்த பயத்தில், பாயசக் கொழுப்பை இல்லாதாக்க, பத்து கிலோமீட்டர் ஓடிவிட்டு வருவது தேவையாகும்.

ஜிம் என்று செல்லமாக அழைக்கப்படும் ஜிம்னாசியத்துக்குள் நுழைந்து பார்த்தால் சிறிய அளவில் ஏதோ தொழிற்சாலை நடக்கிற இடம் போல் இருக்கும். டூயட் பாடும் சினிமா கதாநாயகர்கள் மாதிரி அதில் ஒரு கருவி. இது இடுப்பை வளைத்துப் பிடித்து இறுக்கி அப்புறம் விலகி திரும்பவும் வளைக்கிற சேவையை நம் இடுப்புக்குத் தொடர்ந்து செய்வதால், வயிற்றுப் பக்கம் சதை குறைய வாய்ப்பு உண்டு என்று தெரிகிறது. அதாவது இந்த விட்டுப்பிடி மெஷினில் இடுப்பைக் கொடுப்பதும், நாக்கை மனக் கயிற்றால் கட்டிப் போட்டு சாப்பாட்டு ஆசையைத் துறக்க வைப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் தொப்பை சுருங்க வாய்ப்பு உண்டு.

ஜிம் என்றால் டிரட்மில் இல்லாமலா? சிறுதொழில் பட்டறை சூழலை உருவாக்க இந்த மில்லே போதும். ஏறி நின்று பட்டனைத் தட்டினால் ஃபாக்டரியில் கன்வேயர் பெல்ட் மாதிரி டிரட்மில்லின் தரைப்பகுதி நகர ஆரம்பிக்கும். விழாமல் இருக்க, நகரும் பெல்ட்டோடு சேர்ந்து நடக்க வேண்டியது தான். இது பிடி கிட்டி நடை ராஜா ஆனதும் மெஷினை வேகமாக நகர வைத்துவிட்டு நாம் ஓட ஆரம்பிக்கலாம்.

மாதம் ஐநூறு, ஆயிரம் கொடுத்து ஜிம்முக்குப் போய் மிஷினோடு நாலடி நடக்கிறதுக்குப் பதிலாகத் தெருவில், பூங்காவில் காற்றோட்டமாக நடந்து நாலு கிலோமீட்டர் போய்விட்டு வந்தால் ஆரோக்கியம் கிடைக்காதா என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படக் கூடாதவை. சும்மா தெருவில் இறங்கி நடக்கிறதில் இருப்பதை விட, ஜிம்முக்குப் போய்ட்டு இருக்கேன் என்று சொல்வது அதிகமான கௌரவத்தை அளிக்கக் கூடியது. டிரெட்மில் தவிர, முன்னால் நகராமல், இருக்கும் இடத்திலேயே பெடல் செய்து ஓட்டுகிற சைக்கிள், படகு ஓட்டும், படி ஏறும் யந்திரங்கள், பாதத்துக்கு இதமாகப் பதமாக மசாஜ் செய்கிறது இப்படியான சாதனங்களும் கொண்டவை இந்த ஜிம்கள். இவை தற்போது வருமானக் குறைவால் கொஞ்சம் மெலிந்து கிடக்க ஒரே காரணம் மின்சார வெட்டுதான்.
ஆண்களின் கட்டுடல் சம்பந்தப்பட்ட லேட்டஸ்ட் பரபரப்பு சிக்ஸ் பேக் அப்ஸ். அதாவது ஆறு வளைவுகளோடு வயிறு ஒடுங்கித் தெரியும் திருக்கோலம். வயிற்றுக்கு மேலே இரண்டு பக்கத்திலும் மூணு மூணு வளையங்களாக இறுகின தசை இந்த சிக்ஸ் பேக்கின் சிறப்பு. ஹாலிவுட் நடிகர்களில் இருந்து கோடம்பாக்கத்தில் நேற்றைக்கு அறிமுகமான புதுமுக ஹீரோ வரை தற்போது கனவு காண்கிற லட்சியத் தோற்றம் இது. நம்ம ஊரில் காமா பயில்வானும் சோமா பயில்வானும் ஒரு காலத்தில் பஸ்கி, தண்டால் எடுத்து கர்லா கட்டை சுழற்றிப் பெற்ற உடல் வளத்தோடு ஒப்பிட்டால் ஜுஜுபி தான் சிக்ஸ் பேக் ஆப்ஸ். ஆனாலும் வெள்ளைக்கார தேசத்தில் புதுசாக மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டு, இங்கே பரபரப்பாக அறிமுகமாகிவிட்டது. எனவே உள்ளூர் ஜிம்மில் காசு செலவழித்து மாதக் கணக்காக எக்சர்சைஸ் செய்து பெற வேண்டிய விஷயம் இது.

உலகம் இருக்கிற பொருளாதார நெருக்கடியில், வயிற்றுக்கு மேலே ஆறு என்ன, அதுக்கும் மேலே இன்னும் பனிரெண்டு வளைவாக நெஞ்சாங்கூடு எலும்பு எல்லாம் தெரிய மெலிந்து போக வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. பட்டினி கிடப்பது மாதிரி சக்தி வாய்ந்த வேறே எக்சர்சைஸ் உண்டா என்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன