New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 46 இரா.முருகன்

காலை வெய்யில் ஏற ஆரம்பித்தது. தியாகராஜ சாஸ்திரிகள் இன்னும் வந்து சேரவில்லை. இரண்டு இங்கிலீஷ் பத்திரிகைகளை ஆதி முதல் அந்தம் வரை எந்த சுவாரசியமும் இல்லாமல் தெரிசா படித்து முடித்திருந்தாள். இனியும் ஒரு முறை அவற்றைப் படிப்பதை விட தெருவில் ஒலிகளைக் கேட்டுக் கொண்டு, அபூர்வமாக விடுதி வளாகத்துக்குள் வரும் பழைய கார்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம்.

எங்கே போயிருப்பார்? ராத்திரி முழுக்கக் கண் விழித்திருந்ததாகச் சொன்னாரே, உடம்புக்கு ஏதாவது ஏடாகூடமாக ஆகியிருக்குமா? அவர் வருகிற சூசனையே காணோம். அரசூருக்குத் திரும்பி இருப்பாரோ. அந்நிய மதப் பெண்களுக்கு உபகாரம் செய்வது தவறானது என்று மிரட்டி யாராவது அவரைக் கட்டி இழுத்துக் கொண்டு போயிருப்பார்களோ? வயிறு உப்புசம் காண, நீர் பிரிய விடாமல் தடுத்து உட்கார்த்தி அவருக்கு உப்புத் தண்ணீர் வலுக் கட்டாயமாகப் புகட்டிக் கொண்டிருப்பார்களோ?

பத்திரிகையைப் போட்டு விட்டு எழுந்தாள் தெரிசா. வாயு மிகுந்தோ என்னமோ வயிறு அசௌகரியம் ஏற்படுத்துகிறது. கூடவே அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் ஏன் உந்துதல் ஏற்படுகிறது என்று புரியவில்லை. துவையலில் உப்பு சற்று அதிகம் என்று தண்ணீர் அதிகம் குடித்தது காரணமாக இருக்க முடியாது. ரெண்டு தினமாக இப்படித்தான் சுகவீனம் ஒவ்வொன்றாகத் தலை காட்டுகிறது. தெரிசா திடமான பெண். நோயில் படுப்பது இருக்கட்டும், அல்பமான தலைவலி, பல் ஈற்றில் வீக்கம், கண் வீக்கம் என்று ஒரு மழையோ, முதல் பனியோ, சுளீர் என்று வெய்யிலோ வர, உடம்பு எதிர்வினை செய்கிறதெல்லாம் அவளிடம் செல்லாது. ஆனாலும் இந்த வாரம் விசேஷமானது. அலைச்சலுக்கும், நினைத்ததை முடிக்கிற நிம்மதிக்கும் இடையே இப்படி உடல்நிலை பிணங்கி நிற்கிறது.

இது மட்டும் இல்லை, போட்டிருந்த மேலுடுப்பும் இடுப்பில் உடுத்தியதும் இறுக்கிப் பிடிப்பதாக ஒரு பிரமை. வென்னீரில் குளித்ததும் உடம்பில் ரத்தக் குழாய்கள் விரிவாக, அது நடக்கும் என்று படித்திருக்கிறாள். ஆனால் இங்கே வென்னீரில் எங்கே குளித்தது?

ஒன்பது மணி கழிந்து இருபது நிமிடம் சென்று தான் தியாகராஜ சாஸ்திரி வந்து சேர்ந்தார். நல்ல உறக்கத்தின் இடையில் பயங்கரமான கனவு கண்டு விழித்த குழந்தை மாதிரி மிரள மிரள விழித்தபடி இருந்தார் அவர்.

உடம்பு சரியில்லையா, காலை ஆகாரம் சாப்பிட்டீர்களா, பக்கத்து அறை காலியாக இருக்கிறது, அங்கே ஒரு மணி நேரம் உறங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறீர்களா, டாக்டரை வரவழைக்கச் சொல்லி ரூம் சர்வீஸில் கேட்கட்டுமா?

தெரிசாவின் எல்லாக் கேள்விகளுக்கும், பாதகமில்லை என்று மட்டும் பதில் சொன்னார் அவர். அது என்ன மாதிரியான பதில், எப்படி மேற்கொண்டு செயல்பட வேண்டும் என்று புரியாமல் தெரிசா மருக, சாஸ்திரிகள் ஒரு கோப்பை காப்பி கேட்டார். அதை அருந்திய பின்னர், சற்றே தெளிவு வர, மௌனமாக, எதையோ நினைத்தபடி இருந்தார் அவர். அதை வாய் விட்டுச் சொல்லி இருந்தால் இந்தப் படிக்கு இருக்கும் –

இரண்டு நாள் முன்னால் மணல் தூர்த்துக் கிடந்த வைகையில் அதிசயத்தில் அதிசயமாக இன்றைக்கு நுங்கும் நுரையுமாக ஏகத்துக்குத் தண்ணீர் போய்க் கொண்டிருந்தது. வழியில் வந்து கலக்கிற கண்மாய்களில் எதுவோ ஒன்றிரண்டு, நின்று பெய்த கோடை மழையின் காரணமாக நிரம்பி வழிந்து ஆற்றில் பெருகி வந்த புது வெள்ளம் அது. காவேரி மாதிரி பிரவாகம்.

போன வருஷம், தியாகராஜ சாஸ்திரிகள் தெலுங்கு தேசமும் மைசூரும் மராட்டி பேசும் பிரதேசமும் பார்த்து வர யாத்திரா சர்வீஸ் ஏற்பாடு செய்து கூட்டிப் போன பிரயாணமாக அகத்துக்காரியோடு போயிருந்தார். முப்பது பேர் குடும்பங்களோடு யாத்திரை போக ஒரு ரயில் கம்பார்ட்மெண்டை ஏற்பாடு செய்திருந்தது. அங்கங்கே அதை ஏதாவது முக்கியமான ரயில்வே ஸ்டேஷனில் ஓரமாக நிறுத்திக் குளிக்க, சாப்பிட வசதி உண்டு. மூன்று வேளை நம்மளவர் சாப்பாடு பண்ணிக் கொடுக்க சமையல்காரர்கள், எடுபிடிகள் சகிதமாகப் போயிருந்ததால், எந்த இடமும் புதுசாகத் தெரிந்து மிரட்டாமல், என்ன சமாசாரம் என்று சகஜமாக நடந்து சுற்றிப் பார்த்து விட்டு, அசோகா பாக்கும், தீற்றின வாசனைச் சுண்ணாம்புமாக வெற்றிலை மென்று ஓரமாகத் துப்பி, ஆரஞ்சு நிறத்தில் சாயமும் அஸ்கா சர்க்கரையும் கலந்த சர்பத் சாப்பிட்டு வர சௌகரியமாக இருந்தது லண்டன் கூட இதே மாதிரி சௌகரியத்தோடு கூட்டிப் போய்க் கொண்டு வந்து விட முடியுமானால், சமுத்திரம் கடந்து அங்கே போய்வர சாஸ்திரிகள் தயார் தான். பின்னால் பிராயச்சித்தம் இருக்கவே இருக்கிறது, ஊரையும் காட்டையும் மலையையும் கடலையும் நதியையும் எப்போது கண்குளிரப் பார்ப்பது? இதெல்லாம் காணமலேயே ஜன்மம் முடிய வேணுமா?

அந்த யாத்திரையின் போது, போகிற வழியில் எல்லாம் பிரவாகம் கொண்டு கம்பீரமாக எதிர்ப்பட்டுக் கடந்து சென்ற நதி கோதாவரி. தட்சிண கங்கை என்று சொல்லி ரெண்டு கை கூப்பி சகலரும் கும்பிட்டுத் தொழும் அந்தப் பெருநதி போல இன்றைக்கு இங்கே அதிசயத்திலும் அதிசயமாக வைகை இருந்தது.

ஜாக்கிரதையாகக் கரையில் நின்று, பெருகி வந்த வெள்ளத்தை நோக்கினார் தியாகராஜ சாஸ்திரிகள். நதி உள்ளே இறங்கி முழுக்குப் போட ஆழம் குறைவான இடம் எங்கே இருக்கும் என்று அவர் பார்வை அவதானித்தது. கரையோடு நடந்து அங்கே காலைச் சற்றே நனைத்துப் பார்த்து இறங்கிக் இடுப்பளவு நீரில் நின்றார். இங்கே இந்தக் கரையில் பிறந்து இங்கேயே படகுக் காரனாக ஆயுசு கடத்திக் கொண்டிருப்பதாக ஒரு தோன்றல். வைகையிலே ஏது படகும் படகுக்காரனும்? மனசுக்கு ஆசுவாசமான நினைப்பு வேணும் என்றால் நிஜத்தை உரித்து வைத்துக் கொண்டு தான் வந்து விழ வேணுமா? இது தியாகராஜ சாஸ்திரிகளின் மனம் சுகமாகப் போகிற போக்கு. ரம்மியமான குழந்தை விளையாட்டாகக் காலை நேரம் ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது.

விரிவான குளியல். கையோடு கொண்டு வந்திருந்த சோப்பு டப்பா கரையில் இருந்து கூப்பிட, ஈரம் சொட்ட, காலில் ஆற்று மணல் செல்லமாக ஒட்டப் போய்த் திறந்தார். கார்பாலிக் வாசனையோடு, ட்வைன் நூலால் நறுக்கிக் கொண்டு வந்திருந்த சோப்பு விள்ளலை ஜாக்கிரதையாக எடுத்து மொரிச்சென்று உடம்பெல்லாம் தேய்த்து நுரை பரத்தி முழுக்குப் போட்டார். அந்தச் சோப்பு விள்ளல் நழுவி விழுந்து தொலைந்து போன வருத்தம் தவிர்த்தால் மற்றபடி அருமையான நதி ஸ்நானம் அது.

கரையில் திரும்ப ஒதுங்கி, சணல் பையில் ஜாக்கிரதையாக மடித்து வைத்திருந்த சேலம் குண்டஞ்சு வேட்டியைத் தழையத் தழையக் கட்டிக் கொண்டார். எடுத்து வந்திருந்த திருச்செந்தூர் இலை வீபுதியைக் குழைத்து நெற்றியிலும் தோளிலும் பூசி ஈரம் உலரக் காத்திருந்தார் அவர். வீபூதி வெளுத்துத் துலங்க, அபூர்வமாக மேலே தரித்துக் கொள்ளும் கதர் ஜிப்பாவை அடுத்து அணிய எடுத்தபோது கண் இருட்டிக் கொண்டு வந்தது.

வைகைக் கரை மண்டபம் பக்கத்திலேயே இருந்ததால் அங்கே ஒரு நிமிஷம் உட்கார்ந்து தலை சுற்றல் நின்றதும் புறப்படலாம் என்று கையில் பையோடு ஒதுங்கினது தான் சாஸ்திரிகளுக்குத் தெரியும்.

உறக்கம் என்றால் அப்படி ஒரு உறக்கம். அப்படித்தான் தோன்றுகிறது இப்போது. கால் விந்தி விந்தி நடந்து வந்த ஒரு பெரியவர் அவர் தோளைத் தட்டி உலுக்கி, தியாகராஜனா என்று விசாரித்தார். நீர்க்காவி ஏறிய வேஷ்டியைப் பஞ்ச கச்சமாக உடுத்த புரோகிதர் தான் அவரும். தியாகராஜ சாஸ்திரி கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். அசதி இன்னும் உடலை அழுத்தியது.

குளிச்சுட்டு என்ன தூக்கம், எழுந்திருடா.

அதட்டி நிற்க வைத்தார். யாரென்று தெரியாமல் மலைத்த தியாகராஜ சாஸ்திரிகள் இவரை எப்படிக் கேட்பது என்ற குழப்பத்தோடு நின்றார்.

மாமா, நான் அரசூர் தியாகராஜன். அபிவாதயே சொல்லறேன்.

அவர் காது ரெண்டையும் செவிமடலில் பொத்தியபடி குலமுறை கிளர்த்த ஆரம்பிக்க, வந்தவர் நிறுத்தினார்.

சித்தெ பொறுடா குழந்தே, உன்னை தெரியாதுன்னு சொன்னேனா. அபிவாதயே எல்லாம் இப்போ வேணாம். நான் பாஷாண்டமா நிக்கறேன். இன்னும் ஸ்நானம் முடிக்கலே.

பெரியவா யார்னு சொல்லணுமே.

நான் சுந்தரம். மாலைக்கண் சுந்தரம்னு பாடசாலையிலே பேரு. மாட்டுக்கண்ணாம்பார் எங்க வாத்யார். சுந்தர கனபாடிகள்னு ஊர்லே, அரசூர்லே தான், வேறெங்கே, பேரு பெத்த பேரு.

தியாகராஜன் கேட்டிருக்காத பெயர். ஆனால் அரசூர்தானாம். வேறே அரசூரா?

வா, போகலாம். வெய்யில் ஏறறதுக்கு முன்னாடி நடக்கட்டும்.

எங்கே கிளம்பணும்? என்ன நடக்கட்டும்? புரியாமல் விழித்தார் தியாகராஜ சாஸ்திரிகள். இங்கே எங்கே, எப்படி வந்து சேர்ந்தோம் என்று ஒரு கண்ணி நினைப்பு கூட மனசில் இல்லாமல் துடைத்துப் போட்டது போல் இருந்தது.

பெரியவா எங்கே போகணும்னு கூப்பிடறா?

சகல மரியாதையோடும், வலது கையால் வாய் பொத்தி மெல்லிய குரலில் விசாரித்தார் தியாகராஜ சாஸ்திரிகள்.

நவராத்திரி வந்து வாசல்லே நிக்கறதுடா தியாகராஜா. அவளானா உடம்பு சீக்காக் கிடக்கா. நான் சீத்தாராமய்யன் தாயார் வருஷாப்திகத்தை நடத்தி வைக்கப் போவேனா, சேந்தியிலே இருந்து கொலு பொம்மை எடுத்து அமாவாசை ஆரம்பிச்சதும் கொலுப்படியிலே பரப்பி வைப்பேனா? கொலு வைக்காம அடச்சுப் போடறதும் மகா தப்பாச்சே. கொஞ்சம் என்னோடு வந்து கை கொடுடா குழந்தே. உனக்கு சர்வ மங்களமும், சுபமும் கிடைக்கும்.

தியாகராஜ சாஸ்திரிகளை அன்பான வார்த்தைகளால் தடுத்து நிறுத்திய முதியவர் அவரையும் கூட்டிக் கொண்டு வைகை மணலில் கால் புதைத்து சாய்ந்து நடந்து போனார். எவ்வளவு நேரம் நடந்திருப்பார்கள் என்று தெரியாது.

கொஞ்சம் மெள்ளப் போடா குழந்தே. எனக்கு கால் செத்தெ ஊனம். பாத்திருப்பியே. இல்லாம இருந்தாலும் ஓட்டப் பந்தயத்துலே ஓடியிருக்க மாட்டேன். இந்த வயசுக்கு நகர முடியறதே பெரிய விஷயமாச்சே, சரிதானா?

வேகத்தைக் குறைத்து நடந்தார் தியாகராஜ சாஸ்திரிகள்.

யாரோ பசு மாட்டை ஓட்டிக் கொண்டு வழியோடு போனார்கள். மாட்டுக்காரன் நின்றான்.

நில்லு, அவனும் வரட்டும்.

அவர் நடுவில் நிற்க, மாட்டை ஓட்டிக் கொண்டு பெரிதாகக் கும்புட்டு போட்டபடி மாட்டுக்காரன் வழி ஓரமாக நின்றான்.

நீயும் வாடா.

அவர் அழைக்க, நெக்குருகிக் கன்னத்தில் போட்டுக் கொண்டு மாட்டை ஓட்டியபடி கூடவே வருகிறான் அவன். எங்கேயோ மகுடி வாசிக்கிற சத்தம் சன்னமாகக் காதில் கேட்டது.

அச்சு அசலா உன்னை மாதிரி முகமும் ஆகிருதியுமாக, கொலு பொம்மையிலே ஒரு பொம்மையா, பிடாரன் ஒருத்தன் மகுடி வாசிச்சிண்டிருக்கான்னு சொன்னேனே. அவன் தான். அமாவாசை வந்தாச்சு, கொலு எடுத்து வைக்கணுமேன்னு மகுடு ஊதி கொலுப் பெட்டிக்குள்ளே இருந்து என்னைக் கூப்பிடறான். வரேன்னு சொல்லுடா ஆதினமிளகி.

வந்தாச்சு வந்தாச்சு என்று சொல்லியபடி ஆற்று மணலில் விழுந்த பச்சை உத்தரீயத்தை எடுத்து உருமால் போல் தலையில் கட்டியபடி மாட்டுக்காரன் தியாகராஜ சாஸ்திரிகளைப் பார்த்தபடி சிரித்தான்.

இப்போ என்ன நேரம்?

தியாகராஜன் வியப்போடு கேட்க, மாட்டுக்காரன் இன்னொரு தடவை சிரித்து, சுந்தர கனபாடிகள் என்று சொல்லிக் கொண்ட பெரியவரிடம் கேட்டான் –

சாமிகளே, இந்த மனுஷர் மாதிரி பொம்மை இருந்தா சொல்லுங்களேன். மணிக் கூண்டு மாதிரி பக்கத்துலே வைச்சு அண்ணாந்து பார்த்தபடி இவரையும் நிப்பாட்டிப் போடுவோம்.

வைகைக் கரை வீதி மாதிரியும் தெரியவில்லை, பழக்கம் இல்லாத இடம் மாதிரியும் தெரியவில்லை, கொஞ்சம் உள்ளொடுங்கின தெருவில் ரெண்டு வசமும் காரை வீடுகளாக வாசல் தெளித்துக் கோலம் போட்ட வீடுகள்.

இதோ வந்தாச்சு, இந்த அகம் தான்.

கனபாடிகள் கை காட்டி நிறுத்த மாட்டுக்காரன் வாசல் திண்ணை அழிக் கம்பியில் மாட்டைக் கட்டினான்.

உள்ளே வரலாமுங்களா? அவன் தயங்கி நின்றான்.

தாராளமா வா, வராம இங்கே நிண்ணுண்டே ஞான திருஷ்டியிலா பொம்மை எடுத்துத் தரப் போறே?

அவன் நம்ப முடியாத ஆச்சரியத்தோடு தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்டியபடி உள்ளே நுழைய, ஓயாமல் மகுடிச் சத்தம்.

வாயேண்டா குழந்தே, உனக்கு ஒரு தடவை தனியாச் சொல்லணுமா?

கனபாடிகள் அழுத்திச் சொல்ல தியாகராஜனும் உள்ளே போனார். அதற்குள் ஜன்னலைப் பிடித்து, சுவரில் மாடப் பிறையில் கால் வைத்து உந்தி, தூளிக்கயற்றுக்காக மாட்டிய கழுக்கான் இரும்புக் கொழுவில் கையைப் பற்றி இன்னொரு முறை உந்தி சேந்திக்குள் போய் அமர்ந்தான் மாட்டுக்காரன். வீட்டுக்குள் இருந்து தீனமாக இருமும் ஒலியும், பெண் குரலில் முணுமுணுப்பாக ஏதோ சொல்வதும் காதில் விழ தியாகராஜ சாஸ்திரிகள் அங்கே பார்த்தார்.

சொன்னேனே, மாமி தான். உனக்கு கொள்ளுப்பாட்டி ஆகணும். நானே நாலு தலைமுறை முந்தின மனுஷன் தான். ஆதீனமிளகியும் தான். ஏண்டாப்பா, பெட்டி கிடைச்சுதா? ரெண்டு கள்ளியம்பெட்டியையும் திறந்துக்கோ. கடகடன்னு எடுத்து வைச்சுடலாம். தியாகராஜா, நீ அங்கே கூடத்து ஓரமா கொலுப்படி இருக்கு பாரு. கச்சட்டி, ஊறுகாய் பரணி எல்லாத்தையும் ஓரமா தரையிலே வச்சுட்டு அதை நகர்த்திண்டு வா இங்கே.

தியாகராஜன் பலகை அடுக்கைக் கொண்டு வந்தார். பழைய துணி வாங்கி தூசி தட்டி, வீட்டுக்குப் பின்னால் கிணற்றடிக்குப் போய் நீர் சேந்தி வந்து ஈரத் துணியால் துடைத்தார். கனபாடிகள் உள்ளே போய் எடுத்து வந்த புத்தம்புது சேலம் குண்டஞ்சு வேட்டியைப் பாந்தமாகப் படிகளில் விரித்தார்.

சாமிகளே, எடுத்துடட்டா?

மாட்டுக்காரன் மேலே சேர்ந்தியில் உட்கார்ந்தபடி பொறுமை இல்லாமல் கேட்டான்.

வந்தாச்சுடா, வந்தாச்சு. பிடாரனை பார்க்கத் தானே அவசரம்? பாத்துடலாம். தியாகராஜா, இந்தாடா, என் உத்தரீயத்தை எடுத்துக்கோ.

தியாகராஜன் கையில் தாழப் பிடிக்க உத்தரீயத்தை எறிந்தார் அவர்.

அந்தப் பெரியவர் அதிகாரம் செய்யாமல், ஆனால் கோடு போட்டுக் காட்டி நடக்கச் சொல்வது போல் சகல உரிமையோடும் சொல்ல, தியாகராஜ சாஸ்திரிகள் கீழே நின்றார். சேந்தியில் இருந்து ஒவ்வொரு பொம்மையாகக் மாட்டுக்காரன் கீழே மெல்ல நழுவவிட, அதையெல்லாம் மேல் துண்டில் வாங்கிக் கீழே பதவிசாக கொலுப் படிகளில் வைத்தார் தியாகராஜன்.

அடடா, வெள்ளைக்காரி பொம்மையை கடைக்காரன் பொம்மையோட சேர்த்து சேந்தியிலே போட்டது யாருன்னு தெரியலியே.

மாட்டுக்காரன் சத்தமாகச் சொல்ல, குரலை அடக்கச் சொன்னார் பெரியவர்.

முடியாமக் கிடக்கறாடா குழந்தே. அவ நகர்ந்து வந்தா ரத்தக் கொதிப்போட சத்தம் போட ஆரம்பிச்சுடுவா. பூஜை புனஸ்காரம்னு அவளை அரைப் பட்டினி போட்டே சீக்காளி ஆக்கிட்டேன்.

சொல்லியபடியே தியாகராஜன் கையில் இருந்து வெள்ளைக்காரி பொம்மையை வாங்கினார் கனபாடிகள். வாயும் வயறுமா இருக்காளேடா குழந்தே என்றார் தியாகராஜனைப் பார்த்து. அவர் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் நிற்க தொடர்ந்தார் –

நியதி, விதி எல்லாம் என்னவும் சொல்லிட்டுப் போகட்டும். ப்ரக்ருதி இழுத்து வச்சுப் பிணைச்ச உறவுடா இது. புரியலியா? எது? ப்ரக்ருதியா? இயற்கைன்னு சொல்லுவே உன் காலத்திலே. அதான். இதிலே இன்னொரு பொம்மனாட்டியும் உண்டுங்கற போதம் இருந்தா நன்னா இருக்கும். கடைக்காரன் பொண்டாட்டி.

சுந்தர கனபாடிகள் தியாகராஜனைப் பார்த்தார்.

நிறைசூலி. கீழ்ப் படியிலே உக்காத்தணும்.

கொலுப் படியில் கடைக்காரன் பக்கத்திலேயே வெள்ளைக்காரி இருந்தாள். அவள் முகம் தான் தியாகராஜனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. எல்லா பொம்மைகளின் முகமும் தான். சுந்தர கனபாடிகளும் மாட்டுக்காரனும் அவன் பசுவும் கூட புகையில் எழுதின மாதிரி மங்கலாகத் தான் தெரிந்தார்கள்.

மருதையன். அதான் பேரு.

கனபாடிகள் சொல்லிக் கொண்டே போகக் கண் விழித்தார் தியாகராஜ சாஸ்திரிகள்.

ஒவ்வொரு பொம்மையா ரெண்டு கள்ளியம்பொட்டி பொம்மை ஒரு பெரியவருக்காக எடுத்து வச்சிட்டு வந்ததிலே நேரமாயிடுத்தும்மா நேரம் தப்பிப் போய் வந்து நிக்கறேன். என்னை மன்னிச்சுக்கோ.

தியாகராஜன் தெரிசாவிடம் இதைச் சொல்ல முடியாது. கிறுக்கன் என்று மனதில் தட்டுப்பட்டுப் போகும். வேண்டாம் என்று ஜாக்கிரதையாக ஒதுக்கினார்.

பாதகமில்லை என்று இன்னொரு தடவை சொன்னார். சொல்லி முடித்தபின் அவர் முகம் பிரகாசமாக இருந்தது.

இதோ, இன்னும் அஞ்சே நிமிஷத்துலே ஆதீனமிளகி வித்வான் வீட்டுக்குக் கிளம்பிடலாம். ஒரு காப்பி குடிச்சுட்டுத் தெம்பாப் போகலாமா?

அவர் கேட்க, தெரிசா ரூம் சர்வீஸைக் கூப்பிட்டு இன்னும் ரெண்டு காப்பி நிறையச் சர்க்கரை போட்டு, கொதிக்கக் கொதிக்கக் கொண்டு வரச் சொன்னாள்.

ஆதினமிளகி வித்வான் வீட்டில் நாலு பக்கமும் செய்குன்று மாதிரி அடுக்கி வைத்து நின்ற பாடப் புத்தக கைடுகள் நடுவே, புதிதாக வந்து தரையில் பரத்தி வைத்திருந்த பத்தாம் வகுப்பு ஆதினமிளகி தமிழ் உரை நூல்கள் சூழ்ந்திருக்க, நாற்காலி போட்டு அவர்கள் உட்கார்ந்தார்கள்.

பட்டணத்து வித்வான் சார் வந்து சேர்ந்தாரா? அவர் பெயர் என்ன? மோகனமான பெயராச்சே.

தியாகராஜ சாஸ்திரிகள் ஆதீனமிளகி வித்வானைக் கேட்டுக் கொண்டிருந்த போதே வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம். ஒடிசலான உடல் வாகோடு உயரமான ஒருத்தர் பஞ்ச கச்சமும் கருப்புக் கண்ணாடியுமாக இறங்கினார்.

இவர் தானா? தியாகராஜன் கேட்டார்.

ஆமா, மயிலை வித்துவான் ரங்காச்சாரி மோகனரங்க அய்யங்கார் சுவாமிகள். கேட்டிருக்கேன். ஆதீனமிளகி வித்வான் வாசலைப் பார்த்தபடி பதிலாகச் சொன்னார்.

அவரும் வித்வான், நீங்களும் வித்வானா?

அவர் பாட்டு வித்வான், நான் தமிழ் வித்வான். அதனாலே, விரோதம் இல்லாத சிநேகிதம் ரெண்டு பேருக்கும்.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா ஆனந்தம் கொடுத்திண்டிருக்கேள்.

கஷ்டம்னு சொல்லாதவரைக்கும் சரி என்றார் ஆதீனமிளகி வித்வான்.

நம்ம பாட்டுகள்லே எட்டை மட்டும் எடுத்து அதுக்கு ராகம் சரி பார்த்து, சிட்டை சுவரம் சரி செஞ்சு பாடறதுக்காக கவனப்படுத்தி வச்சிருக்கார். நாளைக்கு விழா இறுதியிலே இசை நிகழ்ச்சியும் உண்டு. இவர் பாடலே. குரல் ஒத்துழைக்கலே. காலேஜ்லே படிக்கிறா இவர் பொண்ணு. அவ தான் பாடப் போறா.

சொல்லிக் கொண்டிருக்கும்போதே குதிரை வண்டியில் இருந்து அழகான யுவதி ஒருத்தி கையில் கோவிலில் கொடுத்த பூ மாலையோடும் பூஜைக்கு எடுத்துப் போன பொருட்களுடனும் இறங்கினாள். நிச்சயம் இவள் பாடினால் கூட்டம் வரும் என்று நினைத்தாள் தெரிசா.

புத்தகம் பிரிண்டர் கிட்டே இருந்து வந்து சேர்ந்தாச்சு. ஆதீனமிளகி வித்வான் சொன்னார்.

இரண்டு பையன்கள் ஒரு பெரிய ப்ரவுன் பேப்பர் பார்சலை உருட்டி வந்து இடத்தை அடைக்கிறாற்போல் வைத்து விட்டுப் போனார்கள். அது நடுவில் உட்கார்ந்திருக்க, ஆதீனமிளகி வித்வான் காணாமல் போனார்.

நாலு புரூப் பார்த்து, கிட்டாவய்யர் கீதத்தை எல்லாம் சொற்பிழை, கருத்துப் பிழை திருத்தி, முடிஞ்ச வரைக்கும் விருத்தம், வெண்பா, கலிப்பான்னு இலக்கணச் சட்டையும் போட்டாச்சு. இனி பாட்டு ஐயங்கார் பாடு. மகள் பாடு.

தெரிசா அவர் பட்ட சிரமத்துக்கெல்லாம் நன்றி சொன்னாள். அவருக்கு விழா மேடையில் ஒரு பொற்கிழி கொடுக்க தியாகராஜ சாஸ்திரிகள் யோசனை சொல்லி இருக்கிறார்.

மெட்ராஸ் வித்வானும் அவர் மகளும் தெரிசாவைப் பார்த்து கை கூப்பினார்கள். அவர்களை பார்சலுக்கு அந்தப் பக்கம் இருந்தே அறிமுகம் செய்து வைத்தார் ஆதினமிளகி வித்வான்.

ஷெ வொ நித்யகல்யாணி, ராவி தெ ஃபேர் த கன்னைசான்ஸ்.

அந்தப் பெண் பிரஞ்சில் சொல்லியபடி தெரிசா கையைக் குலுக்கினாள். பள்ளியில் படித்த பிரஞ்சும் அவ்வப்போது அமேயர் பாதிரியாரிடம் பேசிச் சரி பார்த்துக் கொண்ட பேச்சு மொழியும் நினைவில் இருக்க, தெரிசா சொன்னாள் –

லெ ப்லைசிர் எ போர் மொய்.

எனக்கு புதுச்சேரி தான் சொந்த ஊர். ஆனால் நான் பிரஞ்சு படிக்கலே. அங்கேயும் இல்லாம தஞ்சாவூர்லே சங்கீதம் படிக்கப் போயிட்டேன். மியூசிக் காலேஜ்லே வேலை இல்லாம இருந்தா பட்டணத்தை எட்டிப் பார்க்கக்கூட வந்திருக்க மாட்டேன். ஆனாலும் பெயரோட மயிலாப்பூர் ஒட்டிண்டாத்தான் இங்கே மதிப்பு. புதுச்சேரின்னு பேர்லே வச்சுண்டு கர்னாடக சங்கீதம் பாட முடியாது.

பாட்டு வித்வான் மோகனரங்கய்யங்கார் முடிவாகச் சொன்னார்.

புதுச்சேரி பற்றி நிறைய கேட்டிருக்கேன். இன்னும் போகலே.

தெரிசா அவரிடம் ப்ரஞ்சில் சொல்ல அவர் முழித்தார்.

அப்பாவுக்கு தமிழ் தமிழ் தமிழ் தான். அந்தப் பெண் சிரித்தாள்.

அடடா, ரொம்ப ஜாக்கிரதையாக இவரிடம் பிரஞ்சில் கதைத்தோமே என்று தோன்ற தெரிசாவும் சிரித்தாள். அடி வயிற்றில் ஏதோ வலி சட்டென்று கிளம்பி ஒரு முழு நிமிடம் சுற்றிச் சுழன்று மேலெழுந்து திரும்ப அடங்கியது.

தெரிசா கண் மூடி வலியைப் பொறுத்துக் கொண்டாள். இடைவிடாத பயணம் காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. காலையில் பசியாறியது எல்லாம் உள்ளே இனியும் இருக்க முடியாது என்று தொண்டைக்குத் திரும்ப வந்து நிற்கும் நினைப்பு. அவள் வேகமாக எழுந்தாள். தலை சுற்ற நாற்காலியைப் பற்றினாள்.

மேடம் இருங்க, நான் வரேன்.

நித்யகல்யாணி என்ற அந்தப் பெண் அன்போடு தெரிசாவின் தலையைத் தோளில் சாய்த்துக் கொள்ள, உள்ளே போங்க, வீட்டுப் பெண்கள் இருக்காங்க என்று கை காட்டி எழுந்து நின்றார் ஆதினமிளகி வித்வான்.

வீட்டுப் பெண்கள் தெரிசா பற்றி ஏற்படுத்திக் கொண்ட பவிஷான வெளிநாட்டு விருந்தாளி, காசுக்காரி பிம்பங்கள் சிதறி சாதாரணமாக உடம்பு சரியில்லாமல் வாதனைப் படுகிற பெண் ஆக, அவளைக் கரிசனத்தோடு சூழ்ந்து கொண்டார்கள். தெரிசாவை குளியலறைக்கு இட்டுப் போனாள் ஒரு பெண்.

குளியல் அறையில் வாந்தி எடுத்து விட்டு வந்ததும் வயிற்று வேதனை கொஞ்சம் தணிந்ததாகத் தோன்றியது தெரிசாவுக்கு. வெதுவெதுப்பாக வென்னீர், எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் கலந்த ரசம் என்று அவளுக்குக் குடிக்கக் கொடுக்க, தலைசுற்றலும் வயிற்றைப் பிரட்டுவதும் மட்டுப்பட்டது.

ஏன் என்னைச் சுற்றி நின்று பார்க்கிறார்கள், நானென்ன மிருகக் காட்சி சாலையில் காண்டாமிருகமா என்று ஒரு நிமிடம் கோபம் வந்தது. இந்த அலைச்சலும் பயணமும் தானே காரணம் நான் எல்லோருக்கும் காட்சிப் பொருளாக இப்படி நிற்க என்று சுய பச்சாதாபம் அடுத்துச் சூழ, கூடவே, எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது, நான் நானாக இருக்கும் நாட்கள் இவை, இதெல்லாம் தொடரும் என்று மனம் சொல்ல, மறுபடி மகிழ்ச்சி இறக்கை கட்டிப் பறந்தது.

நிமிடத்துக்கு நிமிடம் மாறும் உணர்ச்சிகள் அவளை இம்சித்துக் கொண்டிருக்க எல்லாம் ஒதுக்கி அங்கே இருந்தவர்கள் பேச்சில் ஒரு கண்ணியைப் பிடித்துப் பற்றிக் கலந்து கொண்டாள். ஒன்றிரண்டு தமிழ் மற்றும் மலையாள வார்த்தையும், நிறுத்தி உச்சரிக்கும் இங்கிலீஷும், மொழி பெயர்த்து உதவும் நித்யகல்யாணியுமாக உரையாட ஒரு கஷ்டமும் இல்லை. பெண்கள் கூடிப் பேச மொழி என்ன தடை?

ஆதீனமிளகி வித்வானின் மாமியார் என்ற எண்பத்து சில்லறை வயதான ராமானுஜம்மாள் வீட்டில் உண்டு. நெல்லூரில் இருந்து அவள் இங்கே குடிபெயர்ந்து எழுபது வருஷம் போயிருந்தாலும், இன்னும் தெலுங்கு தான் நாக்கில் வருகிறது அவளுக்கு. இந்த வயதிலும் பாம்புக் காது. ஆனால் கண் பார்வை தான் அப்படி இப்படி அல்லாடுகிறது. ஓரத்தில் கல்யாணப் பந்திப் பாய், கள்ளியம்பெட்டியில் விருந்தாளி வந்தால் சமைக்க, பரிமாற எடுக்க கூடுதல் பாத்திரங்கள், பொங்கலுக்கு வீட்டு வாசலில் பூச காவி, தேங்காய் மட்டை பிரஷ் என்று கலந்து கட்டியாக வைத்திருந்த இடத்துக்குப் பக்கதில் அதற்கான காவல் தெய்வம் போல் சதா வெற்றிலை மென்றபடி உட்கார்ந்திருக்கும் கிழவி. அவள் காதில் ஒருவாறு நடக்கிற விஷயம் எட்ட, இருந்த கண் பார்வையால் லண்டன்காரி விருந்தாளிப் பெண் என்று உத்தேசமாகப் பட்ட நெல்லுக் குத்தும் குந்தாணியைப் பார்த்துக் கொண்டு கேட்ட, எத்தனை பிள்ளைங்கம்மா, வீட்டுக் காரர் என்ன செய்யறாரு போன்ற கேள்விகளுக்கு இதுவரை இல்லை, மீன் வியாபாரம் செய்கிறார் என்று பதில் போய்ச் சேர, அந்தம்மா தெலுங்கில் சொன்னாள் –

அதென்னமோ போ. என் காதிலே விழுற ஒவ்வொரு சத்தத்துக்கும் கூடவே கேக்காத இன்னொன்னும் சேர்ந்து வரும். இந்தப் பொண்ணு வாந்தி எடுக்கறா, கூடவே பிள்ளையும் இல்லே அழுவுது.

அது அத்தனை பதவிசான தகவல் இலலை என்பதால் வீட்டுப் பெண்டுகள், பாட்டிக்கு சும்மா வேடிக்கை தான் எப்பவும், உன்னைக் கூட்டிக்கிட்டு லண்டன் போகத்தான் வந்திருக்காங்க, சீவிச் சிங்காரிச்சு இரு என்று ப்ளேட்டை தெரிசாவுக்காக மாற்றிப் போட்டார்கள்.

வாசலில் தலையைக் காட்டி விட்டு உடனே வருகிறேன் என்று எழுந்தாள் தெரிசா. வீட்டு உள்ளே மீன் வறுக்கும் வாடையை தீர்க்கமாக முகர்ந்தபடி அவள் வெளியே வந்தபோது பட்டணம் சங்கீத வித்வான் கிட்டாவய்யன் கீர்த்தனை ஒன்றை இது சிந்துபைரவி என்று சொல்லி ராகம் எடுக்க, நித்யகல்யாணி பாடிக் காட்ட ஆரம்பித்திருந்தாள்.

வாகனம் தெய்வம் வழித்துணை கர்த்தன்,
போகும்நம் பாதை பரமபிதா -நீகனம்,
தன்செயலென் றெண்ணிச் சிலுவை சுமந்திட்டாய்
என்செயல் ஆனால் இறகு

தெரிசாவைப் பார்த்ததும் அவள் புன்சிரிப்போடு பாட்டை இன்னும் விஸ்தாரமாக ஆலாபனை செய்து ஐந்து நிமிடம் பாடி முடிக்க, தியாகராஜ சாஸ்திரிகள் மெய்மறந்து போயிருந்தார். தெய்வதுக்கேயான கானம், குரல். கிருஷ்ணனா இருந்தா என்ன, கிறிஸ்துநாதரா இருந்தா என்ன?

ரொம்ப நன்னா வந்திருக்கு என்றார் பட்டண வித்வானும். நானும் கூட இருபது வருஷம் முந்தி கிறிஸ்துநாதர் மேலே ரஞ்சனி, ஸ்ரீரஞ்சனி, சிவரஞ்சனி இப்படி ரஞ்சனமாலாவாக ஒரு ராகமாலிகை கீர்த்தனம் செஞ்சு வச்சேன்.

எப்போ அது என்று கேட்டார் தியாகராஜ சாஸ்திரிகள்.

அது எனக்கு அக்கி வந்தபோது. தலையிலே எல்லாம் சிரங்கு மாதிரி படர்ந்து ஒரே வலி, எரிச்சல், புகைச்சல். தாங்கலே. சாதரணமா வயத்துலே வலி, கைகால் வீக்கம்னு இருந்தா உள்ளூர் ஸ்வாமி மேலே ஒரு கீர்த்தனம் செஞ்சு வைக்கற வழக்கம். அக்கி கொஞ்சம் தள்ளி வைக்கற வியாதி. அது இருக்கற போது வெளி தெய்வத்தை பிரார்த்திச்சால் தான் சீக்கிரம் குணமாகும்னு குரு வார்த்தை. அதான் ஏசுநாதர் பேர்லே ஒரு உருப்படி சித்தியாக்கி வச்சது. பாடி முடிச்சு நாலு நாள்லே அக்கி குணமாச்சு. எங்கேயாவது நோட்டுப் புத்தகத்திலே இருக்கும். கிடைச்சா பாடிடலாம்.

இது கிட்டாவய்யர் கீர்த்தனக் கச்சேரி. இதுலே சேர்க்கணுமா என்று கேட்டார் ஆதீனமிளகி வித்வான். அது சரிதான் என்று இன்னொரு கீர்த்தனத்தைத் தானே பாட எடுத்தார் பட்டண வித்துவான். தும்மல் வர நிறுத்திக் கொண்டார் அவர்.

அதிசயமா இல்லே இருக்கு. நீங்க இப்போ தான் முதல் கீர்த்தனம் கிறிஸ்துவ சாமி மேலே பாடறீங்கன்னு நினைச்சேன் என்றார் ஆதினமிளகி வித்வான். அவருடைய பச்சைத் தலைப்பாகை அவிழ்ந்து முகத்தில் சரிய, தாங்கி எடுத்து அவர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

தியாகராஜ சாஸ்திரிகள் பிரமை உச்சத்தில் போக, அவரையே பார்த்தபடி இருந்தார். பொம்மை அடுக்க கனவிலோ வேறே எதிலோ அவர் கூட நின்ற, சேந்திக்குள் ஏறிய மாட்டுக்காரன் இவர் மாதிரித்தானே உருவத்திலும் குரலிலும். முகம் தான் துலக்கமாகத் தெரியவில்லை. யார் முகம் தான் தெரிந்தது? பொம்மைகள் கூட அப்படித்தான். ஆனால், அதெல்லாம் நடந்ததா? கனவு என்றால் நேரம் கெட்ட நேரத்தில் ஏன் விழுத்தாட்டிப் படுக்க வைத்து கண்ணுக்குள் தைத்து வைக்கப்பட்டது? யார் செயல் அதெல்லாம்? அவருக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லை.

ஆதினமிளகி புத்தகப் பொதியில் இருந்து முதல் பிரதியை எடுத்து தெரிசாவிடம் நீட்டினார். புதுப் புத்தகங்களுக்கேயான நறுமணமும், காகிதம் மடங்காத புதுமையும் மென்மையும், கெட்டி அட்டையுமாக மடியில் பரப்பி வைத்துப் படிக்க வேண்டிய உருவத்தில் புத்தகம் இருந்தது. தெரிசா அப்படித்தான் வைத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் சுரந்தது.

தனக்கு நான்கு தலைமுறை மூத்த பாட்டனோடு ஒரு கோட்டில் இணைக்கிற அற்புதம் இந்தப் புத்தகம். நாளை விழாவில் இந்தப் பாடல்கள் இசைக்கப்படும் போது ஹாலின் ஒரு மூலையில் ஜான் கிட்டாவய்யரும் நின்று அவற்றைப் புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருப்பார் என்று அவள் திடமாக நம்பினாள். புத்தக வாடை மனதுக்கு இதமாக இதுவரை சூழ்ந்ததே இல்லை. எல்லா வாடையும் ஒன்று அதிக நறுமணமாக அல்லது தாங்க இயலாத, பொசுங்கும் நாற்றமாக அவள் நாசியில் பட்டுக் கொண்டிருக்கிறது.

வாசலில் புத்தகப் பொதிகளோடு ஒரு மாட்டு வண்டி வந்து நிற்க, பத்து நிமிஷம் இதைப் பார்த்து வாங்கி வச்சுடறேன் என்று போனார் ஆதீனமிளகி வித்வான். திண்ணை ஓரமாக தடுப்பு வைத்து, மேலே மின்விசிறி சுழன்று கொண்டிருந்த இடத்தில் ஓய்வாக இருக்கச் சொல்லி தெரிசாவை அனுப்பி வைத்தார் ஆதீனமிளகி வித்வான். நித்யகல்யாணியும் அவளோடு அங்கே போனாள்.

நிமிட நேரத்தில் தெரசாவுக்கு நித்யகல்யாணி சிநேகிதமாகி விட்டாள். இரண்டு பக்கத்திலும் மனத் தடை ஏதும் இல்லாமல் எழுந்த சிநேகிதம் அது. தெரிசாவை விட பத்து வயது சின்னப் பெண். என்றாலும் பேச்சும், நடவடிக்கையும் தெரிசாவை விட முதிர்ச்சி காட்டியதை தெரிசா உணர்ந்து கொண்டாள். பாட்டும், பிரஞ்சும் நித்யகல்யாணியின் ஆளுமையில் சிறு பகுதிகள் தான். மனதில் எதையும் வைக்காமல் பேசுகிற, பேசுவதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரிந்த அவள் இன்னும் சாதிக்க நினைக்கிறவள். பெண்ணால் முடியாது என்ற கண்ணாடிச் சுவரைக் கையில் ரத்தம் வராமல் கடந்து வந்தாகி விட்டது. சம்பிரதாயமான குடும்ப உறவுகளைக் கடந்து வாழ்க்கையில் சாதிக்கப் புறப்படத் தருணம் பார்த்துக் காத்திருப்பது அடுத்த நடவடிக்கை என்றாள். பிரான்சிலோ அல்லது ஜெர்மனியிலோ நிரந்தரமாகத் தங்க, அறிவியல் மேற்படிப்பு படிக்க என்று நிறைய திட்டம் வைத்திருந்தாள். மயிலை வித்வானுக்கு ஒரு காசு செலவு வைக்காமல் வெளிநாட்டு அரசு, தனியார் நிறுவனங்களின் கல்விக் கொடை, பரிந்துரைத்தல் என்று விரிவாகத் தெரிந்து வைத்திருந்தாள். இன்னும் மூன்று மாதத்தில் நித்யகல்யாணியை இங்கே எங்கேயும் பார்க்க முடியாது. தெரிசா சகலமானதையும் அவளுக்கு எல்லா விதத்திலும் சொந்தமான இங்கிலாந்தில் விட்டுவிட்டு இங்கே வந்ததில் அவளுக்கு உண்டான ஆச்சரியம் கொஞ்சம் நஞ்சமில்லை..

என்ன இருக்குன்னு இங்கே வரணும்? அதுவும் என்றென்றைக்குமா இங்கிலாந்தை விட்டு? முந்தி இருந்தவங்க செய்ததை மாற்றி வைக்கிறது எல்லாம் ரொமாண்டிக் ஆன சிந்தனை. நீங்க மதம் மாறுவதோ, நாலு தலைமுறைக்கு முன்னாலே அறுந்து போன கண்ணிகளைச் சரியாக்கி மறுபடியும் இங்கே தொடர நினைக்கறதோ நாளாவட்டத்தில் உங்களுக்கு சிரமத்தைத்தான் கொண்டு வரும். அது இல்லாமலேயே அந்தக் காலத்தையும் மனுஷர்களையும் கொண்டாடற விதத்திலே நிறையச் செய்யலாம். நீங்க கொண்டு வந்திருக்கற கிறிஸ்துவ கீர்த்தனைகள் இதுக்கு முக்கியமான சாட்சி.

அவள் பேசியதைப் புன்முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்தாள் தெரிசா. இப்படி ஒரு சிநேகிதி கால்டர்டேலில் கிடைத்திருந்தால். கிடைத்திருந்தால்? இன்னும் விரைவாக தெரிசா இங்கே வந்திருப்பாள்.

எடுத்து வச்சுடலாமா? நாளைக்கு வெளியிட்டதும் கொடுக்கலாம்.

கேட்டபடி புத்தகத்தை கையில் திரும்ப எடுத்தார் ஆதினமிளகி வித்துவான். தியாகராஜ சாஸ்திரிகள் அவரைக் கூர்ந்து பார்த்தார். மாட்டுக்காரனே தான். அவன் கையில் வாங்கிக் கொண்டது புத்தகம் இல்லை. கொலுப்படியில் வைக்க சேர்ந்தியில் இருந்து இறக்கிய களிமண் பொம்மை. வெள்ளைக்காரி பக்கத்தில் இன்னொரு பொம்மையும் உண்டு. புகையிலைக் கடைக்காரன்.

அது தெரிசாவும் சின்னச் சங்கரனும் என்று அவர் மனது சொன்னது. தெரிசா நாற்காலி பக்கம் நின்றிருந்தாள். நித்யகல்யாணி அவள் அருகில், சன்னமான குரலில் பாடிக் கொண்டிருந்தாள்.

புத்தகத்துக்கு தலைப்பு கிட்டாவய்யன் கீர்த்தனங்கள்னு வைக்கறதா, ஜான் கிட்டாவய்யன் கீர்த்தனங்கள்னு வைக்கறதா, கிட்டன் பாட்டுக்கள்னு வைக்கறதா இப்படி தலையைப் பிச்சுட்டேன். பெயர் சரியா இருக்கணுமில்லே.

ஆதீனமிளகி வித்வான் தெரிசாவிடம் சொன்னார்.

மருதையன்னு பேர் வைக்கணும்.

தியாகராஜ சாஸ்திரிகள் முணுமுணுத்தது கேட்டுத் தெரிசா திரும்பிப் பார்க்க, அவர் நாற்காலியில் கண் மூடி இருந்தார்.

மறுபடி வயிறு வலித்தது. பிரயாணமும் அலைச்சலும் ஒத்துக்கலே என சொல்லி தெரிசா எழ, நித்யகல்யாணியும் அவளோடு உள்ளே போனாள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன