தொழுவத்தில் இன்னொரு பிரசவம்

(மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் லந்தன்பத்தேரி நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி)

“எல்லாரும் ஒரு கை கொடுங்க. இந்தப் பொண்ணை வீட்டுக்குள்ளே கொண்டு போகலாம்”, நர்ஸ் ஆனியம்மா சொன்னாள்.

“என்னை கொல்லாதீங்க. நான் இங்கே கிடந்தே பிரசவிச்சுக்கறேன்”, அம்மா கூவினாள்.

“பாத்துக்கிட்டு நிக்காதீங்க. ஆளுக்கொரு கை கொடுங்க”, என்றாள் நர்ஸ் ஆனியம்மா.

“எனக்கு பாதி பிரசவம் ஆகிடுச்சு”, அம்மா உச்சத்தில் சத்தம் போட்டது லந்தன்பத்தேரி முழுக்கக் கேட்டது. அப்பன் லிசிப் பசுவைக் கட்டவிழ்த்து, தோட்டத்துக்கு இட்டுப்போய்க் கட்டினார். தொழுவத்தைச் சுத்தமாக்கிய பிறகு அங்கே ஈரமில்லாத ஒரு மூலையில் அப்பன் ஓலைப்பாயை விரித்தார். அதன் மேல் கம்பளியையும் மேலே படுக்கை விரிப்பையும் பரப்பினார். அப்பன் இன்னும் சில ஜமுக்காளங்களைக் கொண்டு வந்தார். அவற்றைக் கயிற்றால் கட்டித் தொங்க விட்டு மாட்டுத் தொழுவத்தில் மறைவான இடம் உருவானது.

அடுத்த வீட்டிலிருந்து சேவியரும், சாராவும் வந்தார்கள். அப்புறம் கோமசும் அவனுடைய மூன்று பெண்களும் வந்தார்கள். டாடா கம்பெனி வேலை முடிந்து சந்தியாகு வீடு திரும்பியிருக்காததால் சில்வியா தனியாக வந்தாள். மத்தேவுஸ் ஆசாரி வீட்டுத் தொழுவம் நிறையத் தொடங்கியது.

“பேசின்லே கொஞ்சம் வென்னீர் கொடுங்க. டெட்டாலும் வேணும்”, நர்ஸ் ஆனியம்மா திரைமறைவுக்குப் பின்னால் இருந்து கேட்டாள். சாரதாம்மா படுக்கை விரிப்புகளுக்குப் பின்னால் இருந்து வெளியே வந்தபோது கூட்டம் கூடி நின்றவர்கள் பயந்து பின்னால் ஒரு சுவடு எடுத்து வைத்தார்கள். தொழுவத்தில் அம்மாவும், நர்ஸ் ஆனியம்மாவும், அப்புறம், நானாகி முடிக்காத நானும் தனியே இருந்தோம்.

“முக்கு, மடில்டா”, ஆனியம்மா நர்ஸ் சொன்னபோது அம்மா பலவீனமாக முக்கினாள்.

“நல்லா முக்கு, மடில்டா. குழந்தை வெளியே வரட்டும்”, அம்மாவின் வயிற்றைத் தடவிக்கொண்டு நர்ஸ் ஆனியம்மா சொன்னாள். அவள் திரைக்குப்பின் இருந்து எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தாள் : “எல்லாருமா சேர்ந்து சந்தோஷமா ஒரு தடவை முக்குங்க”

சில்வியா தான் முதலில் முக்கினாள். கோமசின் மூன்று பெண்களும் வெட்கத்தோடு முக்க ஆரம்பித்தது, அவர்களுக்கிடையே போட்டியாக ஆனது. ஒரு பெண் குலவையிட்டாள். வீட்டு நடையில் முக்கும் சத்தம் நிரம்பியிருந்தது.

அந்தி கருத்து இரவானது. அம்மாவின் வயிற்றுக் கோளத்தின் மேல் ராந்தல் வெளிச்சம் பகலையும் இரவையும் போல் பாதி வெளிச்சத்தையும் பாதி நிழலையும் படர்த்தியது. மத்தேவுஸ் ஆசாரியின் வீட்டுக்கு ராந்தல்களும் தீப்பந்தங்களும் வரத் தொடங்கின. அண்டை வீட்டு சேவியர் தன் வீட்டுப் பரணில் வைத்திருந்த சீன விளக்கைக் கொண்டு வந்து, அதில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, முன்வாசல் மாமரக் கிளையில் தொங்க விட்டார்.

“ஆண்களுக்கு இங்கே என்ன வேலை?” நர்ஸ் ஆனியம்மா கேட்டாள். பிரசவம் தாமதமாக ஆக, அவளுக்குக் கோபம் கூடி வந்து கொண்டிருந்தது. ஆண்கள் வேலிக்கப்புறம் பின்வாங்கினார்கள். வீட்டுக்குள், ஏசுவின் புனிதமான இதயம் படத்துக்கு முன் மண்டியிட்டு மத்தேயுஸ் ஆசாரி பிரார்த்தித்தார்.

அம்மா அழுதாளே தவிர முக்கவில்லை. ஆனியம்மா சொன்னாள் : “முக்கு பெண்ணே, ஊர்க்காரங்களே முக்குங்க”.

பெண்கள் முக்கும் சத்தம் உரக்கக் கேட்டது. அணடை வீட்டு கோமஸ் ஆண்களுக்குச் சொல்லிக் கொடுத்தான் : “ஐலசா”.

“ஐலசா”. ஆண்கள் திரும்பப் பாடினார்கள்.

“சேர்ந்து சொல்லு”, கோமஸ் சொன்னான்.

“ஐலசா”.

“கூட்டிப் பிடிச்சு”

“ஐலசா”.

“ஏலேலோ”

”ஐலசா“

”நம்ம கப்பல்”

“ஐலசா”.

“ஜீவித நௌகா”

”ஐலசா”. இப்போது பெண்களும் ஐலசா பாடினார்கள். அம்மா மூச்சை உள்ளுக்கிழுத்து என்னை மெல்ல வெளியே தள்ளினாள். உடனே ஆனியம்மா சத்தமாகச் சொன்னாள் : “முக்கறதை நிறுத்து. தலை இறங்குது”.

நான் கொஞ்சம் போல் முன்னே நகர்ந்தபோது ஆனியம்மா அம்மாவிடம் சொன்னாள் : “மகளே மடில்டா, இப்போ ஒரே ஒரு தடவை முக்கு”.

கூடி இருந்தவர்கள் மூச்சடக்கி நின்றார்கள். அப்பனின் பிரார்த்தனை உரக்கக் கேட்டது. தொடர்ந்து எல்லோரும் ஒருசேர மூச்சு விட என் பயணத்தின் பாய்மரங்கள் விரிந்தன. நான் மெல்லச் சரிந்தேன். இடது தோளை வெளியே வைத்தேன். பிறகு பல தடவை பிறந்தவள் போல் நான் சட்டென்று வெளியே வந்தேன்.

“இல்லே இல்லே”, நான் அழுதேன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன