New : Homage to Asokamitran – 1புதியது : அசோகமித்ரன் நினைவுகள் – 1

இந்தியாவின் புக்கர் பரிசு என்று மும்பை பத்திரிகைகள் க்ராஸ்வோர்ட் விருது பற்றி. மிதமாகப் பரபரத்து உள் பக்கத்தில் செய்தி வெளியிடும்.

பரிசுக்காக 2008 ஆண்டு ஷார்ட்லிஸ்ட் ஆன ’இந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டவை’ பட்டியலில் தமிழ், மலையாளப் படைப்புகள் –

கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் –
கோவர்த்தனண்டெ யாத்ரகள் – முகுந்தன் –
நாலுகெட்டு – எம்.டி.வாசுதேவன் நாயர்
அரசூர் வம்சம் – இரா.முருகன் –

இவை தவிர அல்மா கபூதரி (உருது – மைத்ரேயி புஷ்பா), சௌரங்கி (வங்காளி – சங்கர்) இடம் பெற்றிருந்தன.

பரிசளிப்பு விழாவில் எம்.டி.வாசுதேவன் நாயர் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டோம். மெரீண்ட்ரைவில் BCCI அலுவலகத்துக்கு எதிரே இண்டர்காண்டினெண்டல் ஓட்டலில் தங்கியிருந்தோம் அப்போது.

விழாவுக்கு முந்திய மாலை நேரம் தங்கியிருந்த இடத்துக்கு அருகே சர்ச்கேட் ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து போய்வரலாம்
என்றார் அசோகமித்ரன். நண்பர் ராம்நாராயண் (கரைந்த நிழல்கள் மொழிபெயர்ப்பாளர்), கிழக்கு பதிப்பகம் பதிப்பாளர் பத்ரி, ஜானகி வெங்கட்ராமன் (அரசூர் வம்சம் மொழிபெயர்ப்பாளர்), கீதா கிருஷ்ணன் குட்டி (கோவர்த்தண்டெ யாத்ரகள், நாலுகெட்டு நூல்களின் மொழிபெயப்பாளர்), நான் ..

ஒரு சிறு குழுவாக நாங்கள் பேசிக் கொண்டே நடந்தோம். எதிரே BCCI. ராம்நாராயண் 1960-70களின் ஹைதராபாத் ரஞ்சி ட்ராபி அணி கிரிக்கெட் வீரர். அசோகமித்ரன் ஹைதாராபாத்தில் நீண்ட நாள் வசித்து இடம் பெயர்ந்தவர். கிரிக்கெட்டில் ஈடுபாடு உள்ளவர். ஆகவே, அபீத் அலி, ஜெய்சிம்ஹா, முஷ்டக் அலி என்று ஹைதராபாத் கிரிக்கெட் வீரர்கள் பற்றியே பேச்சு சுவாரசியமாகப் போனது.

விழாவில், முகுந்தனின் கோவர்த்தனண்டெ யாத்ரகள் பரிசு பெற்றது. விழா முடிந்து அடுத்த தினம் விடிகாலையில் விமான நிலையம் போக வேண்டும். நான் Hotel Front Desk- பகுதியில் செக் அவுட் செய்ய நடந்த போது அசோகமித்ரன் அங்கே இருந்தார். ஓட்டல் பணியாளரான பெண்மணி அவருடைய அறை எண் விவரம் சரி பார்த்தபின் அவரைக் கேட்டாள்

‘Sir, did you consume any beverage stored in the cabinet or the refrigirator in your room?’

அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. ‘Beer, for instance’ என்று விளக்கம் அளித்தாள்.

’அவர் யார் தெரியுமா?’ என்று நான் குறுக்கிடலாம் என்று ஒரு வினாடி தோன்றியது. ஆனால் அது அபத்தமான இடையூடாக இருந்திருக்கும். அவர்கள் உரையாடும்போது குறுக்கிட எனக்கு உரிமை இல்லை.

அசோகமித்திரன் என்னை ஒரு வினாடி புன்னகையோடு பார்த்தார். அப்புறம் அவளிடம் சொன்னார் –
‘There was a small bottle of aerated water on the table. I took a sip from that last night when I felt somewhat indisposed. It was not alcoholic, I’m sure. However, you can bill it on me.’

‘No sir, it is on the house’.

அவள் புன்னகைத்து அவரை விலக்கி என்னைப் பார்த்து அறை எண் கேட்டாள். சொன்ன அடுத்த வினாடி சரி பார்த்து, போகச் சொல்லி விட்டாள். வேறு கேள்வி இல்லை அவளிடம் இருந்து.

அசோகமித்திரன் சாரும் நானும் டாக்சியில் ஏறினோம்.

நான் முதலில் செக் அவுட் செய்திருக்கலாம் என்று இன்னும் தோன்றுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன