New: நாவல் எடிட்டர், கவிதை எடிட்டர், சிறுகதை எடிட்டர்

நண்பர் ரியாஸ் குரானா, தமிழ் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் எடிட்டர்கள் தேவைப்படுகிறார்கள் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். உண்மை தான்.

நிறைய எழுதும்போது, வேகமாக எழுதும் போது, பெரிய கான்வாஸில் நிகழ்வுகளைச் சித்தரித்துப் போகும்போது சில பிழைகள் பிரதியில் புகக் கூடும்.

எழுவாய்-பயனிலை-செய்வினை-செயற்பாட்டு வினை மயங்கி வருதல் போன்ற இலக்கண வழுக்கள் தொடங்கி,காற்புள்ளியா, அரைப்புள்ளியா, நிலைத்தன்மையும், தொடர்பும் பற்றியவை, (consistency and continuity related) என்று பல தளங்களில் தவறு ஏற்படலாம். என்ன தான் family tree வைத்துக் கொண்டு எழுதினாலும், 50, 60 கதாபாத்திரங்களைக் கையாளும் போது பெயர் குறிப்பிடுவதில் விபரீதமான பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றையெல்லாம் திருத்த என்று இல்லாவிட்டாலும் எழுதியவரிடம் ‘இது சரியா?’ என்று பொருத (to contest) எடிட்டர் வேண்டித்தான் இருக்கிறது.

நான் என் இரண்டாவது அரசூர் நாவலான விஸ்வரூபம் எழுதிய போது, ஒவ்வொரு அத்தியாயத்திலும் தொடக்கத்தில் நாள், கிழமை, தமிழ், ஆங்கில மாதம் குறித்துப் போக வேண்டி இருந்தது. 1890 முதல் 1938 வரையான காலகட்டம். 104 அத்தியாயங்கள் என்பதால் அந்த அளவுக்கு நாள் குறித்தல். கூடவே கதைக்குள் குறிப்பிடப் படும் நாட்கள் (1899-ல் ஏழு கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வந்த தினம் அதில் ஒன்று).

ஒரு மலையாள பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேதி குறிப்பிடலைச் செய்தேன். எழுதி, பிரசுரமான பிறகே 1899-க்கு முற்பட்ட சில தேதிகளுக்கான நாட்கள், அவற்றுக்கான கிழமைகளிலிருந்து இரண்டு தினங்கள் அகன்று வந்திருப்பதைக் கவனித்தேன்.

//தீபம் ஒளிர மஞ்சளில் குழைத்துப் பூசிய தெய்வீகம் அழுத்தமாகக் கவிந்திருந்த சந்நிதிக்கு முன்னால் பகவதி கை கூப்பி நின்றாள். அவள் ஒரு தூசு. துகள். பிரபஞ்சத்தின் எத்தனையோ கோடானுகோடி நட்சத்திர மண்டலங்களில், அவற்றில் மையம் கொண்டு இயங்கும் அளவு தட்டுப்படாத கிரகங்களில் ஆகச் சிறிய ஒரு கிரகத்தில் ஊர்கிற, நடக்கிற, பறக்கிற, இழைகிற, உறைந்து கிடக்கிற ஏதேதோ ஜீவராசிகளில் ஒரு சின்ன உயிராக, உடம்பாக மனசாக ஒரு மகா பிரதிபை முன்னால் நிற்கிறவள் அவள். வானத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்து விசுவரூபம் கொண்டு அண்ட சராசரங்களை வளைத்து அணைத்து இன்னும் வளர்ந்து பாதாளம் தொட்டு தலைகீழாகப் புரட்டி வானம் செய்து வேடிக்கை பார்த்தபடி நிற்கிற கிருஷ்ணன் கனிவாகச் சிரிக்கிறான்.
//

இதை காற்புள்ளி விரவி, அரைப்புள்ளி நிறைத்து, தனித்தனி staccato சொற்றொடர்களாக்கி மூன்று முறை மாற்றி எழுதி நிறைவு செய்தபோது, எடிட்டிங்/எடிட்டிங் தேவை மனதில் எழுந்து வந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன