New Novel: வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 47 இரா.முருகன்

நேரம் கெட்ட நேரத்தில் ஓவென்று கூப்பாடு போட்டு ராஜாவை எழுப்பி விட்டார்கள். யாரென்று கேட்டால்? என்னத்தைச் சொல்லி எழவைக் கூட்ட? ஊர்ப்பட்ட விளங்காப் பயலுகள் எல்லோரும் சேர்த்து அடிச்ச கூத்து அதெல்லாம்.

ரெக்கார்டு போடறாக என்றான் சமையல்காரப் பழநியப்பன்.

வக்காளி எனக்குத் தெரியாதாடா என்று அவனிடம் எகிறினார் மகாராஜா.

பின்னே? இருக்கும்போது தான் கருவாட்டுக் குழம்பை உப்புப் போடாமல் வைத்து இறக்கி, மோர் சோற்றில் ஒரு குத்து அஸ்கா சர்க்கரையைக் கலந்து ராஜாவுக்கு பேதி வரவழைச்ச கெட்ட பயலாக்கும் அவன்.

போன அப்புறமும் ஏன் என் காலையே சுத்தி வரணும்?

ராஜா நினைச்சதோடு நிறுத்தினால் பரவாயில்லை. சொல்லி வேறு தொலைத்து விட்டார். அதுவும் ராணியம்மாவிடம் சொல்லியிருந்தால் பரவாயில்லை. அந்த மாமனார்க் கிழவனிடம் ஏதோ சின்னதாக வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தபோது எடுத்து விட்டது இது.

கெட்ட பயலாக்கும் அந்தக் கிழம். செத்துப் போனால் என்ன? ராஜாவும் ராணியும் போய்ச் சேர்ந்து புதைத்த இடத்தில் புல் முளைத்து அதையும் வெட்டி காய்கறித் தோட்டம் போட்டு அரண்மனைக்குள் பச்சை மணக்கிறது. எல்லாம் நல்லதாக மாறிப் போனாலும், புஸ்தி மீசைக் கிழவனின் குசும்பும் பகட்டும் மட்டும் குறையவே மாட்டேன் என்கிறது.

அவனுடைய கிழட்டுச் சிங்காரமும், பட்டுக் கயிறு மாட்டிய மூக்குக் கண்ணாடி ஒயிலும், வேளைக்கு ஒன்றாக உடுத்து நடக்கிற ஒய்யாரமும் ஒரு நேரம் ராஜா பார்க்க சிரிப்பாணியோடு ரசிக்க ஏற்றதாக இருக்கிறது. சமயத்தில் அவன் வாயைத் திறந்து ஏதாவது சொல்லவோ, தகிடுதத்தமாக, திரிசமனாக ஏதும் செய்யவோ இருந்தால், ராஜா நாக்கில் வண்டை வண்டையாகத் திட்டு எழுந்து வருகிறது.

அவர் ஏதோ சந்தர்ப்பத்தில் ஏதோ நினைவில் சொன்னதை, அந்த சமையல்காரப் பழநியப்பனிடம் போட்டுக் கொடுத்தது புஸ்திமீசைக் கிழவன் தான்.

இவன் தான் சொன்னான் என்றால், அவன் அதைக் கேட்டு விட்டு மனக் கிலேசம் மிகுந்து, வேலை மெனக்கெட்டு ராஜாவைத் தேடி, இதோ மிதந்து வந்து விட்டான்.

செத்துப் போய் உடம்பு உதிர்ந்து தொலைந்தால் என்ன, புகார் செய்வதும், பிலாக்கணம் வைப்பதும், நல்லதாக நாலு வார்த்தை சொன்னால் சந்தோஷப் படுகிறதும் சாஸ்வதமானது போல. நடந்து, ஓடி அவஸ்தைப் பட வேணாம். கோழி றெக்கை போல மிதக்கலாம் என்பது வேறே உடம்பு இல்லாத பட்சத்தில் கிடைக்கிற தாராளமான சலுகையாகச் சேர்ந்திருக்கும். இதை வைத்துத்தானே கிழவன் ரகளையாக பகலும் ராவும் கூத்தடித்தபடி இந்த ஆட்டம் ஆடுகிறான்?

ஒரு லேஞ்சியைக் கழுத்தில் கட்டிக் கொண்டு பழநியப்பன் வந்து இதுவும் அதுவுமாகப் புகார் சொல்லி அரற்றும்போது காது சவ்வு கிழிகிற உச்சத்தில் பாட்டா இரைச்சலா என்று தெரியாமல் பெருஞ்சத்தம்.

என்ன எழவு என்று ராஜா கவனிக்க, பழனியப்பன் சொன்னான் –

ரெக்கார்ட் போடறாக, மகாராஜா

ராஜாவுக்குத் தெரியாத ரிக்கார்டா? அந்தப் பழுக்காத் தட்டுகளில் ஒப்பாரி வைத்து, உலகம் முழுக்க இருந்து யாராரோ பாடிய பாட்டும், அழுகிற தொனியில் மனசை உருக்கி நெஞ்சு வெடிக்கப் புலப்பச் சொல்லும் வாத்திய சங்கீதமுமாக அவர் கேட்காததா?

பனியன் சகோதரர்கள் பக்கத்து புகையிலைக்கடை குடும்பத்து மூத்த புதல்வனுக்குக் கொண்டு வந்து கொடுத்து அவனும் சதா ஊசி செருகிச் சுழல வைத்து ராஜாவை பைத்தியமாக்கிப் போட்ட இழவு கீதம் ஆச்சே அது.

ராஜா தனக்கு எல்லாம் தெரியும் என்று பழனியப்பனிடம் நிலைநாட்ட, அவன் பேசாமல் இருந்தான். அவன் பேசாமல் இருந்தால் போதுமா? மைக் டெஸ்டிங், ஒன், டூ, த்ரீ என்று ராஜாவின் பிரியமான மேஜை மேல், கண்ட பீக்காட்டிலும் அலைந்த காலை சுவாதீனமாக வைத்தபடி யாரோ ஒருத்தன் ஜோசியர் மந்திரம் சொல்கிற பதத்தில் மொணமொணவென்று ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் யார்? என்ன கண்றாவிக்கு அரண்மனைக்குள்ளே இதெல்லாம் நடப்பது?

அது ஒண்ணுமில்லே மாப்பிள்ளே, வேதக்கார ஐயரு எள்ளுப் பேத்தி பொஸ்தகம் போட்டிருக்கால்லே. அதைப் பத்தி நாலு பெரிய மனுஷா பேசப் போறாங்களாம்.

டாண் என்று புஸ்திமீசைக் கிழவன் ஆஜராகி விட்டான். உலகத்தில், அதையும் தாண்டி மற்றெங்கும், யாருக்காவது ஏதாவது அறிவுக் குறைச்சல் ஏற்பட்டால், நிவர்த்தி செய்கிற ஒரே மருத்துவனாக அவன் கையில் ஒரு பூச்செண்டோடு வந்து இறங்கினான். பூசணிப் பூ அளவு பெரிய ரோஜாப்பூ அடைத்த செண்டு. அதற்குள் பீயுருட்டி வண்டோ என்ன எழவோ ஊர்ந்து கொண்டிருக்கிறது கர்மம்.

ஏன் மாமா, அது மதுரைப் பட்டணத்திலே இல்லே வச்சுக்கறதா சொல்லிட்டிருந்தாங்க.

எனக்கும் ஊர் நிலவரம் தெரியும் என்ற தோதில் ராஜா அவசரமாகச் சொன்னார்.

அது நேத்துக் கதையப்பா. உன்னோட சகபாடி சோசியக்கார அய்யன் சாயல்லே இளைய அய்யன் இருக்கானே, அவன் மாத்தி வச்சான். அவன் தான் இப்ப எல்லாம் நடத்திக் கொடுக்கறது. உன் அரண்மனையே அவன் கையிலே.

அரண்மனை நல்லாத்தான் இருக்கு. ராஜாவும் ராணியும், விருந்தாட வந்து சேடிப் பெண்ணிடம் சாக்கடை வாய் உபசாரம் செய்யச் சொல்லிக் கேட்ட புஸ்தி மீசைக் கிழவனும் இல்லாமல், இடம் மேம்பட்டு, நூறு இருநூறு குழந்தைகள் பள்ளிக்கூடம் என்று கூடி இருந்து படிக்க, ஓடி விளையாட, அரண்மனைக்குள்ளே பள்ளிப்படைக் கோவிலாக எழுப்பிய ராசேசுவரி கோவிலுக்குப் போய்க் கும்பிட என்று உள்ளே காற்றே சுத்தமாக இருக்கிறது.

யார் கையில் நிர்வாகம் இருந்தால் என்ன? இடமும் மனுஷர்களும் விருத்தியாவது மாதிரி சந்தோஷம் வேறெதில் உண்டு?

ராஜா திருப்தியாகத் தலையாட்டிக் கொண்டார். கிடக்கிறான் இவன்.

கிழவன் தன்னைக் கோபப்படச் செய்து வேடிக்கை பார்க்கிறதாக ராஜாவுக்குத் தோன்றியது.

என்ன சொல்லு. இந்த அய்யன் இல்லேன்னா சோசியக்கார அய்யன், புகையிலைக் கடை அய்யன். அவன் மகன் அய்யன். கனபாடி அய்யன். சுகஜீவி அய்யன். அரண்மனைக்குள்ளே சட்டமா நொழஞ்சு இவனுகள்ளே யாராவது தானே அப்பப்ப சர்வ அதிகாரம் பண்ணினது? அய்யனை விட்டா சுலைமான், கருத்த ராவுத்தன்னு துருக்கன்மார் வேறே. நீ சுயமா செஞ்சது கம்மி தானே?

கிழவன் தலைமுறை தலைமுறையாக நல்வழி காட்டி, திடமான நம்பிக்கைகளோடு பரம்பரையை முன்னேற்றும் குருநாதர் போல முகத்தைத் தெளிவாக வைத்துக் கொண்டு, பூச்செண்டை முகர்ந்தபடி சொன்னான். அவன் சொல்வதிலும் உண்மை இருப்பதாக ராஜாவுக்குப் பட்டது.

கிழவன் கம்பீரமாகப் புன்னகை செய்தான். அவன் இருந்தபோது கூட இவ்வளவு ஆனந்தத்தோடு இருந்ததாக ராஜாவுக்கு நினைவில்லை.

பாவம் அந்தப் பொண்ணு தெரிசாள். தியாகராஜ அய்யனும், அதாம்பா அந்த சோசியக்காரன் ஜாடையிலே இடுக்கப்பட்ட பார்ப்பாரப் பிள்ளை. அவனும் எதிர்பார்க்கவே இல்லை பார்த்துக்க.

ஏன் என்ன ஆச்சு மாமா?

வம்பு சேகரிக்கிற ஆசையோடு ராஜா கிழவரைக் கேட்டார். செத்துப் போனால் என்ன, வம்பு கேட்க முடியும் என்றால் அதை விட வேறென்ன சந்தோஷம் இருக்கப் போகிறது?

போனாலும் சந்தோஷம் கொண்டாட மனசு எங்கேயோ இருந்து ஒட்டிக் கொண்டிருக்கிறது. எதோடு என்று ராஜா யோசித்திருக்கிறார். கிழவனைக் கேட்டால் அதற்கும் விளக்கம் தருவானாக இருக்கும். எதுக்கு எல்லாவற்றையும் புரிந்து, தெரிந்து அலசிக் காயப் போட வேணும்? இருக்கும்போது கூட அதது அதததன் பாட்டில் போக விட்டுத்தானே ஜீவிதம் நகர்ந்து போனது. இப்போதும் அதே தொடரட்டுமே.

மதுரையிலே நேத்து மழை நேரத்திலே இவங்க விசேஷம் நடத்தப் பார்த்து வச்சிருந்த கட்டடத்தைச் சுத்தி தண்ணி நிக்குது. காலையிலே நானும் அந்த சமாசாரம், வகையறா எல்லாம் பார்த்துட்டுத் தான் வரேன். ஏன் கேக்கறே.

அரசூரில் ஒரு பொட்டுத் தூறல் கூடப் போடாமல், முப்பது கல் தூரத்தில் வானமே பொத்துக் கொண்டு கொட்டி, மண் கூட அதிகம் இருக்காத வைகைத் தடத்தில் வெள்ளம் பெருகி, ஆற்றங்கரை பூமியை முழுக்காட்டிப் போடுகிற நடப்பு ராஜா காணாதது. அவர் மூச்சு விட்டுக்கொண்டு இருந்த காலத்தில் வெயிலும் மழையும் குளிரும் காற்றும் அதததன் நியதிப்படி அதது விதிக்கப்பட்ட நேரம் காலம் தவறாது வந்து போகும். மழை பிந்திப் போனதுண்டு தான். ஆனால் அது பொய்த்துப் போவதும், வெய்யில் காலத்தில் மேகம் மூடி பூஞ்சைக் காளான் சுவரெங்கும், மனையெங்கும் படிந்து வியாதியைக் கிளப்பி விடுவதும், மழை பெய்த ரெண்டு நாளில் சூரியன் வராமல் கொசுவும் ஜுரமும் ஊரையே முடக்கிப் போடுவதும் அவர் காலத்தில் இல்லை. சாவு இல்லாமல் போன புரளியும், மயில் கூட்டம் பறந்து இறங்கி மேய்ந்து போவதும் கூட இல்லை தான்.

ஆனாலும் பஞ்சம் வந்துதே, மறந்து போச்சோ.

ராணி தான். எங்கேயோ போயிருந்து எதையோ பார்க்க, கேட்க என்று அவளுக்கு நேரம் போகிறதில் ராஜாவுக்கு மெத்தவும் சந்தோஷம். படுத்துக் கிடந்தே பதினைந்து இருபது வருஷம் கழித்து ஒரு விடியல் நேரத்தில் தூக்கத்திலேயே மரித்த ராணி அதற்கப்புறம் ஓய்ந்து கிடந்து ராஜா பார்த்ததே இல்லை. அவளுடைய அப்பன் மாதிரி நேரத்துக்கு ஒன்றாக உடுத்திக் கொண்டு, அத்தரும் சவ்வாதும் வழித்துப் பூசி, மல்லிகைச் செண்டைக் கையில் பிடித்தபடி மிதந்து கொண்டிருப்பதில் அவளுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், சுற்றி வருகிறதில் அவள் சுகம் காண்கிறாள்.

ராஜாவுக்கு, இருந்தாலும் செத்த பின்னும் சும்மா இருப்பதே சுகம் என்பது தான் கோட்பாடு. அலைவதெல்லாம் நிலைக்கத்தானே. நிலைத்தது அசையும். அலையும். பின் நிலைக்கும், அறிவார் அவர்.

அந்தப் பொண்ணும் சூட்டிகை. இந்த அய்யனும் அதே படிக்குத்தான். ஒரே நாளிலே இங்கே வைபோகத்தை மாத்தி வச்சு ஆள் படை அம்புன்னு கூப்பிட்டு நிறுத்திட்டாங்களே. போவுது. நவராத்திரிக்கு இன்னும் கூடுதல் கொண்டாட்டம்.

ராணி மகிழ்ச்சியாகச் சொன்னாள்.

நவராத்திரியோ, பொங்கலோ, தீபாவளியோ ராணியும் ராஜாவும் இருந்த வரை அதுவும் செயலில்லாமல் முடங்கி, அப்புறம் எதுவும் கொண்டாட யாருமில்லாமல் அரண்மனை அட்டுப் பிடித்துக் கிடந்ததெல்லாம் அடி முதல் நுனி வரை மாறியதில் ராணிக்கும் மகிழ்ச்சிதான்.

வேதையன் பள்ளிக்கூடத்துக்கு அரண்மனைக்குள் இடமும், வாசகசாலையும் ஏற்படுத்தி வைத்த அப்புறம், கோவிலைச் சீராக்கினதன் பின்னால், இந்த இடத்தில் கூட்டத்துக்கும் குறைவில்லை. கொண்டாட்டமும் மிதமாக இருந்ததில்லை.

ராஜாவும் ராணியும் உறங்கியும் ஊர்ந்தும் இருந்த அறைகளும், பரம்பரை பரம்பரையாக வாள், சுரிகை, ஈட்டி, வேல், வேல் கம்பு, வளரி, கேடயம் என்று தளவாடங்களைக் காபந்து செய்து வைத்த இடமும் இன்னும் பூட்டித்தான் இருக்கின்றன. ஆனால் அவை கிரமமாகப் பராமரிக்கப்பட்டு தூசு துப்பட்டை நீங்கி, சுத்தமும் சுகாதாரமுமாக எப்போதும் காட்சியளிக்கின்றன. இதுவும் ராணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் தான்.

என்னத்தை சுத்தம். அவன் ஒரு கல்யாணம் செஞ்சுக்கிட்டு பிள்ளை பெத்து, அதெல்லாம் ஓடி விளையாடி, ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் இருந்து, ஒரே வீச்சமா வீசிக் கெடந்தா, அதோட அழகுக்கு, இதெல்லாம் உறை போடக் காணாது.

ராஜா ரொம்ப நாள் சொல்லிக் கொண்டிருந்தது வேதையனும் போய்ச் சேர்ந்த பிறகு நின்று போனது. அவன் எங்கே இப்போது? ராஜா யோசித்தார்.

ராணி மாதிரியா, இல்லே என்னை மாதிரியா? லேசுப் பட்டவனா என்ன? அவன் படிச்ச படிப்பும், பார்த்தும் கேட்டும் கத்துக்கிட்டதும், கத்துக் கொடுத்ததும் அவனை இனியும் சுத்தித் திரியாம கொண்டு போய் நிலையா வச்சிருக்கும்.

ஆமா அதே தான் என்றான் சமையல்காரன் பழநியப்பன் சகலமும் கரை கண்ட இன்னொரு புஸ்தி மீசைக் கிழவனாக.

அட பயலே நீ இன்னும் வேறே லெக்குக்குப் போகலியா?

ராஜா கேட்கும் போதே தன் பிரியமான சமையல்காரனை சகல விதமான பிரியத்தோடும் விசாரிக்கும் குரல் சுபாவமாக வந்திருந்தது. அவனோடு அவருக்கு என்ன விரோதம். யாரோடு தான் என்ன பகை?

அரண்மனை வளாகத்தில் அவர் புகையிலைச் செடி பயிரிட்ட பூமியைச் சுற்றி கிடுகு வேலி போட்டு அடைத்து அரைக் கல்யாணத் தோதில் பந்தல் போட்டிருந்தது மட்டும் ராஜாவுக்கு ஒட்டும் பிடிக்கவில்லை.

கூரையும் பந்தலும் போட்டால், மதில் சுவரில் இருந்து எதிர் மதில் வரை வளைத்து, முழுக்க கிடுகு வேய்ந்து கொட்டகை போட வேண்டும். பார்க்க ஒரு கெத்தாக, ராஜா வசித்த இடத்துக்கும் அவருடைய நினைவுக்கும் கௌரவம் சேர்க்கிற மாதிரி கம்பீரமாக இருக்க வேணாமோ ஏற்பாடுகள் எல்லாம்?

செஞ்சிருப்பாங்க. அவகாசம் கிட்டலே அதான் போல, அரையும் குறையுமா ஆக்கி வச்சிருக்காங்க. போகுது. எல்லாம் நம்ம பிள்ளை, பேரப் பிள்ளை வகையறா தானே. நல்லா காரியம் எல்லாம் நடத்தி நல்லா இருக்கட்டும்.

ராணி வாழ்த்துச் சொல்லியபடி உள்ளே போனாள்.

கரகரவென்று சுழன்று அடுத்த ரெக்கார்ட், கட்டித் தங்கம் வெட்டியெடுத்து தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா என்று வெகு பவிஷாகப் பாடியது. ஒப்பாரி போல வருமா இது? ராஜா ஏக்கத்தோடு கேட்டபடி நின்றார். அது ஓய, ஊசி வைத்து முடுக்கி, அடுத்த பாட்டு இன்னும் இரைச்சலோடு ஆரம்பமானது.

ஓசைப்படாமல் மிதந்து கொண்டு திரும்ப வந்து சேர்ந்த மீசைக் கிழவன் ரிகார்டில் சுழலும் பாட்டுக்கு இசைவாக அபிநயம் வேறே பிடித்தபடி இருந்தான். ராஜகுமாரி, ரோஜா மலர், பக்கத்தில் வரலாமா என்று மனம் உருகிப் பாடும் ஆணும், கூடவே இங்கிதம் தெரியாமல் அதை முழுக்க அப்படியே ஒப்பிக்கும் பெண்களின் கூட்டமுமாக ஒரு சினிமாப் பாட்டு. ஊசி நடுவில் மாட்டி, வரலாமா வரலாமா வரலாமா என்று கீச்சிட, கிழவன் அதே படிக்கு விடாமல், முன்னால் வந்து வந்து, பின்னால் போய் ஆடிக் காட்டினான். ஆடற வயசா அவனுக்கு?

என்ன மாமா, அவனுக தான் கிறுக்குப் பய புள்ளேங்கன்னா உங்களுக்கு என்ன கெரகம்? ஆட்டமும் பாட்டமும் சிரிப்பாணியும் பொத்துக்கிட்டில்லே வருது.

ராஜா சொல்லச் சொல்ல அவர் முகத்தில் மறுபடியும் சிரிப்பு. ஆனந்தம். பழநியப்பன் மட்டும் இல்லை, இந்தக் கிழவனும் அடிப்படையில் நல்ல மாதிரித் தான். சேர்க்கை சரியில்லாமல் கிருத்துருமத்தோடு குழிக்குள் போனான். அவ்வளவே.

ஏன் மாப்பிள்ளே, இம்புட்டு கோலாகலமா நவராத்திரி எல்லாம் கொண்டாடுறாங்க. பழைய உசிருக்கெல்லாம் ஒரு மடக்கு கள்ளுத் தண்ணியோ சாராயமோ ஊத்தணும்னு தோணலியே. நீ எம்புட்டு பொறுப்பா சோசியக்கார அய்யன் கிட்டே எழுதி வாங்கிட்டு ஆள் அம்பு ஏற்பாடு செஞ்சு ஊத்தினே. அதுலே ஒரு துளி கெடச்சா கூட வேணாம்னா சொல்லப் போறேன். வாய்க்கலியே.

கிழவன் ஆட்டத்தை நிறுத்தாமல் சொன்னான்.

ஆக, குழிக்குள் கிழவன் போனது சகவாச தோஷத்தால் உண்டான வக்கிரமோ கிருத்துருமமோ உடன் கொண்டில்லை. நாட்டு சரக்கு, சீமைச் சாராயம், கள்ளுத் தண்ணி, கஞ்சா, அபின் உருண்டை என இன்னும் மாயாத ஆசையோடு தான்.

ராஜாவுக்கு பரிதாபமாக இருந்தது. இன்னும் எத்தனை காலம் இவன் உடுத்துக்கிட்டு ஆடிக்கிட்டு இங்கேயே சந்தோஷமா மிதக்கப் போறான் தெரியலை அவருக்கு. வந்திருக்கும் பயல்களில் யாருக்காவது முடியுமானால் இவனுக்கு மறுபடி தாகசாந்தி செய்விக்கலாம் என்று அவருக்கும் தோன்றியது.

அரண்மனை வாசலில் ஏதோ சத்தம். என்ன ஏது என்று புரியாமல் ராஜா பார்க்க, எல்லாம் தெரிந்த அறிவாளி, மீசையை நீவிக் கொண்டு மிதந்து முன்னால் வந்தான்.

வல்லார இத்யாதி, உன் மீசையை வழிச்செடுத்து செனைத் தேவாங்கு மாதிரி ஆக்கிடறேன் பாரு. ராஜா மனதில் கருவிக் கொண்டே என்ன மாமா என்றார்.

அதென்னமோ, ஒரு வினாடி இவன் மேல் பிரியம் வந்தால், அடுத்த வினாடி நாக்கை மடித்து வசவு எறியத் தோன்றுகிறது.

அரண்மனை வாசலில் சத்தத்துக்குக் காரணம் கண்டு வந்த கிழவன் சொன்னான் –

கல்யாணம் கருமாதிக்கு சோறு போடற மாதிரி இந்தப் பார்ப்பான் ஒரு நூத்தம்பது பேரை வரச் சொல்லியிருக்கான் வைபவத்துக்கு. ஆரம்பிக்க முந்தி, எல்லோருக்கும் வடையும், இடியாப்பமும், தோசையும், காப்பித் தண்ணியும் கொடுக்கறதா ஏற்பாடு. ஓட்டல் அய்யன் அதெல்லாம் பண்ணி எடுத்து வந்து உச்சிப் பகலுக்கே இறக்கிட்டான். தவல வடையும், சுவியனும் நல்லா இருக்கவே, ஊர்ப்பட்ட கூட்டமும் இங்கே தான். வராதீங்கடா, திங்கத் தர ஒண்ணும் இல்லே, சட்டியும் பானையும் தான் இருக்குங்கறான் அவன். வந்தவனுங்கள்ளே, தீனி வேணாம்னு திரும்பிப் போகிறவனா ஒருத்தனும் இல்லே. அவனுங்க கூட்டுற சத்தம் அது. புத்தகம் போட்டு கூட்டம் நடத்த தவலை வடையும் வெங்காய வடையும் என்ன எளவுக்கு? சாராயம் ஊத்தினாலும் சன்மத்துக்கும் புண்ணியம்.

தவலை வடை, வெங்காய வடை, உளுந்து வடை, ஆமை வடை, மிளகு வடை, கீரை வடை. கிழவனுக்கு அய்யர் மூலம் கள்ளுத் தண்ணி ஊற்றலாம் என்றால் ராஜாவுக்கும் யாராவது இதில் ரகத்துக்கு ஒண்ணாவது ருசிக்கத் தரலாம்.

மாமா. நீங்க போய்ச் சேர்ந்தபோது என்னமா சமைச்சுப் போட்டான். பூணூல் இல்லே உடம்பிலே. ஆனா, அருமையான சமையல் அய்யன் அவன். புளிக்குழம்பும், வாழக்கா கறியும், சுவியனும், வடையும், தோசையும், லட்டு உருண்டையும், காரசேவும், தேங்குழலும், அதிரசமும். அடடா அடடா அடடா.

ராஜா உற்சாகமாகச் சொல்ல, புஸ்தி மீசைக் கிழவன் நமட்டுச் சிரிப்போடு கேட்டான் – ஏன் மாப்பிள்ளே, இன்னொரு வாட்டி போய்ச் சேரச் சொல்றீகளா?

ஐய்யே நான் அப்படி எல்லாம் சொல்வேனா என்ன? அந்த விருந்து அமோகம்னு சொல்ல வந்தேன். ராஜா பின் வாங்க, ஒரு பெரிய கூட்டமாக வந்த பள்ளிக்கூட வாத்தியார்களும், நீதிமன்ற குமாஸ்தாக்களும், சில கன்யாஸ்திரிகளும், வயதான குடும்ப பெண்களும் கூச்சலாகச் சொன்னார்கள் –

விருந்தும் வேண்டாம். மற்றதும் வேண்டாம். கீர்த்தனை கவனப்படுத்தறவங்களையும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமும் பின்முடுகு வெண்பாவும் எழுதறவங்களையும் பார்க்கறதே அபூர்வமான காலம். ஒருத்தர் பழங்காலத்திலே எழுதி, இன்னொருத்தர் அதைச் செப்பனிட்டு ராகக் குறிப்பு சேர்க்க, மூணாமவர் அதைப் பாட சங்கீத நோட் எழுதிச் சேர்க்க, இன்னொரு சின்ன வயசுப் பொண்ணு அதை எல்லாம் அந்தப்படிக்கு கானம் பாட, இதெல்லாம் எல்லாம் எல்லாம் கிறிஸ்துநாதர் மேலே இருக்க. இந்த அருமையான வைபவத்துக்கு வந்தோமேயல்லாமல், தவலை வடைக்கும் பூண்டுத் தொகையலுக்கும் வரல்லே நாங்க. சந்தை கூடும்போது தமுக்கு போட்டு அறிவிச்சதால் வந்தோம். வடை தீர்ந்து போகுதேன்னு விசனப்படாம, வைபோகம் நடக்க விடுங்க தயவு செய்து. எத்தனை வடை வேணும் சொல்லுங்க. பக்கத்துலே ஓட்டல்லே உங்களுக்கு ரசவடை வாங்கி வரச் சொல்கிறோம்.

அவர்கள் தியாகராஜ அய்யனிடம் தெரிவித்தபடி உள்ளே போக அது சரிதான் என்றார் ராஜா. அவர் சுற்றிலும் பார்க்க, அவரும் பழநியப்பனும் மட்டும் தான் நின்று கொண்டிருந்தார்கள்.

எங்கேடா அவுக எல்லாம்? ராஜா கேட்க, கிடுகு வேலிக்கு அப்புறம் கை காட்டினான் பழநியப்பன். கூட்டமெல்லாம் அங்கே தான் கூச்சல் போட்டபடிக்கு.

இவங்க என்ன மயித்துக்குடா வேணும்? என் வீட்டுக்காரி, மாமன் அவுகளை இல்லே கேட்டேன்.

எரிந்து விழுந்தார் மகாராஜா. பழநியப்பன் காற்றில் கரைந்து போகும்போது முணுமுணுத்ததை அவர் கேட்டார் தான். அது என்ன என்று அவரால் தெளிவாக அடையாளம் சொல்லவும் முடியும். ஆனால் எதுக்கு? பழநியப்பனுக்கும் அவருடைய சகவாச தோஷத்தால் கெட்ட வார்த்தை எல்லாம் சரஞ்சரமாக வந்தது என்பதை நினைவில் வைத்திருந்தார் அவர்.

ஒரு பெரிய மோட்டார் வாகனம் அரண்மனைக்குள் புகுந்து பள்ளிப்படைக் கோவிலுக்கு முன் நின்றது. வெள்ளைக்கார தேசத்துப் பெண் மெல்ல இறங்கினாள். கொஞ்சம் போல் தடுமாறி கார்க் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றாள் அவள்.

பாவம் முடியலே அந்தப் பொம்பளைப் பிள்ளைக்கு. ஒரே அலைச்சல் என்றார் ராஜா. ராணி பூடகமாகச் சிரித்தாள்.

ஏன் பிள்ளை உங்கப்பார் மாதிரி சாலக்கோட சிரிக்கறே. அட, சொல்லிட்டுத் தான் சிரியேன்.

அலைச்சலும் ஆச்சு வெண்டிக்காயும் ஆச்சு. அந்தக் குமரு முழுகாம இருக்கா இல்லே அதான் தலை சுத்தி, வயத்தைப் பிரட்டி இல்லாத கோராமை எல்லாம்.

தப்பு இல்லியா? ராஜா விசாரிக்க, ராணி பதிலேதும் சொல்லவில்லை.

அந்தப் பெண் தெரிசா கருக்கடையானவள் தான். ஆனால் இப்படியா, அங்கே ஒரு துருக்கனைக் கல்யாணம் செய்து, அதற்கு முன்னால் வெள்ளைக்காரனோடு மோதிரம் மாற்றி, அப்புறம் இங்கே ஒரு கல்யாணமான ஐயனோடு கிடந்து வயிற்றில் கருக் கொண்டு. என்ன மாதிரியான நடவடிக்கை இதெல்லாம்?

ராஜா ஆதங்கத்தோடு கேட்டார்.

மத்தவங்களுக்கு கோடு கிழிச்சு ஆடச் சொல்லி மேற்பார்வை பார்க்க நாம யாரு?

ராணி பதில் கேள்வி கேட்டாள். அவளுக்கு தெரிசா மேல் ஒரு புகாரும் இல்லை. ஆரம்பித்து வைத்தது சின்னச் சங்கரன் என்பதால் அவன் மேல் கொஞ்சம் மன வருத்தம் இருந்தது உண்மைதான்.

இதெல்லாம் நடக்கணும்னு இருக்க, நானும் நீங்களும் என்ன சொல்லி மாஞ்சு மாஞ்சு நல்லது கெட்டது பார்த்து குரலில்லாம கூப்பாடு போட்டாலும் ஒண்ணும் ஆகப் போறதில்லே. அதுனாலே, அதது அததோட போக்கிலே போகட்டும்னு விட்டுடலாம்கிறேன்.

ராஜாவோடு மிதந்தபடி ராணி ஆயுத சாலைக்கு வந்தாள். அரண்மனைக்காரி ராசேசுவரி அம்மனைக் கும்பிட பள்ளிப்படைக் கோவிலுக்குள் வந்த ஊர்ப் பெண்கள் வரிசையாக திருவிளக்கு ஏற்றி நெல்லும் மலரும் படைத்து வழிபட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபடி இரண்டு பேரும் சற்று நின்றார்கள்.

அம்மன் கோவில் சுவர்களில் கைக்கு எட்டாத உயரத்தில், பளிச்சென்று துலங்கி பூமாலை சுற்றி சகல விதமான ஆயுதங்களும் காணப்பட்டன. கீழே ஒரு மர ஷெல்ப் நிறைய புத்தகங்கள். அரசூர்ப் பேராசிரியர் மருதையன் எழுதிய வரலாற்று நூல்களும், இங்கிலீஷ் இலக்கியம் பற்றிய புத்தகங்களும் அவை.

மல்லிகை மாலையும் ஜவந்திப் பூவும், அந்துருண்டைகளும் மணத்த அந்தப் புத்தக அலமாரியை பிரியமாகத் தடவிக் கொடுத்தார் ராஜா. அவர் குரல் இடற ராணியைப் பார்த்து சொன்னார் –

நமக்கு இதெல்லாம் பேரப்பிள்ளைங்க.

அவர்கள் அமைதியாக இருந்தார்கள். இரைச்சலும் அமளியும் கரகோஷமும் உற்சாகமும் பாட்டும் சங்கீதமுமாக கிடுகுக் கொட்டகை வளாகத்தில் அமர்க்களப்பட, ராஜாவும் ராணியும் அவர்களின் அந்தப்புரமாக இருந்து, அரண்மனைக்குள் நடக்கும் பள்ளிக்கூடத்தில் நிர்வாகி அறையாகிப் போன இடத்தில், நேரம் கடந்து போனதறியாமல் உறைந்திருந்தார்கள்.

பேச்சு சத்தம் கேட்டுக் கண் விழித்தார்கள் அவர்கள். கருப்பாக அறைக் கோடியில் மர முக்காலி மேல் ஆரோகணித்திருக்கும் யந்திரத்தின் முன் தெரிசா நின்று பேசிக் கொண்டிருந்தாள் –

ரொம்ப நன்றி. ரொம்ப நன்றி. இனிமே நான் இந்த தேசத்துப் பெண். சங்கரன், உனக்கு பரிசு தரணுமா? என்ன வேணும்? கட்டாயம் தரேன்.

அவள் ஒரு வினாடி நாணத்தோடு தலை குனிந்தாள். யாரும் அருகில் இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டு டெலிபோனுக்கு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள்.

அய்யோ போதும்டா போதும் போதும்.

அவள் சந்தோஷமாகச் சிணுங்கினாள்.

ராஜாவும் ராணியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

பரிசு தானே, கள்ளா, வச்சிருக்கேன். உனக்கும் எனக்கும் கூட்டாக ஒரு

தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு நின்றது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன