New: கம்பெனி லிமிடெட் – 1


சாஃப்ட்வேர் நிறுவனங்கள் சுவாரசியமானவை. அவ,ற்றில் கணிசமான ஊழியர்கள், பறந்து கொண்டும், ஓடிக் கொண்டும், நடந்து கொண்டும், தடுமாறிக் கொண்டுமிருக்கும் ப்ராஜக்ட்களில் வேலை பார்க்கிறவர்கள்.

காலையில் கேண்டீனுக்குப் போகும்போது சாந்தமும் கருணையுமாகப் புன்சிரித்து, வழியில் அங்கங்கே கனிவோடு குசலம் விசாரித்துப் போகிறவர்கள் சீராக இயங்கி வரும் ப்ராஜக்ட்களைச் சேர்ந்தவர்கள். பின்புறத்தில் அக்னி பற்றிப் பிடித்த அவசரத்தோடும் படபடப்போடும் நடக்கிறவர்கள் பற்றி எரியும் ப்ராஜக்ட் ஊழியர்கள். கள்ளச் சிரிப்போடு பவனி வருகிறவர்கள் முழுகும் கப்பலையும் கம்பெனியையும் கை கழுவி விட்டு, வேறே நிறுவனத்தில் சேர அதிகாரபூர்வமான நியமன ஓலை கிடைத்தவர்கள். முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாத கல்லுளிமங்கானியர்கள், இருக்கும் நிறுவனம், ப்ராஜக்ட்டிலேயே அயல் நாட்டுப் பயணமும் அங்கே உத்தியோக ஸ்தல மாற்றமும் கைவரப் பெற்றவர்கள். ‘உங்களுக்குத் தெரிஞ்ச கார் ட்ரைவிங்க் ஸ்கூல், ரொம்ப காசு கேட்காதவங்களா இருந்தா சொல்லுங்க சார்’ என்றோ, ‘குலதெய்வம் கும்புட்டு மொட்டை போட்டு பிரார்த்தனை நிறைவேற்றிட்டு வரலாமான்னு பார்க்கறேன். பாஸ்போர்ட் ஃபோட்டோவோட முகம் மேட்ச் ஆகலேன்னா ஏர்போர்ட்லே சிரமம் இருக்குமா’ என்றோ இடம் பொருள் ஏவல் மீறி ஏதாவது கேள்வி கேட்டு இவர்களில் சிலர் பெற்ற பெருவளம் குறித்து தற்செயலாக வெளிப்படுத்திக் கொண்டு முழிப்பதும் உண்டு.

ப்ராஜக்ட் எதுவும் இல்லாமல் தற்காலிகமாக ‘பெஞ்சில்’ இருப்பவர்களின் அலுவலக வாழ்க்கை கொஞ்சம் ஸ்லோ மோஷனில் நடைபெறும். அவர்களைச் சும்மா இருக்கவிடாமல் இருக்கத் தரப்படும் சின்னச் சின்ன பணிகளையும் ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும், சிரத்தையாகச் செய்வார்கள்.

’உங்கள் சிறுகதைத் தொகுதி கொடுங்க, படிச்சுட்டுத் தரேன்’, என்று கேட்ட பெஞ்ச் நண்பர் அடுத்த நாள் டை கட்டிக் கொண்டு ஆபீஸ் வந்து அவசரமாகத் தாண்டிப் போனால் மூன்று விஷயங்கள் புலனாகும். முதலாவது, அவருக்கு நடக்கிற அல்லது புதியதாக வந்து கொண்டிருக்கும் ஒரு ப்ராஜக்டில் இடம் கிடைத்து விட்டது. இரண்டாவது, அவர் அந்தச் சிறுகதைத் தொகுதியைப் படிக்க மாட்டார். மூன்றாவது, அதைத் திரும்பத் தரப் போவதில்லை.

மொத்த ஆபீஸுமே பரபரப்படைந்து, பலரும் காதில் ஒட்டி வைத்த மொபைல் ஃபோனோடு கழிவறையிலும் வந்த காரியம் மறந்து தொலைபேசிக் கொண்டிருந்தால் ஆர்.எப்.ஐ அல்லது ஆர்.எப்.பி வந்து சேர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

ஆர்.எப்.ஐ என்பது ரிக்வெஸ்ட் ஃபார் இன்பர்மேஷன். வெளிநாட்டிலோ, இங்கே தானோ, ஒரு நிறுவனம் புதியதாக சாப்ட்வேர் என்ற மென்பொருள் உருவாக்கி இயக்கி வைத்துத் தரவோ, இருக்கும் மென்பொருளை சீராக நடத்தித் தரவோ இன்னும் மூன்று மாதம் கழித்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். அதற்கு முன் எந்தெந்த சாப்ட்வேர் கம்பெனிகளோடு பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று குறும்பட்டியல் உருவாக்கி வைத்துக் கொள்ள வசதியாகத் தகவல் கேட்கிற ஏற்பாடு அது.

உங்கள் கம்பெனி பற்றி, உங்களுடைய கஸ்டமர்கள் பற்றிச் சொல்லுங்கள் என்று விதவிதமான ராகங்களில் தொடரும் ஆர் எப் ஐ கேள்விகளுக்கு நல்ல கற்பனை சக்தி உள்ளவர்கள் அருமையாகப் பதில் அளிக்கக் கூடும். இந்த பதில்களை ஒட்டு மொத்தமாகப் படித்துப் பார்த்தால், சகல துறையிலும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரப் பெரும் சுவடுகள் வைத்து முன்னே போவதாக ஒரு கார்பொரேட் பிம்பம் கிட்டும். அது கலைந்து விடுவதற்குள் குறும்பட்டியலில் இடம் பிடித்து விட வேண்டும்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன