நண்டு மரம் – புதிய சிறுகதைத் தொகுப்பு – முன்னுரை இரா.முருகன்

நண்டு மரம் – முன்னுரை

இது என் பத்தாவது சிறுகதைத் தொகுப்பு. சிறுகதையிலும் குறுநாவலில் மும்முரமாக இயங்கிய 1990-களுக்கு அப்புறம் நாவலில் கவனம் குவிந்த கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவையெல்லாம். அனேகமாக எல்லாக் கதைகளுமே பத்திரிகைகள் கேட்டு வாங்கிப் பிரசுரித்தவை. இந்தப் பத்திரிகைகளில் இலக்கியச் சிற்றிதழ்களும், பெரும் வணிக இதழ்களும் அடங்கும்.

வடிவத்தில் சோதனை நிகழ்த்தப்பட்ட கதைகளோடு கதானுபவத்தையும், கதை சொல்வதில் உண்டாகும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதற்கென எழுந்த கதைகளும் இதிலுண்டு. வேகமாக நகரும் கதைப்போக்கும், முனைந்து மெல்ல நிகழ்த்திப் போகும் கதையாடலும் இவற்றில் அடுத்தடுத்த கதைகளிலேயே காணக் கிடைக்கும். எல்லாக் கதைகளுமே சற்றே நீண்டவை. எழுதப்பட்ட வடிவிலேயே பிரசுரம் கண்டவையும் கூட.

என் நாவல்களில் வருவதை விடக் குறைந்த அளவில் தான் மேஜிக்கல் ரியலிசம் இந்தச் சிறுகதைகளில் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் கலந்து வருகிறது. வரும் போது, மெல்லிய, எனில், அவசியமான கீற்றாகவே அது தட்டுப்படுகிறது. ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் சங்கிலித் தொடராகப் பற்றிப் பிடித்துப் போகும் கதைகளாக இல்லாமல் அததற்கு என்று களம், மொழி, ந்டை என்று எல்லை தாண்டாமல் நிகழ்கிறவை இவை.

மனதில் ஒரு சிறு நினைவுக் கீற்றாக, என் லேப் டாப் கம்ப்யூட்டரில் ஒன்லைன் சுருக்கமாக சில வருடங்கள் உறைந்த கதைகள் இவற்றில் சில. இவை போன்ற இன்னும் சிலவோ, நாவல் கதையாடலுக்குள் ஏதோ ஒரு தருணத்தில் கலந்து கரைந்து விட்டன யாராவது எந்தப் பத்திரிகையில் இருந்தாவது கதை கேட்டுச் சிறுகதை ஆகியிருக்க அவற்றுக்குக் கொடுப்பினை இல்லை.

ஆலப்புழைக்கு அருகே வேம்பநாட்டுக் காயல் கரையோரம் ஒரு கிராமத்தில் தங்கி இருந்தபோது மனதில் எழுந்த தொன்ம நினைப்பு காத்திருக்க வேண்டியில்லாமல் ’போத்தல்’ கதையானது, மழை தொடங்கிய அதே ராத்திரியில் தான். உடைந்த போத்தல் துண்டுகளை மறுபடி சுமாரகப் பழைய வடிவில் ஒட்டித் தரச் செய்யப்படும் பிரார்த்தனை என்ற கதைச் சரடு, ஜி.அரவிந்தனின் திரைப்படம் ‘எஸ்தப்பன்’ பாதிப்பில் இருக்கலாம் என்று இதை எழுதும் போது தோன்றுகிறது. ஆனால் எஸ்தப்பன் படத்தை நான் கடந்த நாலாண்டுகளுக்குள் தான் பார்த்தேன். சிறு அற்புதங்கள் செய்யும் என் எஸ்தப்பனை நானே உருவாக்கி இருக்கக் கூடாதா என்ன? அவன், ‘தகவல்காரர்’ என்ற என் குறுநாவலில் வரும் சாமியாருடைய நீட்சிதானோ!

ஒரு பத்து வயதுச் சிறுவனாக என்னைப் பாதித்தது ஜவஹர்லால் நேருவின் மரணம். கோடை விடுமுறை நேரத்தில், வார நடுவில் ஒரு புதனன்று ஏற்பட்ட அந்த இறப்பின் சூழலில், சென்னையில் திரைப்படத் துறையில் பணிபுரியும் முகம் தெரியாத அல்லது தெரியத் தொடங்காத உதிரிகள் இருவரின் பார்வையில் ‘குடம்’ கதை எழுத ஆரம்பித்த போது அது நேரு இறந்து முப்பது வருடம் கழித்துத்தான் நிகழ இருந்தது. நினைவும், மனமும், கற்பனையும் ஏதோ ஒரு கணத்தில் பச்சையம் உருவாவது போல ஒன்று கலக்க, அந்தச் சிறுகதை எழுதப்பட்டபோது நேரு பற்றி வாசாலகமாகக் கதைக்கும் என் அரசூர் நாவல்கள் எழுதப்பட்டிருக்கவில்லை.

மாய யதார்த்தவாதம் சற்றே தூக்கலான ’அண்ணன் அண்ணி கதை’யில் வரும் அண்ணன் மட்டுமில்லை, அவனுடைய இளைய சகோதரனான கதை சொல்லியும் இப்போது இல்லை. அவர்கள் எனக்கு வெகுவாகப் பழக்கமானவர்கள். காதில் காளான் முளைப்பது போல் அடிக்கடி வீக்கம் ஏற்பட்டு மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போக வேண்டி இருந்த பெண் குழந்தை இப்போது வெளிநாட்டில் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறாள். அங்கே குடியேறி நல்ல உத்தியோகத்திலிருக்கும் அண்ணி எப்போதாவது நலம் விசாரித்து மின்னஞ்சல் அனுப்புவாள். காலைக் காப்பிக்கு இறங்கி வரும் முன்னோர்கள் அரசூர் வம்சம் நாவல்களுக்குக் கோலாகலமாகப் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அறிவியல் சிறுகதையான ‘போகம் தவிர்’ அளிக்கும் சாத்தியங்கள் எதிர்காலத்தில் நடந்தேறக் கூடியவை. ‘முகம் பார்க்கும் கருப்புக் கண்ணாடி’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களை நெட்ப்ளிக்ஸின் பார்க்கும்போது பயம் கொள்ள வைத்தபடி இக்கதை ஒரு வினாடி மனக் கிணற்றில் இருந்து கையசைத்துப் பார்க்கிறது. ஆமா, அந்தக் கதையில் தமிழ்த் தாத்தா உ.வே.சா வந்து போகிறார், தெரியுமோ.

இன்னொரு குதிரை முழுக்க future tense-ல் எழுதிப் பார்த்த கதை.இந்த மாதிரியான சோதனை முயற்சி கல்கி பத்திரிகையில் வெளியாகும் என்று யாராவது இக்கதை பிரசுரமாவதற்கு முன் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். கல்கிக்கு நன்றி.

இருபத்து நாலு பெருக்கல் ஏழு, ஒட்டகம், அரிசிக் கடவுள், இளைப்பாறுதல் போன்ற கதைகள் நான் பணிபுரிந்த இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்ற கம்ய்பூட்டர் துறை அனுபவங்களின் அடிப்படையில் எழுந்தவை. அத்துறை இன்னும் நம்பிக்கையையும், நம்பிக்கைக் குறைவையும் ஒருசேரக் கலந்து தான் தருகிறது. ஆனாலும் ஐ.டி இங்கே ஆல் போல் தழைத்து இன்னும் வளர்ந்தபடி இருக்கும். நான் தான் பணி ஓய்வு பெற்று வெளியே வந்து விட்டேன். இனி கணினித் துறை பற்றி எழுதினால் அது நனவிடைத் தோயும் ஒரு நாவலாக இருக்கும்.

இந்தக் கதைகள் எழுதப்படும் போது என்னுள் எழுந்த உணர்வுகள் இன்னும் மாறவில்லை. அவற்றை எழுதிய பின் ஏற்பட்ட நிறைவு வெவ்வேறு விகிதத்தில் இருந்தாலும், எதுவும் தள்ள வேண்டியது இல்லை என நம்புகிறேன்.
.
இவற்றைப் பிரசுரித்த வடக்கு வாசல், உயிர்மை, தீராநதி, விருட்சம், புதிய பார்வை, வார்த்தை, அமுதசுரபி, குமுதம், கல்கி, குங்குமம், தினமலர், தினமணி கதிர், விகடன், ஜன்னல், திண்ணை பத்திரிகைகளுக்கு என் நன்றி

இத்தொகுப்பு இப்போது உங்களிடம். Bon appétit littéraire.

அன்புடன்: இரா.முருகன் ஜூலை 2017

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன