New: குறுந்தொகையும் Baroque இசையும்

எழுத்தாளர்களில் மரபிசை பற்றிய அடிப்படைப் புரிதல் போன தலைமுறையில் கு.ப.ரா, நா.சிதம்பரசுப்ரமணியன், தி.ஜானகிராமன், கல்கி, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் என்று பலருக்கும் உண்டு. இந்தத் தலைமுறையில் அது குறைவு தான்.

அதே போல, சமகால இலக்கியம் அறிந்த இசைக் கலைஞர்கள் போன தலைமுறையில் குறைவு. முசிரி சுப்பிரமணிய ஐயர் எழுதிய சிறுகதை என்று தினமணி சிவகுமார் உருவாக்கிய ஒரு தினமணிக் கதிர் இசைமலரில் படித்தேன். (அந்த இசைமலர்கள் எல்லாம் பொக்கிஷங்கள்). அரியக்குடி திருப்பாவைப் பாசுரங்களுக்கு இசையமைத்தார். என்றாலும்,, அவருக்கு இருந்த இலக்கிய ஆர்வம் பற்றித் தெரியாது தான். எம்.எஸ் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையையும், டி.கே.பட்டம்மாள் பாரதி பாடல்களையும், பி.வி.ராமன், லட்சுமணன் சகோதரர்கள் குலசேகர ஆழ்வாரின் மன்னுபுகழ் கௌசலை தன் பாசுரத்தையும், கே.வி.நாராயணஸ்வாமி, ‘வருகலாமோ ஐயா’ போன்ற நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளையும் பாடிப் பிரபலமாக்கினார்கள் எனினும் இவர்களின் இலக்கியப் பரிச்சயம் குறித்து அறியோம்.

சமகால இசைக் கலைஞர்களில் சஞ்சய் சுப்பிரமணியன், டி.எம்.கிருஷ்ணா இருவரும் தற்காலத் தமிழ் இலக்கிய ரசனை கொண்டவர்கள். விஜய்சிவாவும் கூட என்று அறிகிறேன். சஞ்சய் தமிழில் பக்தி இலக்கியத்திலும் ஈடுபட்டவர். ஆழ்வார்களும், நாயன்மார்களும், கோபாலகிருஷ்ண பாரதியாரும், அருணாசலக் கவிராயரும், முத்துத் தாண்டவரும் கர்னாடக இசை மேடைகளில் கம்பீரமாக இப்போது வலம் வருவது சஞ்சய் சுப்பிரமணியனின் ரசனையும் உழைப்பும் பிடிவாதமும் நிறைவேற்றித் தந்தவை. மயூரம் வேதநாயகம் பிள்ளையின் சர்வமத சமரசக் கீர்த்தனைகள் வரை கச்சேரிக்கு அழைத்து வந்துவிட்டார் சஞ்சய். போன மாதம் கச்சேரி மேடையில் topical ஆக வேதநாயகம் பிள்ளையின் ‘பணமே’ பாடலை அவர் இசைக்க, அவையே அதை ரசித்து அனுபவிப்பதை யூடியூபில் பார்த்து ரசிக்கலாம். மோடிப் பாட்டு என்று ரசிகர்கள் பெயர் வைத்து விட்டார்கள் அதற்கு!

பழந்தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இன்னொரு சமகால இசைக்கலைஞர் வீணை இசைஞர் திருமதி நிர்மலா ராஜசேகர். குறுந்தொகையில் மனம் பறிகொடுத்தவர் இவர். செம்புலப் பெயல் நீராரின் ’யாயும் ஞாயும் யாராகியரோ’ பாடலுக்கு இருபது வருடம் முன்பே சஹானா ராகத்தில் இசையமைத்து வழங்கி வந்தவர். இது ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலுக்கு இசையமைத்ததற்கு முன்பு.

திசம்பர் 31 இரவு பத்தரை மணியில் இருந்து ஜனவரி 1, காலை 3:00 மணி வரை நீண்ட புத்தாண்டுக்கான கர்னாடக மரபிசை இரவு நிகழ்ச்சியில் (வாணிமஹால், தி.நகர், சென்னை) என்னை மிகவும் கவர்ந்த நிகழ்வு நிர்மலா ராஜசேகர் இந்தப் பாடலை வீணையில் வழங்க, அவருடைய அன்பு மகள் ஸ்ருதி ராஜசேகர், இப்பாடலுக்கான ஏ.கே.ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வரிகளை அழகாகக் கூறினார். மேற்கத்திய மரபிசை பயின்ற இளம் பாடகி ஸ்ருதி.

அதன் பிறகு மேற்கத்திய இசையின் முக்கியமான அங்கமாகிய பரோக் இசையை (Baroque Music) இவர்கள் இருவரும் சேர்ந்து வழங்கினார்கள். 1700-களில் உருவாகி இன்னும் பிரபலமாகப் பயின்று வரும் இசை வடிவம் இது. கிட்டத்தட்ட இந்தக் காலகட்டத்தில் தான் கர்னாடக இசை இங்கே செழுமையுற்றது.

பிரஞ்சு நாட்டு இசைக்கலைஞரின் ( François Couperin ஃப்ரான்ஸவா கூபெய்ன் என்று நினைவு) இசையாக்கத்தை இனிமையும் கம்பீரமுமான soprano குரலில் ஸ்ருதி இசைக்க, வீணையே harpsichord ஆக, மென்மையாக பாடலோடு கூட நிர்மலா வாசித்துவர, ஆயிரம் பேர் கூடியிருந்த அந்த அரங்கில் சுற்றிச் சுழன்று சூழ்ந்த இசை நிரப்பிய உன்னதமான அந்தச் சில நிமிடங்களோடு என் புத்தாண்டு பிறந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன