New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 39 இரா.முருகன்

சங்கரன் விழித்துக் கொண்டபோது குழந்தை வீரிட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு குளிர்கால தினம் தில்லியில் விடிகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கே ஏற்பட்ட சோம்பலும் குளிரோடு இறுகக் கட்டியணைத்துக் கவிந்திருக்க, ஊரே சூரியனை அலட்சியப்படுத்திக் கவிழ்ந்து படுத்து உறங்கும் பொழுது அது.

குழந்தை மூத்திரம் போய் உடம்பெல்லாம், மெத்தையெல்லாம் நனைந்து இருந்தது. அது அனுபவிக்கும் மூன்றாவது குளிர்காலம். மாறி வரும் பருவங்கள் பழக இன்னும் நாலைந்து வருடமாவது பிடிக்கலாம். சின்னஞ்சிறு சிசு. உடுப்பு நனைந்து விழித்துக் கொண்டு அழுதால், பெற்றோர் தவிர வேறே யார் ரட்சிக்க?

பகிக்கு பால் கரைச்சுண்டு வா.

முதலில் விழித்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தபடி பக்கத்தில் தொட்டிலை சற்றே எம்பிப் பிடித்து சங்கரன் தூக்கக் கலக்கத்துடன் ஆட்டியபடி சொன்னான்.

வசந்தி அவனை உலுக்கி நிறுத்தினாள்.

பால் இல்லே. இது சூசு. பால் கொடுத்த போதே பகவதிக்கு இடுப்புத் துணி மாத்தியிருக்கணும். விடிகால தூக்கத்திலே கண் அசந்துட்டேன்.

அவன் மடியில் குழந்தையைப் விட்டு விட்டு வசந்தி ஈரமான விரிப்பையும் குட்டிக் கம்பளியையும் வெளியே எடுத்துப் போகும்போது சங்கரன் சொன்னான் –

கிறிஸ்துமஸ் தாத்தாவோட பொண்ணு வயத்துப் பேத்தி மாதிரி இருக்கேடீ.

இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. அப்படியே பக்கத்துலே இருக்கற கூடையிலே இருந்து துணி எடுத்து குழந்தைக்கு போடலாமில்லையா?

வசந்தி வெளியே இருந்து மாற்று கம்பளியும், விரிப்புமாக உள்ளே வந்தாள். அவள் கையில் கிரைப் வாட்டரும், இங்க் பில்லரில் ஊட்ட வேண்டிய ஏதோ டானிக்கும் கூட இருந்தன.

அவன் பக்கத்தில் உட்கார்ந்து குழந்தையைத் தன் மடிக்கு மாற்றிக் கொண்டாள். குழந்தையைப் போட்ட மடி அசைந்து தாழ்ந்தபடி இருக்க, அது தன் மழலையில் என்னமோ சொல்லிக் கொண்டிருந்தது. வசந்தி குனிந்து, காது ரெண்டையும் தலைமுடி கவிந்து மறைத்திருக்க அதன் பேச்சில் ஆமாடி செல்லம், தங்கக் குடமே, சமத்து ராஜாத்திடீ நீ என்றெல்லாம் ஆமோதித்து ஆழ்ந்திருந்தாள்.

இவளை ஏமாற்றியாகி விட்டது. இந்தக் குழந்தையையும் தான்.

சங்கரனுக்குத் தோன்றியது. ஒரு நல்ல புருஷனாக, ஒரு தங்கமான அப்பாவாக, இதுதான், இவர்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு எல்லாம் என்று தாங்கி முன் நடத்திப் போகிறது தானே சங்கரனுக்கு விதிக்கப்பட்டது? இதில் தெரிசா எங்கே வந்தாள்? அவளோடு எப்படி சுகித்திருக்கப் போனது? ஒரு வாரப் பழக்கத்தில் உடம்பு கலக்கிற அத்துமீறல் எப்படிச் செய்யப் போனது? எப்படி வந்து படிந்த உறவு அது?

இப்படிக் கட்டியவளுக்குத் துரோகம் பண்ணினவன் மனம் குமைந்து திரும்பி வருவான் அவளிடம். சாஸ்திரமும் சம்பிரதாயமும் சாகித்யமும், கலாசாரமும் எல்லாம் இதைத் தான் சொல்கிறது.

எத்தனை சினிமா கதாநாயகர்கள் இந்த மாதிரியான சூழலில் மனம் நோவதை தத்ரூபமாக நடித்துக் காட்டியிருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து மொறிச்சென்று குளித்து விட்டு, சுத்த வெள்ளை பைஜாமாவும் ஜிப்பாவும் அணிந்து, புஷ்டியான வடக்கத்திய பாணி கடவுள்கள் ஏகப்பட்ட பட்டு, பீதாம்பரத்தோடு பளிங்கில் உட்கார்ந்திருக்கும் கோவில்களில் நூறு படி ஏறிப் போய், அங்கே மணியை அடித்து மனம் திறந்து பாடித் துரோகத்துக்குக் கழுவாய் தேடுவார்கள் அவர்கள். என்ன ஏது என்று கேட்காமல், வாயைத் திறந்ததுமே மன்னிக்கத் தயாராக உள்ள, தலையில் முக்காடிட்ட, நடு வகிட்டில் குங்குமம் தீற்றிய பெண்டாட்டி உள்ளவர்கள்.

வசந்தி மன்னிக்க மாட்டாள். அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சங்கரனுக்குத் தோன்றவும் இல்லை. அவன் உடம்பு திசுக்களில் இருக்கிற திமிராக இருக்கலாம் இது என்று மட்டும் தோன்றியது. பரம்பரையாக வருவதோ.

வசந்தி குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே போனாள். ரஜாயைத் திரும்பப் போர்த்திக் கொண்டு கைக்கடியாரத்தில் மணி பார்க்க எழுந்த ஆசையை அடக்கிக் கொண்டு கண் மூடிக் கிடந்தான். அறை முழுக்க அடர்த்தியான குழந்தை வாடை. முன்பெல்லாம் வசந்தி வாடை தான் அடிக்கும்.

சட்டென்று அவன் உணர்விவ் தெரிசாவின் உடல் வாடை அழுந்த அமர்ந்தது. மோகமும் காமமுமாகப் புரண்டு கிடந்து அவன் திரும்ப உறங்கிப் போனான்.

சாப், திங்கள்கிழமை விடிஞ்சுது. எழுந்திருந்து ஆபீஸ் போகலாம்.

வசந்தி எழுப்பத் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான் சங்கரன். என்ன கண்றாவி, இருபது இருபத்துநாலு மணி நேரமா உறங்கிப் போனான் அவன்? உடம்புக்கு என்ன நோக்காடு வந்திருக்கிறது தெரியலையே.

படுக்கைக்குப் பக்கத்து மேஜையில் வைத்திருந்த கைக்கடியாரத்தை எடுத்துப் பார்த்தான். காலை ஏழு மணி தான். அவனுக்கு ஆசுவாசம் தர, இன்னும் ஞாயிறுதான் நடந்து கொண்டிருக்கிறது.

வசந்தி ஓவென்று பெரிதாகச் சிரித்தபடி அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். அவளுக்குள் பாதுகாப்பாக ஒதுங்கியபடி அவள் இடுப்பை முத்தமிட்டான் சங்கரன்.

சனியனே. கும்பகர்ணத் தூக்கம் போட்டுட்டேனோ என்னமோன்னு பயந்தே போய்ட்டேன்.

ஐயோ வலிக்கறது. கடிக்க வேண்டாம். கேட்டேளா? சூல் இருந்த வயிறு.

வசந்தி வயிற்றைத் தடவிக் கொண்டு சொல்ல, கையைத் தட்டி விட்டு அவள் மடியில் படுத்தான் சங்கரன்.

அது இருந்து பிரசவிச்சுத் தான் ரெண்டு வருஷமாச்சே. இன்னொண்ணு வச்சுக்க சுப ஹோரை கனிஞ்சு இருக்குடி கண்ணம்மா. சமத்தில்லையோ.

நான் வரலே இந்த ஆட்டத்துக்கு. நாக்பூர் சித்தப்பா வந்திருக்கார். அப்பா கூட்டிண்டு வந்தார். அவரோட பக்கத்து, எதிர் குடித்தன மாமாஸ் வேறே. எல்லோரும் ஹால்லே குழந்தையோட விளையாடிண்டிருக்கா.

நல்லதாப் போச்சு. இதை எல்லாம் உத்தேசிச்சுத் தான் சொன்னேன்.

என்னன்னு?

நம்ம விளையாட்டை இந்த நிமிஷமே, விட்ட இடத்துலே தொடரலாம்னேன்.

ஆமாமா, அதுக்குத் தானே எழுப்பியானது.

அவன் முகத்தை இரு கையாலும் ஏந்தி மாரோடு அழுத்தி, உதட்டில் வெறியோடு முத்தமிட்டு விலகினாள் வசந்தி.

முகத்தை அலம்பிண்டு, பல் தேய்ச்சுட்டு ஹால்லே உக்கார்ந்து பெரிய மனுஷ தோரணையா வார்த்தை சொல்லிண்டு இருங்கோ. காப்பி சேர்க்கறேன்.

அவள் துண்டைத் தோளுக்குக் குறுக்கே போர்த்திக் கொண்டு உத்தரப் பிரதேச அரசியல் தலைவர் மாதிரி எவ்விக் குதித்து நடந்து போனாள்.

சங்கரன் ஹாலுக்கு வந்தபோது மரக்கொன்னைத் தைலம் பற்றி விரிவான கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தான். அவனுடைய மாமனாரும், அவர்தம் இளவலும், கூடவே இன்னும் இரண்டு கல்காஜி மாமாக்களும் அந்தத் தைலத்தின் மகிமையை விதந்தோதிக் கொண்டிருந்தார்கள். கேரளத்தில் அங்கமாலிக்கும் அடிமாலிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் குக்கிராம ஆயுர்வேத வைத்தியன் ஒருத்தன் உண்டாக்கியது அது.

ஊர்த் திருவிழாவில் குழந்தைகளைப் பயப்படுத்தும் தெய்யம் ஒப்பனை கட்டி ஆடிய நேரம் போக மூலிகை வைத்தியம் பார்க்கிற வைத்தியன், சிசுக்களுக்கு ஜலதோஷமும் மூக்கடைப்பும் உடன் நிவர்த்தியாக மூலிகை எண்ணெய் காய்ச்சி உருவாக்கியது அந்தத் தைலம். அது சர்வ ரோக நிவாரணியாக மாற அதிகம் நாட்கள் செல்லவில்லை.

எப்படியோ யார் மூலமோ சங்கரனின் மாமனார் சுந்தர சாஸ்திரிகள் தில்லிக் கடையில் அதை விற்க வரவழைத்து, கூடவே தைலத்தின் புகழ் பாட நாலைந்து அங்கமாலி, அடிமாலி ஆட்களையும், பத்து நாள் செண்டை மேளக் கொட்டும் உற்சவமுமாக அமர்க்களப் பட்டுக் கொண்டிருக்கும் தெற்கத்திய கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு விட்டார்.

பிரதி தினம் கடை பெஞ்சில் உட்கார்ந்து அசல் குட்டநாடன் மலையாளத்தில் மரக்கொன்னை மகாத்மியம் பாடி, உள்ளே காப்பியும் பலகாரமும் கழித்தே கோவிலில் கொட்டி முழக்கப் போனார்கள் அவர்கள்.

கிட்டத்தட்ட அழுத்தமான நூறு வருஷ தீர்க்காயுசையும், லோகாயதமான ஜீவிதத்தில் சம்திருப்தி – அப்படின்னா என்ன என்று வாய் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கேட்டால் நீடித்த பெண் சுகம் என்று பதில் வரும்; தேக காந்தி – மின்னும் உடம்பு, ஆரோக்கியமான பசி, வாயு சேராத வயிறு என்று ஆயிரத்தெட்டு விஷயம் இந்த ஓயிலைப் புரட்டினால் நடந்தேறும். அதற்கெல்லாம் பிரத்யட்ச சாட்சி நாங்களே என்று அவர்கள் மலையாளத் தாடிக்குள் வசீகரமாகச் சிரித்தபடி துண்டைப் போட்டுத் தாண்டிப் போவார்கள்.

என்ன கஷ்டமாக இருந்தாலும் கொழும்பில் இருந்து கொப்பரைத் தேங்காய் வரவழைத்து தைலம் உண்டாக்குவதால் அதற்கெனத் தனியான ஸ்வாது உண்டாக்கும் என்று மேளர்கள் சொன்னதை அதிசுந்தரமான வாசனை என்று பம்பாய் விளம்பரக் கம்பெனித் தமிழில் மாமானார் மொழிபெயர்த்துக் கூடி இருந்து காப்பி குடித்துக் கொண்டிருந்தவர்களிடம் சிலாகிப்பைப் பெற்றது சங்கரன் கண்ணில் படத் தவறவில்லை. போகட்டும், காப்பியும் மின்சார கணப்பில் கதகதப்புமாக அவர்களுடைய நாள் நல்ல படியாகப் போகட்டும்.

ஆனாலும் இந்தக் கூத்தை குளிர்கால ஞாயிற்றுக்கிழமை காலை நேரமாகப் பார்த்து சங்கரனிடமும் அரங்கேற்ற கோஷ்டியாக அவர்கள் ஏன் கிளம்பி வந்திருக்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை.

தைலம் கை நிறைய எடுத்துத் தேய்த்து முழுகாமலேயே அவன் திடகாத்திரமாக இருக்கிறான். ஸ்திரி சம்பந்தம் தீர்க்கமாகக் கிடைத்திருக்கிறது. பசி எங்கே எங்கே என்று நேரம் கெட்ட நேரத்தில் எல்லாம் வந்து சேருகிறது. தெரிசாவோடு கிடந்த நேரத்தில் ரெண்டு பேருக்கும் வயிற்றுப் பசி உண்டாக, பிஸ்கட் பாக்கெட்டுகளை அவசரமாகப் பிரித்து.

விட்டுத் தள்ளு. தெரிசாவும் மற்றதுமெல்லாம் தில்லிக் குளிர்கால ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில், வெட்டி அரட்டைக்கு வந்த கிழவர்களோடு காப்பி குடித்தபடி பேச எதற்கு?

நேருவுக்கு ஹெர்னியாவாமே? மனுஷர் அடுத்த பிரதமராக அவரோட பொண்ணையே டெம்பரவரியா அப்பாயிண்ட் பண்ணிட்டு லண்டன்லே போய் ஹெர்னியாவுக்கும் ஹைட்ரோசிலுக்கும் ஆப்பரேஷன் செஞ்சுட்டு வர்றதா திட்டமாமே? அந்த கிராப்புத் தலைக்காரியாலே பிரதமரா உத்தியோகம் பார்க்க முடியுமோ? கைம்பெண் வேறே. என்ன படிச்சிருக்காளாம்?

மாமனாரின் தம்பி, தேசம் பற்றிய தன் ஆழ்ந்த கவலைகளை சர்க்காரின் மிக முக்கியமான பிரதிநிதி என்ற முறையில் சங்கரனுடன் பகிர்ந்து கொண்ட போது அவனுக்குச் சொல்லத் தோன்றியது இதுதான் –

ஓய் நேருவை நானும் தூரத்தில் இருந்து தான் பார்க்கறேன். அவருக்கு ஹெர்னியாவும் ஹைட்ரோசிலும் இருக்கான்னு எப்படித் தெரியும்? இருந்தாலுந்தான், எனக்கு என்ன போச்சு, உமக்குத் தான் என்ன போச்சு? வந்ததுக்கு இன்னொரு டோஸ் வேணும்னா ஜீனி போடாம காப்பி குடிச்சுட்டு தைலத்தை சிரசிலேயும் கீழேயும் திடமாப் புரட்டிண்டு போய்ச் சேருமே.

ஏதும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் அவர்கள் புறப்பட்டுப் போக, கதவை அடைத்து விட்டு உள்ளே போனான்.

இன்னும் கொஞ்சம் உறங்கினால் என்ன? எட்டு மணி தானே ஆகிறது? ஒரு டோஸ் காப்பி. கூடவே கிளாஸ்கோ பிஸ்கட்டும் தோய்த்துச் சாப்பிட.

தெரசாவோடு கிடந்த போது ப்ளாஸ்கில் இருந்து காப்பியும் அதில் கிளாஸ்கோ பிஸ்கட்டைத் தோய்த்து அவள் வாயிலிட்டு, எச்சில் கூழாக்கிப் பகிர்ந்ததும் நினைவு வர, தலையைக் குனிந்து கொண்டான்.

அது எல்லாம் எதுக்கு? அது வேறே நாள். வேறே உலகம். இப்போ, தில்லியிலே குளிர்காலம். ஞாயிற்றுக்கிழமை. காலைப் பொழுது. வெளியே போய் வந்தால் என்ன? புதுசாக வாங்கி நிறுத்தி இருக்கும் இந்துஸ்தான் காரிலும் சவாரி செய்த மாதிரி இருக்கும். தனியாகப் போவானேன்? குடும்ப சகிதம்.

வசந்தியைக் கேட்டான்.

ஒழுங்கா ஓட்டக் கத்துண்டாச்சா?

அவள் குழந்தையை மடியில் வைத்தபடி விசாரணை செய்தாள்.

லைசன்ஸ் வச்சிருக்கேனாக்கும்.

கார் ஓட்டவா, ஸ்கூட்டர் ஓட்டவா?

சகலமானதிலேயும் ஆரோகணிச்சு சுகமா ஓட்டத் தான். வந்தா புரியும்.

அதென்ன காவாலித் தனமான பேச்சு?

நான் சாதாரணமாத்தானே சொன்னேன்.

போய் தில்ஷித் கவுர் கிட்டே சொல்லுங்கோ.

அவ எதுக்கு? நீ ஒருத்தி போறாதா?

அவளோடு சேர்ந்து சிரித்தான். குழந்தை தலையில் செல்லமாக முட்டி அதன் கன்னத்தில் முத்தமிட்டாள் வசந்தி.

இவளைப் பிடிச்சுக்குங்கோ. குண்டியிலே எல்லாம் ஈஷி வச்சிண்டிருக்கா. வாசனையா குட்டியம்மாவுக்குக் குளிச்சு விட்டுட்டு புடவையை மாத்திண்டு கிளம்பிடறேன். அரை மணி நேரம் எதேஷ்டம்.

அவள் சொன்னபடிக்கு வந்து ரதி மாதிரி ஒய்யாரமாக காரில் சவாரி செய்யத் தயாராக நிற்க சங்கரன் பங்கரையாக, பாஷாண்டியாகத் தினசரி பேப்பர் கிராஸ்வேர்டில் மூழ்கி இருந்தான்.

விரட்டி சட்டையும் கால் சராயும் தரிச்சு வரச் சொன்னாள் வசந்தி. அவள் கண்ணை உருட்டி மிரட்டுவதாக போக்குக் காட்ட குழந்தை ஓவென்று சிரித்தது.

வாசல் கதவைப் பூட்டும்போது நினைவு படுத்தினாள் –

டிரைவிங் லைசன்ஸ் எடுத்துண்டாச்சா?

அது எதுக்கு? ஞாயித்துக்கிழமை தானே.

ஞாயிறுன்னா லைசன்ஸ் இல்லாம வண்டி ஓட்டலாம்னு சர்க்கார் ஆர்டர் இருக்கா?

இருக்கே. உள்ளே வா. சொல்றேன்.

வேணாம் நீங்க சொல்லப் போறதெல்லாம் இப்போ வேணாம்.

திரும்பி வந்தப்புறம் வச்சுக்கலாமா?

எப்பப் பாரு, அதேதான் நினைப்பு எல்லாம்.

சரி ஆபீஸை நினைச்சுக்கறேன்.

தில்ஷித் கவுரையா?

அவளை ஏன் அடிக்கடி ஞாபகப் படுத்தறே?

ஜெயம்மா அக்கா சொன்னா, ரொம்ப அழகா இருப்பா, ஆனா சுத்தம் போறாதுன்னு.

அவ சுத்தமா இருந்தா என்ன பண்ணப் போறேன். இல்லேன்னா என்ன செய்யப் போறேன்.

அதானே, கிடச்சா மூக்கை பிடிச்சுண்டே அதெல்லாம் முடிச்சுடலாம். அரசூர்க்காரா லேசுப்பட்டவா இல்லே.

வசந்தி எகத்தாளமாகச் சொன்னாள்.

அவன் தெரிசா வாயில் சூயிங்கம் வாசனையை நினைத்துக் கொண்டான். அவளுடைய உடம்பு வாடையும் சுவாதீனமாக அடுத்து மனதில் வந்தது.

வாசல்லே நின்னு தூங்க வேணாம். போய் லைசன்ஸ் எடுத்து வந்துடுங்கோ.

அவன் உள்ளே போய் ஷண நேரத்தில் டிரைவிங் லைசன்ஸைப் பரதாழ்வார் பாதுகை சுமந்த மாதிரி சிரத்தையாகத் தலையில் வைத்துக் கொண்டு திரும்பினான். அடுத்த ஐந்தாவது நிமிடம் கார் கிளம்பி, கொஞ்சம் அலை பாய்ந்து கரோல்பாக் பக்கம் மெல்ல நகர்ந்து சென்றது.

கரோல் பாக் வேணாம். காரட்டு ஹல்வாவும் பானி பூரியும் அலுத்துடுத்து. குழந்தையோட சிடியா கர் போய்ட்டு வரலாமா?

வசந்தி பின் சீட்டில் இருந்தபடி கார் சத்தத்தோடு சொன்னாள்.

வயித்தை பசிக்கலியா? கார் ஓட்டியபடி சங்கரன் விசாரித்தான்.

லோதி ரோடு பக்கம் மைசூர் ஸ்கூல் காண்டீன்லே சுருக்கமா இட்லி, வடைன்னு முடிச்சுக்கலாமே. பத்து நிமிஷம் கூட ஆகாது.

கொஞ்சம் போல் ஊசிப் போன சட்னி தவிர காண்டீன் சாப்பாடு பரவாயில்லை தான். காப்பியை வேண்டாம் என்று சங்கரனுக்கு முன்னால் வசந்தி சொல்லி விட்டாள். அவள் போடுகிற காப்பிக்கு இணையில்லை என்ற திடமான நினைப்பு வசந்திக்கு. பிடார் ஜெயம்மா வேறே அவ்வப்போது வந்து, வசந்தி கையால் காப்பி சாப்பிட்டுத் தன் நன்மதிப்பு சர்ட்டிபிகேட்டை புதுப்பித்துத் தருகிறாள்.

வலப்பக்கம் திரும்புங்கோ. சிடியாகர் இப்படிப் போனா அஞ்சு நிமிஷத்துலே வந்துடும்.

சிடியா கர் என்ற மிருகக் காட்சி சாலை ஞாயிற்றுக்கிழமைக்கான கூட்டம் இல்லாமல் தூங்கி வழிந்து கொண்டிருந்தது. அடைத்து வைத்த சிங்கங்களும், புலிகளும், ஓநாயும் உறக்கம் விழித்து, கெட்ட வார்த்தை சொல்லித் திட்டி உறுமிக் கொண்டு மறுபடியும் உறங்கத் தொடங்கின. குழந்தை கை கொட்டி எல்லாம் ரசித்தபடி பூவாகச் சிரித்து, வசந்தி தோளில் இருந்து சங்கரனிடம் தாவினாள். வாடி என் கண்ணே என்று குழந்தையைக் கை நீட்டி வாங்கும் போது அவனுக்கு சுவர்க்கம் தெரிந்தது.

கரடிக் கூண்டில் இரண்டு கரடிகளும் சாவதானமாக உறவு கொண்டபடி உறுமின.

இங்கே வந்தாலும் இதுதானா?

வசந்தி ஓங்கி சங்கரனின் தோளில் அடிக்க என்னமோ என்று பயந்து போன குழந்தை அழுதது. இரண்டு பேரும் அவசரமாக விலகி நடந்தார்கள்.

மயில்கள் வைத்திருந்த மிக உயரமான கம்பி வலை போட்ட வெளியில் இரண்டு மயில்கள் மட்டும் பறக்கத் தொடங்கி இருந்தன. மேலே வலை மூடாத கம்பி மேல் அமர்ந்து அவை கீழே உற்றுப் பார்த்தபடி இருந்தன. சிடியா கர் ஊழியர்கள் தரையில் தானியத்தை விசிறியடித்து அவைகளைத் திரும்பக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இரண்டும் ஜிவ்வென்று பறந்து சங்கரனின் தோளில் இறக்கை பட வீசி அவன் முகத்தை மறைத்துப் பறக்க அவன் நடுநடுங்கி நின்றான். குழந்தை வீரிடும் சத்தம் இறக்கைகளுக்குப் பின் கேட்க, வசந்தி திரும்பிக் குழந்தையை அவனிடமிருந்து பறித்துக் கொண்டு தோளில் சார்த்தி இறுகத் தழுவி, இரண்டடி ஓடி நின்று அலறினாள்.

அடுத்த நொடியில் கீழே இறங்கி தரையில் தானியம் பொறுக்கியபடி மயில்கள் இருக்க, சங்கரன் உடம்பில் நடுக்கம் குறையாது பாதை ஓரக் கல் குவியல் மேல் உட்கார்ந்தான்.

குழந்தை சமாதானமாகிச் சிரித்தது. வசந்தி போகலாம் என்றாள்.

சங்கரன் திரும்பிப் பார்த்தான். சிறு தானியம் மேயும் மயிலின் கண் அவன் தெரசாவோடு கலந்தபோது ஊஞ்சலில் ஆடியபடி பார்த்த மூத்தகுடிப் பெண்ணின் கண் போல் இருந்தது.

சாமா, நில்லுடா, நானும் வரேன்.

ஒரு மயில் குரலெடுத்து அகவ, சங்கரன் அவசரமாகக் காருக்கு நடந்தான்.

தப்பு பண்ணிட்டேனா தெரசாவோட?

அவன் திரும்பிப் பார்க்க அந்த மயில்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு தாறுமாறாக நிலத்தில் ஓட ஆரம்பித்தன.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன