New பெண் – இரு கவிதைகள்


பெண்
———-

கனவிலும்
வரிசை தப்பாது வரும்
வீடுகள் கடந்து
கோபுர நிழல் நீளும்
சின்ன வீதியில்
நடக்க மாட்டேன்.

ஆற்றங் கரையில்
ஊற்றுத்தோண்டிக்
கதைகள் பேசி
அலுத்த பின்னே
குடம் நிறைத்து
ஈரமண் உதிரும்
சிற்றாடை அசையக்
கூடநடந்து வந்த தோழிகளைத்
தேட மாட்டேன்.

அப்பா வந்ததும் குதித்தோட
அண்ணாவோடு காத்திருந்த
கல் யானைப் படிகள் ஏறி,
ஞாயிற்றுக் கிழமை நாடகங்களில்
அம்மாவின் பழம்புடவை
தரை புரளும் ராணியாய்
வலம் வந்த திண்ணை கடந்து
இருண்ட நடையுள்
போக மாட்டேன்.

மௌனமாய்க் கண்ணீரில்
அம்மா கரைய,
அண்ணா உறவு மறுக்க,
தெருவே கூடிப் பேசி நிற்க,
படமாய்த் தொங்கிப் புன்னகைக்கும்
அப்பாவையே பார்த்தபடி
நின்ற கூடத்தில்
பாதம் பதிக்க மாட்டேன்.

உறவுகள் கடந்து உன்னைப் படர்ந்து
மலர்த்திய உறவு தொட்டிலில் துயிலும்.
பாதித் தலையணையில் விழித்த உடலிருக்க
மனம் மட்டும் அங்கெல்லாம்
மெல்லப் பயணம் போகும்.

(கணையாழி)

நாள்தோறும்
————
பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த,
பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க,
காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத்
தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில்
விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து,
சமைத்து, பரிமாறி, தரை துடைத்து,
பாத்திரம் ஒழித்துப் போட்டு,
பசங்களைப் படுக்கையில் விட்டு,
மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு
காத்திருக்கும் கணவன் கண்காட்ட
வரேன் என்று தலையசைத்து இருட்டில்
மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில்
வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து,
வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து
வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்
வானம் பார்த்தாள். பெய் என்றாள்.

(முன்றில்)

ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் தொகுப்பு – இரா.முருகன் )

Photo : Three girls – Madras – 1870
Photo courtesy : 121clicks.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன