New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 44 இரா.முருகன்

வாழ்ந்து போதீரே அத்தியாயம் நாற்பத்திநான்கு இரா.முருகன்

வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து :

குளிரும் மூடுபனியும் அடர்ந்து கனமாகப் படிந்து கொண்டிருக்கும் டிசம்பர் மாத முன்னிரவு நேரத்தில் குஞ்ஞம்மிணி வீராவாலியைச் சந்தித்தாள். காலம் நிலைத்த இடம். பழைய தில்லியின் சாலையொன்று சென்று தேய்ந்து மடங்கிக் குளிருக்கு இதமாக உள்வளைந்து சுருண்ட முடுக்குச் சந்து அது.

இந்தப் பழைய பட்டணத்தில் எல்லோரும் ராச்சாப்பாட்டுக்காக உட்காரும் நேரம். கால தேச வர்த்தமானங்களுக்கு வெளியே ஜீவிக்கிறவள் என்றாலும் குஞ்ஞம்மிணிக்குப் புரிகிறது. முன்னெல்லாம் ஆகார வாடை வந்தாலே பசி பசி என்று புத்தியில் ஒரு பொறி எழுந்து பரவிச் சுருளச் சுருளச் சுருண்டு சுருள் பிரிய நீளும் வலியாக அனுபவப்பட்டு வாட்டும். அதெல்லாம் இப்போது இல்லை. ஆனாலும் குளிரும் வாடைக் காற்று பெருக்கிக் காட்டும் நெடிகளும் வாதனை செய்வது தொடர்கிறது.

குஞ்ஞம்மிணி கூடவே நடந்து வரும் இந்தப் பெண் எங்கே இருந்து வருகிறாள்? அவளோடு கூட குஞ்ஞம்மிணி ஏன் இங்கே இருக்க வேணும்?

விதவிதமாக பரத்தாவும், ரொட்டியும், சப்பாத்தியும், வியஞ்சனங்களும் விற்கும் கடை வாசல்களில் பெரிய பெரிய இரும்புத் தட்டடுப்புகளில் எண்ணெய் சிதறிக் காயும் வாடை. சன்னமாக அரைத்த கோதுமையைப் பசு நெய் விட்டு அடித்து முறுக்கி ஆதரவாகப் பிடித்துப் பற்றிப் பிசையும் மணம். வேக வைத்த காய்கறிகளும், மாமிசமும், மலைப் பிரதேச மிளகின் வாடையோடு கல் உப்பும், அரிந்த மிளகாயும், வதக்கிய வெங்காயமும் கூடவே கலக்கிற கதம்ப நெடி. பிசைந்த மாவை மரக் குழவி கொண்டு தட்டையாக்கி நீட்டி மடித்து உருட்டித் தட்டி, தகித்துக் காயும் இரும்புப் பரப்பில் இட்டுப் பொன் நிறம் வரத் திருப்பிப் போட்டு வாட்டி மறுபடி திருப்ப வாகாக நெருப்பு படர்ந்து எரியும் போது தீயில் பூச்சிகளோ துண்டுத் துணியோ கருகும் வினாடி நேர கந்தம் பனிச் சிதறலோடு கலந்து உடனே விலகுகிறது.

குஞ்ஞம்மிணி நின்றாள். அந்தப் பெண்ணும் சிரித்தபடி அருகில் நின்றாள். அவளை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள் குஞ்ஞம்மிணி –

இது என்ன ஊர், நீ யார், ஏன் நாம ஒருத்தரை ஒருத்தர் பார்க்கணும்னு எனக்கு ஏதும் தெரியலே. நாம் ரெண்டு பேரும் பேசணும்னா, முதல்லே நீ பேசற பாஷை எனக்கு அர்த்தமாகணும். நான் பேசறது உனக்கு அர்த்தமாகணும்.

வீராவாலி இதற்கும் சிரித்தாள். புரியறது என்றாள்.

அப்போ சரி. ஆனா, என்ன பேசணும், எதை எல்லாம் பேசச் சொல்லிக் கேட்கணும்? எனக்குத் தெரியாது. போறது. பேசப் பேசப் பேச்சு மடியும். கேட்கக் கேட்கக் கதை வளரும். நான் குஞ்ஞம்மிணி. நீ?

முகத்தில் சதா அலையும் பெரிய விழிகளோடு, குளிரக் குளிர நெய்த, கசங்கிய பழைய வெளிர் பச்சைக் கசவு முண்டும், மேலே பொருந்தாமல் அரபிக் குப்பாயமாக வழியும் சிவப்புப் பட்டுச் சட்டையும் உடுத்துப் பத்து வயசுப் பெண்ணாக நின்ற குஞ்ஞம்மிணி பெரிய மனுஷி போல பேசிக் கொண்டு போக, வீராவாலிக்கு இன்னும் சிரிப்பு வந்தது.

நான் வீராவாலி.

பெயருக்கெல்லாம் ஒரு அர்த்தம் இருக்குமே. குஞ்ஞம்மிணின்னா சின்னப் பொண்ணு. வீராவாலின்னா?

கூடப் பிறந்த சகோதரர்கள் இருக்கப்பட்டவள்.

எத்தனை பேர் என்று குஞ்ஞம்மிணி கேட்கவில்லை. அவள் தன்னைக் காட்டிலும் நூறு வயசு பெரியவள் மட்டுமில்லை, இன்னும் எத்தனையோ காலம், வீராவாலி போன பிறகும், வைத்தாஸ் இல்லாமல் போன அப்புறமும் இருக்கப் போகிறவள் என்று தெரியுமாதலால் குஞ்ஞம்மிணி மேல் வீராவாலிக்கு மரியாதையும் வந்தது.

கையில் லட்டு உருண்டையை வைத்துக் கொண்டு எச்சிலாக்கிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும் குஞ்ஞம்மிணிக்குச் சுற்றிலும் கண்டதெல்லாம் சுவாரசியமானதாக இருந்திருக்கலாம் என்று வீராவாலி நினைத்தாள். அம்மிணி வாயோயாமல் பேசினாள். வீராவாலிக்கு அதெல்லாம் புரிந்தது. அவளைப் பேச அனுமதித்தால் குஞ்ஞம்மிணிக்கும் வீராவாலி சொல்ல வந்தது புரிந்திருக்கும்.

அதுக்கு வீராவாலி பொறுத்திருக்க வேணும். இனிமேல் பேச ஒண்ணுமில்லை என்று ஏதோ ஒரு நொடியில் தோன்றாமால் போகாது குஞ்ஞம்மிணிக்கு. அப்போது வீராவாலி சொல்ல வேண்டியதைச் சொல்லி விடலாம்.

குஞ்ஞம்மிணியைப் பின்னால் வரச்சொல்லிக் கை காட்டி விட்டு, தோளில் குரங்குக் குட்டியோடு வீராவாலி மிகப் பழைய கட்டிடம் ஒன்றில் நுழைந்தாள். வெளிவாசலில் தொடங்கிய மாடிப் படிகள் பிடிவாதமாக உள்ளே நுழைந்து மேலேறிப் போய்க் கொண்டிருக்க, நடந்து பழகிக் கிட்டிய வேகமும், சேருமிடம் பற்றிய தீர்மானமும், நிதானமுமாக அவள் முன்னால் நடந்தாள்.

அங்கங்கே நின்று, கையில் பிடித்த லட்டுருண்டையை கடித்து, எச்சிலான கையைப் பாவாடையில் துடைத்துக் கொண்டபடி குஞ்ஞம்மிணி அவள் பின்னால் போனாள்.

ஏண்டி மிண்டே, எச்சல் ஆக்காதே ஆக்காதேன்னு எத்தனை பிராவஸ்யம் சொல்றது? வாயிலே விரலை வச்சு, அதுவும் பிருஷ்டம் அலம்பற இடது கையை வச்சு சவைச்சுட்டு பாவாடையிலே தொடச்சுக்கறியே, வெக்கமா இல்லே?

அம்மா, இதை விடாம இந்த நூறு வருஷமா கேட்டியே? எங்கே போனே? நீயும் அப்பாவும் தெரிசா பெரியம்மா கூட வெள்ளைக்காரன் பட்டணத்துலே சுகமா உறங்கியாச்சா? உறங்குங்கோ. இவளோட பேசிட்டு நானும் வரேன்.

எத்தனையாவது மாடி இது என்று தெரியவில்லை குஞ்ஞம்மிணிக்கு. இறைச்சி வாட்டும் வாடையும், புளித்த தயிரைப் பாத்திரத்தில் இருந்து எடுக்கத் தரையில் சிந்தி அப்பிக் கொண்டு கிளப்பும் வாடையும், வௌவால் பறக்கப் பரத்திப் போகும் துர்நாற்றமும், யாரோ சிகரெட் பிடிக்க, வெராந்தாவில் சிறைப்பட்ட காற்று குளிருக்குப் புகையிலை நெடியேற்றும் மணமுமாகக் கிடக்கும் சிறு இடைவெளியும், ஒட்டி ஒரு அறையும் இருளில் கிடப்பதை உணர்ந்தாள் அவள்.

ஒழுங்கில்லாமல் மர நாற்காலிகளும் மர மேஜையும் போட்டு வைத்த அறை. ஓரமாகக் கட்டிலில் யாரோ அசையாமல், குரல் எழுப்பாமல் படுத்திருந்தார்கள்.

ஒரு நாற்காலியில் தொடுக்கினாற்போல் அமர்ந்தாள் குஞ்ஞம்மிணி. கால் மடித்து வீராவாலி தரையில் உட்கார, அவள் தோளில் இருந்து மரமேஜைக்குத் தாவியது குரங்குக் குட்டி.

வைத்தாஸ் என்னை அனுப்பி வச்சான் என்றாள் குஞ்ஞம்மிணி.

எந்த வைத்தாஸ்? வீராவாலி கேட்டாள். அவள் கண்ணும் சேர்ந்து சிரித்தது.

எத்தனை வைத்தாஸ் உண்டு? தீர்மானமாகப் பதில் கேள்வி போட்டாள் குஞ்ஞம்மிணி.

எத்தனையா? எழுதற வைத்தாஸ் ஒருத்தன். அப்புறம் என்னோட.

ஏதோ சொல்ல வந்து சற்றே தயங்கினாள் வீராவாலி.

உன்னோட? விடாமல் பிடித்தாள் குஞ்ஞம்மிணி.

சின்னக் குழந்தைக்கு அதெல்லாம் சொல்ல வேணாமே.

இங்கே யாரும் குழந்தை இல்லே. நான் உனக்கு கொள்ளுப் பாட்டி மாதிரி.

ரெண்டு வைத்தாஸ் உண்டு குஞ்ஞம்மிணி. ஒருத்தன் என்னைப் படைச்ச வைத்தாஸ், இன்னொருத்தன் என்னோடு கூட படுக்கறவன். அது மட்டும் தான் எப்பவும் செய்வான். முன்னேற்பாடு ஏதும் இல்லே. நான் தான் மூலிகை முழுங்கி, முடியலேன்னா குத்தி எடுத்துப் போட்டு ஜாக்ரதையா பார்த்துக்கணும்.

மஹா கஷ்டம். எனக்கு அனுபவம் ஆகலேன்னாலும் கொடூரம். எங்க தெரிசா பெரியம்மா சொல்லுவா ஆம்பிளைன்னாலே ஜாக்கிரதையா இருக்கணும்னு.

யாரு தெரிசா?

அங்கே, வெள்ளைக்கார பட்டணத்துலே இருக்கப்பட்டவா.

இப்பவுமா?

தெரியலே. உத்தம கிறிஸ்தியானி. உத்தம மனுஷி.

சரி.

நாம என்ன பேசணும்னு இங்கே வந்தோம்? குஞ்ஞம்மிணி கேட்டாள்.

இப்படி ஒரு அலைச்சல் நம்ம ரெண்டு பேருக்கும் தேவையான்னு வைத்தாஸைக் கேட்டேன். எழுதற வைத்தாஸைத்தான் கேட்டேன். அவன் குஞ்ஞம்மிணி கிட்டே கேளுன்னு இங்கே அனுப்பி வச்சான்.

வீராவாலி விளக்கம் சொன்னாள்.

குஞ்ஞம்மிணி அரிசிப் பல் தெரியச் சிரித்தாள். சிரிக்கும் போது அவள் என்றைக்கும் குழந்தையே தான்.

அலைஞ்சுட்டுப் போறோம் போ வீராவாலி. அது கிடக்கு. தெரியுமோ, நீ பூசினாப்பல, பார்க்க நன்னா இருக்கேடி. என்ன, இஸ்ஸி சுத்தம் பத்தாது. தப்பா ஒண்ணும் சொல்லிடலியே? உடம்பு வாடை மகா கஷ்டம். தெரிசா பெரியம்மா இருந்தா சோப்புக் கட்டி கேட்டு வாங்கித் தருவேன். மொரிச்சுனு குளிச்சா சுத்தி வர கமகமன்னு சந்தன மணம் தான் அப்புறம்.

குஞ்ஞம்மிணி, இதைச் சொல்லவா இவ்வளவு தூரம் வந்தே?

அய்யோடி, சொன்னா கேக்கணும். நீ மட்டும் தினசரி ரெண்டு வேளை விஸ்தரிச்சு ஒரு குளி, அலக்கின உடுப்பு தரிக்கறது, பல்லு தேய்ச்சுக்கறதுன்னு சதா சீலம் கொண்டாடிண்டு இருந்தேன்னா, இந்த துலுக்க பட்டிணத்துலேயே மகாப் பேரழகியா இருந்திருப்பே. தலை மயிரை தேங்காயெண்ணெய் புரட்டி இழையிழையாப் பிரிச்சு இழுத்து நீளமா படிய வாரி, கண்ணுக்கு மஷியும் தொட்டு உச்சந்தலையிலே மரிக்கொழுந்தும் இறுக்கமாத் தொடுத்த பிச்சிப்பூவும் வச்சா, அடடா. வச்சுக்கறேன்னு சொல்லேண்டி.

எங்கே? வைத்தாஸுக்கு நான் நாறிப் பிடுங்கினாத்தான் இஷ்டம்.

எந்த வைத்தாஸுக்கு?

என் கூடப் படுக்கற அயோக்கியன் தான்.

உன்னையும் அவனையும் படைச்ச வைத்தாஸுக்கு?

அவனுக்கும் கண்டிப்பா இஷ்டம் இருக்கும். நான் நிஜமா இருந்தா, அவன் தான் முதல்லே என்னை என் அத்தனை உடம்பு வாடையோடும் ஆக்கிரமிப்பான், என்ன சொல்றே குஞ்ஞம்மிணி?

அவள் திரும்பிப் பார்த்தாள். மேசையில் இருந்து சறுக்கித் தாவித் தன் இடது முலைக்கு இறங்கிய குரங்குக் குட்டியைத் தூக்கி விலக்கினாள்.

அவன் தான் இங்கேயே சதா பிடிச்சு தொங்கிட்டு இருப்பான். நீ வேறேயா. போ, விளையாடு.

கொஞ்சி மேலே உயர்த்தி குரங்குக் குட்டியை மேசையில் விட்டாள். குஞ்ஞம்மிணியைப் பார்த்து புன்சிரிப்போடு தலையசைத்து, சுவரை ஒட்டி நகர்ந்து அமர்ந்தாள்.

கிழங்கு கிழங்கா இந்த நாடோடிப் பொண்ணுக்கு கச்சிதமா உடம்பு அமைஞ்சு போனதுக்கு எழுதற வைத்தாஸுக்குத் தான் புண்ணியமும் ஸ்தோத்ரமும் போகணும், உனக்கில்லே பகவானே. எனக்குன்னு ஆக்கி அனுப்பினதுக்குன்னா சொல்லு. உனக்குத் தான் ஸ்துதியும் தூஷணையும். சர்வம் விஷ்ணு மயம் ஜகத்.

குஞ்ஞம்மிணி கண் மூடி இருந்து சொல்ல அவளை ஈர்ப்போடு பார்த்தபடி இருந்தாள் வீராவாலி.

படைச்சவன் போகட்டும், என்னோடு கூடக் கிடக்கறவன் சாதுன்னு நினைச்சுக்காதே. அவன் என் உடம்பு இரும்பாலே அடிச்சு வச்சிருக்குன்னு நெனக்கறவன். சதா போகமா? ஒருத்தன் தூங்க மாட்டான்? கொல்லைக்குப் போக மாட்டான்? நாக்குக்குப் பிடிச்சதை ஆற அமர சாப்பிட மாட்டான்? நல்ல சங்கீதம் கேட்க, மல்யுத்தம் பழக, கோழி மேய்க்க, பசுவின் பால் கறக்க, காலாற நடக்க, வெய்யில்லே வியர்க்க, மழையிலே நனைய மாட்டான்? இப்படியா எப்பவும் விதவிதமா. மோகமும் மிருகம் போல வெறியுமில்லாது வேறில்லையா?

விதவிதமா?

வேணாம். நீ என்னை விட நூறு வயசு மூத்த கிழவின்னாலும், பார்க்க பத்து வயசுக் குழந்தைப் பொண்ணுனாலும் இதுக்கு மேலே அத்து கடக்கக் கூடாது. வயசுலே சின்னவளா யாராவது உற்ற சிநேகிதி இருந்தா சொல்லலாம். நந்தினி மாதிரி. அவளும் கிளம்பிப் போயிட்டா இந்த அரைக்கிழவனை ராபணான்னு விட்டுட்டு. அவ மாதிரி மகாராணியாக்கினா நானும் தான் போயிருப்பேன்.

பெட்ரோமாக்ஸ் கொளுத்திய வாடை உயர, வெளிச்சப் படுத்திக் கொண்டு அறைக் கோடிக்கு யாரோ போனார்கள். காதில் அதக்கி அடைத்த பஞ்சுத் துணுக்கில் அத்தர் வாடையோ, ஜவ்வாது வாடையோ அவர்களோடு போனது.

வந்து கடந்து போனவர்களுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி உட்கார்ந்தார்கள் வீராவாலியும் குஞ்ஞம்மிணியும்.

யாரோட சவம் அது, ஓரமா கட்டில்லே?

குஞ்ஞம்மிணி கை சுட்டிக் கேட்டாள். அவள் கையில் வைத்த லட்டு கரைந்து வெல்லத் துணுக்குகள் கையில் அப்பியிருந்தன.

தினம் இங்கே நானும் வைத்தாஸும் கிடக்க வர்றபோது அவன் அப்படித்தான் கிடக்கான். நாங்க போகற முந்தி வந்து கட்டில்லே படுத்து, தினசரி சாகறான். எழுந்திருக்கறான். வைத்தாஸ் பண்ணி வச்சிருக்கற கூத்து அது.

வீராவாலி குரங்குக் குட்டியைக் காலால் உதைத்தபடி சொன்னாள். அது ஓரமாக நின்று பழிப்புக் காட்டி விட்டு அறைக் கோடிக்கு ஓடியது.

அவன் ஏன் இங்கே வந்து சாகணும் என்று குஞ்ஞம்மிணி கேட்டாள்.

எழுதற கழுவேறி வைத்தாஸ் திட்டம் பண்ணி வச்சது. அந்த ஜடம் இருக்க நாங்க ரமிச்சாத்தான் சரியா வருமாம். என்ன மாதிரி எல்லாம் எழுதறவனுக்கு வக்ரம் பாரு. அவன் கிடக்கான். நீ பசியா இருக்கே. லட்டு எடுத்துத் தின்னேன்.

படுத்திருந்தவனுக்கு அருகே ஒரு தட்டில் லட்டுகளும் குவளையில் பாலும் இருப்பதை வீராவாலி சுட்டிக் காட்டினாள்.

ஐயே, அது சத்த வஸ்து பக்கத்துலே இருக்கப்பட்டது, சாவுத் தீட்டுப் பட்டது என்றாள் குஞ்ஞம்மிணி.

அப்படீன்னா? வீராவாலி கேட்டாள்.

அந்த வயசன் போய்ச் சேர்ந்துட்டான். ஆகாரம் கழிக்காமலேயே போய்ட்டான்.

திரும்ப வருவான். வைத்தாஸுக்கு திருப்தி ஆகிற வரை அவன் இங்கே தான் இருப்பான். நானும் தான்.

அவன் எழுந்து தின்னக் கேட்டா? குஞ்ஞம்மிணி கேட்டாள்.

அதைப் பற்றி நீ ஏன் கவலைப் படறே? வைத்தாஸ் பட வேண்டியது அது. நீ தின்னு. வீராவாலி ஆதரவாகச் சொன்னாள்.

வேணாமே. நான் என்ன ரெட்டியா? அதான் வைத்தாஸோட அப்பன். ஊருக்கு ஒரு பேரு அவனுக்கு. பொணத்தோட வாயிலே இருந்து ரொட்டியை எடுத்துத் தின்ன களவாணியாக்கும் அவன். என் பாட்டித் தள்ளையோட அஸ்திச் செம்பை எங்கப்பா அவன் கிட்டே கொடுத்து வச்சார். அசத்து எங்கேயோ போட்டுடுத்து.

குஞ்ஞம்மிணி சொல்ல, வீராவாலி முகம் தெரியாத அவன் மேல் வெறுப்பைக் காட்டி சுவரில் காலை உதைத்தாள்.

இதெல்லாம் வைத்தாஸ் எழுதின படிக்கா? அவள் குஞ்ஞம்மிணியைக் கேட்டாள். குஞ்ஞம்மிணி கேள்விகளே பதிலாகத் தொடர்ந்தாள் –

எப்படி அவன் எழுதினபடி வரும்? ரெட்டிக்கு அப்புறம் தானே அவன் புத்ரன் வைத்தாஸ்? லாராவுக்குப் பொறந்த பிள்ளை. வைத்தீஸ்வர ஐயர்னு முழுப் பெயர். அவனை நம்பி இன்னும் எத்தனை நாளைக்கு குரங்குக் குட்டியும், செத்த மயிலுமா அலையப் போறே வீராவாலி? நீ கேட்க உத்தேசிச்சது தான். நீ அலையறது என்றைக்காவது முடிச்சுக்க. நான் அலையறது ஆற்ற மாட்டாமல்.

முடிஞ்சுடும், எல்லாம் முடிஞ்சுடும்.

வீராவாலி அறைக் கோடியில் ஒன்றும் இரண்டுமாக வந்து நிற்பவர்களைப் பார்த்துக் கொண்டு சொன்னாள். கூட்ட அழுகையிலும், சாம்பிராணிப் புகையிலும், சவத்தின் நாசித் துவாரங்களில் வைத்த பஞ்சுத் துண்டங்களை நனைத்துக் கசியும் ஈரத்திலும் வெளிக்கிடும் சாவின் வாடை மேலெழுந்தது. அறை வாசலில் விடப்பட்ட ரப்பர்ச் செருப்புகளின் துர்நாற்றமும், துவைக்கப்படாத காலுறைகளின் குமட்டும் நெடியும் அதோடு பிணைந்து சூழ, முணுமுணுப்பாக மறுபடி சொன்னாள் வீராவாலி –

முடிஞ்சுடும், எல்லாம் முடிஞ்சுடும்

குஞ்ஞம்மிணி அவளைக் கேட்டாள் –

எப்போ இதெல்லாம் தொடங்கினது? நீ எங்கே புறப்பட்டு இங்கே வந்தே?

வீராவாலி பலமாகச் சிரித்தபடி தரையில் விரல் தீற்றிக் கொண்டு சொன்னாள் –

அதெல்லாம் கண்டிப்பா இங்கே கொண்டு வரக்கூடாதுன்னுட்டான் வைத்தாஸ். ரெண்டு திருடனுங்களும் தான். ஒருத்தனுக்கு என் பழசு என்ன மாதிரி உபயோகப்படும்னு தெரியாது. அதனாலே வேணாம். இன்னொத்தனுக்கு இந்த உடம்பு போதும். படுக்கற அந்த நேரம் மட்டும் சதா சாசுவதமானா போதும்.

அவன் தானே உன்னை எங்க ஊருக்கு கூட்டிப் போனான்? அதுவும் ஏரோப்ளேன்லே? குஞ்ஞம்மிணி நினைவு படுத்தினாள்.

குஞ்ஞம்மிணியின் தோளில் வாஞ்சையாகத் தட்டிச் சொன்னாள் வீராவாலி.

எங்கே கூட்டிப் போனா என்ன? போனோமா, வந்தோமா, படுத்தோமான்னு அதுதான் சகலமும். ரொம்ப சுகிக்க முடியாம வௌவால் வந்து சல்யப் படுத்தினதே. சிரி சிரி குஞ்ஞம்மிணி. உனக்கு இதெல்லாம் என்ன மாதிரியான தொந்தரவுன்னு தெரியாது. தெரிஞ்சா சிரிக்க மாட்டே.

குஞ்ஞம்மிணியும் தரையில் கால் நீட்டி உட்கார்ந்தாள். மெல்லிய குரலில் சொன்னாள் –

எத்தனையோ பேருக்கு உடம்பும் மனசும் எண்ணமும் செய்கையுமா ஒரு அடையாளம் கிடைச்சிருக்கு. உன்னை அந்த பாழாப் போன வைத்தாஸ் அவன் மனசுலே அரிப்பு வந்தா உராஞ்சுட்டுப் போற பாறாங்கல்லா ஆக்கிட்டான்.

உனக்கு குறையே இல்லியா குஞ்ஞம்மிணி? வீரா கேட்டாள்.

இருக்கு. ஆனா வைத்தாஸ் பேர்லேயோ என் பேர்லே சுய பச்சாதாபமாகவோ இல்லை என்றாள் அம்மிணி.

உன்னையும், வைத்தாஸையும் படைச்சானே அவன் பேர்லே தானே? விடாமல் கேட்டாள் வீராவாலி

தெரியலே. என் அப்பா அம்மாவோட என்னையும் இங்கிலீஷ் பட்டணத்திலே கடைத்தேத்தி இருந்தா நான் அலைவேனா என்ன இப்படி எல்லாம்?

உன் மேலே வவ்வால் வாடை அடிக்கறதே குஞ்ஞம்மிணி.

வீராவாலி நாசித் துவாரங்கள் விடைக்க சுவாசம் வலித்திழுத்து வெளியிட்டாள்

அதுவா, அது அர்த்தமாக, நான் அதுக்கு நாலு தலைமுறை முந்தி குருக்கள் பொண்ணைப் பார்க்க உன்னைக் கூட்டிப் போகணும். அங்கே போனா திரும்ப இங்கே தான் வருவே. ஆனா, ரொம்ப நாழி கழிச்சு வருவே. உனக்கு அந்த சித்ரவதை எல்லாம் வேணாம். முடியற போது முடியட்டும்னு விட்டுடு. எனக்கானது அந்தக் கருந்துளை. நேரம், காலம், வடிவம் எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விடற கருப்பு வெளி அது. ஆழமான பள்ளம் போல, இருண்ட துவாரம் போல அது என் எதிரிலே, பக்கத்துலே இருக்கறது தெரியாம உள்ளே விழுந்து தான் இப்படி இன்னும் சுத்திண்டிருக்கேன். போதும்டா சாமி, எதேஷ்டம்.

குஞ்ஞம்மிணி விதும்பினாள். உடனே கண் துடைத்துக் கனைத்து குரல் சீராக வர நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

யார் யாரோ அறைக்குள் கடந்து வருகிறார்கள். அழுகிறார்கள். புலம்புகிறார்கள். சபிக்கிறார்கள். புதுக் கோட்டும் தொப்பியுமாக கனவான் தோரணைகளோடு வந்த ஒருத்தர் கருப்புக் கோட்டைக் கழற்றி அலமாரிக் கதவில் மாட்டி தொப்பியைப் பிடித்தபடி குனிந்து வணங்குகிறார். இறந்து கிடந்தவரின் முகத்தில் காரித் துப்பி கோட்டை மறுபடி அணிந்து அவர் போகிறார்.

பின்னால் கூட்டமாக வந்த நடு வயது, ஸ்தூல சரீரப் பெண்கள் ஜவந்திப் பூக்களை உதிர்த்து அறை முழுக்கத் தூவ, ஈரமும் பூ இதழுமாக ஒரு கந்தம் மேலேறி அடைத்த ஜன்னல்களைச் சார்ந்து அடையாக நின்றது. ஓடாத நீர் தேங்கிய நீர்நிலைகளில், அம்பலப்புழைக் குளத்தில் குஞ்ஞம்மிணிக்கு அனுபவப்படும் தண்ணீர் வாசனை அது.

நாம இங்கே இருக்கறது இவாளுக்கு இடஞ்சல் இல்லியே? குஞ்ஞம்மிணி வீராவாலியைக் கேட்டாள்.

ஏன் இடஞ்சல் ஆகணும்? இவங்க யாருக்கும் நாம் இங்கே இருக்கறதே மனசிலே வராது. அவங்க எல்லோருக்கும் சாவுக்கு அஞ்சலி செலுத்திட்டுப் போய்ட்டே இருக்கணும்.

துப்பி விட்டுப் போன அந்தக் கடைசி மனுஷர்?

அவனும் வைத்தாஸ் உண்டாக்கி அனுப்பினவன் தான். கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு அப்படி செஞ்சிருப்பான்.

வித்தியாசமா இல்லேன்னு தான் உன்னோட பூர்வீக கதையை வேண்டாம்னுட்டானா?

எனக்குத் தெரியலே குஞ்ஞம்மிணி.

அவன் கிடக்கான். எனக்கு சொல்லு. பசிக்கறது இரு.

சொல்லியபடி குஞ்ஞம்மிணி அறைக் கோடிக்குப் போய்க் கையில் தின்பண்டத்தோடு வந்தாள்.

வீராவாலி அவசரமாக விசாரித்தாள் –

என்னத்துக்கு எடுத்துட்டு வந்தே இதை? பொணத்துக்குப் பக்கம் போட்டது.

அவன் தான் எழுந்து உக்கார்ந்துடுவானே அப்புறம் எப்படி பொணமாவான்? குஞ்ஞம்மிணி திரும்பக் கேட்டு வீராவாலி பேசுவதற்குள் தொடர்ந்தாள் –

வைத்தாஸ் பார்த்துக்கட்டும் அதையும். அசட்டு தித்திப்பா இருக்கு இந்த லட்டு. போறது. நீ சொல்லடி குழந்தே. உனக்கும் தின்ன எடுத்து வந்தேன். இந்தா.

வீராவாலி அவள் கொடுத்த லட்டுருண்டையை வாங்கிக் கொண்டு இன்னும் அதிகமாகச் சுவரில் சாய்ந்தாள். கால் பரப்பி உட்கார்ந்தாள். குரல் உயர்த்தி, நிதானமாக வார்த்தை வார்த்தையாக அடர்த்தி உச்சரித்துச் சொன்னாள் –

மயிலைக் கொன்று பாம்பையும் கொன்று குரங்குகளின் தலையைப் பிளந்து கொலை செய்து, உடும்பும் கொன்று, குருவிகள் கழுத்தைத் திருகிக் கொன்று, காக்கைகளைக் கிழித்து, முயல்களை உயிர் இருக்க உரித்து, கூட்டமாக இருந்து கொல்லவும், சுமந்து போய் விற்கவும், காசு கிடைக்க அதுவும் இதுவும் உண்ணவும், பிறகு கொல்லவுமாக ஒரு கூட்டம். அதில் நானும் உண்டு.

கவிதை எல்லாம் சொல்லிக் கொடுத்தது யார்? படுக்க வந்த தோழனோ? வேண்டாம். கவிதை சொல்லி கவிதை கேட்டு ஏமாந்து நிற்காதே. அது இன்னொரு கருந்துளை. குஞ்ஞம்மிணி அவசரமாகச் சொன்னாள்.

கவிதை தானே வேண்டாம். கதை வேணும்தானே? பகிர அதுவாவது இல்லாம, நாம் ஏன் இங்கே இருக்கணும்?

அறைக்கு வெளியே சங்குகள் முழங்கும் ஒலி. அசுத்தமான காற்று வெண்சங்குகளில் முட்டி மோதி வெளிப்பட்டு சுற்றிலும் துர்க்கந்தம் பரத்த, குரங்குக் குட்டி சுவரில் சிறுநீர் கழித்த வாடை குஞ்ஞம்மிணி மூக்கில் குத்துகிறது.

ராத்திரியில் மாமிசம் பொசுங்கும் நாற்றத்தைக் கிழித்து சங்குகள் முழங்கறது நாராசமாக இருக்கு தானே? வீராவாலி கேட்கிறாள்.

இல்லை என்று தலையாட்டுகிறாள் குஞ்ஞம்மிணி.

இது மங்கல ஒலி. அப்படித்தான் சொல்லணும். சாவு மிகப் பெரிய மங்கலமான காரியம் இல்லையா? எல்லா புத்தகத்தையும் மூடி வச்சு கணக்குத் தீர்த்து வழி அனுப்பற காரியம் ஆச்சே. சாசுவதம் சுகம் இல்லே. அதைக் கொல்றது தான் சுவாரசியம். இன்னும் நூறு மங்கலம் கூடி வர, சாவு தானே வழி சொல்லி வழி விடும்?

குஞ்ஞம்மிணி இது என்ன, வேதாந்தமா?

போன இடங்கள்லே கேட்டும் பார்த்தும் பழக்கமானது இதெல்லாம். கல்லறையிலே எழுதி வச்சது. தெரிசா கல்லறை வாசகம் கூட இப்படித்தான்.

வீராவாலி கேட்டுக் கொண்டிருக்க, ஒரு வினாடி நிறுத்தி பாதி உண்ட லட்டுருண்டையை இருட்டுக்குள் வீசி விட்டுத் தொடர்கிறாள் குஞ்ஞம்மிணி.

அவா எல்லாம் போனா, பொதைக்கற சீலம். நமக்கு போனா பஸ்பமாக்கிடணும். எனக்குத் தான் வாய்க்கலே. என்னைப் பெத்தவாளுக்கும் கிடைக்கலே பார்த்தியா. வெள்ளைக்கார தேசத்திலே அவாளும் வெய்யில் மழை குளிர் எல்லாம் சசிச்சுண்டு மண்ணுலே தானே. அதாவது கிடைச்சது போ.

ராம் நாம் சத்ய ஹை.

குரல்கள் உயர, பைஜாமா அணிந்த கூட்டம் உள்ளே எங்கும் ஊடுருவி நிற்கிறது. அறைக் கோடிக் கட்டிலை விட்டுப் பிரிந்து உடலொன்று தூக்கிச் சுமக்கப்பட்டுப் படிகள் இறங்கிப் பயணமாகிறது. கீழ்த் தளத்தில் மணலோடு சேர்த்து நிலக்கடலை மணிகள் வறுபடும் மணம் சாவு விசாரித்துப் படியேறுகிறது.

வீராவாலியையும் குஞ்ஞம்மிணியையும் கவனிக்காமலே எல்லோரும் வந்து போக, வெறுமையாகக் கிடக்கும் அறை. வீராவாலி நினைவில் அமிழ்கிறாள்.

எங்களுக்கு எரிக்க, பொதைக்க எல்லாம் கிடையாது. போனவங்களை அங்கங்கேயே விட்டுட்டு கிளம்பி வந்துடுவோம். யாராவது எரிக்கவோ புதைக்கவோ செஞ்சுப்பாங்கன்னு நம்பிக்கை தான். இல்லேன்னாலும், அதெல்லாம் செய்ய யார் கிட்டே காசு இருக்கு? இங்கே ஒருத்தர் செத்தா பத்து மயிலைக் கொன்னு போட்டு எண்ணெய் காய்ச்சி தெருவிலே விற்றாத்தான், சவத்தை எரிக்க பாதிக் காசாவது வரும். இது எங்கம்மா சொன்னது.

வேறென்ன சொன்னா உங்கம்மா? குஞ்ஞம்மிணி விசாரித்தாள்.

எல்லா அம்மாவும் வாசாலகமா பேசறவங்க. வைத்தாஸ் அம்மா லாரா பேச்சுக்கு ஊரே அடங்கி கிடந்ததாம். அதுக்கு மேலே பகிர்ந்துக்க விடமாட்டான் கிராதகன்.

தெரிசாவோட அம்மா தெரியுமோ, நாகலட்சுமி அம்மா. கீச்சு கீச்சுன்னு தெரிசாவை எவ்வளவு திட்டித் தீர்ப்பா தெரியுமோ? அவ சொல்வா – கடங்காரி, எட்டும் பொட்டும் திகஞ்சும் நாணம் இல்லியா? இன்னும் முல குடிக்கற குஞ்ஞா என்ன? உனக்கே நாளைக்கு நாலஞ்சு குடிக்க இடுப்பிலே ஏறிடும். பொசைகெட்டவன் ஒருத்தன் அதுக்கும் பங்குக்கு வந்து கூடவே படுத்துப்பான். அது கூடாதே கண்ட கழுவேறிக்கெல்லாம் குப்பாயத்தையும் அடி வஸ்திரத்தையும் அழிக்கப் போறியாடி மிண்டை? மேலே துணி ஒதுங்காம பாத்துக்கோடி மூதேவி. முழுக்க அரும்பிட்டா ஊர் கண் எல்லாம் அங்கே தான் வந்து சேரும் – எப்படி நறுவிசா ஒண்ணும் விடாம ஒரு குத்தம் சொல்றது பாரு.

கண்ணு மட்டுமில்லே குஞ்ஞம்மிணி. மத்ததும் தான் அழைக்காத விருந்தாளியா வந்துடும். அம்மா போய்ச் சேர்ந்து நாங்களும் அவளை விட்டுட்டு வந்துட்டோம். அப்பா குடிக்கப் போயிட்டார். கூடாரத்திலே பசியோட நான் மட்டும். ராத்திரி கூடாரத்துக்குள்ளே மெல்ல வந்து நான் நல்ல தூக்கத்திலே இருக்கற போது கச்சு அவிழ்த்துத் தடவ ஆரம்பிச்சான் ஒருத்தன். கத்தப் போனா, வாயிலே ஆறிப் போன ஆலு பரத்தாவை எடுத்து அடைக்கறான். பசியா இருக்கேனாம். வாயையும் மாரையும், கீழேயும் திறந்து போட்டு நான் பாட்டுக்கு தின்னுட்டு இருந்தா அவன் வந்த காரியத்தை பாத்துட்டு போயிடுவானாம்.

யார் வைத்தாஸா? குஞ்ஞம்மிணி கேட்டாள்.

இல்லை என்று தலையசைத்து எழுந்து நின்றாள் வீராவாலி. அறை முழுக்க அவள் பரந்து உயர்ந்து நிற்பதாக குஞ்ஞம்மிணிக்குத் தோன்றியது. வீரா குஞ்ஞம்மிணியைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள் –

வைத்தாஸ் இல்லே. இது முன்னாலே நடந்தது. அடுத்த நாள் மென்னி முறிச்சுக் கொல்ல வாசல்லே வலையிலே வச்சிருந்த மயில் குட்டி எப்படியோ தப்பி உள்ளே வந்தது அந்த இருட்டிலே. அவனோட பீஜத்தையும் கண்ணையும் குத்தி கதறக் கதற விரட்டினதே. அந்த ராத்திரி தான் நான் தனியா வந்தேன். ஒரு குரங்குக் குட்டியையும் தோள்லே வச்சுக்கிட்டு தாரியாகஞ்ச் பகுதியிலே பிச்சை எடுத்திட்டிருக்கற போது என்னைப் பார்த்தான் வைத்தாஸ். அப்புறம் அவன் கண்ணுலே நான் படலேன்னாலும் என்னை அவன் சிருஷ்டிக்குள்ளே கொண்டு வந்துட்டான். நான் திரும்பணும். எனக்குன்னு இவன் ஏற்படுத்திக் கொடுத்த முகம் இல்லாத கழைக் கூத்தாடிக் கூட்டம் வேணாம். என் கூட்டம் கொன்னாலும் தின்னாலும் வேறே மாதிரி. வைத்தாஸ் மாதிரி அவனோடு கூட நந்தினி இல்லாத சோகத்துக்கு, பசிக்கு வடிகாலா நான் கூடப் படுக்க, பசி அடங்க எழுந்திரிக்க சொன்னா எழுந்திருந்து விலகி நிற்க, போன்னு விரட்டினா ஓட, வான்னு கூப்பிட வந்து கிடக்க இனியும் என்னாலே முடியாது.

குஞ்ஞம்மிணியும் எழுந்து நின்றாள். ஆதரவாக வீராவாலியின் தலை தடவி மெல்லிய குரலில் சொன்னாள் அவள் –

உன் அலைச்சல் எல்லாம் முடியட்டும். பாவம் தான் அவனும். இப்படிக் கூட ஆகுமா என்ன? கடவுளின் மூத்த சகோதரி. என்ன கண்றாவிடா கிருஷ்ணா.

உனக்கு என்ன போச்சு குஞ்ஞம்மிணி? நம்பறவங்களுக்காக அப்பப்போ கடவுளே ஆனாலும் தப்பில்லே. இடுப்புக்குக் கீழே கல்லான கடவுள் தேவை.

வேஷம் கட்டறது இல்லையோ அதெல்லாம், வீராவாலி? எனக்கு என்ன போச்சு போ. அவனும் பூர்வீக வீட்டை வாங்கற மாதிரி தெரியலே. யார் வாங்கினாலும் வாங்கலேன்னாலும் இனிமேல் கொண்டு எங்க ஊர்லே, அம்பலப்புழையிலே தான் மீதி ஜன்மம்.

அப்படி ஒண்ணு இருக்கா என்ன உனக்கு? வீராவாலி குறுக்கிட்டுக் கேட்டாள்.

மீதி நாள் இருக்கறதைச் சொன்னேண்டி பொண்ணே. எங்கே வேணும்னாலும் இருந்துக்க முடியும்னு நம்பிக்கை வந்துடுத்து. யார் கிட்டேயும் பேசாம, யாரையும் எதுவும் கேட்காம இருக்கணும். இருந்துட்டுப் போறேன். நீயும் என்னோட அங்கே வந்து இருந்துடேன். குஞ்ஞம்மிணி பிரியத்தோடு கூறினாள்.

எனக்கு அந்த பூமிக்கும் என்ன சம்பந்தம் குஞ்ஞம்மிணி? ஒரு தடவை கூட்டிப் போனது. சொன்னேனே, அவனோட இருந்தா எல்லா ஊரும் கட்டில் போட்ட இடம். அது மட்டும் தான்.

அவன் தான் வர மாட்டானே இனிமேல் கொண்டு. யோசனையோடு சொன்னாள் குஞ்ஞம்மிணி.

அப்படித்தான் சொல்றான். ஆனாலும், எழுதினவன் சொல்லை மீறி போகம் போகம்னு சாவி முடுக்கி வைத்து நடக்கச் செய்த பொம்மையாக அவன் திரும்பி வந்தால்?

வீராவாலி சந்தேகம் கேட்டாள்.

அவனைப் படைச்சவனுக்கு அப்புறம் சித்த பிரமை ஏற்படும் என்றாள் குஞ்ஞம்மிணி.

வேணாம், அந்தக் கஷ்டம் எல்லாம் எழுதறவன் ஏன் படணும்? வீராவாலிக்கு உடன்பாடில்லை.

குஞ்ஞம்மிணி வீராவாலியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். நேசமான குரலில் சொன்னது இது –

வைத்தாஸை இங்கே இருந்து லண்டனுக்கு திரும்பவும் இடம் மாற்றம் பண்ணியிருக்காளாம். போகிற போது நாம் வழி அனுப்பி வச்சுட்டுப் போகலாமா?

அது என்ன வழி அனுப்பறது? போறவனுக்கு வழி தெரியாதா? இல்லே ஞாபகம் வச்சுக்கோ என்னைன்னு அவன் கிட்டே கெஞ்சற இருப்பா நம்மளோடது? வீராவாலி புரியாமல் கேட்டாள்.

குஞ்ஞம்மிணி பலகார எச்சம் அப்பிப் பிசுபிசுத்த விரல்களைப் பச்சைப் பட்டுப் பாவாடையில் துடைத்தபடி உரக்கச் சொன்னாள் –

சரி அவனோட, என்னோட, உன்னோட இருப்பு, நடப்புன்னு அதது விதிச்ச படி போகட்டும். நான் கிளம்பட்டுமா? அதோ வரான் பாரு உன் வைத்தாஸ் தடியன். இருடா நான் இருக்கறபோதே ஏன் அவளை இப்படிக் கட்டிக்கறே? நான் பார்க்கறேனே, வெக்கமே இல்லியா? அந்தக் கட்டில் வேணாம்டா. அங்கே பொணம் கிடந்தது. இப்போ தான் வெளியே போயானது. அப்படி என்ன அவசரம்? எழுதின வைத்தாஸுக்குத்தான் விவஸ்தை இல்லேன்னா, அவன் எழுப்பி விட்டு வந்த உனக்கும் ரதி சுகம் தவிர உலகத்திலே எதுவுமே கிடையாதா?

உள்ளே வந்தவன் ஒரு வினாடி நின்றான். வீராவாலி போயிருந்தாள்.

நான் எழுதற வைத்தாஸ் தான், குஞ்ஞம்மிணி. எழுதறவன் தான் படுக்கைக்கு வீராவாலியை கூப்பிட்டது. இறுகிக் கட்டிக் கிடந்தவன் தான் குளிச்சு கோவில் போய் வந்து அடுத்த அத்தியாயம் எழுதினது. கழிசடையா இருக்கவும், வார்த்தை கோர்த்து எழுதவும், நினைக்கவும், மாற்றி எழுதவும், நேரே நடக்கவும், நந்தினோட போகம் செய்யவும், அவளுக்காக புலம்பவும், அவ இருக்கும்போதே தேடித் தேடிப் பழைய தில்லி சந்து பொந்து எல்லாம் போய் யார்யாரோ வீராவாலியாக மனசிலே பட, உடம்பு வழிநடத்த, முயங்கவும், அதை சதா கற்பனை செய்யவும், அனுபவிச்சதை எழுதவும், எல்லாம் ஒரே வைத்தாஸ் தான். நான் நானாக, நான் மற்ற எல்லோருமாக இருந்து பார்த்து அனுபவிச்சு துக்கப்பட்டு இறக்க, பிறக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு தானே. அப்படி இல்லேன்னு வேறே யாராவது சொன்னா இல்லேன்னு ஆகிடுமா? நீ காலாகாலமா இருக்கே. நான் இருக்கற கொஞ்சம் காலத்திலே அந்தக் காலகாலத்தை, கருந்துளையை சிருஷ்டி பண்ணப் பாக்கறேன். உனக்கு இருப்பு பிடிக்கலே. எனக்கும் அது பிடிக்காம போகட்டும்னு தான் இருக்கேன். இருந்தபடிக்கே இல்லாமல் போக முடிஞ்சதுன்னா வேறே என்ன வேணும்?

குஞ்ஞம்மிணி வெளியே வரும் போது விளக்குகள் அவிந்திருந்தன. அவை மறுபடி ஒளிரும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மெல்ல நடந்தாள் அவள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன