”திருமறை சாட்சிகளான சகல புனிதர்களே” “எங்களுக்காக மன்றாட வேணுமே”, அலைகளும் சொல்லின.

(இன்று மொழிபெயர்த்ததில் ஒரு சிறு பகுதி)

”புனித லௌரந்தியோஸே”

“எங்களுக்காக மன்றாட வேணுமே”

”புனித வினிசந்தியோஸே”

“எங்களுக்காக மன்றாட வேணுமே”

”புனித கீவர்க்கியோஸே”

“எங்களுக்காக மன்றாட வேணுமே”

”பலியானோஸ், செபஸ்தியானோஸ் என்ற புனிதர்களே”

“எங்களுக்காக மன்றாட வேணுமே”

”குஸுமோஸும், தமனியோஸுமான புனிதர்களே”

“எங்களுக்காக மன்றாட வேணுமே

கவர்தீஸும் ப்ரோத்தாதீஸும் ஆகிய புனிதர்களே”

“எங்களுக்காக மன்றாட வேணுமே”

”சில்வஸ்த்ரோஸும் க்ரிகோரியஸுமான புனிதர்களே”

“எங்களுக்காக மன்றாட வேணுமே”

”இவானிமோஸும் அம்ப்ரோசிஸுமான புனிதர்களே”

“எங்களுக்காக மன்றாட வேணுமே”

(குட்டி, நீ போடற சவுண்ட் வல்லார்பாடம் வரை கேட்கும் போல”)

“அகஸ்தினோஸ், மர்த்தினோஸ் என்ற புனிதர்களேஎ”

“எங்களுக்காக மன்றாட வேணுமே”

“யோஹனான், பவுலோஸ் என்ற புனிதர்களே”

“எங்களுக்காக மன்றாட வேணுமே”

”திருமறை சாட்சிகளான சகல புனிதர்களே”

“எங்களுக்காக மன்றாட வேணுமே” அலைகளும் ஒலி குறைத்துச் சொல்லின.

(சடால்னு சத்தத்தை குறைச்சிட்டியே குட்டி)

படகு அறையைப் பூட்டிச் சாவியைத் திரும்பக் கொடுக்க நான் சுஹ்ராமேடத்தின் வீட்டுக்குப் போனேன். கொடுத்துவிட்டுத் திரும்ப நடந்தபோது சுஹ்ரா மேடம் சொன்னார்: “ஜெசிகா, கொஞ்சம் நில்லு”.

நான் சுஹ்ரா மேடத்தின் அருகில் போனபோது ஸைனபாவும் வந்திருந்தாள். ஸைனபா சொன்னாள் : “ஜெசிகா பாவாடையிலே பின்னம்பக்கத்துலே சிலோன் மேப் மாதிரி ரத்தக்கறையா இருக்கு”.

“ஸைனபா, நீ உள்ளே போய்ப் பையிலே இருந்து பழந்துணி எடுத்துக்கிட்டு வா”, சுஹ்ராமேடம் சொன்னார். பிறகு ஜெசிகாவை குளியல் அறைக்குக் கூட்டிக்கிட்டுப் போ. ஜெசிகா, பயப்பட ஒண்ணுமில்லே. நல்லா தொடச்சுக்க”.

பூப்பு என்னை ஏமாற்றமடையச் செய்தது. அது வியர்வை போல் மெலியதாக இருந்தது. நான் வீட்டுக்குத் திரும்ப நடந்தபோது, பூமி என்னை இன்னும் இறுகக் கடித்து இழுப்பது போல் தோன்றியது. படகு அறையில் என் வலது கால் பாதத்தில் ஒரு புது மருவைக் கண்டுபிடித்ததை நினைத்துக் கொண்டேன். அந்த மரு நான் இனியும் தனியாகச் சுற்றித் திரிவதை நிறுத்தும் என்று தோன்றியது.

‘Lanthan Batheriyile Luthiniyakal’ – N.S.Madhavan – being translated into Tamil by Era.Murukan – ‘பீரங்கிப் பாடல்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன