என்ன பொருத்தம்

 

Kungumam column – அற்ப விஷயம் -18

தினப் பத்திரிகைகளின் ஞாயிற்றுக்கிழமை இணைப்புகள் சுவாரசியமானவை. தெரிந்த மொழியில் எல்லாம் பத்திரிகை படிக்கிற பழக்கம் இருந்தால், இப்படி வந்து விழுந்த, அச்சடித்த காகிதம் அனைத்தையும் படித்து முடிப்பதற்குள் விடிந்துபோகும். அடுத்த நாள் பத்திரிகை வாசலுக்கு வந்துவிடும். போனவாரம் நேரத்தோடு மல்லுக்கட்டி, வேற்றுமொழிப் பத்திரிகையின் ஞாயிறு மலரைத் தற்செயலாக மேய்ந்தபோது முழுப் பக்கச் செய்தி ஒன்று கவன ஈர்ப்பு செய்தது. அது தற்செயலான நிகழ்ச்சிகளைப் பற்றியதாக அமைந்து போனதும் தற்செயலே.

பத்திரிகையாளரும் டாக்குமெண்டரி திரைப்படம் தயாரிக்கிறவருமான ஒரு இளைஞர். மலையாள எழுத்தாளரும் கூட. தில்லியில் இருக்கும் இவர் இண்டர்நெட்டில் தன் புகைப்படம், தயாரித்த படங்கள் போன்ற விவரங்களைச் சிக்கனமாகப் பதிந்து ஓர் இணையத் தளத்தையும் வைத்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக இவருக்கு பீகார் மாநிலத்தின் பல ஊர்களிலிருந்து கடிதம், ஈமெயில் என்று வந்து குவிகிறது. எழுதுகிறவர்கள் எல்லோரும் பள்ளி மாணவ மாணவிகள். எல்லாக் கடிதமும் ஒரே மாதிரி. ‘பாடத்தில் உங்களைப் பற்றி படித்தோம். உங்கள் உடல்நிலை எப்படி இருக்கு? சுமிதாவோடு அதிகம் சண்டை போடாதீங்க’.

தலைகால் புரியாமல் இருந்தாலும் தூண்டித் துருவ, இன்னும் கொஞ்சம் தகவல் கிடைத்தது. பீகார் பள்ளிகளில் தற்காலச் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பைப் பாடப் புத்தகமாக வைத்திருக்கிறார்கள். சாகித்திய அகாதமி வெளியிட்ட இந்த ஆங்கிலப் புத்தகத்தில் மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பான ‘வெப்சைட்’ என்ற கதையும் உண்டு. கதாநாயகன் பெயராக இந்தத் தில்லிக்காரரின் பெயர், இணையத் தளத்தின் முகவரி, மற்ற விவரம் எல்லாம் மிகச் சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கூடவே இவர் வாழ்க்கை வரலாறும், ஓரளவு அப்படியே கதையாகி இருக்கிறது. ஓடுகிற ரயிலிலிருந்து தவறி விழுந்து கிட்டத்தட்ட மரணத்தை இவர் நிஜ வாழ்க்கையில் தழுவியவர். கதையில் இவர் பெயரோடு வரும் கதாநாயகன் விபத்தில் இடுப்புக்குக் கீழே மரத்துப் போய் நடமாட முடியாதவன். இண்டர்நெட் மூலம் சுமிதா என்ற பெண்ணோடு நட்பு கிடைத்து அவளோடு அன்பாகப் பேசியும் தீவிரமாக விவாதித்தும் வருகிறவன்.

‘வெப்சைட்’ கதையை எழுதிய மலையாள எழுத்தாளர் ஒரு பெண்மணி. அவருடைய ஊர், விலாசம் எப்படியோ தேடிக் கண்டுபிடித்து தில்லிக்காரர் சமீபத்தில் சந்தித்தபோது பெண் எழுத்தாளருக்கு ஒரே அதிர்ச்சி. இவரைப் பற்றி முன்னே பின்னே கேள்விப்பட்டதே இல்லை அவர். தில்லிக்காரரின் வெப்சைட்டையும் அவருக்குத் தெரியாது. ஆனாலும் இதெல்லாம் கற்பனையாகச் சேர்த்து அவர் கதை எழுதி, அது மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பாகி, பீகார் பள்ளி வகுப்பில் படிக்கப்படுகிறது. கதாபாத்திரத்துக்கு எழுதிய கடிதம் நிஜ நாயகனுக்கு வந்து சேர்கிறது. எல்லாமே தற்செயலானது என்கிறார் எழுத்தாளர் அம்மணி.

கதாசிரியருக்கு முன்னால் அவர் படைத்த கதாநாயகன் ஹலோ சொல்லிக் கொண்டு நிற்கிற காட்சி அந்தப் பெண் எழுத்தாளருக்குப் புதியது இல்லையாம். ஏற்கனவே ஒரு சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு, போட்டி நடைபெறும் இடத்தில் கதை எழுத உட்கார்ந்திருக்கிறார். எதிரில் இன்னொருத்தர். அவரும் போட்டிக்கு வந்தவர் தான். எதிராளி கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டு எதுவுமே எழுதாமல் காகிதத்தை மடக்கிக் கொடுத்துவிட்டுத் திரும்பிப் போக, பெண் எழுத்தாளர் அவரை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு கடகடவென்று மனதில் வந்த கதையை எழுதியிருக்கிறார். முதல் பரிசு அவருக்குத்தான். கதை யாரைப் பற்றியது என்று சொல்லத் தேவையில்லை. எதிரில் வந்து அமர்ந்தவரின் சொல்லப்படாத வரலாறு தான் அது. புற்று நோயாளியான அந்த மனிதர் இறப்பதற்கு முன் எழுத்தாளரைச் சந்தித்து விட்டுத்தான் கண் மூடியிருக்கிறார்.

ஆழ்ந்த படிப்பாளியும், மிகப் பிரபல நட்சத்திரமுமான நண்பரிடம் கதைத்துக் கொண்டிருந்தபோது இதற்கு பகுத்தறிவு விளக்கம் காண முற்பட்டோம். ஏற்கனவே அறிமுகமான இரண்டு எழுத்தாளர்கள் முன்கூட்டி பேசி வைத்துக் கொண்டு முதல் கதையைப் பற்றிய ‘தற்செயல்’ செய்தியை உற்பத்தி செய்திருக்கலாம். இரண்டாம் கதைக்கு சாட்சி சொல்ல புற்றுநோய் இளைஞர் உயிரோடு இல்லாததால் இதுவும் கதை எழுதிய பிற்பாடு கட்டிச் சமைத்த கிளைக்கதையாக இருக்கலாம். சரியா?

அவர் குறுந்தாடியை வருடியபடி யோசித்தார். ‘எனக்குக் கதை சொல்ல வந்த எழுத்தாளர் ஒருத்தர் அவர் கதையிலே வந்தபடியே ஆக்சிடெண்டிலே இறந்து போனார் தெரியுமா?’ என்றார். ‘அப்போ, இதெல்லாம் தற்செயலானதாகக் காட்டி நடத்தி வைக்க நமக்கு மேலே தலைவன் ஒருத்தன் இருக்கின்றானா?’ என்று கேட்டேன். அவருடைய மர்மப் புன்னகைக்கு இல்லை என்று அர்த்தம். சரியா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன