New : சோ ராமஸ்வாமி

‘துக்ளக் சோ’வாகத்தான் எப்பொழுதும் நினைவில் வருகிறார். அவருடைய நாடகங்கள் அதற்கு அடுத்த அடையாளம். சினிமா அதற்கும் பின்னால்.

1970-கள், துக்ளக் பத்திரிகையின், துக்ளக் சோ பொது வாழ்வின் பொற்காலம்.

ஜெயகாந்தனின் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’, கண்ணதாசனின் ‘எண்ணங்கள் ஆயிரம்’ என்று அருமையான தொடர்கள் துக்ளக்கில் வந்த நேரம் அது. துக்ளக் சத்யா அந்தத் தொடர்களையும், மற்ற பத்திரிகைகளையும், ஏன் துக்ளக் பத்திரிகையையும் கூட நயமான பகடி செய்த ஒண்ணரைப் பக்க நாளேடு வெளியானதும் அப்போது தான்.

வண்ணநிலவன் ‘துர்வாசர்’ ஆக அவதாரம் எடுத்து, துக்ளக் இதழில் நவீன இலக்கிய கர்த்தாக்களைச் சாடியது அதற்கு அப்புறம் நிகழ்ந்த ஒன்று.

1971-ல் தி.க ஊர்வலத்தில் தெய்வத் திருவுருவங்களுக்கு அவமரியாதை நிகழ்ந்தபோது மற்றப் பத்திரிகைகள் பிரசுரிக்க அஞ்சியிருக்க, துக்ளக் அந்தப் படங்களைப் பிரசுரித்து, கடுமையாக விமர்சனம் செய்து எழுதியது. பத்திரிகையின் அந்த இதழ் கடைகளில் இருந்து அகற்றப்பட்டது. அந்த நேரத்திலும் ‘துக்ளக் பத்திரிகைக்குத் தடை விதித்து அதை இன்னும் பிரபலமடையச் செய்த அரசுக்கு நன்றி’ என்று தனதேயான நகைச்சுவையோடு தி ஹிந்து பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தார் சோ.

முகமது பின் துக்ளக் படம் வெளியான திரையரங்குகளில் அப்படத்தைத் திரையிடுவதற்கு எதிராக நிகழ்ந்த கலகங்களையும் மீறி அவருடைய ரசிகர்கள் திரண்டு வந்து அப்படத்தைக் குறைந்த பட்ச வெற்றியடையச் செய்தார்கள். அவருடைய ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ நாடகம் நடத்த எதிர்ப்பு என்று இருந்த சூழ்நிலையில், நாடகக் குழுவினருக்கும், பார்வையாளார்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலில், புதுவையில் அந்த நாடகத்தைக் காண வந்த ஆயிரம் ரசிகர்களில் நானும் ஒருவன்.

நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் பத்திரிகைத் தணிக்கைக்குத் தன் பத்திரிகையை உட்படுத்த மறுத்த ஒரே பத்திரிகையாளர் சோவாகத்தான் இருக்கும். முழுக்க கருப்பு தீற்றிய அட்டையும், உள்ளே சர்வாதிகாரி படத்துக்கு விமர்சனம் என்று நெருக்கடி நிலையை எதிர்த்த கட்டுரையுமாக சோ பிரகாசித்தார். அரசு குனியச் சொன்னால் மண்டி போட்ட பத்திரிகையாளர் மத்தியில் சோ துணிச்சல்காரர் தான்.

பெருந்தலைவர் காமராஜர் முதல் இந்திரா, ராஜிவ், வாஜ்பாய், எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா வரை அவர் விமர்சிக்காத தலைவர் இல்லை. யாரையும் சோ தரம் தாழ்ந்து தாக்கியதில்லை. அவருடைய intellectual honesty-ஐ மதிக்கிறேன்.

அவர் ஆன்மா சாந்தியடையட்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன